அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

ந’ம் நார்யாதேவி எனும் அனந்த சக்தி
நோ நந்த சக்திர் தேவேஷூ மத்தமாதங்க ஸம்ஸ்திதா ஏக வக்த்ரா தபித்கௌரீ தத்தே பத்ம வராபயன்
ச ம்ஸ்கிருத மொழியின் இருபதாவது மெய்யெழுத்து ‘ந’. இதற்கு உரிய அம்பிகையின் திருநாமம் நார்யாதேவி எனும் அனந்தசக்தி. இவள் தூய்மையான வெண்ணிறத் தில், ஒரு முகம். மேல் இரண்டு கரங்களில் கமல மலர்கள். கீழ் இரண்டு கரங்களில் வர-அபய முத்திரைகள் ஆகியவற்றுடன் மின்னல் போன்ற ஒளியுடன் உயர்ந்த மத யானை மீது காட்சி அளிக்கிறாள் என்று மேற்கண்ட சித்தசாபர தந்திரம் விளக்குகிறது.
‘ந’கார தேவி சைவத்தில் மேஷனாக, வைணவத்தில் ஸெளரியாக, சாக்தத்தில் தீர்கீ கலையாக இருக்கிறாள் என்று கீழ்க்கண்ட மந்திராபிதான சுலோகம் கூறுகிறது.
ந-காரோ மேஷஸம்க்ஞ: ஸ்யாத் தீர்கீ,
ஸெளரிச்ச கீர்த்தி த:
‘ந’காரம் தோன்றியது ஹஸ்தினாபுர சக்திபீடத்தில் என்றும், இங்குதான் தாட்சாயிணியின் கணுக்கால் விழுந்தது என்றும் கூறுவார்கள். நூபுரார்ணவம் எனும் இங்குள்ள உப பீடத்தில் தேவியின் நூபுரம் (சிலம்பு) விழுந்தது என்றும், ஹஸ்தினாபுரத்திலும், நூபுரார்ணவ பீடத்திலும் பாஸ்கர மந்திரங்கள் ஸித்திக்கும் என்றும் மேருதந்திரம் கூறுகிறது.
ஆதி காலத்தில் ஒரு நாட்டின் தலைநகராகத் திகழ்ந்த ஹஸ்தினாபுரம், பரந்த நிலப்பரப்புடன் விளங்கியது. அம்பிகையின் கணுக்கால் விழுந்த இடம் ஹஸ்தினாபுரம் என்று மேருதந்திரம் குறிப்பிட்டாலும், அதன் எல்லைக்குள் இருந்த ஒரு பெரும் ஏரியில்தான் அது விழுந்தது. அதன் நினைவாக அந்த ஏரிக் கரையில் பிற்காலத்தில் ஒரு காளி கோயில் எழுந்தது. நாளடைவில் இந்த ஏரியின் பரப்பு மிகவும் சுருங்கி, இறுதியில் ஒரு கிணறாக மாறிவிட்டது. இந்தக் கிணறும், இதையட்டியுள்ள காளி கோயிலுமே முப்பத்தாறாவது மகாசக்தி பீடமாக நாம் தரிசிக்கும் திருத்தலமாகும்!
மகாசக்தி பீடமாக விளங்கும் இந்தக் கோயிலை ஸ்ரீதேவி கூப் பத்ரகாளி மந்திர் என்கிறார்கள். கூப் என்றால் கிணறு. தேவியின் கணுக்கால் வீழ்ந்த இடத்திலேயே இந்தக் கிணறு உள்ளதாக ஐதீகம். இந்தப் பீடேஸ்வரியின் நாமதேயம் சாவித்ரி. இங்கு காணப்படும் கால பைரவரை ஸ்தாணு என்பர். இந்த அருமையான தலம் எங்கு இருக்கிறது தெரியுமா?
உலகப் புகழ் பெற்ற குருக்ஷேத்திரத்தில். இந்தப் பெயரைக் கேட்டவுடன் நம் ஞாபகத்துக்கு வருவது ஸ்ரீபகவத் கீதை யின் முதல் சுலோகமான ‘தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே சமவேதா யுயுத்ஸவா: மாமகா: பாண்டவாச் சைவ கிமகுர்வத சஞ்சயா: (‘சஞ்ஜயா! அற நிலமாகிய குருக்ஷேத்திரத்தில் போர் செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும், பாண்டவரும் என்ன செய்தனர்?’ - திருதராஷ்டிரன் கேட்கிறார்). பாரதப் போரில் லட்சக்கணக்கானவர் உயிர் நீத்த குருக்ஷேத்திரத்தை, தர்மக்ஷேத்திரம் என்று அழைக்கும் காரணத்தைக் காண்போம்.
ஹஸ்தினாபுரத்தைத் தலைநகராகக் கொண்டு, திறமையுடன் பல ஆண்டுகள் ஆட்சி செய்தவன் ராஜகுரு எனும் பேரரசன். இவன் அசமீடனின் மகனான ருக்ஷனின் பேரன். சம்வருணனின் புத்திரன். குருவாகிய வியாழனின் அனுக்கிரகத்தால் பிறந்ததால் இவன் இந்தப் பெயர் அடைந்தானாம். சூரிய குல அரசரின் குருவான வசிஷ்டர், சூரியனிடம் சென்று அவன் மகள் தபதியை சம்வருணனுக்குக் கொடுக்கச் செய்தார். அப்படிப் பிறந்த குமாரன் ஆனதால் குரு என்று பெயர் கொண்டான் என்றும் கூறுவர். இவன் ஆண்ட நாடு, குரு நாடு என்றும், இவன் வம்சம் குரு வம்சம் என்றும் அழைக்கப்பட்டன. சந்து, பரீக்ஷித்து, சுதன்னிசு, நிஷதன் ஆகியோர் இவன் குமாரர்கள்.
அம்பிகையின் வலது பாதம்
முனிவர் ஒருவரின் சாபத்தால் அரசன் குரு ஒவ்வொரு நாள் இரவிலும் பிணமாகி விடுவான். ஒரு நாள் அரசன் தன் பரிவாரங்களுடன் நகரை அடுத்த காட்டில் வேட்டையாடச் சென்றான். வேட்டையின்போது, தவறித் தரையில் விழுந்த அம்புகளைப் பொறுக்கினான் மன்னன். அப்போது அவன் கைவிரல் இடுக்குகளில் அங்குள்ள மண் படிந்ததை அரசன் கவனிக்கவில்லை.
காத்யாயினி அம்மன் ................
அன்றிரவும் வழக்கம் போல் அரசன் உயிரற்றவன் ஆனான். ஆனால், மண் படிந்த விரல்கள் மட்டும் உணர்வோடு இருந்ததைக் கவனித்த ராணி ஆச்சரியப்பட்டாள். மறு நாள் இந்த வித்தியாசத்தை அங்கிருந்த வித்வான்களிடம் விவரித்து அதற்குரிய காரணத்தை ஆராய்ந்தாள். அந்த வனம் மிக்க பவித்திரமானதால் அந்த இடத்தின் மண் படிந்த விரல்களில் உணர்ச்சி தங்கிவிட்டது என்று பண்டிதர்கள் விவரித்தனர். உடனே அரசன் மனதில் ஓர் எண்ணம் பிறந்தது. ‘இறந்த உடலுக்கு உயிர் அளிக்கும் சக்தி அந்த வனத்து மண்ணுக்கு இருப்பதால் அங்கு பயிரிட்டால் அபரிமிதமாக தானியங்கள் விளையும்!’ என்பதே அந்த எண்ணம்.
சில நாட்கள் கழித்து அரசன் தனது தங்க ரதத்தில் ஏறி அந்த வனத்தை அடைந்தான். சிவனிடமிருந்து காளையையும், எமனிடமிருந்து எருமையையும் தன் தவ சக்தியால் பெற்று, அவற்றை ஏர்க்காலில் பூட்டி தங்க கலப்பையால் உழத் தொடங்கினான். இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட இந்திரன் அவன் முன் தோன்றி, ‘‘குரு ராஜா! மங்களம் உண்டாகுக. பேரரசனாக விளங்கும் தாங்கள், இந்தக் கலப்பை பிடித்து உழுவதற்குக் காரணம் என்ன? இந்தச் செயல் விசித்திரமாகத் தெரிகிறதே?’’ என்று கேட்டான்.
‘‘தேவராஜனே! உனக்கு என் நமஸ்காரம். இதற்குக் காரணம் உண்டு. பிரம்மச்சரியம், தானம், தயை, சத்யம், யோகம், தவம், பரிசுத்தம், பொறுமை எனும் நற்குணங்களை தவ வலிமையால்தான் நான் இங்கு பயிர் செய்ய முடியும். எனவே, நானே நிலத்தை உழுகிறேன்!’’ என்றான் அரசன் குரு.
அம்புப் படுக்கையில் பீஷ்மர் சிலை
‘‘அப்படியானால் அதற்குரிய விதைகள் எங்கிருந்து கிடைத்தன?’’ என்று இந்திரன் கேட்டான். ‘‘அவை என்னிடம் ஏற்கெனவே நிறைந்துள்ளன!’’ என்றான் அரசன். உடனே இந்திரன் ஒரு பரிகாசச் சிரிப்புடன் திரும்பிச் சென்றான். நிலத்தை உழுது முடித்துப் பயிர் செய்யத் தயாரானதும், இந்திரன் கேட்ட அதே கேள்வியை அரசனிடம் கேட்டார் பகவான் விஷ்ணு. அரசனும் முன்னர் சொன்ன அதே பதிலை அவரிடமும் கூறினான்.
உடனே, ‘‘அந்த விதைகளை என்னிடம் கொடுத்தால் உன்னுடன் இருந்து நானே நிலத்தில் விதைக்கிறேன்!’’ என்று நாராயணன் கூறினார். அரசன் தன் வலக் கையை அவரிடம் நீட்டினான். அந்தக் கை, விஷ்ணுவின் சக்ராயுதத்தால் ஆயிரமாயிரம் துண்டுகளாயின. இவ்வாறு தன் கரத்தை அர்ப்பணித்ததால் மகிழ்வுற்ற பகவான், குருவுக்கு வரமளிக்க முன்வந்தார்.
‘‘ஜகந்நாதனே! அடிபணிந்த என் நமஸ்காரங்கள். நான் எவ்வளவு நிலத்தை உழுதேனோ, அந்தப் பரப்பு முழுவதும் புண்ணியத் தலமாக - தர்மக்ஷேத்திரமாக மாற கருணை புரிய வேண்டும். இந்த க்ஷேத்திரம் என் பெயரால் என்றும் நிலைபெற்று விளங்க வேண்டும். இங்கு தாங்களும், சிவபெருமானும், ஏனைய தேவர்களும் வந்து வசிக்கக் கோருகிறேன். தர்மத்தைக் கைவிட்டவர்களும் பாவிகளும் இங்கு வந்து வாழ்ந்து, இறந்தால் அவர்களுக்கு மோட்சம் கிட்ட வேண்டும்!’’ என்று அரசன் கேட்டவுடன் பகவான் விஷ்ணு, ‘‘அவ்வாறே ஆகுக!’’ என்று கூறி, அவனை ஆசீர்வதித்து மறைந்தார். எனவே, இந்த அற நிலம், குருக்ஷேத்திரம் என்றும் தர்மக்ஷேத்திரம் என்றும் பெயர் பெற்றது.
அர்ஜுனன் ஏற்படுத்திய குளம்
தரந்துகை, ரந்துகை, மசக்ருத தீர்த்தம் ஆகியவற்றுக்கு இடையேயுள்ள இந்தத் தலம், சரஸ்வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அதற்கு முன் இந்தப் பரந்த பிரதேசம் - பிரம்மவேதி, ஸமந்த பஞ்சகம், ராம ஹிருதயம், பிருகு தேசம், ஆர்யாவர்த்தம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. குருக்ஷேத்திரம், சரஸ்வதி- திருஷத்வதி நதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. குரு அரசன் தனது திறமையால் தெய்வீக ஞானம், விஞ்ஞானம், நாகரிகம் ஆகியவற்றுக்கான பிரதான கேந்திரமாக்கினான்.
வேத மந்திரங்கள் முதன்முதலில் குருக்ஷேத்திரத்தில்தான் அரங்கேறின. உலகம் போற்றும் ரிக் வேதம், உபநிஷத்துகள், மகாபாரதம், ஸ்ரீமத் பகவத் கீதை முதலிய அரும்பெரும் இந்து சமய பொக்கிஷங்கள் இங்குள்ள சரஸ்வதி நதிக் கரையில்தான் துவக்கப்பட்டன. ஆதி புருஷர் மநு தனது மநுஸ்மிருதியை இங்குதான் எழுதினார். குருக்ஷேத்திரம், உலகிலேயே மிகவும் உயர்வானது. இங்குள்ள காற்றில் பறந்து வரும் தூசியைத் தொட்டுவிட்டாலும் பரம முக்தி கிட்டுமாம். இந்தத் தலத்தை ஒரு முறை நினைத்தாலே போதும்... எல்லாப் பாவங்களும் தொலைந்து போகும். சூரிய கிரகணத்தின்போது இங்கு ஸ்நானம், தானம், தருமம் முதலிய நற்பணிகளைப் புரிந்தால் மறு பிறவி கிடையாது என்று ஸ்கந்த புராணம், பிரம்ம புராணம், மச்ச புராணம் ஆகியவை கூறுகின்றன.
கீதை பிறந்த இடம்கீதோபதேச சிலை
குருக்ஷேத்திரம் டெல்லியிலிருந்து சுமார் 160 கி.மீ. தொலைவில் நேர் வடக்கே உள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள இந்தத் தலத்துக்கு, டெல்லியிலிருந்து ரயில் வசதி உண்டு. தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் சுகமான பேருந்துப் பயணத்தையும் மேற்கொள்ளலாம்.
துவாபர யுகத்தில் (சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு) குருக்ஷேத்திரத்தில் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் 18 நாட்கள் கடுமையான யுத்தம் நடந்தது. இதில் ஈடுபட்ட இரு தரப்பாரும் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெகு தொலைவில் உள்ள இந்தத் தலத்தை யுத்தத்துக்குத் தேர்ந்தெடுக்கக் காரணம் உண்டு.
போரில் பங்கேற்கும் சேனைகளை பல பகுதிகளாகப் பிரித்து, அந்தப் பகுதிகளுக்கு அக்குரோணி என்று பெயர் கொடுத்தனர். 21,870 தேர்கள், 21,870 யானைகள், 65,610 குதிரைகள், 1,09,350 காலாட்படை வீரர்கள் என கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் கொண்ட கூட்டத்துக்கு அக்குரோணி என்று பெயர். மகாபாரதப் போரில் சுமார் 18 அக்குரோணி சேனைகள் பங்கேற்றன. கௌரவர் பக்கத்தில் சுமார் 24 லட்சம், பாண்டவர் பக்கம் சுமார் 15 லட்சம் வீரர்கள் இருந்தனர். இத்தகைய பெரும் படைகள் போரைத் துவக்க ஹஸ்தினாபுரத்தில் இடம் இல்லை. மட்டுமின்றி, பெரும்பான்மையான அரசர்களும், பேரரசர்களும் தங்கள் நாட்டில் ஒரு நாசப் போர் நிகழ்வதை விரும்பவில்லை.
கீதோபதேச சிலை
குருக்ஷேத்திரத்தில் பாண்டவர் மற்றும் கௌரவர்களின் நிலப் பகுதிகள் ஏற்கெனவே இருந்ததால் அங்கு போரிடுவதற்கு எவருடைய அனுமதியும் தேவைப்படவில்லை. இரு தரப்பு சேனைகளும் போரிட விசாலமான பரந்தவெளி, தண்ணீர், ஏரி, பொருள் வசதி என எல்லாவற்றுக்கும் உகந்த இடமாக இது விளங்கியது. எனவே, இந்த அற நிலத்தை அமர்க் களமாக இரு பிரிவினரும் தேர்ந்தெடுத்து யுத்தம் புரிந்தனர். வேத காலத்தில் யுத்த களத்திலோ அல்லது புண்ணிய பூமியிலோ உயிர்த் தியாகம் செய்யப் போர் வீரர்கள் தயங்கவில்லை. எனவே, பாரதப் போரில் ஒவ்வொரு வீரனும் உத்வேகத்துடன் பங்கேற்றனாம்.
பாரதப் போரின் முக்கியமான கட்டம், முதல் நாள் நிகழ்ச்சி. பகவான் ஸ்ரீகிருஷ்ணன், அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக இருந்தார். யுத்த களத்தில் எதிரி சேனைகளை ஒரு முறை பார்வையிட்ட அர்ஜுனனுக்கு அங்கிருந்த தன் உற்றார், உறவினர் மேல் மோகம் ஏற்பட்டது. இதனால் கலக்கமுற்ற அவனுக்கு உற்சாகமூட்ட ஸ்ரீகிருஷ்ண பகவான் உபதேசித்த பகவத் கீதை உலகப் பிரசித்தம்.
சாட்சியான ஆலமரம்
அன்று கண்ணனது வாக்கில் தோன்றிய உபதேச மொழிகள், உலகத்தில் எந்தத் தொழிலில் ஈடுபட்டு, எந்த நிலையில் இருப்பவர்களுக்கும், எந்த குண விசேஷங்களுடன் பிறந்தவர்களுக்கும் உய்யும் வழிகாட்டியாக, உதவும் சாஸ்திரமாகக் காலம் காலமாகக் கருதப்படுகிறது. கடமையைச் சரிவரச் செய்துவிட்டு, பலனை ஆண்டவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். இதுவே கண்ணன் உபதேசித்தது.
இப்படிப்பட்ட பகவத் கீதை பிறந்த இடமே, குருக்ஷேத்திரத்தில் மிகவும் பவித்ரமானதாகக் கருதப்படுகிறது. இந்த இடத்தை ‘யோதீஸ்வரர் தீர்த்தம்’ என்கிறார்கள். குருக்ஷேத்திர ரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் சரஸ்வதி நதிக் கரையில் யோதீசர் கிராமம் உள்ளது. இங்கு பழங்காலக் குளமும், ஆலமரமும் உள்ளன. இந்த ஆலமரம் அக்ஷய வட விருட்சம் என்ற பெயரில் பிரசித்தமானது. கீதோபதேசத்துக்குச் சாட்சியாக இந்த மரம் விளங்குகிறதாம். இங்குள்ள ஒரு சிறு கோயிலில் பிதாமகன் பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கும் கோலத்தையும், அவர் அருகில் சோகமே உருவாக பஞ்சபாண்டவர்கள் கரம் கூப்பி நிற்பதையும் அழகிய சிலைகளாக வடித்து வைத்துள்ளனர். அதைக் காணும் நம் கண்கள் குளமாகின்றன. அவ்வளவு தத்ரூபமான காட்சி.
ஸ்ரீ ஜெயராம் வித்யா பீடம்
இவை தவிர 48 மைல் பரப்பளவு கொண்ட குருக்ஷேத்திர பூமியில், சுமார் 360 தர்மத் தலங்கள் இருக்கின்றன. இங்கு மனதுக்குப் பரவசமூட்டும் பிரம்ம குண்டத்தையும், அதன் நடுவில் கம்பீரமான சர்வேஸ்வர மகாதேவன் கோயிலையும் காண்கிறோம். அழகான படித்துறைகள் அமைந்துள்ள இந்தத் தடாகத்தின் நீளம் 3,600 அடி. அகலம் 1,200 அடி. இதில் 15 அடி ஆழத்துக்கு தண்ணீர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. வசதியான படிக்கட்டுகளும் பயணிகள் பயமின்றி நீராட கம்பிச் சட்டங்களும் உள்ளன. குளத்தின் மையத்திலுள்ள சர்வேஸ்வர மகாதேவன் கோயில் மற்றும் அதை அடுத்துள்ள பழங்கால காத்யாயினி கோயில் ஆகியவற்றுக்குச் செல்லச் சிறிய பாலம் ஒன்றும் உண்டு.
சன்னிஹித் குளம் என்ற இன்னொரு புண்ணிய தீர்த்தம் இங்கு உள்ளது. இந்தக் குளத்தின் நான்கு புறமும் சலவைக் கல் பதிக்கப்பட்டுள்ளது. குருக்ஷேத்திரம் போகும் யாத்ரீகர்கள் முதலில் இங்கு வந்து நீராடி கரைகளில் திவசம், தர்ப்பணம் செய்கின்றனர். ஒவ்வோர் அமாவாசையிலும் பிரம்மாதி தேவர்களும், ரிஷி கணங்களும் மற்றும் சகல நதிகளும் இங்கு வருவதாக ஐதீகம். மேலும் மகாவிஷ்ணு எப்போதும் வாசம் செய்வதாகக் கருதப்படுவதால் இதை முக்தி குளம் என்றும் அழைப்பர். திங்கட்கிழமை வரும் அமாவாசை, பாவனய்த துவாதசி, சூர்ய சந்திர கிரகணங்கள் மற்றும் நவராத்திரி ஆகிய முக்கிய நாட்களில் விழா எடுக்கப்படுகிறது. இங்குள்ள கோயிலில் சதுர் புஜங்களோடு திகழும் ஸ்ரீமந் நாராயணன், பக்த துருவனோடு திவ்விய தரிசனம் அளிக்கிறார்.
கோயில் நுழைவாயில்
அழகான தெய்விக வடிவங்கள் கொண்ட ஸ்ரீஜெயராம் வித்யா பீடம், பிரம்மசரோவரின் எதிர்ப்புறத்தில் உள்ளது. 1973-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அழகிய பீடத்தில் சதுர் வேதங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதன் சிங்க வாயில் மூலமாக நுழைந்தவுடன் அம்புப் படுக்கையில் பீஷ்மர், வேதியர் வேடம் பூண்டு கர்ணனிடமிருந்து குண்டலம் பெறும் கிருஷ்ணன் போன்ற காட்சிகள் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. இந்த மடாலயத்தில் கணபதி, ஸ்ரீவேணுகோபாலன், சண்டிதேவி, ராதாகிருஷ்ணன், ராமர் - சீதை - லட்சுமணன், பரசுராமர், லட்சுமி நாராயணன், ஹனுமான், அமர்ந்த கோலத்தில் பரமசிவன் ஆகியோர் ஆளுயர வடிவத்தில் சிலைகளாக தரிசனம் அளிக்கின்றனர். புராணங்களில் காணப்படும் பல வித ரிஷி, முனிவர்கள் அங்குள்ள சுவரின் மாடங்களில் இடம்பெற்றுள்ளனர். ஆன்மிக நறுமணம் கமழும் அருமையான திருவிடம் ஸ்ரீஜெயராம் வித்யா பீடம்.
லட்சுமி நாராயணன் கோயில், கோரரக்ஷநாத் கோயில், ஸ்தாணீஸ்வரர் சிவன் கோயில், காலேஸ்வரர் கோயில், கீதா பவன், பிர்லா மந்திர், கிருஷ்ணா அருங்காட்சியகம் ஆகிய இடங்கள் அவசியமாக குருக்ஷேத்திரத்தில் பார்க்க வேண்டிய இடங்கள். புனித நீராடி நற்பயன் அடைய அங்கு கணக்கற்ற தீர்த்தங்களும் உள்ளன.
1008 தீர்த்தக் கலசங்கள்
இனி, இங்குள்ள மகாசக்தி பீடத்தை தரிசிப்போம். ஸ்ரீதேவி கூப் பத்ரகாளி மந்திர்- குருக்ஷேத்திர நகரில் ஜான்ஸா சாலையில் உள்ளது. கோயிலைச் சுலபமாக அடையாளம் காண சாலையை ஒட்டி ஓர் அலங்கார வளைவு உள்ளது. உள்ளே சென்றால் செந்தூரம் பூசிய நுழைவு வாசல். எதிரே கலைநயம் கொண்ட வெண் பளிங்கால் செய்யப்பட்ட ஸதிதேவியின் அங்கமான வலது முழங்கால் மீது வெள்ளிக் குடை, கிரீடம், பாதத்தில் கொலுசு, தண்டை, மெட்டி முதலியவற்றுடன் தரிசனம் தருகிறது. இதுவரை நாம் தரிசித்த மகாசக்தி பீடங்களில், இங்கு மட்டுமே ஸதிதேவியின் அங்கத்தை அடையாளமாகக் காண்கிறோம்.
இந்தத் திருவடியின் கீழ் பெரிய தாமரை தென்படுகிறது. இந்தத் தாமரையின் கீழுள்ள கிணற்று நீர் சுத்தமாக இருக்கவும், தாமரை மலரைத் தாங்கவும் கிணற்றின் மீது கம்பி வலை போட்டிருக்கிறார்கள். பாத தரிசனம் பெற்ற நாம் இப்போது அன்னை சந்நிதியை அடைகிறோம்.
இங்குள்ள கருவறை நாயகியின் பெயர் சாவித்ரி. எனினும் அவளை பத்ரகாளி என்றே வழிபடுகின்றனர். அவளின் தெத்துப் பல்லும், தொங்கிய சிவந்த நாக்கும் அச்சத்தைத் தராமல், அன்னையின் முகத்தில் தென்படும் பரிவு நம்மை அவளிடம் இழுக்கிறது. அவள் வதனத்தில் வட்டமிடும் சாந்தம் நம்மை வசீகரிக்கிறது.
அபய-வரத முத்திரைகள் தாங்கி இரு கரங்களுடன் திகழும் இந்த பத்ரகாளியின் இடப் பாதத்தின் கீழே படுத்திருக்கும் சிவனைக் காணலாம். (இதன் தாத்பரியம் சக்தி விகடன் 10.3.05 இதழில் விளக்கப்பட்டுள்ளது) அம்பிகைக்கு அருகில் கட்டுறுதியான வெள்ளித் திரிசூலம் வைக்கப்பட்டுள்ளது. செந்தூர கணபதியும் கருமை கால பைரவரும் அன்னையின் இரு புறம் இருந்தும் நம்மை ஆசீர்வதிக்கின்றனர். இந்தக் கோயிலில் லட்சுமி, சரஸ்வதி, சிவலிங்கம் மற்றும் பல தெய்வ ரூபங்களும் உள்ளன.
மகா வாராஹி நவராத்திரி (ஆடி அமாவாசை), சாரதா நவராத்திரி (புரட்டாசி மாதம்), ராஜமாதங்கி நவராத்திரி (மாசி அமாவாசை) மற்றும் லலிதாம்பிகை நவராத்திரி (பங்குனி அமாவாசை) என்ற நான்கு நவராத்திரிகளோடு தீபாவளியிலும் இங்கு கோலாகலமாக விழா நடைபெறுகிறது. குறிப்பாக வசந்த நவராத்திரி (பங்குனி) முதல் நாள் 1,008 கலசங்களில் புனித நீர் நிரப்பி மாவிலை, தேங்காய், பூமாலைகள் ஆகியவற்றைக் கலசங்களின் மேல் வைத்து 1,008 இளங்கன்னியர் அந்தக் கலசங்களை பயபக்தியுடன் சிரமேற்தாங்கி அம்மன் புகழ் பாடிச் செல்லும் வண்ண ஊர்வலத்தைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
சர்வேஸ்வரர் கோயில்
பலராமர், ஸ்ரீகிருஷ்ணர் இருவரும் தங்கள் பால பருவத்தில் இங்கு வந்து முடி இறக்கினராம். பாரதப் போரில் வெற்றிபெற பாண்டவர்கள் இந்த காளியை பூஜித்தார்களாம். போர் துவங்கும் முன் ஸ்ரீ கிருஷ்ணனது சொற்படி அர்ஜுனன் விரோதிகளைச் சமாளிக்க இங்கு காளிகா தோத்திரத்தைக் கூறி அம்பிகையை வணங்கினானாம். போரில் பாண்டவர்கள் வெற்றி அடைந்ததும் நேர்த்திக்கடனைத் தீர்க்க ஸ்ரீகிருஷ்ணன் ஒரு தங்கக் குதிரையை அம்பிகைக்கு அர்ப்பணித்ததாகவும் அறிகிறோம்.
இன்றும் தங்கள் நேர்த்திக்கடனைப் பூர்த்தி செய்ய பக்தர்கள் பலர் சமர்ப்பிக்கும் மண் மற்றும் மரக் குதிரைகளை அங்கு காணலாம். அம்மன் சந்நிதியின் இடப் பக்கம் காணப்படும் படிகளைக் கடந்து மேலே ஏறினால் அருவுருவமாக ஈஸ்வரனை தரிசிக்கிறோம்.
‘இன்பமாகி விட்டாய் காளி! என்னுள்ளே புகுந்தாய் பின்பு நின்னை யல்லாமல் காளி! பிறிது நானுமுண்டோ? அன்பளித்து விட்டாய்காளி! ஆண்மை தந்துவிட்டாய். துன்பம் நீக்கி விட்டாய் காளி! தொல்லை போக்கிவிட்டாய்.
என்று அமரகவி பாரதியார் காளியின் அருளைப் புகழ்கிறார். சாவித்ரி எனும் இந்த பத்ரகாளி சந்நிதியில் இரு கரம் கூப்பி ஆத்மார்த்தமாக அவள் கழலடியைப் பணியும்போது, அமரகவியின் மேற்குறிப்பிட்ட வரிகளே நம் ஞாபகத்துக்கு வருகிறது.
ராகம்: வஸந்தா
தாளம்: ஆதி
பல்லவி
ஸாவித்திரி ஸ்தாணு தேவர் மகிழ்ராணி ஸாஸ்வதமாய் குருக்ஷேத்ர பீட மமர்ந்த (ஸாவி)
அனுபல்லவி
சாஸ்த்ர புராணங்களின் மேலாம் உப நிடதங்களும் ஸாயுஜ்ய மெய்திட நின்னடி பணிந்தனவன்றோ
(ஸாவி)
சரணம்
சங்கீத முதல் ஸகல கலைகளும் உயர்வை பெற சந்தத முன்னடியில் தவங்கிடந்தனவன்றோ சாஸ்வதானந்தம் பெறயோகியரும் விண்ணோரும் சார்ந்தனரன்றோ நின் இணையடிகளை இன்பமுடன்
துரிதகாலம்
சேவை புரிந்து நின்னருளை வேண்டியே பாவையர் தேவமாதர் நின் ஸன்னதியில் ஆவலுடன் கைகூப்பி தொழ உவரன்றோ தேவ தேவனான நீல கண்டருங் கண்டு வக்க
(ஸாவி)

Comments