நாம் ஒன்றைக் கேட்கும்போது, பணிந்துதான் கேட்டுப் பெற வேண்டும். நாம் கேட்பதைக் கொடுப்பவரும் பணிவுடன்தான் கொடுக்க வேண்டும். தாம் கொடுக்கும் நிலையில் இருக்கிறோம் என்ற கர்வம் அவர்களுக்கு இருக்கக் கூடாது.
உலகாயதமான பொருட்களைக் கேட்கும்போதும், கொடுக்கும்போதும் பணிவு இருக்கவேண்டும் என்றால், மெய்ஞானப் பொருள் பற்றிய உபதேசம் பெற வேண்டுமானால், விநயம் என்பது எத்தனை அவசியம்! உபதேசம் பெறுபவர் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும், உபதேசம் செய்பவரிடம் ஒரு சீடனுக்கான பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும். சிவபெருமான் பிரணவப் பொருள் குறித்து முருகப்பெருமானிடம் உபதேசம் பெறும்போது, சீடனின் நிலையில் அல்லவா தம்மை இருத்திக்கொண்டார்! அவ்வளவு ஏன்... மனிதனிடமே தெய்வம் சீடனாக நின்று உபதேசம் பெற்ற அரிய சம்பவமும் நம் புண்ணிய பூமியில் நிகழ்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடிக்கு அருகில் இருக்கும் வைணவத்தலம் திருக்குறுங்குடி. நாம் சென்னையில் இருந்து ஏர்வாடிக்குச் சென்றோம். அங்கிருந்து ஒரு ஆட்டோவில் திருக்குறுங்குடி சென்றோம். அந்தத் தலத்தில்தான், மனிதராகப் பிறந்தவரிடம் தெய்வம் உபதேசம் பெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதுபற்றிப் பின்னர் பார்ப்போம்.
திருக்குறுங்குடி, திருக்குரங்கக்குடி, சித்தாசிரமம் போன்ற பெயர்களாலும் அழைக்கப் படுகின்றது. குரங்கம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு 'மான்’ என்று பொருள். அழகிய மான்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால், திருக்குரங்கக்குடி என்றும், அருகில் உள்ள மகேந்திரகிரியில் நிறைய சித்தர்கள் வசித்ததால் சித்தாசிரமம் என்றும் பெயர் பெற்றது.
திருக்குறுங்குடியில் அன்பர் மாரியப்பன், நாம் நம்பிமலைக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். திருக்குறுங்குடியில் இருந்து நம்பிமலைக்குச் செல்ல, கோயில் சார்பாக நியாயமான கட்டணத் தில் அன்பர் மாரியப்பன் ஏற்பாடு செய்திருந்த ஜீப்பில் நம்பிமலைக்குப் பயணமானோம். சுமார் 5 கி.மீ தூரம் சென்றதும், வனத்துறை அதிகாரி அலுவலகம் தென்படுகின்றது. அங்கு ரூ.15 கட்டணமாகப் பெற்றுக்கொண்டு, அனுமதிச் சீட்டு தருகிறார்கள். அதன்பிறகே, நாம் நம்பிமலைக்குச் செல்ல முடியும்.
மனத்துக்கு ரம்மியமாகவும், பார்வைக்குக் குளிர்ச்சியாகவும் அடர்ந்த மரங்கள் நிறைந்த பாதையில் 2 கி.மீ தொலைவு சென்றதும், மலைப்பாதை தொடங்குகிறது. 4 கி.மீ தூரம் உள்ள அந்த மலைப் பாதையைக் கடக்க 45 நிமிடங்கள் ஆனது. அந்த அளவுக்கு மேடும் பள்ளமும் ஜீப்பையும், நம்மையும் உலுக்கி எடுத்துவிட்டன. ஆனாலும், நமக்குக் கொஞ்சமும் சோர்வோ, களைப்போ தெரியவில்லை. அந்த அளவுக்கு இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பிரதேசம் நம்மைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்தது. மலை உச்சியை அடைந்ததும், ஜீப்பை நிறுத்திவிட்டு, நம்பிக்கோயிலுக்குச் செல்லும் படிகளில் ஏறிச் சென்றோம்.
படிகள் ஏறிச் சென்றதும், நமக்கு இடப்புறம் உள்ள வாயில் வழியாக நம்பியின் திருக்கோயிலுக்குள் சென்று, மலைமேல் நம்பியை தரிசித்தோம். சிறிய அளவிலான கோயில்தான். ஆனால் பெருமாளின் அழகும், அருள் திறனும் நம்மைப் பெரிதும் ஈர்த்து விடுவதை நம்மால் அனுபவபூர்வமாக உணரமுடிகிறது. 'நம்பி வாருங்கள், நம்பி மலைக்கு! நீங்கள் நாடியதை எல்லாம் நானே உங்களை நாடி வந்து நிறைவேற்றுவேன்’ என்று தண்ணருள் பொழியும் கண்ணழகால் சொல்லாமல் சொல்கிறான் அந்த அழகன்.
பெருமாளை மனம் குளிரக் குளிர சேவித்த நிறைவுடன், கோயிலுக்கு எதிராகச் செல்லும் படிகளில் இறங்கினால், 'சலசல’ என சங்கீத ஸ்வரம் பாடி நம்மை வரவேற்கிறது நம்பி ஆறு. சிறிய நீர்வீழ்ச்சியாக நம்பி மலையில் தோன்றி, நம்பியின் அருளால் நம்பி ஆறு என்ற பெயருடன் வளம் கொழிக்கச் செய்கிறது. சுமார் ஒரு மணி நேரம் நம்பிமலையில் இருந்துவிட்டு, ஜீப்பில் திரும்பும்போது, அன்பர் மாரியப்பன் திருக்குறுங்குடியில் ஐந்து நம்பிகள் கோயில்கொண்டு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
நம்பிமலையில் கோயில்கொண்டிருக்கும் நம்பி ரிஷிகேசனாக மலைமேல் நம்பி என்றும், திருக்குறுங்குடி கோயிலில் நின்ற நம்பி திரிவிக்கிரமனாகவும், இருந்த நம்பி ஸ்ரீதரனாகவும், கிடந்த நம்பி பத்மநாபனாகவும், கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் அமைந்துள்ள கோயிலில், திருப்பாற்கடல் நம்பி என்ற பெயரில் வாமனனாகவும் அருள்கிறார்கள்.
நம்பிமலையில் இருந்து திரும்பிய நாம் திருக்குறுங்குடி திருக்கோயிலுக்குள் செல்கிறோம். உள்ளே, கருவறைக்கு நேராக இருக்க வேண்டிய கொடிமரம் சற்றே விலகி இருப்பதைக் கண்டோம். அதற்குக் காரணமாக, சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை எடுத்துச் சொன்னார் அங்கிருந்த வயது முதிர்ந்த பக்தர் ஒருவர்.
திருக்குறுங்குடி தலத்துக்கு அருகில் அமைந்துள்ள மகேந்திரகிரி மலை அடிவாரத்தில், தாழ்த்தப்பட்டதாகக் கருதப்பட்ட குலத்தில் தோன்றிய நம்பாடுவான் என்பவன், திருக்குறுங்குடி நம்பியிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தான். தினசரி, கைசிகம் என்னும் பண்ணைப் பாடியபடி திருக்குறுங்குடி கோயிலுக்கு வருவது அவன் வழக்கம். ஆனாலும், அவனுக்குப் பெருமாளின் தரிசனம் கிடைத்தபாடில்லை.
ஒருநாள், அவன் கோயிலுக்கு வரும்போது, ஒரு பிரம்மராட்சஸன் அவனைப் பிடித்துக் கொண்டான். அன்று கார்த்திகை மாதம், சுக்ல பட்ச ஏகாதசி. நம்பாடுவான் அந்த பிரம்மராட்சஸனிடம், தான் ஏகாதசி விரதம் இருப்பதாகவும், பகவான் கோயில்முன் பாடித் தொழுதுவிட்டு வந்த பிறகு, தன்னை ஆகாரமாக்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தான். பிரம்ம ராட்சஸன் சம்மதிக்கவே, நேராகக் கோயிலுக்குச் சென்று, மனம் உருகப் பாடினான். இத்தனை காலம் பாடியும் பகவானின் தரிசனம் கிடைக்காத தாபமும், திரும்புகையில் பிரம்மராட்சஸனுக்கு இரையாகப் போவதால், நாளை முதல் கோயிலில் வந்து பாடமுடியாதே என்ற ஏக்கமும் அவன் இதயத்தைப் பிழிய, அது அவன் பாடலை சோக கீதமாக்கியது. பரமபக்தனின் சோகம் கண்டு பொறுப்பானா பரந்தாமன்? தன் கருவறை நேரில் இருந்த கொடிமரத்தை சற்றே விலகி இருக்கும்படி சொல்லி, நம்பாடுவானுக்குத் தம் திவ்விய தரிசனம் தந்தருளினான்.
கதையைக் கேட்ட சிலிர்ப்புடன் கோயிலுக்குள் நுழைந்த நம் பார்வையில், கொடிமரத்துக்கு அருகில் பெரிய மணி தென்பட்டது. அந்த மணியை யார், எதற்காகக் கட்டினார் தெரியுமா?
ஆதித்தவர்மன் என்ற சேரமன்னன் கட்டியது அந்த பிரமாண்டமான மணி. திருக்குறுங்குடி சுந்தரபரிபூரண நம்பியிடம் அளப்பரிய பக்தி கொண்டிருந்த அந்த மன்னன், தினசரி நம்பிக் கோயிலில் அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகே, தான் உண்டு உறங்கச் செல்வான். ஆனால், அர்த்த ஜாம பூஜை முடிந்துவிட்டது என்பதை எப்படி அறிந்துகொள்வது? இதற்காக, கோயில் கொடிமரம் அருகில் ஒரு பிரமாண்ட மணியைக் கட்டி, தினசரி அர்த்தஜாம பூஜையின்போது ஒலிக்கச் செய்யும்படி கூறினான். பிரமாண்டமான அந்த மணியோசை எந்த ஊர்வரை கேட்கிறதோ அந்த ஊரில் ஒரு மணி, அதன் ஓசை எந்த ஊர்வரை கேட்கிறதோ அந்த ஊரில் ஒரு மணி... என திருவிதாங்கூர்வரை தொடர்ச்சியாக மணிகள் கட்டிவிட்டான். இதனால் திருக்குறுங் குடிக் கோயிலில் அர்த்தஜாம பூஜை நடை பெற்றதைச் சில மணித் துளிகளிலேயே அறிந்து கொண்டு, மானசிகமாக அர்த்தஜாம பூஜையை தரிசித்துவிட்டு, அதன்பிறகே உண்டு, உறங்கச் செல்வான். எத்தனை பக்தி! என்ன மதிநுட்பம்!
இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் பாடல், கோயிலில் காணப்படுகிறது.
திருக்குறுங்குடிக் கோயிலில், நம்பிக்கு உபதேசக் கோலம் என்றொரு தெய்வ வடிவத்தைக் கண்டோம். கூப்பிய கரங்களுடன் நம்பி நின்றபடி இருக்க, அவர்முன் எம்பெருமானார் அமர்ந்த வண்ணம் காணப்படும் அந்தக் கோலம்தான், மனிதராகத் தோன்றிய ஸ்ரீராமாநுஜர், நம்பிக்கு உபதேசம் செய்த கோலம்!
ஸ்ரீராமாநுஜர், தமது திவ்விய தேச யாத்திரையின்போது, திருக்குறுங்குடிக்கு வருகிறார். அவர் சம்சார சேதனர்களை எப்படிக் கரையேற்றப் போகிறார் என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளப் பரந்தாமனுக்கு ஆசை! ஒரு தாய், தனக்குத் தெரிந்த விஷயம்தான் என்றாலும், அதைத் தன் செல்ல மகனின் அமுத மொழியில் தெரிந்துகொள்ள ஆசைப்படுவாள் அல்லவா! அப்படி ஓர் ஆசை பரந்தாமனுக்கு.
ஸ்ரீராமாநுஜரிடம் வந்த நம்பி, ''ராமர், கிருஷ்ணர் போன்றவர்களாலேயே கரையேற்ற முடியாத சம்சார சேதனர்களை உம்மால் எப்படி கரையேற்ற முடியும்?'' என்று கேட்டார்.
சாட்சாத் ஆதிசேஷனின் அவதாரமாகப் போற்றப்படும் எம்பெருமானாருக்குத் தெரியாதா என்ன, வந்திருப்பது யார் என்று? நம்பியுடன் தாமும் விளையாட விரும்பியதுபோல், ''கேட்கும் அளவில் கேட்கப்பட்டால் உபதேசம் செய்யப்படும்'' என்றாராம்.
அதன்படி, நம்பி சீடனாகக் கரம் கூப்பி நிற்க, ஸ்ரீராமாநுஜர் ஆசானாக அமர்ந்து உபதேசிக்கும் அந்தத் திருக்காட்சி, ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், யாராக இருந்தாலும், அவரை குருவாக ஏற்றுக் கொண்டுவிட்டால், பக்தியுட னும், விநயத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்கிற பெரியதொரு தத்துவத்தை உணர்த்துகிறது.
திருக்குறுங்குடி திருத்தலத்தையும், நம்பிமலைக் கோயிலையும் தரிசிக்கச் சென்ற வேளையில் நாம் தெரிந்துகொண்ட செய்திகள் நமக்குத்தான் எத்தனை எத்தனை அனுபவப் படிப்பினைகளைத் தந்திருக்கின்றன!
அதுமட்டுமல்ல... திருக்குறுங்குடிக் கோயிலில் அருளும் நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று நம்பிகளின் வண்ணத் திருக்கோலம் தரிசித்த நம் மனத்தில், நம்பியின் அருளால், நம்பியின் அம்சமாக அவதரித்த நம்மாழ்வார், நம்பியைப் போற்றிய ஓர் அகச்சுவைப் பாடல் எதிரொலித்தது.
எங்ஙனேயோ அன்னைமீர்காள்!
என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை
நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும்
செல்கின்றது என் நெஞ்சமே!
என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை
நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும்
செல்கின்றது என் நெஞ்சமே!
Comments
Post a Comment