பு திதாக ஏதேனும் ஓர் ஆலயத்துக்கு நம் குடும்பத்தாருடன் செல்ல விரும்பினால், நமக்கு வசதியான ஒரு தினத்தில் அந்தக் கோயிலுக்குச் சென்று, நிதானமாக தரிசனம் செய்து இன்புறுவோம். ஆனால், நெடார் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்குச் செல்ல விரும்பினால் நாள், நட்சத்திரம், கிழமை என்று எதையும் பார்க்காமல் உடனடியாகப் புறப்படுங்கள். ஏனெனில், கோயிலின் தற்போதைய நிலை அப்படி! இந்தக் கோயிலின் ஒரு சில பகுதிகள் எந்த நேரத்திலும் இடிந்து பெயர்ந்து விழலாம் என்பது மாதிரி காட்சி அளிக்கிறது. அதனால்தான், ‘உடனேயே புறப்படுங்கள்!’ என்றோம்.
தஞ்சாவூர்- கும்பகோணம் நெடுஞ்சாலையில் தஞ்சாவூரில் இருந்து பத்து கி.மீ. தொலைவில் இருக்கிறது நெடார் கிராமம். வெட்டாற்றங்கரையோரமுள்ள இந்த கிராமத்தில்தான் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆலயம் அமைந்து உள்ளது. சரித்திரப் பழைமையின் பொலிவுகள் மற்றும் நினைவுகளைத் தன்னகத்தே கொண்டு ஒரு மௌன சாட்சியாக பலவீனத்துடன் நிற்கிறது இந்த ஆலயம்.
ஆலயத்தில் பளபளப்பு இல்லாவிட்டாலும் அன்பர்களை அரவணைத்து ஆட்கொள்ளும் அந்த ஆண்டவன் திருமேனியில் மட்டும் அப்படி ஒரு பளபளப்பு! ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் பாணமும் ஆவுடையாரும் காண்போரின் கண்களைக் காந்தம் போல் சுண்டி இழுத்து மெய்சிலிர்க்க வைக்கிறது. பாணமும் ஆவுடையாரும் பளிங்கு போல் வழவழப்புடன் மின்னுகின்றன. சுமார் இரண்டரை அடி உயர ஆவுடையாரின் மேல் ஒன்றரை அடி உயரத்தில் பாணம் காணப்படுகிறது. தற்போது ஒரு கால அபிஷேகம் மட்டுமே நடந்து, பக்தர்களின் கைங்கரியம் பெரிய அளவில் இல்லாமலே காளஹஸ்தீஸ்வரர் இப்படி ஜொலிக்கிறார் என்றால், அபிஷேகம், ஆராதனை போன்றவை எல்லாம் முறைப்படி செய்தால், இவர் இன்னும் எப்படி ஜொலிப்பார்?! ஆஹா! அந்த அற்புத தரிசனத்தை நினைத்தாலே நெஞ்சம் குளிர்கிறது. தினமும் தன்னைக் குளிர்விக்கக் குடம் குடமாக எண்ணெயும் தண்ணீரும் பாலும் தேவையென்று காத்திருக்கிறார் இந்த காளஹஸ்தீஸ்வரர். நெய் விளக்கின் பிரகாசமும், கற்பூர ஆரத்தியின் மணமும், மலர்களின் வாசமும் இந்த ஈசனுக்குத் தொடர்ந்து கிடைக்கும் நாள் எந்நாளோ? தற்போதுள்ள சூழ்நிலையில் ஒற்றை அகல் விளக்கின் ஒளியில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அருள் பாலிக்கிறார் ஈஸ்வரன்.
அம்பாள் திருமேனியும் ஈஸ்வரனுக்குச் சளைத்தது அல்ல என்பது போல் பளபளப்புடன் பாங்காக விளங்குகிறது. அம்பாள் பெயர், அருள்மிகு மங்களாம்பிகை. அழகான அமைப்புடன் மூலவர் விக்கிரகம் காணப்படுகிறது!
ஆலயத்துக்கு சுற்றுச் சுவர் என்பது பெயரளவுக்கே இருக்கிறது. ஆலயப் பகுதிகளில் ஆங்காங்கே துருத்திக் கொண்டிருக்கும் செங்கற்களையும், சிதிலமடைந்து சரிந்து நிற்கும் பழைய கட்டுமானத்தையும் பார்த்தால் சற்று பயமாகவே இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் மீறி, ‘நான் இருக்கிறேன் பக்தா! கவலைப்படாதே. தைரியமாக வந்து என்னை தரிசித்துச் செல்!’ என்று அபூர்வமாகத் தேடி வரும் வெகு சில பக்தர்களுக்கு அபயம் அளித்து, இடிபாடுகளுள் தானும் சிக்காமல் பக்தர்களையும் காத்து வருகிறார் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர். இவரின் கருவறைக்குள்ளும் அம்பாள் கருவறைக்குள்ளும் நூற்றுக்கணக்கான வெளவால்கள் எந்த நேரமும் படபடவென பறந்து கொண்டே இருக்கின்றன. ஆலய அர்ச்சகர் ஒரு மாதிரி வளைந்து நெளிந்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் கருவறைக்குள் சென்றதும், அங்கிருக்கும் வெளவால்கள் அனைத்தும் சொல்லி வைத்தாற்போல் அம்பாள் சந்நிதிக்கு இடம் பெயர்கின்றன. ஈஸ்வரன் சந்நிதியில் பணிகள் முடித்து அம்பாள் சந்நிதிக்கு அர்ச்சகர் வந்ததும், வெளவால்கள் அனைத்தும் மறுபடியும் ஈஸ்வரன் சந்நிதிக்கு இடம் மாறுகின்றன.
ஈஸ்வரன் மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்குச் சரியான கதவுகள் இல்லாததால்தான் வெளவால்கள் இப்படிக் கொண்டாட்டமாக எந்த நேரமும் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருக்கின்றனவாம் (சந்நிதிகளுக்கு மட்டுமில்லை. இந்த ஒட்டுமொத்த ஆலயத்துக்குமே கதவு கிடையாது என்பது பதற வைக்கும் இன்னோர் உண்மை!). கடந்த சில மாதங்களுக்கு முன் தானாகவே முன்வந்து இந்த இரண்டு சந்நிதிகளுக்கும் இரும்பு ‘க்ரில் கேட்’கள் செய்து கொடுத்திருக்கிறார் பக்தர் ஒருவர். இவற்றைப் பொருத்துவதற்காக சுவரை லேசாகக் கொத்தி வேலை செய்யப் போன பணியாட்கள் மிரண்டு போனார்களாம். சுவரில் கை வைத்ததுமே சுவரின் பகுதிகள் ஆங்காங்கே பெயர்ந்து அப்படியே பொலபொலவென உதிர்ந்து கீழே விழ ஆரம்பித்து விட்டனவாம். ‘‘இந்தச் சூழ்நிலையில் க்ரில்களைப் பொருத்துவது ஆபத்தானது. புனர்நிர்மாணப் பணிகளின்போது வைத்துக் கொள்ளலாம்!’’ என்று சொல்லி விட்டார்களாம்.
ஆலயம் பெருமளவுக்குப் பழுதுபட்டிருந்தாலும் அதன் விஸ்தீரணத்தையும், கட்டுமானத்தையும், அமைப்பையும் வைத்துப் பார்க்கும்போது ஒரு காலத்தில் பிரமாண்டமாக விளங்கிய கோயில் இது என்பதை அறிய முடிகிறது. ஒரு காலத்தில் ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து தரிசித்துச் சென்றுள்ளார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ‘‘கும்பகோணத்தில் நடக்கும் மாசி மகம் வைபவத்துக்கு இங்கிருந்து ஸ்வாமி புறப்பட்டுச் செல்லும் வழக்கம் அந்த நாளில் இருந்திருக்கிறது. நெடார் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஊர்வலமாகப் போய் கும்பகோணத்தை அடைந்ததும்தான் மற்ற உற்சவர் ஸ்வாமிகள், மகாமகக் குளத்தில் இறங்கி தீர்த்தவாரி கொடுக்கும் என்று என் தாத்தா சொல்லி இருக்கிறார்!’’ என்றார் தஞ்சையில் வசித்து வரும் பெரியவர் ஒருவர்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்துக்கு நிகரான பெருமை இந்தத் தலத்துக்கும் உண்டாம். ராகு மற்றும் கேது தோஷங்களுக்கு இந்த ஆலயத்திலும் பரிகாரம் செய்து கொள்ளலாம் என்கிறார்கள். விவரம் தெரிந்த சிலர் இப்போதும் இங்கு வந்து பரிகாரம் தேடிச் செல்கிறார்களாம். தவிர, திருமணத் தடை உள்ள ஆண் மற்றும் பெண் இங்கு வந்து வழிபட்டால் திருமணம் உடனே கைகூடுமாம். அப்படிப்பட்டவர்கள் இங்கு வந்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு எண்ணெய்க் காப்பு சார்த்தி பசும்பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகி, விரைவில் திருமணம் கைகூடுமாம். இப்போதும் திருமணத் தடை உள்ள பெண்கள் அதிகாலை நேரத்தில் இங்கு வந்து ஸ்தல விருட்சமான எருக்கம்செடிக்கு மஞ்சள் சரடும், மல்லிகை மாலையும் அணிவித்துச் செல்கிறார்கள்.
நாக தோஷம் இருப்பவர்கள் வழிபட வேண்டிய தலம் இது. ஈஸ்வரனே தோஷ நிவர்த்தி செய்பவராக இருப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கென தனி சந்நிதி இல்லை. இனி, ஆலய தரிசனம் செய்வோமா?
ராஜ கோபுரம் கிடையாது. எல்லா ஆலயங்களிலும் நுழைந்தவுடன் தென்படும் பலிபீடம், கொடிமரம் போன்றவையும் இங்கு இல்லை. சற்றுத் தூரம் உள் நோக்கி நகர்ந்ததும் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் மகா மண்டபம் இருக்கிறது. நான்கு தூண்களுடன் இந்த மண்டபம் பெரிய அளவில் காணப்படுகிறது. இதன் துவக்கத்தில் பலிபீடம் மற்றும் நந்திதேவரின் கல் விக்கிரகங்கள் இருக்கின்றன. பிரதோஷ நாட்களில் இவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் ஒருவாறாக நடந்து வருகின்றன. அக்கம் பக்கக் கிராமங்களில் வசிக்கும் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்மணிகள் மிகுந்த சிரத்தையுடன் இந்த பிரதோஷ வைபவத்தை நடத்தி வருகின்றனராம். பிரதோஷ கால தரிசனத்துக்கு அக்கம் பக்க கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது உண்டாம்.
காளஹஸ்தீஸ்வரரின் விமானம் மூன்று அடுக்குகள் கொண்டது. இதை ‘த்ரிதள விமான’ அமைப்பு என்பார்கள். அம்பிகையின் விமானம் ஓர் அடுக்கு கொண்டது. இந்த அமைப்பை ‘ஏகதள விமானம்’ என்பார்கள். இந்த விமானங்களில் சுதைச் சிற்பங்கள் எதையும் நிறுவாமல் கட்டுமானப் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைத்து இருக்கிறார்கள். ஆலயத்தில் உள்ள ஈஸ்வரர் மற்றும் அம்பாள் விக்கிரகங்கள் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்றும், பிற பரிவார மூர்த்திகள் பிற்கால நாயக்கர்கள் காலத்தில் நிறுவப்பட்டிருக்கலாம் என்பதும் பொதுவான கருத்து. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்துக்கும் முன்பே இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான ஆலயங்களைச் சிதைத்த மாலிக்காபூரின் படையெடுப்புதான் இந்த காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் சிதைவு அடையவும் காரணம் என்று சொல்கிறார்கள். வரலாற்று ரீதியாகக் குறிப்பிட்ட காலகட்டத்தில், குறிப்பிட்ட மன்னரால் கட்டப்பட்டது என்று நெடார் காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றித் தெளிவாக எதையும் சொல்ல முடியவில்லை.
‘‘இந்த ஆலயம் ஒரு காலத்தில் ஓஹோவென்று திகழ்ந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், இந்த ஆலயத்துக்கு அருகில் மிகப் பெரிய சத்திரம் ஒன்று அந்தக் காலத்தில் செயல்பட்டது. ஏராளமான பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கும் வகையில் அது பொதுமக்களுக்கு உதவி செய்தது. தவிர, கோயிலுக்கு அருகில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான குளம் ஒன்றும் இருந்துள்ளது. அப்போதெல்லாம் காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்துக்கு வருகை தரும் வெளியூர் பக்தர்கள் குளிப்பதற்குக் குளமும், சாப்பிட்டுத் தங்க சத்திரமும் இருந்ததால் இந்த ஆலயம் பெரிய அளவுக்குச் செழிப்புடன் விளங்கியிருக்க வேண்டும்.
இந்த ஆலயத்துக்குச் சொந்தமான பல பகுதிகள் இப்போதும் உள்ளூர்காரர்கள் சிலரின் ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ஆலயத்துக்குச் சொந்தமாக ஏராளமான நிலப் பகுதிகள் இருந்ததாக என் அப்பா அடிக்கடி சொல்வார். இப்போது அதற்கான சுவடே தெரியவில்லை. அந்த நிலமெல்லாம் எங்கே இருக்கிறது என்று அரசாங்கத்தின் உரிய துறைதான் கண்டுபிடிக்க வேண்டும்!’’ என்று வருத்தத்துடன் கூறுகிறார் இந்த ஊரைச் சேர்ந்த ஆன்மிகத்தில் ஊறிய பழம் பெரும் பக்தர் ஒருவர்.
ஆலயத்துக்கு ஒரே ஒரு சுற்றுப் பிராகாரம்தான். இந்தப் பிராகாரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் கோஷ்டப் பகுதிகள் எல்லாம் காலியாக இருக்கின்றன. தென்கோஷ்டத்தில் இருக்க வேண்டிய ஸ்ரீதட்சிணாமூர்த்தி மட்டும் ஆலய மகா மண்டபத்தில் பாங்காக வீற்றிருக்கிறார். மற்றபடி விஷ்ணு, லிங்கோத்பவர், பிரம்மா உட்பட எந்த கோஷ்ட மூர்த்திகளும் அவரவர்க்கு உரிய இடத்தில் இல்லை. இங்கிருந்த அற்புதமான விக்கிரகங்கள் களவாடப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை வலம் வரும் பிராகாரத்தின் இடப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், அடுத்து ஸ்ரீசுப்ரமண்யர் சந்நிதியும், பின்னர் வலப் பக்க இறுதியில் மகாலட்சுமி சந்நிதியும் ஒரு காலத்தில் இருந்தது என்கிறார்கள். பிராகாரத்தின் வலச் சுற்றில் துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் இருந்திருக்கலாம் என்கிறார்கள். ஆனால், இன்று அப்படிப்பட்ட எதையும் கற்பனை செய்யக்கூட வாய்ப்பு இல்லை. காரணம், இந்த சந்நிதிகள் இருந்ததற்கான சுவடுகள் கூட இல்லை. ஒரு காலத்தில் பிராகாரத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் விநாயகர், மகாலட்சுமி மற்றும் சண்டிகேஸ்வரர் போன்ற விக்கிரகங்கள் தற்போது ஆலய மகா மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. மற்ற விக்கிரகங்கள் என்னவாயின என்று தெரியவில்லை. காணாமல் போனவற்றில் பெரும்பாலானவற்றை சமூக விரோதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என்கிறார்கள்.
மகா மண்டபத்தைத் தாண்டி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் கருவறை நோக்கி நகர்ந்தால் அர்த்த மண்டபம். இந்தப் பகுதியின் தரை முழுதும் வெளவால்களின் எச்சங்கள். மூலவரின் கருவறைப் பகுதி முழுக்க டைல்ஸ் பதித்துத் தருவதாக மெலட்டூரில் வசிக்கும் பக்தர் ஒருவர் வாக்களித் திருக்கிறாராம்.
அம்பாள் சந்நிதியில் அருள்மிகு மங்களாம்பிகையின் சாந்தம் தவழும் முகம். ஸ்படிகம் போல் மிளிரும் விக்கிரகம். இந்த மங்களாம்பிகையின் பெருமை குறித்து ஆலயத்தில் தற்போது ஒரு கால பூஜை செய்து வருபவரும், அருகில் உள்ள தென்குடித்திட்டை குரு ஸ்தலத்தில் அர்ச்சகராக இருப்பவருமான சிவசுப்ரமணிய குருக்கள் நம்மிடம் சொன்னது:
‘‘இந்த ஆலயத்துக்கு அருகில் இருக்கிற தென்குடித்திட்டை குரு ஸ்தலத்தில் இருக்கும் அம்பிகையின் பெயரும் மங்களாம்பிகைதான். பக்கத்து ஊரான வையச்சேரி ஆலயத்தில் குடிகொண்டுள்ளவளும் மங்களாம்பிகைதான். கும்பகோணத்தின் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் இருப்பவளும் மங்களாம்பிகைதான். சர்வ மங்களங்களும் தந்து நம்மை வாழ வைக்கும் சர்வலோக நாயகியான அம்பிகையைத்தான் மங்களாம்பிகை என்று அழைப்போம்.
மங்களாம்பிகையின் பெயர் உள்ள எல்லாத் தலங்களிலும் அம்பிகை பற்றி வெவ்வேறு விதமான கதைகள் உண்டு. அடிப்படையில், சுமங்கலி களின் தாலி நீண்ட காலம் நிலைப்பதற்கு மங்களாம்பிகையை மனமாரப் பிரார்த்திப் பது வழக்கம். திட்டையில் இருக்கும் மங்க ளாம்பிகை சம்பந்தப்பட்ட ஒரு கதை சொல் கிறேன். திட்டையில் முன்னொரு காலத்தில் வேதத்தில் சிறந்த பண்டிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். பெரிய அக்னி ஹோத்ரி (தினமும் முறைப்படி அக்னி வளர்த்து ஹோமம் செய்து இறைவனை வணங்குபவரை இப்படிச் சொல்வார்கள்) அவர். ஸ்ரீவித்யா உபாசகர். தினமும் அவர் ஹோமம் செய்யும்போது அவரின் பெரிய மகள் உடன் இருந்து பூஜைக்கு வேண்டிய மஞ்சள், குங்குமம் போன்றவற்றை எடுத்துக் கொடுப்பார்.
அந்த மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டிய பருவம் வந்தது. தகுந்த வரன் தேடி, அதில் ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் திருமணமும் செய்து வைத்தார் பண்டிதர். விதி யாரை விட்டது? ஏதோ தோஷம் காரணமாக புது மாப்பிள்ளை, திருமணமான ஒரு சில நாட்களிலேயே அகால மரணமடைந்தார். அவர் மகள் அழுது புலம்பினாள். மாப்பிள்ளையின் உடல், தகனத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டது. மகளோ, தன் தகப்பனார் தினமும் அமர்ந்து ஹோமம் செய்யும் ஹோம குண்டத்துக்கு முன் அமர்ந்து ‘எனக்கு ஏன் இந்த நிலை?’ என்று அம்பிகையிடம் முறையிட்டாள். அப்போது அந்த ஹோம குண்டத்தில் இருந்து மங்களாம்பிகை தோன்றினாள். ‘கலங்காதே பெண்ணே... தோஷத்தால் உயிர் நீத்த உன் கணவன், உன் இறை பலத்தால் உடனே மீண்டு வருவான். பூவும் பொட்டும் வைத்து மங்களமாக உன்னை மாற்றிக் கொள்!’’ என்று ஆசீர்வதித்து மறைந்தாள். அதன் பிறகு இறந்து போன அவள் கணவன் உயிர் பெற்று எழுந்து வந்தான்.
ஆக, மங்களாம்பிகை என்று பெயர் உள்ள எல்லாத் தலத்து அம்பிகைகளுக்கும் மாங்கல்ய பலம் காக்கும் சக்தி உண்டு. இதெல்லாம் மந்திர பீடம். உயிர் காக்கும் பீடம். இந்த நெடாரில் இருக்கும் மங்களாம்பிகைக்கும் அந்த சக்தி உண்டு. திருமணம் ஆக வேண்டியவர்களும், திருமணம் ஆனவர்கள் தாலி பாக்கியம் நிலைப்பதற்கும் இந்த மங்களாம்பிகையை மனமார வணங்கினால் நிச்சயம் பலன் உண்டு. இந்த மங்களாம்பிகைக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்விப்பது மிகச் சிறந்தது. இங்கு சுமங்கலிப் பெண்கள் தாலிச் சரடை அம்பாளின் காலடியில் வைத்து வணங்கும் வழக்கம் உண்டு!’’ என்றார்.
ஏதோவொரு நூற்றாண்டில் முழுக்க முழுக்கச் செங்கல் கட்டுமானத்தால் ஆன இந்த ஆலயம் ஒருவகையில் ஜீரணித்து விட்டது. இதை ஜீர்ணோத்தாரணம் செய்வது என்றால், முழு ஆலயத்தையும் ஏறத்தாழப் புதிதாகக் கட்ட வேண்டும் என்பது பொருள். பழைமைச் சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் இயல்பான பழைய அமைப்புக்கும் பாணிக்கும் எந்தவித மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டு கவனத்துடன் இதன் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது அவசியம்.
இந்தக் கோயிலில் செய்ய வேண்டியுள்ள இவ்வளவு திருப்பணிகளுக்கும் அவசியம் தேவைப்படுவது காளஹஸ்தீஸ்வரரின் அருள் மட்டுமல்ல; இறைவனுக்குச் சேவை செய்ய விரும்பும் பக்தர்களின் அருள் மனமும் பொருளாதார உதவியும்தான் முதல் மூலதனம்!
'எல்லாம் காளஹஸ்தீஸ்வரர் அருள்தான்!'
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தைத் தற்போது பராமரித்து வரும் அறங்காவலரான பழனிச்சாமி, கோயிலுக்கு அருகிலேயே வசிக்கிறார். அவர் நம்மிடம் சொல்லும்போது, ‘‘ராகுவுக்கு ஏற்ற ஸ்தலம்கிறதால இங்கே நிறைய பாம்புங்க வாழுது. அடிக்கடி அதெல்லாம் வெளியே வந்து கோயில் பகுதிகளை வலம் வந்து செல்லும். சுமார் பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி அப்படி வெளியே வந்த ஒரு நல்ல பாம்பை, சுளுக்கி (பாம்புகளைக் குத்திக் கொல்லப் பயன்படுத்தும் ஆயுதம்) வெச்சு குத்திச் சாகடிச்சிட்டேன். நல்ல பாம்பைக் கொல்லவே கூடாது என்பார்கள். அப்படி ஒருவேளை கொல்லும்படி நேர்ந்தால் அதைக் குழி தோண்டி, பாலும் அரிசியும் போட்டுப் புதைக்கணும். ஆனா, பாம்பைக் கொன்னதோட மட்டுமல்லாம அதை அப்படியே தூக்கியும் போட்டுட்டேன். அப்ப புடிச்சுதுங்க சாபம்... தொடர்ந்து என்னோட வாழ்க்கையில பெரிய அடி. நிச்சயம் பண்ணி வெச்சிருந்த என் பொண்ணு கல்யாணம் தடைபட்டுப் போச்சு. இப்படி எவ்வளவோ வேதனைகள். அதுக்குப் பிறகு வாழ்க்கையில் என்னால் நிமிரவே முடியல.
பாம்பைச் சாகடிச்ச சாபமோ என்னவோ, இன்னமும் அந்த ஈஸ்வரன் சந்நிதியில வெளவால் புழுக்கையெல்லாம் தினமும் அள்ளிப் போட்டுட்டிருக்கேன். காலை நேரத்துலயும் மாலை நேரத்துலயும் நான்தான் இந்த ஈஸ்வரனுக்கு விளக்கு ஏத்தி வைக்கறேன். இப்ப ஏதோ கொஞ்சம் நிமிர்ந்திருக்கேன். எல்லாம் அந்த காளஹஸ்தீஸ்வரர் அருள்தாங்க!’’ என்றவர் தொடர்ந்து சொன்னார்:
‘‘இந்த ஆலயத்துக்குன்னு பெரிய நடராஜர் உற்சவர் விக்கிரகம் இருந்துது. நானே அதைப் பார்த்திருக்கேன். இப்ப அது எங்கே போச்சுன்னு தெரியலை. ஆஞ்சநேயர் உற்சவர் விக்கிரகம் இருந்துச்சுன்னுகூட சொல்லுவாங்க. கோயிலுக்கு எதிரில் பெரிய நந்தவனம் இருந்துது. அங்கே இருந்துதான் சாமிக்குப் பூவெல்லாம் பறிச்சிட்டு வருவாங்க. நந்தவனத்துக்குக் கொஞ்சம் தள்ளி பெரிய குளம் ஒண்ணும் இருந்துது. அதெல்லாம் பராமரிப்பு இல்லாம போச்சு. ஆலயத்தை மறுபடி எடுத்துப் போட்டுக் கட்டிப் பார்க்கணும்னு இப்ப ஆசையா இருக்கு. ஈஸ்வரன் அருளால எல்லாம் நல்லபடியா நடக்கணும்’’ என்றவர் உள்பக்கம் திரும்பி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரைப் பார்த்து பெருமூச்செறிந்தார்.
|
திடுமென வந்த திருப்பணி அன்பர்கள்!
இ தே காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் 1972-ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் வரை ஒரு கால பூஜை செய்து வந்தவர் ஜெகதீச குருக்கள் (தற்போது இங்கு பூஜை செய்து வரும் சிவசுப்ரமணிய குருக்களின் மாம னார் இவர்). தஞ்சாவூரில் வசிக்கிறார். இவருக்கு வயது 72. முதிர்ச்சி காரணமாக ஓய்வில் இருக்கிறார். அவ்வப் போது தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் நடக்கும் சில வழிபாடுகளுக்கு மட்டும் அழைப்பின் பேரில் போய் வருகிறார். இவர் நம்மிடம் சொன்னதாவது:
‘‘பல வருடங்களா தொடர்ந்து இந்தக் கோயிலுக்கு பூஜை செஞ்சவன்கிற முறையில் சொல்றேன்... இந்த ஈஸ்வரன் ரொம்ப சக்தி வாய்ந்தவர். கோயில் மகிமை பத்தி வெளியில யாருக்கும் தகவல் தெரியாததால ஈஸ்வரன் அநாதரவா இருக்கார். ராகுவுக்குப் பரிகார ஸ்தலம்கறதால பாம்புங்க நடமாட்டம் அதிகமாவே இருந்தது. பல நேரங்கள்ல நானே நேர்ல பார்த்துருக்கேன். ஈஸ்வரன் கோமுகம்கிட்ட போயிண்டிருக்கும். சில நேரங்கள்ல பாம்பு ஊர்ற சத்தம் கேட்கும். ஆனா, கண்ணுக்குத் தெரியாது. பார்க்கணும்னு நினைச்சுத் தேடினாக்கூட கண்ல படாது. நாக தோஷம் இருக்கறவங்க இங்கே வந்து ஈஸ்வரனை வணங்கி நலம் பெறலாம். ரொம்ப அதிகமா தோஷம் இருக்கிறவங்க சிவனுக்கு நாகாபரணம் வாங்கிச் சார்த்தலாம்.
அப்பவும் ஒரு கால பூஜைதான் நடந்துட்டிருந்தது. பக்கத்துல இருக்கிற வையச்சேரிங்கற ஊர்ல இருந்தேன். அங்கேர்ந்தே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செஞ்சு கொண்டு வந்துடுவேன். சிவராத்திரியின்போது ஒரு காலம் மட்டும் பூஜை நடக்கும். பக்தர்களோட காணிக்கை இல்லாததால அப்படியும் இப்படியுமாத்தான் கோயில் நடந்துண்டிருக்கு.
ரெண்டரை வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள். மதிய நேரம். ஒரு பத்துப் பேர் இந்தக் கோயிலுக்கு வண்டிகள்ல வந்து இறங்கினா. பார்க்கறதுக்குப் பெரிய இடத்து மனுஷா மாதிரி தெரிஞ் சுது. மதுரைக்குப் பக்கத்துல காபி எஸ்டேட், டீ எஸ்டேட் எல்லாம் சொந்தமா இருக்குனு சொன்னா. மதுரையோ அல்லது அதுக்குப் பக்கத்துல ஏதோ ஏதோ ஓர் ஊர்தான் பூர்விகம்னு சொன்னா. வந்தவாள்ல ஒருத்தர், ‘குருக்களே... சுமார் அஞ்சு லட்ச ரூபாய் செலவு பண்ணி இந்தக் கோயிலுக்குத் திருப்பணி பண்ணி கும்பாபிஷேகம் பண்ணலாம்னு இருக்கோம். முதல்ல பாலாலயம் பண்ணிடுவோம். நாங்களே இருபத்தஞ்சு சிவாச்சார்யார்களை எங்க ஊர்லேர்ந்து கூட்டிட்டு வந்துடறோம். நீங்க ரெடியா இருங்க’னு தடாலடியா சொல்லி, கார்த்திகை மாசம் 25-ஆம் தேதியை நாள் குறிச்சிட்டுப் போனாங்க.
இவா சொன்ன பாலாலயம் தேதிக்கு பத்தே நாள்தான் இருந்தது. ‘இந்த காளஹஸ்தீஸ்வரருக்கு ஒரு விமோசனம் பிறந்துடுத்து’ங்கிற சந்தோஷத்துட முன்னேற்பாடு வேலைகளை பண்ண ஆரம்பிச்சேன். அவா குறிப்பிட்டுச் சொன்ன கார்த்திகை 25-ஆம் தேதி அன்னிக்குக் காலங்கார்த்தால கோயிலுக்கு வந்து காத்துண்டிருந்தேன். நேரம் போயிண்டு இருந்ததே தவிர, யாருமே கோயிலுக்கு வரலை. ஏன்னும் தெரியல. மிகச் சரியா எல்லாம் பேசிட்டு, நாங்களே வந்துடறோம்னு சொன்னதால அவா விலாசத்தையும் கேக்கணும்னு எனக்கு அப்ப தோணலை. இது எனக்கும் கோயிலைக் கவனிச்சிண்டு வர்ற பழனிச்சாமிக்கும் பெரிய ஏமாத்தமா இருந்தது. ஆனா, ஒரு நம்பிக்கை இருக்கு. எப்படியும் என்னோட காலத்துக்குள்ள இந்தக் கோயிலுக்குத் திருப்பணி நடந்து, நல்லது நடக்கும்னு நினைக்கிறேன், பார்க்கலாம்!’’ என்கிறார் தெம்பாக.
|
எப்படிப் போவது?
த ஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையில் பத்து கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த நெடார் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆலயம். தஞ்சாவூரில் இருந்து டவுன் பஸ்கள் உண்டு. வண்டி எண்கள்: 7, 8, 8ஏ, 25. கும்பகோணம்-தஞ்சாவூர் தடத்தில் செல்லும் மொபஸல் பஸ்கள் நெடார் நிறுத்தத்தில் பெரும்பாலும் நிற்பதில்லை. அதனால், கும்பகோணத்தில் இருந்து செல்பவர்கள் அய்யம்பேட்டையில் இறங்கி, அங்கிருந்து வேறு டவுன் பஸ் மூலம் நெடார் செல்லலாம். எனினும், கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் டவுன் பஸ்கள் இந்த நிறுத்தத்தில் நிற்கும். பஸ் எண்கள்: 14, 48.
தங்குவதற்கும் உணவுக்கும் அருகில் உள்ள தஞ்சாவூர் வசதியானது.
ஆலயத் தொடர்பு மற்றும் விவரங்களுக்கு:
1. கே. பழனிச்சாமி
அறங்காவலர்
அருள்மிகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆலயம் நெடார் கிராமம் மானாங்கோரை போஸ்ட் பசுபதிகோயில் வழி தஞ்சாவூர் மாவட்டம் பின்கோடு: 614 206 போன்: 04362- 292595 மொபைல்: 93606 34669
2. சிவசுப்ரமணிய குருக்கள்
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆலய அர்ச்சகர்
அக்ரஹாரம் வையச்சேரி போஸ்ட் பசுபதிகோயில் வழி தஞ்சாவூர் மாவட்டம் பின்கோடு: 614 206 மொபைல்: 93602 41388 |
Comments
Post a Comment