தில்லை நடராஜரும் திருவாரூர் தியாகராஜரும்!

சைவ சமயப் பேருலகின் இரண்டு ராஜாக்களான நடராஜருக்கும் தியாகராஜருக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்ப்போம்.
திருவாரூர் திருக்கோயில்
ஆதிரையான்: இருவரும் ஆதிரை நாளில் விழா காண்பவர்கள். திருவாரூரில் நடைபெற்ற திருவாதிரை விழாவின் சிறப்பை அப்பர் அடிகள் பதிகமாகவே பாடியுள்ளார். தில்லை நடராஜர் திருவாதிரைக்கு முன்பு, தேர் ஏறி வலம் வந்து அலங்கார - அபிஷேகம் கண்டு சபைக்கு எழுந்தருள்கிறார்.
தேர் ஊர்ந்த செல்வன்: இந்த இருவருமே தேரில் மட்டும் வலம் வருபவர்கள். அதன் பிறகு இருவருக்கும் பெரிய அளவில் சாந்தி அபிஷேகம் நடைபெறுகிறது.
கூத்து உகந்தான்: நடராஜரின் நடனம்: ஆனந்தத் தாண்டவம். தியாகராஜரின் நடனம்: அஜபா நடனம்.
ஸ்ரீ நடராஜப் பெருமான்
ஆறு அபிஷேகங்கள்: இந்த இருவருக்கும் ஆண்டுக்கு ஆறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
ரகசியம்: தில்லைக் கூத்தரின் வலப்புறம் தனியாக ஒரு சுவரில் ஆகாச யந்திரம் அமைந்துள்ளது. இது ‘சிதம்பர ரகசியம்’ என்று போற்றப்படுகிறது. திருவாரூரில், பெருமானின் திருமேனியே ரகசியமாகப் போற்றப்படுகிறது. இது ‘சோமகுல ரகசியம்’ எனப்படுகிறது.
பூங்கோயிலும் பொற்கோயிலும்: தியாகராஜருக்கு உரியது பூங்கோயில் என்றால், தில்லைக் கூத்தனுக்கு உரியது பொற்கோயில்.
ஸ்ரீ தியாகராஜப் பெருமான்
திருச்சாலகம் (ஜன்னல்): தில்லையில் 96 கண்களைக் கொண்ட வெள்ளியால் போர்த்தப் பெற்ற ஜன்னல் உள்ளது. திருவாரூரில், ‘திருச்சாலகம்’ எனும் தென்றல் தவழும் ஜன்னல் உள்ளது.
செங்கழுநீர் தாமம்: இருவருமே செங்கழுநீர் மாலை களை விரும்பி அணிவதால் செங்கழுநீர் தாமத்தார் என்று சிறப்பிக்கப்படுகின்றனர்.
ஆயிரங்கால் மண்டபம்: இரு இடங்களிலும் ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ளன.
மண்ணாகி விண்ணாகி: தில்லைப் பெருமான் ஆகாய வடிவானவர். திருவாரூர்ப் பெருமான் பூமி வடிவினர். இந்த இருவருமே மண்ணாகி, விண்ணாகி அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
திருமூலட்டானம்: தில்லையிலும் திருவாரூரிலும் மூல லிங்கத்துக்கு மூலட்டானேஸ்வரர் என்றே பெயர்.
பாத தரிசனம்: இரு இடங்களிலுமே பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகிய இருவரும் பாத தரிசனம் கண்டுள்ளனர். தில்லையிலே பெருமானின் ‘அதிர வீசி ஆடத் தூக்கிய’ இடப் பாத தரிசனம் கண்டு மகிழ்ந்து, மார்கழித் திருவாதிரை நாளில் பேறு பெற்றனர். பின்னர் இருவரும் திருவாரூர் வந்து, இறைவனின் ‘இருந்தாடும்-கூத்து’ கண்டு பங்குனி உத்திர நாளில் வலப் பாத தரிசனம் பெற்றனர்.
சிதம்பரம் திருக்கோயில்
இரு பெருந்தேவியர்: திருவாரூரில் கமலாம்பிகை, நீலோற்பலாம்பிகை என இரு பெருந்தேவியர். தில்லையில் சிவகாமி, மூலட்டானநாயகி என இரு தேவியர்.
அடியெடுத்துக் கொடுத்தவர்கள்: இரு ராஜாக்களுமே அடியவர்கள் பாட அடியெடுத்துக் கொடுத்தவர்கள். திருவாரூர் பெருமான், சுந்தரமூர்த்தி சுவாமி களுக்கு, ‘தில்லை வாழ் அந்தணர்’ என்று அடி யெடுத்துக் கொடுத்தார். பெரிய புராணம் பாட, ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் தில்லைப் பெருமான்.
திருவாரூர் பெருமான், ‘தில்லை’ என்ற முதலடியைக் கொடுத்து சிதம்பரத்தை நினைவு படுத்துகிறார். தில்லைக் கூத்தனோ, உலகம் என்று அடியெடுத்து ‘மண் தத்துவமான’ திருவாரூரை நினைவுபடுத்துகிறார்.

Comments