பகவான் செய்த நவரத்தின மாலை!

தி ரிலோசனதாசர் ஒரு பொற்கொல்லர். சிறு கிராமம் ஒன்றில் வசித்த அவர், கிருஷ்ண பரமாத்மாவிடம் ஆத்மார்த்தமான பக்தி கொண்டு, தினந்தோறும் ஸ்ரீகிருஷ்ண னுக்கு பாமாலை புனைந்து சூட்டி மகிழ்வார். அவர் மனைவி கனகாபாயும் அவரைப் போலவே தெய்வ பக்தி நிரம்பியவள்.
அந்த நாட்டின் அரசரான முகம்மது அலி, தன் மகள் சாந்த் பீபியின் திருமண நிச்சயதார்த்தத்துக்காக ஒரு வார காலத்துக் குள் அழகிய நவரத்தின மாலை செய்து தருமாறு திரிலோசனதாசருக்குக் கட்டளை இட்டார். திரிலோசனரோ, ''பகவானுக்கு தொண்டு செய்யவே எனக்கு நேரம் போதவில்லை. இருந்தாலும் ஒப்புக் கொள்கிறேன்!’’ என்றார்.
காலக்கெடு முடிந்ததும் அரசர், தன் மந்திரிகளை அழைத்து, நவரத்தின மாலை தயாராகி விட்டதா என விசாரித்து வர அனுப்பினார்.
தனது வீடு தேடி வந்த மந்திரிகளிடம், ‘‘என்னைத் தேடி வந்த பாகவதர்களை உபசரித்ததால், இன்னும் நவரத்தின மாலை தயாராகவில்லை!’’ என்று கூறி, மன்னரது பொன் மற்றும் வைரங்களைத் திருப்பிக் கொடுத்தார் திரிலோசனதாசர்.
மன்னருக்கு சினம் பொங்கியது. ''எனது வேலையை அலட்சியம் செய்துவிட்டாரா திரிலோசனதாசர்? இவற்றை மீண்டும் அவரிடமே கொடுத்துவிட்டு, இன்னும் இரண்டு நாட்களுக்குள் நவரத்தின மாலை வந்து சேராவிட்டால், மரண தண்டனை விதிக்கப்படும்! என்று அவரிடம் தெரிவியுங்கள்!’’ என்று கூறினார்.
அவர்கள் அப்படியே செய்தனர். ‘நவரத்தின மாலையை இரண்டு நாட்களில் நான் எப்படி செய்து முடிப்பது?’ என்று திகைத்த திரிலோசனதாசர், அடர்ந்த காட்டுக்குச் சென்று ஸ்ரீகிருஷ்ணரை தியானித்து தவம் செய்ய ஆரம்பித்தார்.
சதா நேரமும் தன்னையே தியானிக்கும் தம் பக்தர் திரிலோசனதாசரின் உயிரைக் காப்பாற்ற நினைத்தார் ஸ்ரீகிருஷ்ணர். எனவே, அவரது உருவத்துக்கு மாறிய பகவான், அவரது இல்லத்துக்குச் சென்றார்.
கனகாபாயும், ஸ்ரீகிருஷ்ணரை தன் கணவர் என்றே நினைத்தாள். ஸ்ரீகிருஷ்ணரும் இரவு-பகல் பாராமல் இரண்டு நாட்கள் கடுமையாக உழைத்து, நவரத்தின மாலையைச் செய்து முடித்தார். பின்னர், அவரே அரண்மனை சென்று அரசரிடம் நவரத்தின மாலையைக் கொடுத்தார். அதன் அழகும் வேலைப்பாடும், அவர் மனதைக் கவர்ந்தது.
‘நமக்கு எப்படியும் மரண தண்டனை தான்!’ என்ற பயத்துடன் வீடு திரும்பி னார் திரிலோசனதாசர். அவரது பயத்தைக் கண்ட கனகாபாய், ‘‘என்ன நடந்தது?’’ என்று கேட்டாள். அவரும் நிகழ்ந்ததை விவரித்தார். அப்படியானால், தங்களது வீட்டில் தன் கணவராக வந்து நவரத்தின மாலை செய்து கொடுத்தது பகவான் கிருஷ்ணரே என்று அவள் உணர்ந்தாள். அதை கணவரிடம் மெய்சிலிர்த்தவாறே கூறினாள் கனகாபாய்.
திரிலோசனதாசர் வியப்பு அடைந்தார். இந்தச் செய்தி மன்னரையும் எட்டியது. அவர், திரிலோசன தாசரின் வீட்டுக்கு வந்து, அவரின் கடவுள் பக்தியைக் கண்டு வியந்து, பாராட்டி, ஏராளமான பரிசுகளையும் வழங்கினார்.
திரிலோசனதாசர் வழக்கம்போல் ஒரு நாள் பக்திப் பாடல் பாடி வணங்கியபோது, ஸ்ரீகிருஷ்ணர் அவருக்கு தரிசனமளித்து, மோட்சத்தையும் அருளி னாராம்.
வடஇந்தியாவில் பக்தர்கள், இன்றும்கூட திரிலோசனதாசரது பாடல்களை பக்தியுடன் உள்ளம் உருகப் பாடி மகிழ்கிறார்கள்

Comments