அச்சிறுப்பாக்கம்

அ து ஒரு பெரிய ரதம். ரதம் என்றால், ஏதோ மரத்தால் செய்து வண்ணம் ஏற்றி முலாம் பூசியதல்ல; வெறும் கட்டைகளால் செய்ததுமல்ல. உலகையே ரதமாக்கி, சூரியனையும் சந்திரனையும் தேர்ச் சக்கரங்களாக்கி, ஐம்பூதங்களைத் தேர்த்தட்டாக்கி, அஷ்டகுல பர்வதங்களை விதானமாக்கி, அண்ட முகட்டைக் கொடிஞ்சியாக்கி, வேதங்களைக் குதிரைகளாகப் பூட்டி உருவான ரதம்!
‘அவனிரதம் அர்க்கேந்து சரணம்’ (அர்க் கன்- சூரியன்; இந்து- சந்திரன்; சரணம்- கால்) என்பார் ஆதிசங்கரர். மேருமலை வில்லா னது; வாசுகிப் பாம்பு வில்லின் நாணானது; பிரம்மா தேர்ப்பாகன் ஆனார்.
வேகமாகப் புறப்பட்ட ரதம், சிறிது தூரம் போனவுடனேயே பலத்த ஓசை. தேரின் அச்சாக விளங்கிய இந்திரியங்கள் இற்று விழ, தேர் நின்றது.
காரணம்? விக்கினங்களைத் தீர்ப்பவரான விநாயகரை வணங்காமல் புறப்படலாமா? உமையம்மை அருகில் இருந்தாலும், உமா சுதனான விக்னேஸ்வரரை நினைக்காமல் தொடங்கலாமா?
ஐந்து முகத்தவரான சிவனார், ஐந்து கரத்தவரான கணேஸ்வரரை வணங்கி மீண்டும் புறப்பட்டார். புன்சிரிப்பின் மூலமே, கோட்டைகளைக் கட்டிக் கொண்டு இறுமாந்திருந்த மூன்று அசுரர்களையும் எரித்தார். திரிபுராரி என்றும் முப்புராரி என்றும் புரரிபு என்றும் பெயர் வாங்கினார். புரம் எரித்த சம்பவம் நிகழ்ந்த இடம் திருஅதிகை. தேர் அச்சு முறிந்த இடம், அச்சிறுப்பாக்கம்.
அச்சிறுப்பாக்கம்... அன்றாடப் புழக்கத்தில், அச்சரப்பாக்கம் என்று வழங்கப்படுகிறது. சென்னை-விழுப்புரம் நெடுஞ்சாலையில் மதுராந்தகம், மேல் மருவத்தூர் தாண்டியவுடன் அச்சிறுப்பாக்கம் அடையலாம். புகைவண்டி நிலையமும் உண்டு. நிறையப் பேருந்துகளும் இந்த ஊருக்குச் செல்கின்றன.
சிறிய ஊர். ஊரின் நடுநாயகமாகக் கோயில். கோயிலின் பிரதான வாயிலுக்கு எதிரில், சற்று முன்பாகவே, சிறிய விநாயகர் கோயில். அச்சுமுறி விநாயகர். ‘வாழ்க்கைத் தேர் ஒழுங்காகச் செல்ல, அருள்புரி ஐங்கரனே!’ என்று வேண்டி வழிபட்டுத் தொடர்கிறோம். கோயிலின் பிரதான வாயில் எதிரில் ஒரு வள்ளுவ மண்டபம் - விளக்குகள் ஏற்றி வைக் கும் வசதியுடன் இருக்கிறது. இங்கேயும் ஒரு விநாயகர் எழுந்தருளியிருக்கிறார்.
வணங்கிக் கோயிலுக்குள் நுழைவோம்.
கிழக்கு வாயில். ஐந்து நிலை ராஜகோபுரம். வாயிலில் நுழைபவர்கள், எச்சரிக்கையாக நுழைவது நல்லது. கோபுரத் தின் மீதுள்ள தேனடையிலிருந்து தேனீக்கள் கீழே வருகின்றன; தரையில் விழுந்து கிடக்கின்றன. சற்றே ஓரமாக ஒதுங்கிப் போனால், நிம்மதியாக உள்ளே போய் விடலாம். விரைவிலேயே சரி செய்து விடுவதாக ஆலயத் தரப்பில் சொன்னார்கள்.
உள்ளே நுழைந்தவுடன், நாம் நிற்பது வெளிப் பிராகாரம். வலம் வருகிறோம். தெற்குச் சுற்றில் சப்தமாதர்கள். வடக்குச் சுற்றுக்குள் வர, அங்கு தல மரமாம் சரக் கொன்றை. மரத்தின் அடியில் மேடை போன்ற அமைப்பு. சிவலிங்கம்- அம்பாள். சிறிய நந்தி. அருகில் கை குவித்து வணங்கும் முனிவர் ஒருவர். கொன்றை மரத்தடியில் எழுந் தருளி இருக்கும் சிவனார், அடி ஈஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். அம்பாளும் அயனாரும் எழுந் தருளியிருக்கும் இடம், தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
அதிகையில் திரிபுர தகனம் முடிந்து மீண்டும் தம் முடைய தேரில் ஊர்ந்து, இங்கு வந்து இறங்கினாராம் பரமனார். அதைக் குறிக்கவே சரக்கொன்றை அடி ஈஸ்வரர் எழுந்தருளியிருக்கிறார்.
கை கூப்பி வணங்கும் முனிவர் யார்?
அது ஒரு சுவாரஸ்யமான சம்பவம். பல்லாண்டு களுக்கு முன்னர், இந்த வழியாக பாண்டிய மன்னர் ஒருவர் வந்தாராம். அப்போது முல்லை வனமாக இருந்ததாம் இந்தப் பகுதி. திடீரென்று தங்க நிற உடும்பு ஒன்று ஓடியது. விநோதமான அந்த உடும்பை விரட்டிக் கொண்டே போன மன்னர், அது கொன்றை மரப் பொந்துக்குள் நுழைந்ததைக் கண்டார். உடும்பைக் காணும் ஆவலில், பொந்தை வெட்டக் கட்டளையிட்டார். வேகமாக வெட்ட... வெட்டுகளை வாங்கிக் கொண்டு காட்சி தந்தார் சிவலிங்கநாதர். அரசன் இங்கு கோயில் எழுப்பிக்க முயற்சிகள் மேற்கொள்ள, திரிநேத்ரதாரி என்னும் முனிவர், தம்முடைய நேரடி மேற் பார்வையில் கோயிலைக் கட்டுவித்தார்.
முனிவருக்கு, இறையனார் கொன்றையடியில் காட்சி தந்தாராம். சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவப் பெருவிழாவில், ஏழாம் நாள் இரவு கொன்றையடி சேவை நடைபெறும். அன்றுதான் முனிவருக்குக் காட்சி தந்ததாக ஐதீகம் (பாண்டிய மன்னன் தனது தேரில் வர, இந்த இடம் வந்ததும் அச்சு முறிந்தது; பின்னர் உடும்பு ஓடியது என்றும் இந்தக் கதை வழங்கப்படுகிறது). கொன்றை மரத்தைத் தாண்டி வந்தால், தீர்த்தக் கிணறு. சிம்ம தீர்த்தம் என்று பெயர். வடக்குச் சுற்றை நிறைவு செய்து, கிழக்குச் சுற்றில் மீண்டும் திரும்புகிறோம். அம்பாள் சந்நிதி யைச் சுற்றி வருகிறாற் போன்ற அமைப்பு.
கிழக்குச் சுற்றில் பலிபீடம். செப்புக் கவசமிட்ட கொடிமரம். நந்தி மண்டபம். ஆனால், இவை ராஜகோபுர வாயிலுக்கு நேரே இல்லாமல், சற்றே வடக்காக உள்ளன. கொடிமரத்துக்கும் நந்தி மண்டபத்துக்கும் நேராக, உள்ளே மூலவர் சந்நிதி. ஆனால், ராஜ கோபுர வாயிலுக்கு நேரே இருக் கும் வாயில் வழியாகத்தான், உள்பிராகாரத்துக்குச் செல்ல வேண்டும். இந்த வாயிலுக்கு நேராகவும் ஒரு மூலவர் சந்நிதி தெரிகிறது. எப்படி?
வாருங்கள். உள்வாயில் வழியாக நுழைந்து உள் பிராகாரத்தை வலம் வருவோம். விஷயம் புரியும். உள் பிராகாரத்தில் பிரதட்சிணத்தைத் தொடங்கினால், முதலில், ஆஞ்ச நேயர். அடுத்து ஸித்தி- புத்தி உட னாய விநாயகர். தொடர்ந்து சைவ நால்வர் பெருமக்கள். சற்றுத் திரும்ப, தெற்குச் சுற்றில் அறுபத்துமூவரின் சிலாரூபங்கள். மேற்குச் சுற்று தொடங்கும் மூலையில் சந்தானக் குரவர்கள். அடுத்து உற்சவ மூர்த்தங்களுக்கான சந்நிதி. தொடர்ந்து அலர்மேல்மங்கைத் தாயார். தாயார் திருமுகமெல் லாம் அருள் நிறைந்து காட்சி தர, அடுத்ததாக ஸ்ரீனிவாசப்பெருமாள் சந்நிதி. ஊரு ஹஸ்தத்துடன் (இடக் கையை தொடையில் வைத்த வண்ணம்) வரம் காட்டி அருளும் வேங்கடேசர். இங்கிருந்து பார்த் தால், உள்வாயில் நுழைந்தவுடன், பிராகாரத்தில் முதலாவதாகக் காட்சி தந்தாரே, அந்த ஆஞ்சநேயர் சேவை சாதிக்கிறார். ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு எதிரில் கைகூப்பி நிற்கும் மாருதி!
மேற்குச் சுற்றிலுள்ள அடுத்த சந்நிதி, உள்ளடங்கி இருக்கிறது. இதுதான், வாயிலிலிருந்து பார்த்தபோது தெரிந்த சந்நிதி. இந்தச் சந்நிதியின் வாயிலில் விநாயகர் இருக்கிறார். வணங்கி உள்ளே சென்றால், சிறிய முக மண்டபமும், அர்த்த மண்டபமும் கொண்ட மூலவர் கருவறை. அருள் மிகு மெல்லியலாள் உடனாய உமையாட்சீஸ்வரர்.
இ ந்தக் கோயிலில் ஏன் இரண்டு கரு வறைகள்? இந்தச் சந்தேகம், பாண்டிய மன்னருக்கும் வந்தது. கோயிலைக் கட்டுவித்திருந்த திரிநேத்ரதாரி முனிவர், இரண்டு கருவறைகளை அமைத்திருந்தார். ஏன் என்று மன்னர் வினவியபோது, ‘‘மன்னா! உம்மை ஆட் கொண்டவர் உமையாட்சீஸ்வரர்; என்னை ஆட்கொண்டவர் ஆட்சீஸ் வரர்!’’ என்று முனிவர் பதில் சொன்னாராம். மன்னர் ஸ்தாபிதம் செய்த சிவ லிங்கம் உமையாட்சீஸ்வரர். அதற்கு முன்னரே, சுயம்புவாக எழுந்தருளியவர் ஆட்சீஸ்வரர் என்றும் கூறப்படுகிறது. உமையாட்சீஸ்வரர் சந்நிதியில், கம்பீரமான சிவலிங்கத்தின் பின்னால் சுவரில் உமாதேவி சமேத சிவனார் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
சந்நிதிவிட்டு வெளியே வரும் இடத்தில் சங்கு சக்ரதாரியாக விஷ்ணுதுர்க்கை. உமையாட்சீஸ்வரர் உள் சந்நிதியிலிருந்து வெளியில் வந்து, மீண்டும் பிராகார வலத்தைத் தொடர்கிறோம். அடுத்திருப்பது பழநியாண்டவர் சந்நிதி. மீண்டும் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை. அடுத்ததாக, லட்சுமி- சரஸ்வதி உடனாய துர்க்காதேவி. தொடர்ந்து வள்ளி- தெய்வயானை உடனாய ஆறுமுகர்.
வடக்குத் திருச்சுற்றில் திரும்ப, அறுபத்துமூவர் உற்சவ விக்கிரகங்கள். பின்னர் ராமலிங்க வள்ளலார். அடுத்திருப்பது நடராஜர் சந்நிதி. சிவகாமியம்மை தாளம் போட, காரைக்கால் அம்மையார் காலடியில் வீற்றிருக்க, தாண்டவமாடும் சபாபதி.
கிழக்குத் திருச்சுற்றில் திரும்ப, முதலில் அருணகிரி நாதர் அமர்ந்திருக்கிறார். அடுத்து பிரம கபால மாலை அணிந்த பைரவர். பக்கத்தில் சூரியன்.
உள் பிராகார வலம் நிறைவடைந்து விட்டது. நிமிர்ந்து பார்க்க, உள்ளே மூலவர் கருவறை தெரிகி றது. ஆட்சீஸ்வரர். நந்தியை வணங்கி, உள்ளே செல் கிறோம். வாயிலின் ஒரு புறத்தில் துவார கணபதி காட்சி தருகிறார். மற்றொரு புறத்தில் துவார சுப்ரமணியர். துவார கணபதிக்கு மேலே சுவரில் ஜம்புகேஸ்வரர். காமதேனு வழிபடும் சிவலிங்கம். துவார சுப்ரமணியருக்கு மேலே சண்டேஸ்வரர் வரலாற்றுக் கோலம். எல்லாமே புடைச் சிற்பங்கள்.
துவாரபாலகர்கள் வீரமாக நிற்கி றார்கள். வித்யுன்மாலி, தாரகாக்ஷன் என்று எழுதிப் போட்டிருக்கிறது. முப்புராதிகள் என்றழைக்கப்படும் திரிபுர அரக்கர்களில், இந்த இருவரும், இவர்களோடு கமலாக்ஷன் என்றொரு அரக்கனும் உண்டு. இந்த மூவர்தாம், சிவ பூஜையின் மூலம் பலம் பெற்று, முறையே தங்கக் கோட்டை, வெள்ளிக்கோட்டை, இரும்புக் கோட்டை ஆகியவற்றை அமைத்துக் கொண்டு பிறரைத் துன்புறுத்தினர். மூவரில் இருவர் இங்கு துவார பாலகர்களாகக் காட்சி தருகின்றனர்.
உள்ளே நுழைந்தால், முக மண்டபம். உற்சவ சோமாஸ்கந்தரின் சந்நிதி ஒரு புறம். அர்த்த மண்டபம் தாண்டி மூலவர் கருவறை.
அருள்மிகு ஆட்சீஸ்வரர். சுயம்புலிங்கம். மிகவும் தாழ்வாக, சதுரபீட ஆவுடையாருடன் காட்சி தருகிறார். சிவலிங்கத் திருமேனி சற்றே சொரசொரப்பானது. பாண்டிய மன்னர் தோண்டியபோது வெட்டுப்பட்ட அடையாளம் பின்புறம் தெரிகிறது.
அர்த்த மண்டபத்துக்கு அடியில் கிணறு இருப்பதாகவும், கருங்கற்களிட்டு மூடப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அருள்மிகு ஆட்சீஸ்வரர். கண்ணுவ முனிவரும், கௌதம ரிஷியும் வணங்கி வழிபட்ட ஆட்சீஸ்வரர். பார்க்கபுரீஸ்வரர், ஸ்திரவாசபுரீஸ்வரர், ஆட்சி கொண்டநாதர் என்றும் திருநாமங்கள் உண்டு. வழிபடுபவர்களுக்கு ஆட்சி பலத்தையும், ஆட்சியில் ஸ்திரத் தன்மையையும் தரக் கூடியவர் என்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. பாண்டிய மன்னர்கள், தங்களின் ஆட்சிபலத்தைப் பெருக்கிக் கொள்ள, அருள்மிகு ஆட்சீஸ்வரரை வழிபட்டதாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கருவறை கோஷ்டமூர்த்தங்களாக சோமாஸ்கந்தர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர். தனிச் சந்நிதியில் சண்டி கேஸ்வரர். கோஷ்ட சோமாஸ்கந்தருக்குக் கீழே உள்ள சுவரில் நாகர் வழிபடும் சிவலிங்கம், தலையால் நடக்கும் காரைக்காலம்மை, கண் ணைப் பெயர்த்து அப்பும் கண்ணப்பர் என்று அழகான சிற்பங்கள். சுவர் முழுவதும் கல் வெட்டுகளும் உள்ளன.
ஆட்சீஸ்வரரை வணங்கிக் கொண்டே வெளியே வருகிறோம். வெளிப் பிராகாரத்தில் அம்பாள் சந்நிதி. நின்ற திருக்கோலத்தில் தெற்குப் பார்த்த அம்பாள். அபய வரதம் தாங்கி, நான்கு திருக்கரங்களுடன் அருள் கடாட்சிக்கும் அருள்மிகு இளங்கிளி அம்மன். அம்பாள் கொள்ளை அழகு. அதனால்தானோ என்னவோ, சுந்தரநாயகி, பாலசுகாம்பிகை, அதிசுந்தர மின்னாள் என்றெல்லாம் அம்பாளுக்கு அழகு நாமங்கள்.
அம்பாள் சந்நிதிக்கு அருகில் நவக்கிரகங்கள் சந்நிதி.
வணங்கிவிட்டு வந்து மீண்டும் கோயிலின் தலை வாயிலருகே நிற்கிறோம். எதிரே மூலவர் சந்நிதியை நோக்கிய கொடிமரமும், திரும்பினால் அம்பாள் சந்நிதியும், லேசாகச் சாய்ந்து பார்த்தால் பிராகாரக் கொன்றை மரமும் (கொன்றை மரத்தடி ஆட்சிநாதரும் கூடத்தான்) தெரிய... ‘‘அருள்மிகு இளங்கிளி உடனாய ஆட்சீஸ்வரரே! தங்கமும், வெள்ளியும், இரும்புக் கோட்டைகளாக வேண்டாம். எங்கள் இதயக் கோட்டையில் எப்போதும் இருந்திட வேண்டும் சுயம்புநாதரே!’’ என்று பிரார்த்தித்தபடியே வெளியே வருகிறோம்.

Comments