தொலையாச் செல்வர்

அளக்கு நெறியினன் அன்பர்கள்தம் மனத்தாய்ந்து
கொள்வான்
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும்
விண்ணவர்கோன்
துளக்கும் குழையணி சோற்றுத்துறைவார் சடை
மேல்
திளைக்கு மதியம் அன்றோ எம்பிரானுக்கு
அழகியதே
(திருநாவுக்கரசர் தேவாரம், திருமுறை 4 - பதிகம் 85)
‘தம்முடைய பக்தர்களின் உள்ளங்களை அளந்தறியும் நெறியுடையவரும், அவர்களின் மனத்திலுள்ளதை ஆராய்ந்து அவர்களைத் தம்முடைய அடியவர்களாகக் கொள்பவரும், அடியார்களின் வினை தீர்ப்பவரும், ஒளிவீசும் குழையைக் காதில் அணிந்தவரும், திருச்சோற்றுத்துறை என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருப்பவருமான சிவபெருமானுக்கு, அவருடைய சடையில் ஆனந்தத்தில் திளைத்துத் தவழ்ந்தாடும் பிறைநிலா, அழகியதோர் அணிகலனாக அமைந்துள்ளது’ - நாவுக்கரசரின் சோற்கள் சிவனாரின் அழகை நம் கண்முன்னே மிளிரச் செய்கின்றன.
ஈசனின் திருவடியில் சரண் புகுந்தால், அவருடைய அணிகலனாகி மேன்மேலும் அழகு சேர்க்கும் பேறு பெறலாம் என்பதே தேந்து, வளர்ந்து, மீண்டும் தேய்ந்து போகும் தன்மையுடைய பிறைநிலா ஈசனுக்கு அழகு சேர்க்கிறது என்று நாவுக்கரசர் கூறுவதில் புதைந்துள்ள உட்கருத்து. ஈசனால் அழகுபெற்று முற்றாய் வெண்திங்களாகத் திகழும் பிறைநிலவு, அவர் சடையில் தவழ்ந்து, அவருடைய அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது.
மனம் கலங்கி நின்றார் அருளாளர் ஒருவர்; ஊரெல்லாம் பசியால் வாடி வதங்கியது. ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் என அனைவரும் துடிதுடித்தனர். சில வருடங்களாகச் சரியாகப் பெய்யாத மழையால் ஆறுகள் வறண்டு போக, பசியும் பிணியும் தலைவிரித்தாடின. அனைவரும் சொல்லொணாய்த் துயரத்தில் தவித்தனர். அவர்களுடைய துன்பத்தைக் கண்ட அடியாருக்கு இறைவன் மீதே கோபம் வந்தது. ‘எங்கே போயிற்று உன்னுடைய கருணை? இத்தனை துன்பத்தைக் கண்டும் மனமிரங்காமல் இருக்கிறாயே!’ ஆனால் இறையனார், அவர் கூறிய சொற்களைக் காதில் வாங்கியது போல் தெரியவில்லை.
கோயிலுக்குப் பூஜை செய்ய வரும் அர்ச்சகர், ஒரு மாதம் முன்பே வருவதை நிறுத்திவிட்டார்; சாயங்காலத்தில் விளக்கு வைக்க வரும் உத்தானனும் இரண்டு நாட்களுக்கு முன்னால் பசியில் தள்ளாடியபடியே கீழே விழுந்துவிட்டான். இவையனைத்தும் அந்த பக்தரின் மனக்கண் முன் தோன்ற, செய்வதறியாது தவித்தார். விளக்குகூட இல்லாமல் இருட்டில் கிடந்த சிவமூர்த்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர், திடீரென்று வாயிற்படியில் மோதி அழத் தொடங்கினார். அவருடன் வந்திருந்த மனைவி தடுத்தும் பயனில்லை. இவ்வாறிருக்க, திடீரென்று கேட்ட சத்தத்தில் ஊரே உறைந்துபோனது. எங்கிருந்தோ தோன்றிய அடர்த்தியான மேகங்களாலும், அவை தோற்றுவித்த இடியுடன் கூடிய பலத்த மழையாலும், ஏற்கெனவே பசியால் வாடிக்கொண்டிருந்த மக்கள் மேலும் துன்பத்திற்குள்ளானார்கள். சிவனாருக்குக் கிடைத்த சாபத்துக்கு அளவே இல்லாமல் போயிற்று.
பக்தர்களின் மனங்களை ஆராய்ந்து அருளும் பாங்குடைய சிவனார், தம்முடைய பக்தனின் உணர்வுகளை உலகம் அறிய வேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார்; பாத்திரம் ஒன்று மழையில் மிதந்து வந்தது; ‘அருளாளா, இது அள்ள அள்ளக் குறையாத பாத்திரம், இதை வைத்து அனைவருக்கும் சோறுபோடு’ என்று அசரீரி சல்ல, உடலும் உள்ளமும் குளிர்ந்த நிலையில் ஊரார் அனைவரையும் அழைத்து சோறு போட்டார். தம்முடைய பக்தனுக்காக அட்சய பாத்திரத்தைத் தோற்றுவித்து, ஊரே உண்ணும்படியாகச் சிவனார் செய்த திருத்தலம், ஏழூர்த் தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத்துறை. சப்தஸ்தான தல வரிசையில் மூன்றாவதாக வரும் திருத்தலம்; அதாவது, திருவையாற்றில் தொடங்கி திருப்பழனத்தைத் தொடர்ந்து திருச்சோற்றுத்துறை வருகிறது.
தஞ்சாவூரிலிருந்து ஏறத்தாழ 11 கி.மீ. தொலைவில் இருக்கும் இத்தலத்தில் சோற்றுத்துறை நாதர், ஓதவனேச்வரர், தொலையாச் செல்வநாதர் என்னும் திருநாமங்களுடன் இறையனார் அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கி தனிக் கோயிலாகவே அமைந்திருக்கும் தனிச் சன்னிதியில் காட்சியளிக்கும் அம்பாள் அன்னபூரணி. அடியார்களின் பசிப்பிணியைப் போக்க அட்சய பாத்திரத்தில் அன்னம் அருளிய இறைவன் எழுந்தருளியிருக்கும் தலமாதலால் சோற்றுத்துறை என்னும் பெயர்; சோற்றுத்துறையின் தலைவனாதலால் சோற்றுத்துறை நாதர். அருளாளரின் குரல் கேட்டு இறைவன் அருளிய அட்சய பாத்திரம் ‘உலவா சோற்றுக்கலம்’ என்றே அழைக்கப்பெறுகிறது. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய பேரருளாளரான பெருமானுக்குத் ‘தொலையாச் செல்வர்’ என்னும் திருநாமமும் உண்டு; அவருக்குள் பாதியாகி விளங்கும் அம்மையார் ‘தொலையாச் செல்வி’ என்றும் அழைக்கப்பெறுகிறார். இத்தலத்திலிருக்கும் இறையனாருக்கு ஓதவனேச்வரர் என்றும் திருநாமமுண்டு. ஓதவனம் என்றால் கடல். பழந்தமிழில் ‘ஓதம்’ என்னும் சொல்லுக்கு வெள்ளம், நீர்ப்பெருக்கு, கடல் அலை என்னும் பொருள்கள் உண்டு. ‘ஓதனம்’ என்னும் சொல் - சோறு, உணவு என்று பொருள்படும். இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் இந்நாமத்தின் பொருளும், அது காட்டும் இறையனாரின் கருணையும் விளங்கும். பாற்கடல் உமிழ்ந்த நஞ்சை உண்ட பரமனார், தம்முடைய பக்தர்களின் துன்பத்தைப் போக்கச் சோறு படைக்கிறார் என்று இத்திருநாமம் உணர்த்துகிறது.
அழகிய லிங்கத் திருமேனியுடன் மூலவரான சோற்றுத்துறைநாதர் காட்சியளிக்கிறார். சமுதாயத்துக்கு நன்மை பயப்பதற்காகப் பற்பல முயற்சிகள் மேற்கொண்ட கௌதம முனிவர் சோற்றுத்துறைநாதரை வணங்கி இத்திருப்பதியில்தான் முக்தி அடைந்தார். பலருக்கும் அன்னம் பாலிப்பதற்காகப் பயிர் விளைவித்தவர் கௌதமர்; அதேபோன்று பசியால் வாடியவர்களுக்குச் சோறளித்துக் காத்தவர் சோற்றுத்துறைநாதர் அல்லவா! அதனால் இத்தகைய இறையனார்தாம் தனக்கு முக்தி தந்தருள வேண்டும் என்று கருதி, கௌதம முனி இத்தல இறைவனை வணங்கினார் போலும்! இன்றும் கௌதமர் வழிபட்ட காட்சியை விளக்கும் சிற்பத்தை இக்கோயிலில் காண முடியும். இதனால் சோற்றுத்துறைக்கு ‘கௌதமாஸ்ரமம்’ என்னும் பெயருமுண்டு.
மகாமண்டபத்தில் அருளாளத் தம்பதியினரும் சிலா வடிவில் உள்ளனர். இவர்களைப் பார்க்கப் பார்க்க அடியார்களால் ஆண்டவனுக்குச் சிறப்பா அல்லது ஆண்டவனால் அடியார்கள் சிறப்படைகிறார்களா என்னும் ஐயம் மனத்தில் எழுகிறது. இத்தல இறையனாரை பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சூரியன் ஆகியோரும் வழிபட்டுள்ளனர். அருணகிரிநாதரும் ராமலிங்க வள்ளலாரும் இத்தலத்தைப் போற்றியுள்ளனர். மூவர் (நாவுக்கரசர், சுந்தரர், சம்பந்தர்) பாடல்பெற்ற தலம் என்னும் சிறப்புடையது.
சப்தஸ்தான தலங்கள் என்றாலே நந்திதேவரின் திருமணம்தான் நினைவுக்கு வரும். சிலாத முனிவரின் மகனான ஜப்பேசனுக்கும் சிவபக்தர்களில் முதன்மையானவரான வியாக்ரபாத முனிவரின் மகளான சுயம் பிரகாசைக்கும் (சுயாம்பிகை என்றும் அழைக்கப்படுபவள்) பங்குனி மாத புனர்பூசத் திருநாளன்று திருமழபாடியில் திருமணம் நடந்தது. சித்திரை மாதம் திருவையாற்றில் அருள்பாலிக்கும் ஐயாறப்பருக்கு பிரம்மோற்சவம் நடக்கும். அதன் நிறைவு நாளில் நந்திதேவரையும் சுயாம்பிகையையும் வெட்டிவேர் பல்லக்கில் ஏற்றுவர். ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் கண்ணாடிப் பல்லக்கில் ஏறிக்கொள்வர். திருவையாற்றிலிருந்து திருப்பழனத்துக்குச் செல்லும் கோஷ்டி, தொடர்ந்து திருச்சோற்றுத் துறையை வந்தடையும். ஊர் எல்லையிலேயே சோற்றுத் துறைநாதரும் அன்னபூரணி அம்மையும் அவர்களை வரவேற்று ஊருக்குள் அழைத்துச் செல்வர். திருச்சோற்றுத் துறையில்தான் வருபவர்களுக்கெல்லாம் அன்னம் பாலிக்கப்படும். தொடர்ந்து அந்த ஊர்வலம் திருவேதிகுடி நோக்கிச் செல்லும்.
இது பிரார்த்தனைத் தலமாகவும் கருதப்பெறுகிறது. குறிப்பாக, திருமணத் தலம். சுவாமிக்கு வலப்புறத்தில் அம்பாள் எழுந்தருளியிருக்கும் தலங்களுக்கெல்லாம் ‘திருமணக் கோலத்தலம்’ என்று பெயர். தஞ்சைப் பகுதியிலிருக்கும் திருமணக் கோலத்தலங்களில் திருச்சோற்றுத்துறை முக்கியமானது.
அடியார்களின் வினை தீர்க்கும் அன்னபூரணி சமேத சோற்றுத்துறை நாதரை வணங்கினால், போய வினைகளும் இனி வரப்போகும் வினைகளும் களைந்து போவது மட்டுமல்லாமல் பசிப்பிணி தீர்ந்தது போல் பிறவிப்பிணியும் பறந்தோடிப் போகும் என்பது திண்ணம்.

Comments