காமாட்சியின் வரப்பிரசாதம்

தெ ளிந்த நீரோடை போன்ற நிம்மதியான வாழ்வில் துயரம் கலந்து, வரதராஜ ஜோசியரையும் மரகதத்தையும் கலக்கியது. தங்கள் வாழ்வை மலரச் செய்யவும், தங்கள் வம்சத்தை விளங்கச் செய்யவும் ஒரு மகன் பிறக்கவில்லையே என்று வரதராஜ ஜோசியரும் மரகதமும் ஏக்கமுற்றனர். ‘காஞ்சியில் வசித்து வரும் நமக்கு அந்த அம்பிகையின் அருள் கிட்டாதோ? சந்ததி இல்லாமலேயே நாம் இறந்து விடுவோமோ?’ என்று இருவரும் தனிமையில் இருந்தபோதெல்லாம் எண்ணி எண்ணி மறுகினர்.
விரதம் இருந்தனர். தான தர்மங்கள் செய்தனர். புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்றனர். புண்ணிய நதிகளில் நீராடினர். ஒரு பலனும் இல்லை.
மரகதத்தின் தந்தையான காமகோடி சாஸ்திரியார், பிரபலமான வேத பண்டிதர். மகளின் நிலை குறித்து மனவேதனைப்பட்டார். மகளும் மாப்பிள்ளையும் உள்ளுக்குள்ளேயே குமைந்து, உள்ளம் குமுறும் காட்சி அவர் நெஞ்சை அறுத்தது. காமாட்சியின் சந்நிதிக்குச் சென்றார். கண்கள் கலங்க, அன்னையைத் தோத்திரம் செய்தார். ‘‘என் குழந்தைகளைத் தண்டிக்க வேண்டாம். உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். லோகநாயகியே! கருணைக் கடலே! குலக் கொழுந்து ஒன்று யாசிக்கிறேன். உன் திருக்கடாட்சம் பட்டால் பட்ட மரமும் துளிர்க்குமே, தாயே!’’ என்று வெகு நேரம் கண்ணீர் விட்டுக் கதறினார் காமகோடி சாஸ்திரியார்.
குலதேவி கருணை காட்டினாள். அன்று இரவே, காமாட்சியன்னை சாஸ்திரியாரின் கனவில் தோன்றி, ‘‘தம்பதிக்கு வெண்ணெய் கொடு. ஞானக் குழந்தை பிறக்கும்’’ என்று கூறி மறைந்தாள். அந்தக் கணமே விழித்துக் கொண்டு விட்டார் பெரியவர். விடியும் வரை காமாட்சி தேவியின் அருள் வெள்ளத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தார்.
காலையில் நீராடி விட்டு, அனுஷ்டானங்களை எல்லாம் முடித்துக் கொண்டு தம்பதியை அருகில் அழைத்து தாம் கண்ட கனவைப் பற்றிக் கூறினார். இருவரும் மெய்சிலிர்த்துப் போய் செய்வதறியாது திகைத்து, சாஸ்திரியாரின் பாதங்களில் விழுந்து வணங்கினர். ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, கரம் கூப்பி அம்பிகையைத் தொழுத வண்ணம் இருந்தனர். பின்னர் காமகோடி சாஸ்திரியார், நவநீதம் (வெண்ணெய்) எடுத்து, பராசக்திக்குப் படைத்துவிட்டு, துதி செய்து, மந்திரங்கள் ஜபித்து அதை இருவருக்கும் கொடுத்து உண்ணும்படி கூறினார். தேவியின் பிரசாதத்தைப் பரம பக்தியுடன் பெற்று, இருவரும் உட்கொண்டனர்.
அன்னையின் அருட் பிரசாதம் அருமருந்தன்றோ? மரகதம் கருவுற்றாள். உற்றார் உறவினர் பெரும் மகிழ்ச்சி எய்தினர். ஞானக் குழந்தை வளர்பிறை போல் வயிற்றில் வளர்ந்து வந்தது. வளைகாப்பு, சீமந்த வைபவங்கள் இனிது நடந்தேறின. மரகதத்துக்கு மங்கையர், மலர் சூடி மகிழ்ந்தனர். புண்ணியனைச் சுமந்த புண்ணியவதியின் திருமேனி பூரண சந்திரன் போல் பொலிவுற, தந்தத்தில் கடைந்தெடுத்த பதுமை போல் தோற்றம் அளித்தாள்.
நாளும் கோளும் கூடின. விண்ணோர் ஆசி கூற, மண்ணோர் ஆசி பெற, கண்ணனுக்கு இணையான ஆண் மகவை ஈன்றெடுத்தாள் மரகதம். 1870-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 22-ஆம் நாள், சனிக்கிழமை, அஸ்த நட்சத்திரம் கூடிய மங்கள நாளில் காமாட்சி தேவி அளித்த வரப் பிரசாதமாக அந்தக் குழந்தை அவனியில் அவதரித்தது.
பாட்டனாரின் பெயராக அமைந்ததாலும், குலதெய்வமான வேங்கடாசலபதிக்கு உரிய சனி வாரத்தில் பிறந்ததாலும் அந்தத் தெய்வக் குழந்தைக்கு சேஷாத்ரி என்ற திருநாமம் சூட்டப்பட்டது.
வளரும் குழந்தையின் திருவிளையாடல்களில், பின்னர் வாழப் போகும் மகானுக்குரிய அருமை பெருமைகளைக் காண முடிந்தது. பராசக்தி அளித்த ஞானப் பிள்ளை ஆதலால், தெய்வச் சிந்தனையும் இறை வழிபாடும் அதற்கு இயற்கையாகவே அமைந்து விட்டன.
அன்னை மரகதத்தின் இடுப்பில் அமர்ந்து, ஆலயங்களுக்குச் சென்றபோது, பிறரைப் போலவே கைகூப்பித் தொழுதார் குழந்தை சேஷாத்ரி. பக்திப் பரவசத்துடன் தாய் துதிப் பாடல்கள் பாடும்போது மெய்ம்மறந்து கேட்ட சேஷாத்ரி, மழலை மொழியிலேயே சங்கீதப் பயிற்சி பெற்றார். நான்கு வயது நிரம்புவதற்குள்ளேயே அந்தத் தாய், மகனுக்கு கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம், மூகபஞ்சசதி, குருஸ்துதி முதலிய தோத்திரப் பாடல்களைக் கற்றுத் தந்தாள். தத்தித் தத்தி நடை பயிலும்போதும், தடுக்கித் தடுக்கி விழும்போதும் சேஷாத்ரி, தோத்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருப்பார்.
வரதராஜ ஜோசியருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. ‘குழந்தை பிறக்குமா?’ என்று ஏங்கியவர், ‘ஞானக் குழந்தை பிறக்க என்ன பாக்கியம் செய்தேனோ?’ என்று புளகிதம் அடைந்தார். சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது பையனை மடியில் வைத்துக் கொள்வார். வேதாந்தப் பாடங்களை சேஷாத்ரி கவனமாகக் கேட்பார்.
தங்கப் பதுமையாக நடமாடிக் கொண்டிருந்த சேஷாத்ரிக்கு நான்கு வயது நிரம்பியது. ஒரு நாள் தாயுடன் வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்குச் சென்றார். அப்போது திருவிழாக் காலம். விற்பனைக்காக ஒருவன் சாக்கு நிறைய பாலகிருஷ்ண விக்கிரகங்களைக் கொண்டு வந்திருந்தான். அதைக் கண்ட சேஷாத்ரி தனக்கு ஒரு பொம்மை வேண்டும் என்று தாயிடம் கெஞ்சினார். அன்னை அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. கடைக்காரன் குழந்தையின் அழகைக் கண்டு சொக்கிப் போனான்.
‘‘அம்மா, உங்க குழந்தையைப் பார்த்தா கிருஷ்ணனைப் போலவே இருக்குது. அது ஆசைப்பட்டுக் கேட்குது. ஒரு பொம்மையை எடுத்துக் கொள்ளட்டும்’’ என்று சொல்லி சேஷாத்ரியை அருகில் அழைத்துத் தன் கையாலேயே ஒரு பொம்மையை எடுத்துக் கொள்ளும்படி கூறினான். மகிழ்ச்சி அடைந்த சேஷாத்ரி, சாக்குப் பையில் தன் சிறு கையை விட்டு, ஓர் அழகிய கிருஷ்ண விக்கிரகத்தை எடுத்துக் கொண்டு, துள்ளிக் குதித்து ஓடினார். மரகதம் பணத்தை எடுத்துக் கொடுத்தாள். ஆனால், கடைக்காரன் அந்தக் காசைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டான்.
என்ன ஆச்சர்யம்! அவன் கொண்டு வந்திருந்த ஓராயிரம் வெண்கல விக்கிரகங்களும் அன்று மாலைக்குள் விற்பனை ஆகிவிட்டன!
மறுநாள் குழந்தை சேஷாத்ரியுடன் கோயிலுக்கு வந்த மரகதத்தைப் பார்த்து விட்டுப் பரவசமானான் அந்த வியாபாரி. பாய்ந்தோடி வந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக, அவள் கால்களில் விழுந்து கும்பிட்டான். மரகதத்துக்கு ஒன்றுமே புரியவில்லை.
உடல் நடுங்க எழுந்து நின்ற வியாபாரியை நோக்கி, ‘‘என்னப்பா? என்ன நடந்தது?’’ என்று அன்புடன் விசாரித்தாள் மரகதம்.
அவன் தேம்பித் தேம்பி அழுதான். ‘‘அம்மா! நீங்க பெற்ற பிள்ளை சாதாரணப் பிள்ளை இல்லே. அது அதிர்ஷ்டக் குழந்தை. அது கை வெச்ச வேளை, நான் கொண்டு வந்திருந்த விக்கிரகங்களெல்லாம் வித்துப் போயிடுச்சுங்க. எத்தனையோ திருவிழாவுக்குப் போயிருக்கேன். நூறு பொம்மைகூட விக்காது. நேத்து ஆயிரம் வித்துப் போயிடுச்சு. இது தங்கக் கை, தங்கக் கை’’ என்று கூறிக் கொண்டே குழந்தையின் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான்; முத்த மழை பொழிந்தான். நான்கு வயது பாலகன் ‘திருதிரு’வென்று விழித்தான். பெற்றவள் பெருமையால் பூரித்துப் போனாள்.
இந்தச் செய்தி ஊரெங்கும் பரவிற்று. எல்லோரும் குழந்தையை, ‘தங்கக் கை சேஷாத்ரி’ என்றே அழைத்தனர். இந்தத் தங்கக் கைதான் பிற்காலத்தில் திருவண்ணாமலை வியாபாரிகளை வாழ வைத்தது. ‘நம் கடைக்குள் நுழைய மாட்டாரா, நம் பண்டங்களைத் தொட மாட்டாரா?’ என்று அவர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். தங்கக் கை தொட்டதெல்லாம் துலங்கியது!
மகான் சேஷாத்ரி ஸ்வாமிகள், கடைத் தெருவில் நடந்து செல்லும்போது ஏதாவது ஓர் ஓட்டலுக்குள் நுழைவார். அங்கு இருக்கும் பலகாரங்களை வாரி இறைப்பார். ஆனால், முதலாளி ஒன்றுமே சொல்ல மாட்டார். மாறாக, மகிழ்ச்சியடைவார். அன்று அவருக்கு நல்ல வியாபாரம் ஆகும்.
ஸ்வாமிகள் ஒரு கடைக்குள் நுழைவார். கல்லாப் பெட்டியைத் திறந்து பணத்தை எடுத்து வீசி எறிவார். அதைக் கண்டு கடை முதலாளி, ஸ்வாமிகளின் காலில் விழுந்து கும்பிடுவார். அன்று அவருக்கு நிறைய லாபம் கிடைக்கும்.
துணிக் கடைக்குள் நுழைவார். கடைக்காரர் பரிதாபப்பட்டு, அழுக்கேறிய அவரது கந்தல் உடையை களைந்து, புது வேட்டியைக் கட்டி அனுப்புவார். மறுநாளே அதைச் சாணிச் சுருணையாக்கி விடுவார் ஸ்வாமிகள். சில சமயம் புத்தாடையை அவிழ்த்துத் தெருவில் உள்ள பிச்சைக்காரனிடம் கொடுத்து விடுவார். அல்லது அதைத் துண்டு துண்டாகக் கிழித்து, முடிச்சுப் போட்டு, கன்றுக் குட்டிகளுக்கும், கழுதைகளுக்கும் நீண்ட வாலாகக் கட்டி, அவை ஓடுவதைக் கண்டு கைகொட்டிச் சிரிப்பார். எப்போதாவது யாராவது அவரைப் பிடித்து ‘ஷேவ்’ செய்துகொள்ள உட்கார வைப்பார்கள். பாதியிலேயே எழுந்து ஓடி விடுவார். அரைகுறையாக வழிக்கப்பட்ட முகத்துடன் உடலை மறந்த பரப்பிரும்மமாகவே அலைந்து கொண்டிருப்பார்.
ஸ்வாமிகள் சொன்ன வாக்கு எப்போதும் பலிக்கும். திலக் சாஸ்திரி என்பவரின் வீட்டுக்குள் ஒரு நாள் ஸ்வாமிகள் நுழைந்து, சாஸ்திரியின் சகோதரனைப் பார்த்து, ‘‘மணி இருக்கானே மணி. அவனை ஒரு வாரத்தில் எமன் கொண்டு போய் விடுவான்’’ என்று கூறிச் சென்றுவிட்டார். ஒரு வாரத்துக்கெல்லாம், நன்றாக விளையாடிக் கொண்டிருந்த மணி திடீரென்று இறந்து விட்டான்.
சேஷாத்ரி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் நித்திய பூஜை செய்து வந்தவர் அருணாசலம் என்பவர். ஒரு சமயம் அவருடைய தந்தையார் உடல் நலம் குன்றி, பிழைப்பதே கடினம் என்ற நிலையில் இருந்தார். அருணாசலத்துக்கு அழுகையே வந்து விட்டது. ஸ்ரீஅண்ணாமலையார் ஆலயத்தில் அமர்ந்திருந்த ஸ்வாமிகளிடம் ஓடிச் சென்று கன்னங்களைக் கண்ணீர் நனைக்க, மனத்தில் தியானம் செய்து கொண்டு நின்றார். ஆனால், தன் தந்தையின் நிலை பற்றி அருணாசலம் ஒரு வார்த்தையும் கூறவில்லை. அப்போது யாரோ ஒரு பக்தர் கொண்டு வந்து வைத்த வாழைப்பழங்களில் இரண்டை எடுத்து, அருணாசலத்தின் மீது வீசி எறிந்து, ‘இதைக் கொண்டு போ... கொண்டு போ’ என்று ஸ்வாமிகள் கூறினார். மகான் ஆசியுடன் அளித்த வாழைப்பழ பிரசாதத்தை எடுத்து வந்து தந்தைக்கு அளித்தார் அருணாசலம். மறுகணமே நோயின் கடுமை குறைந்து, தந்தையார் பிழைத்து எழுந்து விட்டார்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கம்பத்து இளையனாரான ஸ்ரீமுருகன் சந்நிதி யிலும், சாதுக்கள் மடத்திலும், சடைச்சி ஆச்சியம்மாள் வீட்டுத் திண்ணையிலும் ஸ்வாமிகளுக்கு எப்போதும் படுக்கைகள் போடப்பட்டிருக்கும். எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து விட்டு, களைத்துப் போனால் எங்காவது ஓரிடத்தில் வந்து படுப்பார். இஷ்டம் இருந்தால் ஆகாரம் உட்கொள்வார். வேண்டாம் என்றால் நாள் கணக்கில் அதைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டார். அழுகிப் போன பழங்களையும், ஊசிப் போன குழம்புச் சோற்றையும் அப்படியே வைத்திருந்து, நினைத்தபோது அதை அமிர்தமாக உண்டு ஆனந்தமடைவார். அதன் துர்நாற்றம் அருகில் இருப்பவர்களின் மூக்கைத் துளைக்கும்!
‘1929-ஆம் ஆண்டில் சேஷாத்ரி ஸ்வாமிகள் முக்தியடைந்தார். மகானின் பூத உடலை அடக்கம் செய்தபோது, ஸ்ரீ ரமண மகரிஷியே நேரில் வந்திருந்து, சடங்குகளெல்லாம் முடியும் வரை அங்கேயே மௌனமாய் நின்றிருந்தார்’ என்று அருணாசலம் இறுதியாகக் கூறியபோது, அந்தக் காட்சியைக் கற்பனையில் கண்டேன். மகரிஷியின் சமாதிக் கோயிலை தரிசிக்க வேண்டும் என்று தூண்டியது மனம். அருணாசலத்தின் துணையுடன் ரமணாச்ரமத்துக்குப் புறப்பட்டுச் சென்றோம்.
நன்றி: பரணீதரன் எழுதிய ‘அருணாசல மகிமை’.








 

Comments