பை யன் போக்கு சரியில்லை!’’
‘‘ஒரு கால்கட்டுப் போட்டா சரியா போயிடும்!’’
இது பழகிப்போன உரையாடல். கால்கட்டு என்றால் கல்யாணம் என்பது ஊர் அறிந்த உண்மை. ஆனால், திருமணம் என்பது கால்கட்டு என்று எப்படி ஆனது?
அங்கும் இங்கும் துடுக்காகத் திரியும் கழுதைகளை அடாவடித்தனம் செய்ய முடியாதபடி காலில் கட்டுப் போடுவார்கள். மந்தை மேய்ச்சலில் கட்டுக்கடங்காத ஆடு-மாடுகள் இந்தக் கால்கட்டால் தண்டிக்கப்படும். அப்படி ஆண்மகனைக் கட்டுவதா கால்கட்டு? இவன் என்ன கழுதையா, மிருகமா?
கால்கட்டு என்பது நுட்பமான பொருள் உடையது. பல வார்த்தைகள் பயன்பாட்டில் சரளமாக உள்ளன. பொருள்தான் பலருக்கு விளங்குவது இல்லை. பன்னீர் சொம்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். ரோஜாவின் சாறு பன்னீர்... அது சரி பன்னீர்செல்வம் என்று பெயர் வைக்கிறோம். அதன் பொருள் என்ன தெரியுமா?
கடல் என்பதே பன்னீர்செல்வம் என்பதன் பொருள். நம்ப முடியுமா? ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்று பல நீர், முத்து, பவளம் போன்ற செல்வம் பொதிந்ததால் கடல்தான் பன்னீர்செல்வம். இடுப்பில் கட்டும் கயிறை அண்ணாக்கயிறு என்பார்கள். அது உண்மையில் அரைஞாண் கயிறு. அரை என்றால் இடுப்பு. இன்னோர் அழகு _ இரண்டு கால் சேர்ந்தால் கணக்குப்படி அரைதானே. அதனால்தான் வலக் கால் - இடக் கால் இணையும் இடுப்புக்கு அரை என்றும், அதில் கட்டும் கயிற்றை அரைஞாண் என்றும் குறித்தனர்.
தமிழில் கால் என்றால், காற்று என்று பொருள். தூய தமிழில் ஜன்னலுக்கு காலதர் என்று பெயர். ஜன்னல் தமிழ்ச்சொல் அன்று; போர்த்துக்கீசியச் சொல். காற்றுக்கும் கால் என்று பெயர் உண்டு. நம்மைச் சுமந்து செல்லும் உறுப்புக்கும் கால் என்று பெயர்.
நமது மூச்சுக் காற்றுக்கும் கால்களுக்கும் உள்ள அதிசயத் தொடர்பு தெரியுமா? கோயில் சிலைகளைப் பார்த்தால் புரியும். ஒவ்வொரு தேவதையும் கால்களை ஒவ்வொரு மாதிரி வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள். வீராசனம், பத்மாசனம் என்று ஆசனங்களை விதம் விதமாகச் சொல்வார்கள். திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் அம்பிகை வலக் காலை மடித்து அரை நடுவில் வைத்திருப்பாள். இடக் காலைத் தொங்கவிட்டிருப்பாள் அம்பிகை மனோன்மணி என்கிற மனோசக்தி. வலக் காலை மடித்து இடக் காலைத் தொங்கவிட்டால் மனோசக்தி பெருகும். போகம் தரும். தட்சிணாமூர்த்தியைப் பாருங்கள்... இடக் காலை மடித்து மேலே வைத்திருப்பார். வலக் கால் தொங்கும். அது ஞானம் தரும் கால்கட்டு. முன்னது போகம் தரும் கால்கட்டு.
காலைக் கட்டினால், காற்றைக் கட்டலாம் என்பது யோகக் கலை. ஆனால், இந்த வலக் கால், இடக் கால் கட்டு எல்லாம் கொஞ்ச நேரம் இருக்கும். பிறகு காலை மாற்றினால் கால்கட்டு மாறிப் போகும். ஆனால், மாறாதபடி, பிரிக்க முடியாதபடி கட்டுவதுதான் திருமணம். இடக் காலைக் கட்டிய சிவனையும் வலக் காலைக் கட்டிய மனோன்மணியையும் ஒன்றாகக் கட்டினால் அது பிரிக்க முடியாத கால்கட்டு... அதுதான் திருமணம்!
கால் என்றால் மூச்சுக் காற்று அல்லவா? கணவனது மூச்சுக் காற்றும், மனைவியின் மூச்சுக் காற்றும் கட்டப்படும் இடம் எது? பள்ளியறை. சுவாசம் சங்கமிக்கிறது. காதல் வயப்பட்டு அணையும்போது இருவரது மூச்சுக் காற்றும் ஒன்றை ஒன்று கட்டி விடுகிறது... ஓஹோ... இதுதான் கால்கட்டா.. ஆனால், இருவரும் சங்கமம் முடிந்து பிரிந்தால் கால்கட்டு பிரிந்துவிடுமே? அதுதான் இல்லை!
இருவரும் இணைந்ததும் குழந்தை உண்டாகுமே, அதன் மூச்சுக் காற்று எங்கிருந்து வந்தது? ஒரு சுவாசத்தைத் தாயிடமும் மறு சுவாசத்தைத் தந்தையிடமும் வாங்கி வருவதுதான் சிசு. அதுதான் பிரிக்க முடியாத கால்கட்டு. இடகலை என்பது இடது சுவாசம். பிங்கலை என்பது வலது சுவாசம். சுழுமுனை என்பது மத்திய சுவாசம். இடகலை பெண்மை. பிங்கலை ஆண்மை. சுழுமுனை அலித்தன்மை கொண்டது. தாயிடம் ஒரு மூச்சும் தகப்பனிடமும் ஒரு மூச்சும் சேர, இரண்டும் இணைந்த சுழுமுனையே தானாக கால்கட்டாக _ காற்று முடிச்சாக வருவதே குழந்தை!
அது மட்டுமல்ல.. இப்போது கோக், பெப்ஸி டப்பாக்கள் ஏர்டைட்டாக சீல் வைக்கப்படுகிற மாதிரி மேலிருந்து ஒரு வாயு (காற்று=கால்) கீழிருந்து ஒரு வாயு இரண்டும் சீல்வைத்தே சிசு ஜனிக்கிறது. மேல் வாயு பிராணன். கீழ் வாயு அபானன். இரண்டாலும் சீல்வைக்கப்பட்ட சிசு உண்மையான கால்கட்டு. குழந்தை இருவரது இணைப்பு! கடவுளது பதிப்பு! குழந்தைகள்தான் எப்போதும் பிரிக்கவே முடியாத கால்கட்டு!
Comments
Post a Comment