தி ருச்சி மாவட்டத்தில் சிவாயமலை என்ற ஒன்றிருக்கிறது. இதற்கு ஐயர் மலை, வாட்போக்கி, ரத்தினகிரி என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு. ஓம் என்னும் பிரணவ எழுத்தைப் போல மலையும் படியும் அமைந்திருப்பதால் சிவாயமலை என்பார்கள்.
மலையின் ஒரு புறம் சமண முனிவர் படுக்கைகள் ஐந்து உள்ளன. இதைப் பார்த்து விட்டுப் பாண்டவர் மலை என்றார்கள். அதனாலேயே பிறகு இதை ஐவர் மலை என்றார்கள். அதுவே காலப்போக்கில் ஐயர் மலை ஆயிற்று.
ரத்தினங்களைத் தேடி ஓர் அரசன் இங்கு வந்தான். இறைவன் அந்தண வடிவில் தோன்றி தொட்டி ஒன்றைக் காட்டி அதனைக் காவிரி நீரால் நிரப்பினால் ரத்தினங்கள் தருவதாகக் கூறினான். மன்னன் எவ்வளவோ முயன்றும் தொட்டி நிரம்பவில்லை. எனவே, கோபமடைந்து வாளினால் அந்தணன் தலையை வெட்டினான். உடனே அந்தணன் மறைந்துவிட்டார். வாளால் ஏற்பட்ட தழும்பு இறைவன் முடியிலே உள்ளது. இதனால் அவருக்கு முடித்தழும்பர் என்று பெயர்.
மன்னன் வாள் போக்கிய காரணத்தால் அப்பெயரும், மன்னனுக்கு ரத்தினம் கொடுத்ததால் ரத்தினகிரி என்ற பெயரும் ஏற்பட்டது.
சிறுமியாக வந்த ஸ்ரீ மீனாட்சி
ஆ ங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரோஸ் பீட்டர் என்பவர் 1912 முதல் 1928 வரை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக வும் மீனாட்சி அம்மன் கோயில் மேற்பார்வையாளருமாக இருந்து வந்தார். கிறிஸ்தவர் என்றாலும், அவருக்கு மீனாட்சி அன்னையின் மேல் எல்லையற்ற ஈடுபாடு இருந்தது. அவரை பாண்டிய மன்னரின் மறுபிறவியாகவே கருதி ‘பீட்டர் பாண்டியன்’ என்று மதுரை மக்கள் போற்றி வந்தனர். ஒரு நாள் இரவு இடி மின்னலுடன் கன மழை பொழிந்தது. ரோஸ் பீட்டர் துரை தமது மாளிகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுமி அவரது கட்டில் அருகே வந்து கைதட்டி, அவரை எழுப்பிவிட்டு மிக விரைவாகக் கீழே இறங்கி ஓடினாள்.
திடுக்கிட்டு எழுந்தவர், சிறுமியைப் பின்தொடர்ந்து கட்டடத்துக்கு வெளியே வந்தார். அடுத்த நொடி பெரிய இடி ஒன்று விழுந்து அந்த மாளிகை தரைமட்டமானது. அதிர்ச்சி அடைந்த துரை, தன்னைக் காப்பாற்றிய சிறுமியைத் தேடினார். அவள் கோயிலுக்குள் செல்வது போல் அவருக்குத் தெரிந்தது. மீனாட்சி அம்மையே சிறுமி ரூபத்தில் வந்து தன்னைக் காப்பாற்றினாள் என்பதை உணர்ந்தார் துரை.
நன்றிக்கடனாக ஸ்ரீமீனாட்சிக்குக் காணிக்கை வழங்க விரும்பிய துரை, கோயில் பட்டர்கள் ஆலோசனைப்படி, அம்மன் குதிரை வாகனத் தில் எழுந்தருளும்போது அவள் திருவடிகளைத் தாங்க இரண்டு மிதியடிகள் செய்து வைத்தார். ஒவ்வொன்றும் 28 தோலா (ஒரு தோலா= 31.15 கிராம்) எடை உடையன. அவற்றில் 412 சிவப்புக் கற்களும், 80 பச்சை வைரமும், 72 மரகதக் கற்களும், நான்கு முத்தும், நான்கு நீலமும், நான்கு வைடூரியமும் பதிக்கப்பட்டுள்ளன.
ஓய்வு பெற்ற பிறகும் மதுரையிலேயே தங்கி, மீனாட்சியின் அருளைப் போற்றி வந்தார் துரை. இறந்த பிறகும், அவர் விருப்பப்படி மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தைப் பார்த்தவாறே அவர் உடல், மெயின்கார்டு பொட்டல் எனப்படும் மெய்காட்டுவெளியில் உள்ள மாதா கோயில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்?
பு கழ்பெற்ற இத்தாலியக் கவிஞர் டார்குவட்டோ டாசோ, ஒரு முறை மன்னர் சார்லஸின் அரசவைக்குச் சென்றிருந்தார். உரையாடல் நடுவே மன்னர் கேட்டார்: ‘‘வாழ்கிறவர்களில் மகிழ்ச்சியுடன் வாழ்பவர் யார்? உங்கள் கருத்து என்ன?’’
‘‘கடவுள் மட்டுமே’’ என்றார் கவிஞர்.
‘‘உண்மைதான்! கடவுளுக்கு அடுத்தபடியாக மகிழ்ச்சியாக வாழும் மனிதன் ஒருவன் இருக்க வேண்டுமல்லவா?’’ என்றார் மன்னர்.
ஒரு கணம் மௌனமாக இருந்த கவிஞர் தனது பதிலைச் சொன்னார்: ‘‘கடவுளை மிக மிக நேசிப்பவனே கடவுளுக்கு அடுத்தபடியாக மகிழ்பவன்!’’
Comments
Post a Comment