எ ல்லாரும் காத்திருந்தார்கள். பூலோக சஞ்சாரம் செய்த சிவபெருமான், வள்ளிமலைக்கு அருகில் உலவிக் கொண்டிருந்தார்.
அவர் உதடுகளில் எப்போதையும்விட சற்று அதிகப்படியான புன்னகை! இருக்காதா பின்னே! செம்மான் மகளைத் திருடும் திருடனாக _ செந்தூர் முருகன், வேடன் வேடமிட்டுத் திரிந்த மலை ஆயிற்றே! ‘வள்ளியின் கைப்பிடிக்க என்னவெல்லாம் ஆட்டம் ஆடினான் ஆறுமுகன்!’ என்று எண்ணிய சிவபெருமானுக்குச் சிரிப்பு வந்தது. ‘சுனையில் நீராட வேண்டும் என்று பொய் சொல்லி அல்லவா, பாவம் அந்தப் பெண்ணை முருகன் அழைத்துக் கொண்டு போனான். அதுவும் எப்படி? முதியவர் வேடமிட்டுக் கொண்டு... யானையை வைத்து பயமுறுத்தி... விநாயகன் வேறு இதற்கு உடந்தை!’
பரமனாரின் புன்னகையைக் கண்ட பார்வதி தேவியாருக்கு, அவருடைய மனதின் சிந்தனைகள் தெளிவாகப் புரிந்தன. அம்பிகை யும் சிந்தனைக்குள் ஆழ்ந்தார். பார்வதிதேவி யின் மௌனத்தைக் கண்ட பரமனார், மெள்ள அருகில் வந்தார்.
‘‘என்ன தேவியாரே? இவ்வளவு ஆழமான கருத்தோட்டம் என்னவோ? அடியேனுக்குச் சொல்வீர்களா?’’
பரமனாரின் பரிகாசத்தில் முகம் சிவந்த அம்பிகை, கையிலிருந்த தாமரை மலரால், சிவனாரின் சடாமுடியைத் தொட்டார்.
‘‘என்றைக்கும் முழுமையாகத் தீராத ஆசை, இப்போதும் எழுகிறது ஐயனே!’’
‘‘என்ன ஆசை உமா? ஆசைகளையெல்லாம் தீர்த்து வைக்கும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகிக்கும் ஆசையா?’’
‘‘பூலோகம் சுகமான பிரதேசம். காடுகளும் மலைகளுமாக இருக்கும் பூலோகத்தில், ஆங்காங்கே உள்ள தீர்த்தங்களில் நீராடி, அருகிலேயே சிவலிங்கத் திருமேனி அமைத்து, நந்தவன மலர்களால் அர்ச்சித்து ஆராதனை செய்யும் அமைதியை எண்ணிப் பார்த்தேன். எத்தனை முறை செய்தாலும், இன்னும் இப்படிச் செய்யும் ஆசை மட்டும் அடங்குவதே இல்லை!’’ _ பேசப் பேச, ஜகன்மாதாவின் கண்களும் புரு வங்களும் நடத்திய அபிநயங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார், அம்பலத்தாடும் ஆனந்தத் தாண்டவர்.
‘அப்பப்பா! கரணங்களுக்குக் கைகளும் கால்களும் வேண்டாமோ? உமாதேவியாரின் புருவங்களும் இமைகளுமே இத்தனை கரணங்களையும் ஆடுகின்றனவே!’ - வியப்போடு நோக்கிய விமலனாரின் திருச்செவிகளில், அம்பிகையின் மென்சொற்கள் ஆதங்கத்தோடு வந்து விழுந்தன.
‘‘இந்த இடம்கூட எவ்வளவு அழகு. சிறு சிறு குன்றுகள். சுகமான தென்றல். இங்கேயும் ஒரு தீர்த்தம் இருந்தால், எவ்வளவு அருமையாக இருக்கும்!’’
பார்வதியின் சொற்களைக் கேட்டும் கேட்காதது மாதிரி, வடக்குத் திசையைப் பார்த்துக் கொண்டிருந்தார் சிவபெருமான்.
சுற்றுமுற்றும் பார்த்த சிவனாருக்கு, இன்னும் அதிகமாகச் சிரிப்பு வந்தது. அம்பிகை இப்படித் தனது பூஜை செய்யும் ஆசையை வெளியிடப் போகிறாள் என்று இவர்களுக்கு எல்லாம் தெரியுமா என்ன? அத்தனை பேரும் காத்திருக் கிறார்களே!
ஆமாம்! சிவனும் பார்வதியும், திருக்கயிலாயத்தில் இருந்து புறப்பட்ட நேரம் தொட்டு, கங்கை முதல் அனைத்து நதி தேவதைகளும் காத்திருந்தனர். தீர்த்தமாடுவதற்குத் தங்களில் யாரைக் கூப்பிடப் போகிறார்கள் என்று எல்லா நதிகளும் தயாராக இருந்தனர். அதற்கு ஏற்றாற்போல, தனது ஏக்கத் தையும் பார்வதி யதார்த்தமாக வெளி யிட்டார்.
எவ்வளவுதான் சிவ ஆராதனை செய்தாலும் பக்கத்திலேயே சிவனார் நின்று கொண்டிருந்தாலும், தீர்த்தமாடி சிவலிங்க பூஜை செய்வதில், பார்வதி தேவிக்கு இருக்கும் பிரியம் அலாதியானது. அந்தப் பிரியத்தின் வெளிப்பாடுதான், இப்போது வார்த்தைகளில் வந்தது.
வடகிழக்கில் பார்வையைச் செலுத்தினார் பரமனார். அவரின் பார்வையின் திசையில்... சிறியவளாக... துடிப்பு மிக்கவளாக... சுறுசுறுப்பும் குழந்தைத்தனமும் போட்டி போட... தங்கமென மின்னிக் கொண்டிருந்தாள் அந்த நங்கை நல்லாள் - நதி நல்லாள். அம்பிகைக்கு இவள் நல்ல தோழியாக வும் சேடியாகவும் இருப்பாள். பொன் னாகப் பளபளத்த அவளை, ‘வா!’ என்று கைகாட்டினார் பரமனார்.
பாய்ந்தோடி வந்தாள் அவள். ‘நீ வா!’ என்று இறைவனாலேயே அழைக்கப்பட்டவள், நாளடைவில் ‘நிவா’ (தற்போது பொன்னை நதி) என்று பெயர் பெற்று விட்டாள்.
வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் நிவா நதி, பாலாற்றுடன் கலக் கிறது. நிவா நதியின் வடமேற்குக் கரையில் இருக்கும் திருத்தலம்தான், திருவல்லம்.
தொண்டை நாட்டுத் திருத்தலங்களுள் ஒன்றான திருவல்லம், மக்களின் வழக்கில், திருவலம் என்றே பெயர் பெறுகிறது. சென்னை-வேலூர் மார்க்கத்தில் ராணிப்பேட்டைக்கு அருகில், இந்தச் சிற்றூர் உள் ளது. ராணிப் பேட்டை- காட்பாடி பாதையில் (அதா வது ராணிப்பேட்டை- சித்தூர் சாலை), சிப்காட் தொழிலகப் பகுதிகளைக் கடந்து சென்றால், இரண்டு பாதைகள் பிரியும். இவற்றுள், இடப் பக்கப் பாதையில் சிறிது தூரம் சென்றால், புகழ் பெற்ற திருவலம் இரும்புப் பாலம். பாலத்திலிருந்து பார்த்தால் பளிச்சென்று தெரிகிறது கோயில்.
பெரிய மதில். பெரிய கோயில். திருக்கோயிலின் பிரதான வாயிலில் நிற்கிறோம். இரண்டு பக்கமும், மண்டபங்கள். நமக்கு வலப் புறத்தில், வாகன மண்டபமும், அதன் அருகில் ஆலய அலுவலகமும் இருக்க, நெடிதோங்கி நிற்கிறது தெற்கு நோக்கிய ராஜகோபுரம்.
இடப் புற மண்டபத்துக்கு முன்னதாகவே சிறிய சந்நிதிகள். விநாயகரும் ஐயப் பனும் காட்சி தருகிறார்கள். சிவபெருமானின் திரு விளை யாடல்களை விளக்கும் பல்வேறு சிலைகள், ராஜ கோபுரத்துக்கு அழகு சேர்க்கின்றன.
உள்ளே நுழைந்தவுடன் விசாலமான இடத்தை அடைகிறோம். உள்கோபுரத்தை நோக்கி வழி நீள்கிறது. இடப் பக்கத்தில், அன்னதானக் கூடம். அதற்கு அருகில், ஒரு தனிக்கோயில். அருள்மிகு ராஜேஸ்வரி உடனாய அருள்மிகு அம்பிகேஸ்வரர் சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார். எதிரில் நந்தி. அம்பாள் நின்ற திருக்கோலம். இந்தக் கோயிலைத் தனியாக வலம் வரும் வசதி உள்ளது. மிக மிக அமைதியாகக் காட்சி தரும் இந்தக் கோயிலின் அருகில், நாகலிங்க மரமொன்று இருக்கிறது.
ராஜேஸ்வரி உடனாய அம்பிகேஸ்வரர் திருக்கோயில், திருவலம் மௌன ஸ்வாமிகள் அவர்களால் திருப்பணி செய்து கட்டுவிக்கப் பெற்றது. சிவலிங்கத் திருமேனியின் மீது பாம்பு குடை கவிழ்த்திருப்பது போல, இயற்கையாகவே அமைந்திருக்கும் நாகலிங்கப் பூ, சித்தாந்த ரீதியாக சிவ பூஜைக்கு மிகவும் உகந்த மலர். நாகலிங்க மரம், தமிழ்நாட்டில் ஆவுடையார் மரம் என்றும் அழைக்கப்படுகிறது. நாகலிங்க மலரால் சிவலிங்கத்தை வழிபட்டால், எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும் தொலைந்து விடும். எனவேதான், மௌன ஸ்வாமிகள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, இந்தச் சந்நிதியையும் மரத்தையும் அமைத்துள்ளார். இந்தச் சந்நிதிக்கு எதிர்ப்புறத்தில் அழகான திருக்குளம். இதுவே, தல தீர்த்தமான கௌரி தீர்த்தம். செம்மையாகப் படிகள் கட்டப்பட்டுச் சிறப்பாகத் திகழும் இதன் நடுவில், நீராழி மண்டபமும் உண்டு.
உள்கோபுரத்துக்கு மூன்று நிலைகள். கோபுரத்தில் நுழைந்து செல்லும்போது, இடப் பக்கம் வலம்புரி விநாயகரையும், ஆத்மலிங்கத்தையும் வலப் பக்கம் பைர வரையும் தரிசிக்கலாம். உள்கோபுரம் தாண்டி நுழைந்தால், கோயிலின் இரண் டாம் பிராகாரத்தை அடைகிறோம். பெரிய பிராகாரம். வலம் வரத் தொடங்கி, தெற்குத் திருச்சுற்று வழியாக மேற்கு திருச்சுற்றுக்குள் நுழைகிறோம். கல்யாண மண்டபம். உற்சவர் திருமேனிகள் இங்கே வைக்கப்பட்டுள்ளன. அடுத்து காசிவிஸ்வநாதர் சந்நிதி. அதையடுத்து சந்திரமௌலீஸ்வரர் சந்நிதி. இரண்டுமே கிழக்கு நோக்கியவை. இரண்டின் மூர்த்தங்களும் மிகச் சிறிய சிவலிங்கங்கள். அடுத்த சந்நிதி சற்றே பெரியவராகக் காட்சியளிக்கும் கிழக்கு முகமான அருணாசலேஸ்வரர். காசி விஸ்வநாதரைத் தனியாக வலம் வரலாம். அருணாசலேஸ்வரரை அடுத்து, வரிசையாக நான்கு லிங்கங்கள் - சதாசிவர், அனந்தர், ஸ்ரீகண்டர், அம்பிகேஸ்வரர். அடுத்து, மிகச் சிறிய அளவில் இருந்தாலும், மிக மிக அழகானவரும், மஹாலிங்கர் என்று அழைக்கப்படுபவருமான சஹஸ்ரலிங்கத் திருமேனியார்.
அடுத்ததாக இருப்பது, கிழக்கு நோக்கிய வள்ளி- தெய்வயானை உடனாய சுப்ரமணியர் சந்நிதி. மயி லேறும் முருகன், நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இந்தச் சந்நிதியில் நாகப் பிரதிஷ்டையும், அருணகிரிநாதர் திருவுருவமும் உண்டு. ஏறத்தாழ மேற்குத் திருச்சுற்றின் கோடியை அடைந்து விட் டோம். சுப்ரமணியர் சந்நிதியை அடுத்து, மீண்டும் வரிசையாக மூன்று சிவலிங்கங்கள். குரு ஈஸ்வரர், விஷ்ணு ஈஸ்வரர், விதாதர ஈஸ்வரர் என்பவை திரு நாமங்கள்.
மேற்குத் திருச்சுற்றின் கோடியில் தெற்கு நோக்கிய பெரிய மண்டபம். இது, சிவகாமி உடனாய நடராஜ மண்டபம். சிலர், இதையே வாகன மண்டபம் என்கிறார்கள். ஒரு காலத்தில் ஸ்வாமி வாகனங்கள் வைக்கப்பட்டு இருந்ததால், இப்படிப் பெயர் வந்திருக் கலாம். கிழக்கு நோக்கிய புராதனச் சந்நிதியான ஆதி வில்வநாதேஸ்வரர் சந்நிதியைத் தாண்டி, வடக்குச் சுற்றில் திரும்ப யத்தனிக்கிறோம்.
எருக்க மரமும், வேப்ப மரமும் ஒன்றையன்று தழுவி நிற்க, மரங்களின் கிளைகளெல்லாம் சிறுசிறு தொட்டில்களும், பிரார்த்தனைக் கட்டுகளும்! திருவலம் ஒரு பிரார்த்தனைத் தலம். சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமானது வெள்ளெருக்கு. ‘வெள்ளெருக்கம் சடைமுடியான்’ என்றே கம்பர் துதிப்பார். வேப்ப மரமோ, அம்பாளின் வடிவம். இரண்டு மரங்களும் இணைந்து, பின்னிப் பிணைந்து காணப்படுவது, அர்த்தநாரீஸ்வரத் தத்துவத்தைக் குறிக்கும். எருக்கையும் வேம்பையும் வலம் வந்து, மனமுருகிப் பிரார்த்தித்து நின்றால், வேண்டிய யாவும் கிட்டும்.
அப்படியே, தனிக் கோயிலாகவுள்ள அம்மன் சந்நிதிக்குள் நுழைந்து விடலாம். அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியது. எனினும், இப்போது நாம் நுழைவது தெற்கு வாயில். கிழக்கு வாயிலும் உண்டு.
அம்பாள் கோயிலுக்குள் நுழைந்து விட்டோம். முன் மண்டபத்துடன் கூடிய அழகான கோயில். அம்பாளுக்கு அருள்மிகு தனுமத்யாம்பாள் என்று திருநாமம். தனு என்றால் உடல். ஐயனின் உடலின் மத்திய பாகமாக அம்பாள் விளங்குகிறாள். அர்த்தநாரீஸ் வரத் தத்துவத்தை, இந்தத் திருநாமம் விளக்குகிறது.
வல்லத்தில் கோயில் கொண்டிருப்ப தால், வல்லாம்பாள் என்றும் திருநாமம் உண்டு. வல்லம் என்றால் ஆற்றல் என்று பொருள். வல்லமை தரக் கூடிய திருத்தலம் இதுவென்பதால், இந்தப் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும்.
கல்வெட்டுகளில், இந்த ஊர் தீக்காலி வல்லம் என்று குறிப்பிடப்படுகிறது. தஞ்சை மாவட்டத்திலும் ஒரு வல்லம் இருப்பதால், இந்த ஊரைத் தனிப்படுத்திக் காட்டுவதற்காக, தீக்காலி எனும் அடைமொழி சேர்க்கப் பட்டதாகத் தெரிகிறது. இதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. உள்ளூர்க்காரர்கள் சிலர், அம்பாளின் திருநாமத்தை ஜடாகலாபாம்பாள் என்கிறார்கள். தீக்காலி அம்பாள் என்று இதற்குப் பொருள் சொல்லப்படுகிறது. அம்பாள் மிக மிக உக்கிரமாக இருந்த தாகவும், இங்கு வந்த ஆதிசங்கரர், அம்பாளின் உக்கிரம் தணித்து சாந்தப் படுத்தியதாகவும் தெரிகிறது.
அருள்மிகு தனுமத்யாம்பாள் நின்ற திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்க ளுடன், அபய- வர ஹஸ்தங்கள் தாங்கி, காட்சி தருகிறாள். சந்நிதி வாயிலில், ஒரு புறம் விநாயகர்; மறு புறம் சுப்ரமணியர். எதிரில், சிம்ம வாகனம்.
அம்பாள் கோயில், அகழி அமைப்பு டன் காணப்படுகிறது. தனியாக வலம் வரலாம். கோஷ்டத்தில் _ நிருத்த விநா யகர், காத்யாயினி, அபய- வரதம் தாங்கிய பரமேஸ்வரி, பிராம்ஹி, துர்க்கை ஆகியோர் உள்ளனர். தனி மண்டபத்தில் சண்டிகேஸ்வரியும் உண்டு.
அம்பாள் கோயிலைவிட்டு வெளியே வருகிறோம். எதிரில், வரிசையாக யாக சாலை கட்டமைப்புகள். சிவன் எரித்த தக்கன் யாகசாலை என்று பெயர்ப் பலகையும் வைக்கப்பட்டிருக்கிறது. பாழ்பட்டுப்போன தக்கன் யாகசாலை இப்படித்தான் வெற்றாக இருந்திருக்க வேண்டும். வடக்குத் திருச்சுற்று முடிந்து, கிழக்குத் திருச்சுற்று திரும்பும் இடத்துக்கு வந்து விட்டோம் (அம்பாள் கோயில், உண்மையில், வடக்குச் சுற்றில் கிழக்கு நோக்கியபடி உள்ளது). மூலையில், யாகசாலை (இது தார்மிகமான, மெய்யான யாகசாலை).
சற்றே தள்ளி, காற்றில் சலசலக்கும் வில்வ மரம். இதுவே தல மரம். இந்த ஊருக்கே வில்வவனம் என்றும், வில்வாரண்யம் என்றும் பெயர்கள் உண்டு. பண்டைக் காலத்தில், இந்தப் பகுதி முழுவதும் வில்வ மரங்கள் நிறைந்து காணப்பட்டன. காட்டிலிருந்த பாம்புப் புற்றொன்றில், சிவலிங்கம் இருந்தது. அதைக் கண்ட பசுவொன்று, லிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து வழிபட்டது. அதனால் புற்று கரைந்து, லிங் கம் வெளிப்பட்டதாகவும் அதுவே தற்போது நாம் தரிசிக்கும் மூலவர் என்றும் செவிவழிக் கதைகள் நிலவுகின்றன.
கிழக்குச் சுற்றிலேயே, மற்றுமொரு தனிக்கோயில். அருள்மிகு மீனாட்சி சமேத அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோயில். கிழக்கு நோக்கிய சுந்தரேஸ்வரர் சந்நிதி. துவார விநாயகரும், துவார பாலசுப்ரமணியரும் காட்சி கொடுக்க, கோஷ்டத்தில் விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், மகாவிஷ்ணுவும், பிரம்மாவும், துர்க்கையும் தரிசனம் தர... சுந்தரேஸ்வரர் கம்பீரமாக அருள் பாலிக்கிறார். சண்டிகேஸ்வரரும் உண்டு. இந்தச் சந்நிதியையும் தனியாக வலம் வரக் கூடிய வசதி உண்டு. மிக மிகச் சிறியதாக இருந்தாலும், இந்தப் பிராகாரம் ரம்மியமாக இருக்கிறது. தெற்கு நோக்கி தரிசனம் தரும் அருள்மிகு மீனாட்சி அம்ம னையும் வணங்கி வருகிறோம்.
சுந்தரேஸ்வரர் கோயிலின் எதிரிலேயே, தீர்த்தக் கிணறு உள்ளது. சுந்தரேஸ்வரர் சந்நிதியை விட்டு வெளியே வந்தால், கொடிமரம் கண்ணில் படுகிறது. இந்தச் சுற்றில்தான் பைரவருக்கும் சூரியனுக்கும் சந்நிதிகள் உள்ளன.
செப்புக் கவசமிட்ட கொடிமரத்தின் அடியில் நிற்கிறோம். கொடிமரத்தின் முன்பு, தாமரைப் பீடத்தில் விஷ்ணு பாதம். இந்தத் தலத்தில் சிவபெருமானை விஷ்ணு வழிபட்டதாக ஐதீகம். கொடிமரத்தின் அருகில் நின்று பார்த்தால், ஏராளமான நந்திகள்.
கொடிமரத்துக்கு அடுத்துள்ள நந்தி, ஸ்வாமியைப் பார்க்காமல் கிழக்குப் பார்த்தபடி இருக்கிறார். அடுத்ததாக- அதிகார நந்தி, ஸ்வாமியைப் பார்த்தபடி இருக்கிறார். அடுத்து, மகா மகா மகா பெரிய நந்தி. இவரும் ஸ்வாமியைப் பார்க்காமல் கிழக்குப் பார்த்தபடியே! மூலவரை இங்கிருந்து தரிசிக்க முடியாதபடி பெரிய நந்தி மறைக்கிறார். உள்ளே போகிறோம். அங்கேயும் மூலவர் சந்நிதியிலும் நந்திதேவர், ஸ்வாமியைப் பார்க் காமல் எதிர்த்திசையில் பார்த்தபடி... ஏன்?
இதற்கொரு சுவாரஸ்யமான கதை வழங்கப் படுகிறது.
இந்தப் பகுதியில், முன்னொரு காலத்தில் கஞ்சன் என்றொரு அரக்கன் இருந்தான். சிவ பக்தனாக இருந்தாலும், ஆணவக்காரனாக இருந்தான். பக்கத்தில் உள்ள மலையிலிருக்கும் தீர்த்தத்திலிருந்துதான், இறைவனுக்கு நீர் எடுப் பது வழக்கம். நீர் எடுக்க வந்தவர்களை கஞ்சன் துன்புறுத்தினான்.
பக்தர்களின் முறையீட்டுக்கு இரங்கிய எம் பெருமான், கஞ்சனோடு போரிட நந்திதேவரை அனுப்பினார். நந்திக்கும் கஞ்சனுக்கும் நடந்த உக்கிரமான போரில், கஞ்சன் மீண்டும் மீண்டும் முளைத்து எழுந்தான். கடைசியில், கஞ்சனைக் கண்டம் துண்டமாக வெட்டினார் நந்திதேவர். கஞ்சனின் உடல் பகுதிகள் அங்கும் இங்குமாகச் சிதறின.
சிரசு (தலை) விழுந்த இடம் சீகராஜபுரம்; லலாடம் (நெற்றி) விழுந்த இடம் லாலாபேட்டை; மார்பு விழுந்த இடம் மருதம்பாக்கம்; மணிக்கட்டு விழுந்த இடம் மணியம்பட்டு; வலக் கால் விழுந்த இடம் வடகால்; இடக் கால் விழுந்த இடம் தென்கால்; குடல் தெறித்த இடம் குகையநல்லூர்; நரம்புகள் சிதறிய இடம் நரசிங்கபுரம் -- இந்த ஊர்களெல்லாம், திருவல்லத்தைச் சுற்றிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்குள் உள்ளன. லாலாபேட்டைக்கு அருகில், காஞ்சனகிரி எனும் மலை உள்ளது. இங்குதான் முதலில் நீர் மொண்ட தீர்த்தம் இருந்தது.
கஞ்சனோடு போரிட்ட நந்தி, தொடர்ந்து காவல் காப்பதற்காக, கிழக்கு நோக்கியபடி (உள்ளே வரும் திசையைப் பார்த்தபடி) உள்ளார். கஞ்சனின் ரத்தத் துளிகள் தெறித்த இடங்களில், மண்ணைப் புனிதப்படுத்த, இறைவனின் அருளால் சிவலிங்கங்கள் முளைத்தனவாம். லாலாபேட்டையையும் காஞ்சனகிரியையும் சுற்றி, ஆங்காங்கே சிவலிங்கங்கள் இருப்பதைக் காணலாம் (இதன் விரிவாக, ஆற்காடு, கண்ணமங்கலம், அருங்குன்றம் பகுதிகளிலும் நிறைய சிவலிங்கங்கள் உண்டு). இங்குள்ள பெரிய நந்தி, மௌன ஸ்வாமிகள் அமைத்ததாகும்.
கஞ்சன் கதையை நினைத்துக் கொண்டே மூலவர் சந்நிதானத்துக்குள் நுழைகிறோம். உள் பிராகாரம். வலம் வருவோமா? தென்கிழக்கு மூலையில், பிராம்ஹி சிலை. தெற்குச் சுற்றில் மூலவர் சந்நிதிக்கு வருவதற்கான வழி ஒன்றும் உள்ளது (கோயிலின் பிரதான ராஜ கோபுரமும் உள் கோபுரமும் தெற்கில் உள்ளவை அல்லவா? அப்படியே, நேராக வந்தால், இந்தத் தெற்கு வாயிலில் வந்து விடலாம்).
தெற்குச் சுற்றில், அறுபத்துமூவரின் திருமேனிகள். மேற்குச் சுற்றில் திரும்பி, வடக்குச் சுற்றுக்குள் நுழைந் தால், மஹா தேவேஸ்வரர். வட கிழக்கு மூலைக்கு அருகில் நாகர்.
மூலவர் கருவறைக்குள் நுழைகிறோம். மண்டபம் போல விசாலமாக இருக்கிறது. கண்மூடி தியானித்துத் தலையை நிமிர்த்தினால், ஆஹா! அருள்மிகு வில்வ நாதேஸ்வரர். சதுர பீட ஆவுடையாருடன் கூடிய சுயம்பு லிங்கம். வல்லநாதர் என்றும் திருநாமம் பூண்ட பெருமான், கிழக்கு நோக்கி திவ்விய ஸ்வரூபராகக் காட்சி தருகிறார்.
ஆமாம். கஞ்சனோடு போரிட்டு வெற்றிவாகை சூடினாரே நந்திதேவர், பிறகு என்னவாயிற்று? கஞ்சன் தவறுணர்ந்தான். மன்னிப்பு கோரினான். ஆண்டவனும் அருள் செய்தார். கஞ்சனுக்கு முக்தி கொடுத்து, பூத கணங்களுள் ஒருவராக ஆக்கிக் கொண்டார்.
கஞ்சனுக்கே அருள் வழங்கிய ஸ்ரீவில்வநாதேஸ்வரரை மீண்டும் வணங்குகிறோம். மூலவரை நோக்கி நாம் நிற்கும்போது, நமக்கு வலப் புறமாக, அருள்மிகு நாராயணர் திருவுருவம்.
மூலவர் கருவறையின் மண்டபத்திலேயே இடப் பக்கத்தில், பள்ளத்தில் ஒரு சிவலிங்கம். இவர் அருள்மிகு பாதாளேஸ்வரர்; எதிரில் நந்தியோடும் விநாயகரோடும் காட்சி தருகிறார். ஏன் பள்ளத்தில் குடியமர்ந்தார்?
மழை பொய்த்துப் பஞ்சம் வருமென்றால், அப்போது இந்தப் பாதாளேஸ்வரர் குளிர்ந்து மூழ்கும்படி தண்ணீர் நிரப்பி வழிபட்டால் உடனே மழை வருமாம்; இதைச் சமீப காலத்தில்கூடச் செய்தார்களாம்.
வில்வநாதேஸ்வரரை வணங்கிக் கொண்டே மீண்டும் மூலவர் சந்நிதியை வலம் வருகிறோம். கருவறையின் அகழி அமைப்பு கண்களைக் கவர்கிறது. கருவறை சுவரெங்கும் கல்வெட்டுகள். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர்.
மூலவரை வழிபட்டு, வெளியே வந்தால் நாம் ஏற் கெனவே பார்த்த பெரிய நந்திக்கு அருகில் வந்து விட்டோம். இங்குதான், நடராஜ சபை இருக்கிறது. பக்கத்தில் நவக்கிரகச் சந்நிதி.
கொடிமரத்தடியில் வணங்கி, அந்தப் பிராகாரத் திலேயே தொடர்ந்து, உள்ளே நுழைந்து தெற்கு வாயில் நோக்கி வருகிறோம். இன்னும் சில சந்நிதிகள் உள்ளன. அகோர வீரபத்திரர், நால்வர், சனைஸ்வரர் சந்நிதிகளில் வழிபட்டு வர... இங்கு ஒரு விநாயகர். கையில் மாங்கனியோடு, பத்மபீடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறார்.
பங்குனி மாதம் கோயிலில் பெருவிழா. தவிர, கஞ்சனை நினைவுபடுத்தும் விழாக்களும் உண்டு.
கஞ்சனுக்காக தை மாதம் பொங்கல் பண்டிகை கழித்து பத்தாம் நாள், காஞ்சனகிரிக்கு ஸ்வாமி எழுந்தருள்கிறார் (இந்த நாள்தான், கஞ்சனுக்கு முக்தி தந்த நாள் என்று சிலர் சொல்கிறார்கள்).
கஞ்சனுக்கு முக்தி தந்த நாள், சித்ரா பௌர்ணமி என்றுமொரு கணக்கும் உண்டு. எப்படியாயி னும், சித்ரா பௌர்ணமி அன்று, ஒரு பெரிய விசேஷம் இங்கு நடக்கிறது. காஞ்சன மலையின் குளக் கரையில் நின்று பார்த்தால், இரவு சுமார் 11 மணிக்கு மேல் வடக்கு திசையில் சிறிய ஜோதி ஒன்று தெரியத் தொடங்கும். கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகும். ஏறத்தாழ 18-20 அடி உயரம் வளர்ந்து, பின் மறையும்.
இது ஆண்டுதோறும் தொடர்ந்து நடப்பதாக உள்ளூர்க்காரர்கள் சொல்கிறார்கள். பலரும் பார்த்திருக்கிறார்கள். தீப மங்கள் ஜோதி ஸ்வரூபரான சிவப்பரம்பொருள் சித்ரா பௌர்ணமியன்று ஜோதியா கவே காட்சி தருவது எவ்வளவு விசேஷம்!
கௌரி தேவியும் நவக்கிரகங்களும், வல்லாள அரசனும் வழிபட்ட திருவல்லம் திருத்தலத்திலிருந்து விடை பெறுகிறோம்.
Comments
Post a Comment