ஸ்ரீ ரங்கத்துக்கும் முந்தைய ஆதித் திருவரங்கம்


துளங்கு நீண்முடி அரசர்தம் குரிசில் தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங் கோடு நாழிகை யேழுட னிருப்ப வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச் செய்த வாறடி யேன றிந்து, உலகம் அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே!
- - திருமங்கையாழ்வார்
‘நா ராயணா!’ என்று நாவினிக்க நாளும் நவில்வோருக்கு நற்கதியை நல்குவான் திருமகள்நாதன்!
அவன் புகழை வாயினால் பாடி, மனதினால் சிந்திக்கும் அடியார்க்கு மூல முழு முதற்பொருள் அவனே.
பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளிகொண்ட பரந்தாமன், பக்தர்களுக்கு அருள் பாலிக்கத் தலங்கள் பலவற்றில் எழுந்தருளியுள்ளான்.
அந்தத் திருமாலவன் எழுந்தருளியிருக்கும் திவ்விய தேசங்கள் அனைத்திலும் அன்று முதல் இன்று வரை, ஈடும் இணையும் இன்றி முதன்மைத் திருக்கோயிலாகத் திகழ்வது திருவரங்கமாகும். வைணவ சமயத்தின் தன்னிகரற்ற தலைமையகமாகப் பெருமையுடன் விளங்குவது திருவரங்கம்.
இந்தத் திருவரங்கத்தினும் தொன் மையான தலமாக இன்னொரு வைணவத் தலம் கருதப்படுகிறது. இந்தத் தலம் பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம் என்று பாரோர் பக்தியுடன் போற்றிப் பரவும் பகுதியில் பாங்குடன் அமைந்துள்ளது.
நடு நாடு என்று சிறப்பித்துச் சொல்லப் படும் இந்த க்ஷேத்திரத்தில், தன்னை அண்டி வருபவர்க்கு அடைக்கலம் அருளும் திருவரங்கப் பெருமான், தென்பெண்ணையாற்றங் கரையில் ‘ஆதித் திருவரங்கம்’ என்ற அழகிய கோயிலில் பள்ளி கொண்டுள்ளான்.
இந்தக் கோயில் வரலாற்றுப் பெருமை வாய்ந் தது. வழிபாட்டுச் சிறப்பு மிக்கது. வனப்பு நிறை வடிவமைப்பு வாய்ந்தது. படித்தவர்- பாமரர் என்று அனைவரையும் தன்பால் ஈர்த்து பக்தி மணம் கமழ்வது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆதி ரங்கநாதர், தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய பெருமாள் ஆவார்.
பெரிய திருமேனியுடன் ‘பெரிய பெருமாள்’ என்ற பெயர் பெற்றுத் திகழும் பெருமையுடைய ஆதி ரங்க நாதர், இங்கு எழுந்தருளிய வரலாறு விந்தையானது. அறிந்து கொண்டு ஆனந்திக்கத் தக்கது.
முன்னொரு காலத்தில் சோமுகன் என்ற அசுரன் இருந் தான். தேவர்களை அடக்கி ஆள்வதும், அவர்களைக் கொடுமைப்படுத்துவதும் அசுரர்களின் பிறவிக் குணமாகும். சோமுகனும் இதற்கு விதிவிலக்கல்ல.
அறங்கள் அத்தனைக்கும் ஆணிவேராகத் திகழுவதும், தேவர்களுக்கு அளப்பரிய ஆற்றலை அளிப்பதும் வேதங்களேயாகும். வேத மந்திரம் ஓதி வளர்க்கப்படும் யாகங்களில் தேவர்கள் அனைவரும் தங்களுக்குரிய அவிர்பாகத்தைப் பெறுகின்றனர்.
எனவே வேதமே, தேவர்களின் மேன்மைக்கு முக்கிய மான காரணம் என்பதை சோமுகன் புரிந்து கொண்டான். வேதநெறி விலக்கப்பட்டு விட்டால் விண்ணவர்கள் வீரியம் இழந்து, வெற்றியும் இழந்து, வேதனையில் வீழ்வது திண்ணம் என்பது அவனுக்கு விளங்கியது.
நேரம் பார்த்து சதுர்வேதங்களை அபகரித்துச் சென்று ஆழ்கடலின் அடியில் பதுங்கிக் கொண்டான். திகைப்பில் ஆழ்ந்த தேவர்களும் முனிவர்களும், வேதங்களை மீட்டுத் தருமாறு திருமாலிடம் சென்று முறையிட்டனர். மனமிரங்கிய மகாவிஷ்ணு மச்ச வடிவம் எடுத்துக் கடலுக்கு அடியில் மறைந்திருந்த சோமுகனை வதைத்து மறைகள் நான்கையும் மீட்டுத் தந்தார்.
பின்னர், ஆதித் திருவரங்கம் என்னும் இந்த அரிய தலத்தில் அரவணையில் படுத்துக் கொண்டு இளைப்பாறியவாறு, நாபிக் கமலத்தில் உதித்த நான்முகனுக்கு மீண்டும் வேதங்களை உபதேசித்து அருளினார்.
இந்தக் கோயிலின் கருவறை விமானம், ‘சந்தோமய விமானம்’ என்ற அமைப்பைச் சார்ந்தது. ‘வேதங்களின் மறுவாழ்வு’ என்பதே இதன் விளக்கமாகும்.
கிருத யுகத்தில் தொண்டை மன்னன் சுரதகீர்த்தி என்பவன் கீர்த்தியும், சீர்த்தியும் கொண்டு வாழ்ந்திருந்தான். வாழ்வில் வளங்கள் பல வாய்த்திருந்தும், மழலைச் செல்வம் இல்லாததால் மனம் வருந்தி மகிழ்ச்சியற்று இருந்தான்.
திரிலோக சஞ்சாரியும், திரிகால ஞானியுமான நாரத மாமுனிவர் அவனுக்கு நல்வழி காட்டினார்.
‘உத்திர ரங்கம்’ என்னும் உயரிய தலத்தில் உறையும் உலக முதல்வன் அரங்கனை, மனைவியுடன் வந்து உரிய முறையில் வேண்டித் தொழுதால் உளக்குறை தீரும் என்று உரைத்தார்.
சுரதகீர்த்தியும் அவன் மனைவியும் ஆதித் திரு வரங்கம் சென்று பாம்பணையில் பள்ளி கொண்ட பரமனைப் பணிந்தனர். நாராயணனின் நல்லருளால் நான்கு குமாரர்களை பெற்றனர். அதனால், நன்றி மிக்க தொண்டை மன்னர்களின் வழித்தோன்றல்கள் இந்தக் கோயிலை வெகு காலம் நிர்வாகம் செய்து வந்தனர்.
சந்திரன் சஞ்சலம் தீர்ந்ததும் இங்குதான். தண் ணொளி வீசும் சந்திரன் ஒரு முறை தன்னொளி இழக்க நேரிட்டது. மனைவிகளின் சாபத்தால், கலைகள் குறைந்து ஒளி மங்கத் தொடங்கியதால் மனம் வருந்திய சந்திரன், மகா விஷ்ணுவின் மலர்ப்பாதங்களைச் சரண் புகுந்தான்.
அரங்கன் அருளால் அவனது கலைகள் மீண்டும் அழகுடன் வளர்ந்தன. சந்திரன் நீராடிப் பாவ விமோசனம் பெற்ற திருக்குளம், கோயிலின் தென்கிழக்கில் ‘சந்திர புஷ்கரிணி’ என்ற பெயருடன் பொலிவுடன் திகழ்கிறது.
வேதங்களையும் விண்ணவர்களையும் காத்து, வெண்ணிலவு வேந்தனையும் காத்த விஷ்ணு மீண்டும் தனது திவ்விய லோகத்தில் எழுந்தருள வேண்டும் என்று விருப்பத்துடன் வேண்டினர் தேவர்கள்.
ஆனால், அகிலத்து அன்பர்களும், அடியவர்களும் ஆதிரங்கனைப் பிரிய மனமின்றி அல்லல் உற்றனர்.
அன்பில் கட்டுண்ட ஆண்டவன் விஸ்வகர்மாவை அழைத்தான். தன்னைப் போன்ற ஒரு வடிவத்தை விக்கிரமாகச் செய்யும்படி பணித்தான். அந்த வியக்கத் தக்க விக்கிரகத்தில் பெருமாள் சாந்நித்யமாகி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அருள் பாலித்து வருவது ஆதித் திருவரங்கத் தலத்தின் அற்புதமாகும்.
தென்பெண்ணை ஆற்றின் கரையோரம், தென்றல் தவழும் சுந்தரச் சூழலில், சொக்க வைக்கும் அழகுடன் திருக்கோயில் அமைந்துள்ளது.
வடக்கிலும், கிழக்கிலும் ஆற்றின் தெள்ளிய நீர் தொட்டுத் தழுவிச் செல்லும் தோற்றம் எடுத்துரைக்க இயலாத எழில் மிகுந்ததாகும்.
இயற்கை அழகின் இனிமையால், ஆலயத்துக்குள் அடியெடுத்து வைக்கும் முன்னரே, மனதில் துன்பம் என்னும் சுமை குறைவதை உணரலாம்.
ஆலயத்துள் நுழைந்தவுடன் முதலில் கண்களைக் கவர்வது அழகுற அமைக்கப்பட்டுள்ள கொடிமரமும் பலிபீடமும்தான். தண்டனிட்டு வணங்கிக் கடந்தவுடன் திருவரங்கனின் கருவறை.
சுதையில் உருவமைக்கப்பட்ட திருவரங்கனின் சயனத் திருக்கோலம் கண்டவுடன் மனம் கனக்கத் தொடங்கும்- இம்முறை பக்தியினாலும், மகிழ்ச்சியினாலும்.
இளநகை பூத்துள்ள முகமலர் சற்றுக் கிழக்காகச் சாய்ந்து அருளுடன் நோக்குகிறது.
வடபுறம் திருவடியும், தென்புறம் திருமுடியும் திகழ்கின்றன. இடப்பக்கம் வீற்றிருந்து ஸ்ரீதேவி இன்முகத்துடன் உபசரிக்க, திருமாலின் திருவடிகளைத் தன் மடியில் பூதேவி மகிழ்ச்சியுடன் ஏந்திக் கொள்ள, வலப்புறம் கீழிருந்து கருடன் அடியவனாக ஏவல் புரியக் காத்திருக்க, ஆதிசேஷனாம் அரவணையின் மேல் அந்த அனந்தனே விரித்த படத்தால் குடை பிடிக்க, யோக நித்திரை புரிகிறான் ஆதித் திருவரங்கன்.
வலக்கை, சிரசின் பக்கமாக அபய முத்திரை அருள் கிறது. இடக்கை, நாபிக் கமலத்தில் உதித்தெழுந்த நான் முகனுக்கு நான்மறைகளை நல்லுபதேசம் செய்யும் ஞான முத்திரையைக் காட்டுகிறது.
வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அளவுக்கு வனப்பும், வடிவழகும் வாய்ந்தவன் ஆதித் திரு வரங்கன்.
அந்த அடைக்கலநாதனின் சந்நிதியிலேயே இருந்து விடலாமா என்று தோன்றும்- இறைவனிடம் பறி கொடுத்து விட்ட இதயத்தையும், கண்களையும் மீட்டுக் கொண்டு வெளிப்பட்டால்! கோயில் பிரா காரத் துவக்கத்தின் வலப்பக்கம் அமைந்திருப்பது ஸ்ரீராமர் சந்நிதி.
இளவல் லட்சுமணனுட னும், இல்லத்தரசி சீதாதேவி யுடனும் தரிசனம் தருகிறார் ராமர். அவர்களுக்கு எதிரில் பணிவின் மொத்த உருவமாக உடல் வளைத்து, கரம் கூப்பி தரிசனம் தரும் பவ்விய ஆஞ்சநேயர். அவர் முகத்தில் துலங் கும் தெய்விகப் புன்னகை, பார்த்தாலே பரவசம் ஏற்படுத் தும். இப்படிப்பட்ட ஒரு கோலத்தில், ஆஞ்சநேயர் இந்த ஆலயத்தில் காட்சி அளிக்கிறார்.
ஸ்ரீராமர் சந்நிதியை அடுத்து, எழில் கொஞ்சும் தனிக் கோயில் ஒன்றில் தாயார், ஸ்ரீரங்கநாயகி என்னும் திருப்பெயருடன் திருவருள் புரிகிறார். இந்தக் கோயிலில் ஸ்ரீவரதராஜர் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, ஸ்ரீவேதாந்த தேசிகர் சந்நிதி போன்ற பல சந்நிதிகளும் சிறப்புற அமைந்துள்ளன.
நடுநாட்டில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்படவில்லை என்று பலரால் பல காலம் கருதப்பட்டு வந்தது. எனினும், இந்தக் கருத்தை மறுக்கும் விதத்தில், திரு மங்கையாழ்வார் பாடியருளிய பெரிய திருமொழியில் இந்தக் கோயில் குறிக்கப்படுவதாகக் கூறுவோரும் உளர்.
வெருவாதாள்... எனத் தொடங்கும் பத்துப் பாசுரங்களிலும், ஏழை ஏதலன்... எனத் தொடங்கும் பத்துப் பாசுரங்களிலும் மங்களாசாசனம் செய்யப் பட்டிருப்பது ஆதித் திருவரங்கனே என்று கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டுவோரும் உளர்.
பெரிய பெருமாளாகிய ஆதி ரங்கநாதனின் பெற்றியை (பெருமையை) உணர்ந்து போற்றுவோம். பெறற்கரிய பெரும் பேறு பெற்றிடுவோம்.
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து, மாழை மான்மட நோக்கியுன் தோழி; உம்பி எம்பிஎன் றொழிந்திலை, உகந்து தோழ னீயெனக் கிங்கொழி என்ற சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட, ஆழிவண்ண! நின் அடியினை அடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே!
திருமங்கையாழ்வார்.

 

Comments