அருட்களஞ்சியம்


காஞ்சி மகாபெரியவா அருளியது...
வ்வொரு சிவன் கோயிலிலும் பிராகாரத்தில் தெற்கு முகமாய் ஒரு மூர்த்தி உட்கார்ந்துகொண்டு இருக்கும். அந்த மூர்த்தியைப் பார்த்தால், முகத்தில் ஒரு புன்னகை தவழுவது தெரியும். அந்த மூர்த்தியைத் தரிசிப்பவர்கள் எல்லோரும் அந்த ஸந்நிதியில் ஒரு நிமிஷம் நின்றுவிட்டுத்தான் செல்வார்கள். அப்படி வசீகரிக்கும் தன்மை அந்த மூர்த்தியினிடத்தில் இருக்கிறது. அந்த மூர்த்திக்குப் பெயர் தக்ஷிணாமூர்த்தி.
அந்த மூர்த்தியின் கீழே இருபுறங்களிலும் வயதான நான்கு கிழவர்கள் இருப்பார்கள். அவர்கள் தக்ஷிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றுக்கொள்வதற்காக வந்தார்கள். அந்த மூர்த்தியைப் பார்த்த உடனேயே, அவர்கள் தாங்கள் வந்த காரியத்தை அடைந்து ஆனந்தத்தில் மூழ்கி, அந்த மூர்த்தியைத் தரிசித்துக் கொண்டு அங்கேயே இருக்கிறார்கள்.
அதுபோல் நாம் ஒருவரைப் பார்த்து, அதனால் நமது மனத்துக்கு ஒரு தெளிவு ஏற்படுமேயானால், அவரையே நம் குருவாக வரித்துவிடலாம். குரு என்ற பதத்துக்கு அஞ்ஞானத்தைப் போக்குகிறவர் என்று அர்த்தம். அஞ்ஞானத்தினால் தத்தளித்துக்கொண்டு இருக்கும் நமது மனத்தை யாராவது தெளிவுபடுத்துவாரேயானால், அவரே நமது குரு.
'மௌனகுரு’ ஓவியம்: கோபுலு (1957 விகடன் தீபாவளி மலரில் இருந்து...)
நாகஸ்வரம்
வாத்திய ஸங்கீதத்திற்கு, நம் நாட்டில் ஆதி காலந்தொட்டு ஒரு தனிச் சிறப்பு உள்ளது. இசைக் கருவிகளின் மூலமாகத்தான் மனிதன் ஸங்கீத சாஸ்திரத்தின் பல தத்துவங்களையும், மர்மங்களையும் உணர்ந்தான். சிவபெருமான் கையில் டமருகமும், கண்ணன் கையில் குழலும், ஸரஸ்வதி தேவியார் கையில் வீணையும் இருப்பதில் ஓர் ஆழ்ந்த கருத்து இருக்கிறது. வீணை, வேணு, மிருதங்கம் என்னும் மூன்று வாத்தியங்களைப் பற்றிச் சிறப்பாகப் பல நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.
இந்திய ஸங்கீதத்தின் பல அருமையான நுட்பங்களைத் தெளிவுற வாசித்துக் காட்டக்கூடிய வாத்தியங்களில் நாகஸ்வரமும் ஒன்றாகும். இந்த மேன்மையான வாத்தியம் சுமார் 600 வருஷங்களுக்கு முன்புதான் வழக்கிற்கு வந்தது. 13-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஸங்கீத ரத்னாகரத்தில் இந்த வாத்தியம் பற்றிக் கூறப்படவில்லை. 13-ம் நூற்றாண்டு வரையிலுள்ள சாஸனங்களிலும் (Epigraphical records) இந்த வாத்தியத்தைப் பற்றிக் கூறப்படவில்லை. தமிழ்நாட்டிலுள்ள புராதன கோயில் சிற்பங்களிலும் இந்த வாத்தியம் காணப்படவில்லை (கும்பகோணம் கும்பேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் ஒரு நாகஸ்வர சிற்பம் இருக்கிறது. ஆனால், அது பிற்காலத்தில் அந்த மண்டபத்தைப் புதுப்பித்தபோது ஏற்பட்டதெனத் தெரிகிறது). கோயில்களில் நவ ஸந்திகளில் வாசிப்பதற்குப் பல வாத்தியங்கள் ஆகமங்களில் கூறப் பட்டுள்ளன. அவற்றில் நாகஸ்வரம் காணப்படவில்லை. ஆகவே, இந்த வாத்தியம் மத்திய காலத்துக்குப் பின் (Mediaeval Period) ஏற்பட்டது என்பதில் ஐயமில்லை. 'புஜங்கஸ்வரம்’ அல்லது மகுடி என்னும் வாத்தியம் பழைமையானது. புராதன கோயில்கள் பலவற்றில் இதன் சிற்பத்தைப் பார்க்கலாம்.
நவீன காலத்தில், அதாவது சுமார் 20 வருஷங்களாக இந்த வாத்தியத்தை 'நாதஸ்வரம்’ என்று சிலர் அழைக்க ஆரம்பித்திருக் கிறார்கள். இந்தப் புதுப் பெயருக்கு சரித்திரத்திலும், சாஸ்திரத்திலும் ஆதாரம் கிடையாது. முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஆலய உற்சவ ஸம்பிரதாயங்களுக்குப் பேர்போன திருவாரூர் க்ஷேத்திரத்திலேயே இருந்தவர். பல நாகஸ்வரக்காரர்களும் அவருக்குச் சீடர்களாக இருந்தவர்கள். அப்படிப்பட்டவர் 'தியாகராஜ மஹத்வஜாரோலு’ என்னும் ஸ்ரீராக கீர்த்தனத்தில் 'நாகஸ்வரம்’ என்றே குறிப்பிடுகிறார்.
அனுபல்லவியில்,
ஆகமஸித்தாந்த ப்ரதிபாத்யம் ஆனந்தசந்த்ர சேகரவேத்யம்
நாகஸ்வர மத்தளாதி வாத்யம் நாமரூபாதீத மனாத்யம்
என்னும் ஸாஹித்யம் காண்கிறது. 'ஆகம’ என்பதற்குச் சரியாக 'நாகஸ்வர’ என்று எதுகை பொருத்தத்துடன் வருவதால், 'நாகஸ்வரம்’ என்பதே ஸம்பிரதாயமான பெயரென்பது நிச்சயமாகிறது. இரத்தினகிரி உலாவில் (16-ம் நூற்றாண்டு) நாகஸ்வரம் என்னும் பெயரே காணப்படுகிறது.
'நாக சின்னம்’ என்னும் பெயரும் இந்த வாத்தியத்துக்கு உள்ளது. 'சின்னம்’ என்றால் குழல் ரூபமாக உள்ள ஒரு காற்று வாத்தியம். சென்ற நூற்றாண்டிலிருந்த பழனி மாம்பழக் கவிச் சிங்க நாவலர் 'நாக சின்னம்’ என்று இந்த வாத்தியத்தைக் குறிப் பிடுகிறார். இவர் விச்வகர்ம வகுப்பினரைச் சேர்ந்தவர். இந்த வகுப்பினரே இந்த வாத்தியத்தைச் செய்பவர். மதுரை தமிழ்ச் சங்கத்தின் சொல்லகராதியிலும் நாக சின்னம் என்னும் பதம் காண்கிறது.
நாயனம் என்னும் பெயர், நாக சின்னத்திலிருந்து மருவி வந்திருக்கலாம். ஆந்திர தேசத்தில், 'நாகஸ்வரம்’ என்னும் பதத்தை 'மகுடி’க்கு உபயோகப்படுத்து கிறார்கள். நாகஸ்வரம் என்பது புஜங்க ஸ்வரத்தின் மொழிபெயர்ப்பாகும். தமிழ்நாட்டு நாகஸ்வரத்தை, தெலுங்கு தேசத்தில் 'ஸனாய்’ என்று அழைக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் 'நாதஸ்வரம்’ என்னும் பெயருக்கு இடமே கிடையாது!
'நாகஸ்வர’த்துக்கு 'நாகஸுரம்’ 'நாகஸரம்’ என்னும் பெயர்களும் சில இடங்களில் காணப்படுகின்றன. நாயன வாத்தியத்தின் நாதவர்ணம் ஒருவாறு புஜங்கஸ்வர வாத்தியத்தின் நாத வர்ணத் தைப் போல் இருந்ததால், இந்த வாத்தியத்துக்கு நாகஸ்வரம் என்னும் பெயர் வந்திருக்கலாம்.
- புரொபஸர் பி.ஸாம்பமூர்த்தி
(1952 விகடன் தீபாவளி மலரில் இருந்து)
மனத்தைக் கவரும் தக்ஷிணாமூர்த்தி!
குருர் பிரம்மா குருர் விஷ்ணு
ருர் தேவோ மஹேச்வர:
குரு ஸாக்ஷ£த் பரம் பிரும்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நம:
'ஹரி ஓம், நன்றாக குரு வாழ்க, குருவே துணை’ என்று கற்றுக் கொடுத்த பின்தான், நம் நாட்டில் சுவடி துவக்குதல் வழக்கம். பழங்காலத்து ஏட்டுச் சுவடிகளில் எல்லாம் இதைப் பார்க்கலாம்.
உலக வாழ்வில் உடலை வளர்ப்பவள் தாய்; உயிரை வளர்ப்பவன் இறைவன்; ஆனால், உலகிற் பிறந்தவர்கள் நல்வாழ்வு நடத்த உயிருக்கும் உடலுக்கும் பெரிதாகிய அறிவை வளர்ப்பவன் ஆசிரியன். இந்த ஆசிரியத்தன்மையில் அமர்ந்து சகல உயிர்க்கும் ஒரு குருவாய் இறைவன் இருக்கும் திருக்கோலமே சாக்ஷ£த் தக்ஷிணாமூர்த்தியின் திருவுருவம். 'குருவில்லா வித்தை உருவில்லை’ என்பதுபோல ஆன்ம குருவில்லாத வித்தையும் பயனுடையதாகாது.
அறிவே உருவாய் அமைந்த திருமுகமும், சின்முத்திரையும், வற்றாத கல்வி நிறைந்த சித்திரப் பொற்குடமும், தாமரை மலரும், அக்கமாலைக் கோவையும் பூண்ட அபயக் கரங்களும், தண்டையமைந்த திருத்தாளும் கொண்டு, கண்டார் மனத்தைக் கவருகின்றது, இச் சித்திரம்.
ஓவியம்: சர்மா
(1957 விகடன் தீபாவளி மலரில் இருந்து)

Comments