அ ரியும் சிவனும் ஒண்ணு; இதை அறி யாதவன் வாயில மண்ணு’ என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது ‘சைவம்- வைணவம் என்ற பேதம் கூடாது. சிவனை வழிபட்டாலும் விஷ்ணுவை வழிபட்டாலும் எல்லாம் ஒன்று தான். இந்த உண்மையை அனைவரும் அறிந்து கொள் ளுங்கள்’ என்பதுதான் இந்தப் பழமொழி உணர்த்தும் பொருள். முந்தைய காலத்தில் ‘சைவம் உயர்ந்ததா, வைணவம் உயர்ந்ததா?’ என்றெல்லாம் அவ்வப்போது சமய விவாதங்கள் எழுந்ததுண்டு. அதன் மூலம் இரு தரப்பாரும் உரசிக் கொண்டதும் உண்டு. இருந்தாலும், ‘இரண்டுமே ஒன்றுதான்... அதில் எந்த வேறுபாடும் கிடையாது!’ என்பதை உலகத்துக்கு உணர்த்த அவ்வப்போது அவதார புருஷர்கள் சிலர் தோன்றியுள்ளனர்.
இப்படிப்பட்ட சைவ - வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குவதுதான், கஞ்சனூரில் அமைந்திருக்கும் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம் (இந்த கஞ்சனூர் வரதராஜ பெருமாள் ஆலயத்துக்குச் சற் றுத் தொலைவில் உள்ள பிரபல ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம், சுக்கிரனுக்கான நவக்கிரக ஸ்தலமாக வழிபடப்படுகிறது. இங்குள்ள அம்பாள் பெயர் _ஸ்ரீகற்பகாம்பாள்). ஆதியில் இங்கு கோதண்ட ராமர் கோயில் மட்டுமே இருந்தது என்பதால், இதை கோதண்டராமர் ஆலயம் என்றும் சொல்கிறார்கள்.
கும்பகோணம்- மயிலாடுதுறை தடத்தில் இருக்கிறது ஆடுதுறை. இங்கிருந்து இடப் பக்கமாகப் பிரியும் கிளைச் சாலையில் திருமங்கலக்குடி வழியாக சுமார் மூன்று கி.மீ. சென்றால் கஞ்சனூர். காவிரிக் கரையில் உள்ள சிறிய கிராமம்.
ஆறு தலைமுறையாக ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் பூஜை செய்து வந்த சுந்தர்ராஜ பட்டாச்சார்யர் ஓய்வு பெற்று தற்போது இதே ஊரில் வசிக்கிறார். பக்தர்களின் போக்குவரத்து இல்லாமல் வெறிச் சோடிக் காணப்படுகிறது கஞ்சனூர் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம். என்ன காரணத்தாலோ இந்த ஆலயம் கவனிப்பார் இல்லாமல் கிடக்கிறது. கும்பாபிஷேகம் நடத்தும் நோக்கத்துடன் பாலாலயம் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிறது. அந்த நிலையிலேயே கோயில் முன்னேற்றம் எதுவும் இல்லாமல் அரைகுறையாக நிற்கிறது. கோயில் விமானங்கள் மற்றும் சுற்றுச்சுவர்களில் சிமெண்ட் பூசப்பட்டு, அப்போது தொடங்கிய வேலைகள் அப்படியப்படியே முழுமை அடையாமல் காட்சி அளிக்கின்றன.
‘‘பாலாலயம் செய்யப்பட்டு இத்தனை நாள் கோயிலை அப் படியே வைத்திருக்கக் கூடாது. அகில உலகத்தையும் காத்து ரட்சிக்கும் பெருமாளைக் கண்டு கொள்ளாமல் விட்டால், அது லோகத்துக்குத்தான் ஆபத்து!’’ என்கிறார் கும்பகோணத்தில் வசிக்கும் வைணவப் பெரியவர் ஒருவர். மேலும் அவர், ‘‘பாலால யம் துவங்க குறிக்கப்பட்ட நாள் சரியில்லை. கஞ்சனூர் அக்னீஸ் வரர் கோயிலில் இருக்கும் சுக்கிர னுக்குப் ப்ரீதி செய்வதற்கு முன்பாக, இந்த வரதராஜ பெருமாள் ஆலயத்துக்கு வந்து இவருக்குப் ப்ரீதி செய்துவிட்டுப் போக வேண்டும். அப்போதுதான் சுக்கிரனுக்குச் செய்யும் ப்ரீதிக்குப் பலன் உண்டு. வரதராஜ பெருமாள் கோயில் தொடர்பான பணிகளில் எவரும் ஆர்வம் காட்டவில்லை. இங்குள்ள வரதருக்குக் கும்பாபிஷேகம் நடத்தாமல் அக்னீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது. ஏனென்றால், அங்குள்ள அக்னீஸ்வரர் தான் இங்கு வந்து கற்பகாம்பாளு டன் குடிகொண்டுள்ளார் (இதற்கான கதை பின்னால் இடம்பெறுகிறது.)’’ என்றார் நம்மிடம்.
உள்ளூர்க்காரர் ஒருவர் நம்மிடம் சொன்னார்: ‘‘கஞ்சனூரில் இருக்கும் சிவாலயமான அக்னீஸ்வரர் ஆலயத்தை நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றான சுக்கிரன் ஸ்தலம் என்று சொல்லி ஏராளமான வெளியூர் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். காணிக்கைகளையும் கொட்டுகிறார்கள். ஆனால், அந்த ஆலயத்துக்குச் செல்லும் வழியில் ஒரு சின்ன தெருவில்தான் இருக்கிறது இந்த வரதராஜ பெருமாள் ஆலயம். இங்கு எவருமே வருவதில்லை. அவ்வளவு ஏன், உள்ளூர்க்காரர்கள்கூடக் கவனிப்பதில்லை. காசு, பணம் இல்லேன்னா நாம பட்டினி இருக்கலாம். அதுக்காக ஸ்வாமியையும் பட்டினி போடலாங்களா? எனக்குத் தெரிஞ்சு இந்த பெருமாள் பல நாள் பட்டினி கிடந்திருக்கார். இப்ப ஒரு பட்டாச்சார்யார் வந்து தினமும் பூஜை பண்ணிட்டுப் போயிட்டிருக்கார்!’’
தற்போது ஆலயத்துக்கு அருகிலேயே தங்கி, கோயி லைத் தினமும் கழுவி, கோலம் போட்டு சுத்தமாகப் பராமரித்து வருபவர் வாட்ச்மேனான சந்துருவும் அவர் மனைவி ராஜேஸ்வரியும்தான். ஆலயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுப் புதிதாக யாரா வது வந்தால், இவர்கள்தான் ஆலயப் பகுதியைச் சுற்றிக் காட்டுகிறார்கள். வரதராஜ பெருமாள் ஆலயத் திருப்பணிகளுக்கென தற்போது ஒரு கமிட்டி போடப்பட்டு அதன் மேற்பார்வையில் கும்பா பிஷேக வேலைகள் நடை பெற்று வருகின்றன.
இரு பக்கமும் தாயார்கள் புடை சூழ சுதை வடிவில் காட்சி தரும் இந்த வரதராஜ பெருமாள் ஆலயத்துக்குள்ளேயே ஸ்ரீஅக்னீஸ்வரரும் அருகே அருள்மிகு கற்பகாம்பாளும் தம்பதி சமேதராக வீற்றிருப்பது கண் கொள்ளா தரிசனம். இதே ஊரில் பெரிய சிவாலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரரும் ஸ்ரீகற்பகாம்பாளும் இந்தப் பெருமாள் ஆலயத்திலும் வந்து குடி கொண்டது தனிக் கதை. அந்தக் கதையைச் சொல்வதற்கு முன் ஒரு சில வார்த்தைகள்...
ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு ஆராதனை செய்யும் பட்டாச்சார்யரே இங்குள்ள அக்னீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாளுக்கும் அபிஷேக ஆராதனை செய்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. பெருமாள் ஆலயத்தில் உள்ள இந்த அக்னீஸ்வரருக்கு சிவராத்திரி விழா, அன்னாபிஷேக உற்சவம் போன்ற சைவ விழாக்களும் விமரிசையாக நடைபெறுமாம். நவராத்திரி காலத்தில் கற்பகாம்பாளுக்கு விமரிசையான அலங்காரங்கள் பிரமாதப்படுமாம். வரதராஜ பெருமாளுக்கு ஆரத்தி காட்டிவிட்டு தீர்த்தமும் துளசியும் பிரசாதமாகத் தருகிறார் பட்டாச்சார்யார். அதே பட்டாச்சார்யார் சிவன் சந்நிதிக்கு வந்து தீபம் காட்டி விபூதி, குங்குமம் தருகிறார். மனம் குளிரும் ஆனந்த தரிசனம்!
ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் அக்னீஸ்வரரும் கற்பகாம்பாளும் குடிகொண்டது எப்படி? கஞ்சனூ ரில் வைணவக் குடும்பத்தில் பிறந்து பெரும் சிவபக்த ராகத் திகழ்ந்த ஹரதத்தர் என்பவர்தான் இதற்குக் காரணமாக இருந்திருக்கிறார். சுமார் ஆயிரம் வருடங் களுக்கு முன் இதே ஊரில் நிகழ்ந்த கதை இது:
கஞ்சனூரில் வைணவர்களும் சிவபக்தர்களும் பெருமளவில் வசித்திருந்தனர். வாசுதேவர் என்ற வைணவருக்கு சுதர்சனன் என்ற குழந்தை பிறந்தது. இரண்டு வயதாகி குழந்தை நடக்கும் பருவத்தை அடைந்ததும், அருகில் இருந்த சிவ பக்தர்களின் வீட்டுக்கு ஓடிப் போய் விடுவான் சுதர்சனன். சிவ பக் தர்கள் காவிரியில் குளித்துவிட்டு சைவ மணம் கமழ தெருவில் வந்து கொண்டிருக்கும்போது அவர்களை வணங்கி, அவர்களின் பாதம் பட்ட மண்ணைத் தன் தலையில் போட்டுக் கொண்டு தனக்கும் விபூதி இட்டுவிடுமாறு கேட்பான் சுதர்சனன். விபூதி இட்டு விடும் சிலர், சுதர்சனனுக்கு ருத்திராட்சம் அணி வித்தும் அழகு பார்ப்பார்கள்.
அதன் பின் சுதர்சனன், நேராக ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம் போய் ஈஸ்வரனையும் அங்கிருக்கும் உமையம்மை கற்பகாம்பாளையும் வணங்குவது வாடிக்கையானது. சாப்பிட வீட்டுக்குப் போகும் நேரம் தவிர, மற்ற பொழுதுகளை சிவ பக்தர்களோடும், சிவ ஸ்தலங்களி லுமே செலவழித்தான் சுதர்சனன். குழந்தையின் இந்த நடவடிக் கைகளை ‘வெறும் விளையாட்டு!’ என்றே ஆரம்பத்தில் நினைத்தார் வாசுதேவர். பின்னாளில், ‘‘கண்ணே சுதர்சனா... அருகில் இருக்கும் வரதராஜ பெருமாள் ஆலயத்துக்குப் போ. அவரை வணங்கு. அவர்தான் நம்மைக் காத்தருளும் பெருமான் (ஸ்ரீமகாவிஷ்ணுவே இப்படி சுதர்சனராக அவதரித்து சிவ பக்தியை வெளிப்படுத்தினார் என்று ‘ஹரதத்தர் சரித்திரம்’ என்ற பழைய நூல் சொல்கிறது). வைணவ பக்தியின் சிறப்பை நீ எளிதில் புரிந்து கொள்ள உனக்குக் கதைகள் சொல்கிறேன்!’’ என்று வாசுதேவர் பிரயத்தனப்பட்டதெல்லாம் கடைசி வரை பலன் அளிக்கவே இல்லை. சுதர்சனன், அவனது வழியிலேயே போய்க் கொண்டிருந்தான்.
சுதர்சனனுக்கு ஐந்து வயதானது. உபநயனம் செய்வித்தார்கள். ‘‘மகனே சுதர்சனா... இதுவரையில் இருந்தது போல் இனியும் இருக்காதே. உனக்குப் பூணூல் போட்டாகி விட்டது. சிவன் கோயிலுக்குப் போகாதே. விபூதி பூசிக் கொள்ளாதே. நம் குலப் பெருமையைக் காப்பாற்று. நெற்றியில் நாமமும் ஸ்ரீசூர்ணமும் இட்டுக் கொண்டு ஸ்ரீமகாவிஷ்ணுவை பூஜித்துக் கொண்டிரு’’ என்ற தந்தையின் அறிவுரை, மகன் சுதர்சனனுக்கு ஏறவில்லை.
ஒரு கட்டம் வரை வாயால் சொல்லிய வாசுதேவர், பின்னர் கைநீட்டி அடித்தும் பார்த்தார். பெற்ற தாயும் கண்ணீர் விட்டு மகனிடம் மன்றாடிப் பார்த்தாள் (ஹரதத்தர் அவதாரம் ஏற்கெனவே நிச்சயம் செய்த ஒன்று என்பது அந்தப் பெற்றோருக்கு எப்படித் தெரியும்?). அவர்கள் என்னவெல்லாமோ செய்து பார்த்தும் அழுது புலம்பியதும் அவை எதுவும் பலன் தரவில்லை.
ஐந்து வயது பாலகனான சுதர்சனன், வீட்டைவிட்டு இறங்கி அக்னீஸ்வரர் ஆலயத்துக்கு நடந்தான். அக் னீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் பிரதட்சணம் செய்து வணங்கிவிட்டு ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு எதிரில் தியானத்தில் அமர்ந்தான். நீண்ட நேர தியா னத்துக்குப் பின் சுதர்சனன் எழுந்தான். பரமேஸ் வரனையும் பார்வதியையும் மனதில் இருத்தி, ‘‘ஹே அக்னீஸ்வரா... கற்பகாம்பா தேவியே! உங்களை நம்பி சிறுவனான நான் வீட்டை விட்டு வந்துள்ளேன். உங்களின் கருணைப் பார்வை என் மீது விழ வேண் டும். நான் மிகவும் சிரமப்பட்டு விட்டேன். என் முன் வந்து அருள் புரியுங்கள்!’’ என்றான்.
அடுத்த கணமே அந்தக் கோயிலில் உறையும் ஸ்ரீஅக்னீஸ்வரரும் ஸ்ரீகற்பகாம்பாளும் பிரத்தியட்சம் ஆனார்கள். சுதர்சனனின் பக்தியில் வியந்தார்கள். சகல சாஸ்திர ஞானங்களையும் கணப் பொழுதில் அறிந்து கொள்ளும் வரத்தை சுதர்சனனுக்கு அருளினார். சிறுவனுக்கு ஞானோபதேசம் செய்யும் பொருட்டு ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக எதிரில் வந்து அமர்ந்து, தன் மலர்க் கையால் விபூதி பூசி, ருத்திராட்ச மாலை அணிவித்தார். பின், பஞ்சாட்சர மந்திரம் உபதேசித்து, ஸ்படிக லிங்கம் கொடுத்து, சிவ பூஜா விதிகளையும் உபதேசித்தார். சுதர்சனன் என்ற பெயரை மாற்றி ‘ஹரதத்தர்’ என சிவ நாம தீட்சை அருளினார். தேவர்கள் வானிலிருந்து பூமாரி பொழிந்தனர்.
ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருந்து தனது வீட்டுக்குத் திரும்பி னார் ஹரதத்தர். சிவச் சின்னங்கள் அணிந்து சிவ ஸ்வரூபத்துடன் வீட்டுக்குள் நுழைந்த மகனைக் கண்டு கோபத்தின் உச்சிக்குப் போன வாசுதேவர், அவனைத் தடுத்து நிறுத்தினார். அந்தத் தெருவில் குடியிருந்த ஏனைய வைணவர்களும் ஹரதத்தர் மீது கோபம் கொண்டனர். மட்டுமின்றி, அப்போதைய மனநிலையில் ஹரதத்தரின் சிவ பக்தியைச் சோதித்துப் பார்ப்பது என்றும் முடிவெடுத்தனர். அந்த யோசனைக்கு ஹரதத்தரும் உடன்பட்டார்.
‘‘அடேய் சிறுவனே... சிவன்தான் பரம்பொருள் என்று சாஸ்திரம் தெரிந்தவன் போல் பேசுகிறாயே... நீ சொல்வது உண்மை என்றால், பழுக்கக் காய்ச்சிய இரும்பு பீடத்தின் மீது அமர்ந்து சிவன்தான் பரம் பொருள் என்று சொல்லி நிரூபித்துக் காட்டு!’’ என் றனர் வைணவர்கள்.
‘‘சரி... அப்படியே ஆகட்டும். அக்னீஸ்வரர் ஆலயத்தில் ஈஸ்வர னுக்கும் நந்திதேவருக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குழி தோண்டி அக்னி வளருங்கள். நீங்கள் சொன்னவாறே இரும்பு பீடத்தின் மேல் அமர்ந்து ‘சிவனே பரம்பொருள்!’ என்று சொல்லி சிவ ஸ்வரூபத்தை வெளிக் காட்டுகிறேன்’’ என்றார் ஹரதத்தர்.
‘‘சிவாலயத்தில் வேண்டாம். இங்கே, ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்திலேயே குழி வெட்டுகிறோம். இங்கேயே உன் சிவபக்தியை நிரூபித்துக்காட்டு!’’ என்று சொன்னவர்கள், வரதராஜ பெருமாளுக்கும் கருடனுக்கும் நடுவே அக்னிக்கான குழி வெட்டினார்கள். குழியின் நடுவில் இரும்பு முக்காலி ஒன்றை வைத்தனர். பின்னர் விறகுக் கட்டைகளைப் போட்டுத் தீ மூட்டினர். கொழுந்துவிட்டு எரிந்தது அக்னி. நெருப்புப் பிழம்பில் ஊறிய அந்த முக்காலி தகித்துச் சிவந்தது. சிவ நாமம் சொல்லியபடியே குழிக்குள் இறங்கிய ஹரதத்தர், கண்களை மூடினார். ‘‘சிவனை நான் பூஜை செய்வது உண்மையானால் இந்த அக்னிக் குழி, மலர்கள் பரப்பியது போல் குளுமையாக இருக்கட்டும். இந்த இரும்பு பீடம் சந்தனப் பீடம் போல் இருக்கட்டும்!’’ என்று கூறியவாறு அந்த முக்காலி மேல் அமர்ந்தான். ‘‘சிவமே பரம்பொருள்’’ என்று மூன்று முறை உரக்கச் சொன்னான். அதன் பிறகு தன் உடலில் எந்த விதமான பாதிப்பும் இன்றி அந்த முக்காலியிலிருந்து எழுந்தார்.
ஹரதத்தரின் பக்தியை மெச்சிய அக்னீஸ்வரரும் கற்பகாம்பாளும் அவருக்கு வரதராஜ பெருமாள் ஆலயத்திலேயே காட்சி தந்தனர். ‘சிவசிவா’ என்று கண்களை மூடி கைகளைத் தலைக்கு மேல் குவித்து ஈஸ்வரனை வணங்கி, தன்னை ஆட்கொண்டமைக்கு நன்றி கூறினார் ஹரதத்தர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்க்க நேர்ந்த இவரின் தந்தை வாசுதேவர் உட்பட ஊர்க்காரர்கள் அனைவரும் ஹரதத்தரின் பக்தியை மெச்சினர். ஹரதத்தரின் சரித்திரம் மிகப் பெரிது. பல நூல்களை இயற்றியுள்ள இவர், கஞ்சனூரில் தங்கியிருந்து பல லீலைகளை நிகழ்த்தி உள்ளார். ஹரதத்தருக்கு கஞ்சனூரில் சிறு ஆலயம் ஒன்றும் உள்ளது. இங்கு ஹரதத்தர், சிவன் ஆகியோரின் விக்கிரகங்கள் உள்ளன.
வரதராஜ பெருமாள் கோயிலில் கருடாழ்வார் சந்நிதிக்கு அருகே இந்த ஹரதத்தரின் ஒரு விக்கிரகம் உள்ளது. முக்காலியின் மேல் நின்ற கோலத்தில் தலைக்கு மேல் இரு கைகளையும் குவித்த வண்ணம் இந்த விக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. ஹரதத்தருக்குக் காட்சி தந்த ஸ்ரீஅக்னீஸ்வரரும் கற்பகாம்பாளும், சிவாலயத்தில் மூலவர்களாக வீற்றிருந்தாலும் ஹரதத்தருக்கு சாட்சியாக இந்த ஆலயத்திலும் குடி கொண்டார்களாம்.
ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தை வலம் வருவோமா?
ராஜ கோபுரம் என்று எதுவும் கிடையாது. அதற்கு பதிலாக அந்த இடத்தில் மண்டபம் போன்ற ஒரு நுழைவாயில். உள்ளே நுழைகிறோம். கொடி மரம் இல்லை. கிழக்கு முகம் பார்த்த கோயில். முதலில், நேரே வரதராஜ பெருமாளைப் பார்த்தபடி கருடாழ் வார் வீற்றிருக்கிறார். கருடாழ்வாருக்கு இடப் பக்கம் வரதராஜரை நோக்கி சிறு மண்டபத்தினுள் ஹரதத்தரின் விக்கிரகம். ஊர்க்காரர்கள் சொன்னதன் பேரில் ஹரதத்தர் தீக்குழிக்குள் இறங்கிய இடம் இதுதான். தீக்குழிக்குள் இறங்கி சிவனைத் துதித்து எந்தப் பழுதும் இல்லாமல் எழுந்த அதே இடத்தில் ஹரதத்தரின் விக்கிரகத்தை அமைத்திருக்கிறார்கள். மூலவர் சந்நிதி நோக்கி நகர்கிறோம்.
முன் மண்டபத்தில் வலப் பக்கம் இருக்கும் ஒரு சந்நிதியில் அக்னீஸ்வரர், கற்பகாம்பாளின் மூலவர் உருவங்கள். சிறு வடிவங்கள். இதன் பக்கத்திலேயே நரசிம்மர். சிவன், அம்பாள், நரசிம்மர் ஆகிய மூவரும் ஒரே சந்நிதியில் வரிசையாகக் காட்சி தருவது விசித் திரமான அமைப்பு.
நேராக மூலவர். மூலவரைப் பார்க்க நுழையும் முன் துவாரபாலகர்கள். மகா மண்டபம். இதன் இடப் பக்கத்தில் வாகனங்களை ஒரு காலத்தில் பாதுகாத்து வைத்திருந்தார்கள். தற்போது ஒரே ஒரு குதிரை வாகனம் மட்டுமே உள்ளது. மிகப் பெரிய - காண்பதற்கரிய கருட வாகனம் ஒன்று இங்கிருந்ததாம். போதிய பராமரிப்பு இல்லாமல் அந்த வாகனம் சில வருடங்களுக்கு முன்னர் பாழடைந்து விட்டதாம்.
மூலவர் சந்நிதிக்குள் நுழைகிறோம். நான்கு அடி உயர மேடை ஒன்றில் நான்கு கைகளுடன் கம்பீரமாக வீற்றிருக்கிறார் ஸ்ரீவரதராஜ பெருமாள். சங்கு- சக்கரம்- வர- அபய முத்திரை தாங்கியவர். வீற்றிருந்த பெருமாள். இவருக்கு இரு பக்கத்திலும் தாயார்கள். சுதை உருவங்கள். பெருமாள் வடிவத்தில் கண் உட்பட சில பகுதிகள் லேசாகச் சேதமடைந்துள்ளன. பெருமாளுக்கு ஆரத்தி மட்டும்தான். சுதை என்பதால் அபிஷேகம் இல்லை.
விசேஷ காலத்தில் தைலக் காப்பு நடத்துவார்கள். மூலவருக்குச் சற்று முன்னதாக ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன், அனுமன், சக்கரத்தாழ்வார், விஷ்வக் சேனர் ஆகியோரின் உற்சவ விக்கிரகங்கள். மனம் குளிர தரிசனம் செய்துவிட்டு அர்த்த மண்டபத்தை விட்டு வெளியே வருகிறோம்.
மூலவர் பெருமாள் மற்றும் தாயார் சந்நிதியை வலம் வர ஒரு சிறிய பிராகாரம் உண்டு. செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகின்றன. பிராகார வலம் முடிந்து மகா மண்டபத்துக்குள் நுழைந்தால் அங்கே ஸ்ரீகோதண்டராமர் சந்நிதி.
தற்போது கும்பகோணத்தில் இருந்து தினமும் இங்கு வந்து பூஜைப் பணிகளைக் கவனித்து வரும் சுந்தரம் பட்டாச்சார்யார், ‘‘ஆதியில் கோதண்டராமர்தான் இங்கு பிரதான தெய்வம். பிற்பாடு வந்து அமர்ந்தவரே வரதராஜ பெருமாள். வரதருக்கு இடம் விட்டு கோதண்டராமர் ஒதுங்கி விட்டார். சோழ மன்னர் ஒருவர்தான் வரதரின் இந்தச் சுதைச் சிற்பங்களை அமைத்தார். இந்த வரதராஜர் மூலவர் சந்நிதியில் இருக்கும் ராமர் உற்சவர் விக்கிரகம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இவரின் தலைப் பகுதியில் கை வைத்துப் பார்த்தால் முடியிழைகள் ஒவ்வொன்றும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியும். அதே போல் ராமரின் கைப் பகுதியில், நரம்புகள் துல்லியமாக அமைந்திருப்பதை அனுபவபூர்வமாக உணரலாம். உயிரோட்டமான உற்சவர்!’’ என்று சொல்லி மெய் சிலிர்க்கிறார்.
மூலவர் தரிசனம் முடிந்து வெளியே வருகிறோம். பெரிய பிராகாரம். வலம் வருகிறோம். இங்கு துளசி, நந்தியாவட்டைச் செடிகளை வளர்க்கிறார்கள். அவற்றுடன் தேவையற்ற காட்டுச் செடிகளும் அதிகம் வளர்ந்து காடு போல் காணப்படுகிறது. பிராகார வலத்தின்போது இடச்சுற்றில் ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி சந்நிதி. ஸ்ரீகோதண்டராமரைப் பார்த்த படி ஒண்ணரை அடி உயரத்தில் கம்பீரமாக இருக் கிறார்.
ஒரு கையில் சஞ்சீவி மலையைத் தாங்கிப் பிடித்தபடி மற்றொரு கையில் கதாயுதம் வைத்திருக்கிறார். வாரந் தோறும் வியாழன், சனி மற்றும் கேட்டை நட்சத்திர தினங்களில் இந்த ஆஞ்சநேயருக்கு ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகிறதாம்.
ஆலயப் புனரமைப்புக்கு ஏராளமான பணிகள் காத்துக் கிடக்கின்றன. தற்போது பாஸ்கரன் என்பவர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருப்பணிக் குழு, பணிகளை விரைவாகச் செய்து வருவதாகச் சொல்கிறார்கள்.
பழைமையும் புராணச் சிறப்பும் வாய்ந்த ஒரு வைணவக் கோயில், தலை நிமிர்ந்து கம்பீரமாக நின்று தனது பெருமைகளை என்றென்றும் இந்த உலகுக்குச் சொல்ல வேண்டும். அதற்கு நாமும் நம்மால் ஆன கைங்கரியத்தைச் செய்து ஸ்ரீவரதராஜ பெருமாளின் ஆசியையும், அக்னீஸ்வரரின் அருளை யும் பெறுவது அவசியம்!
எப்படி போகலாம்?
கு ம்பகோணத்தில் இருந்து வேப்பத்தூர் வழியாக மயிலாடுதுறை செல்லும் பாதையில் 17 கி.மீ. தூரத்தில் உள்ளது கஞ்சனூர். கும்பகோணத்தில் இருந்து நகர பேருந்து: 2 ஏ, 54. தனியார் பேருந்து: Green bus , ராமலிங்கம் பஸ்.
மேலும் கும்பகோணம்- மயிலாடுதுறை மெயின் சாலையில் ஆடுதுறையில் இறங்கி வடக்கில் 5 கி.மீ. தூரம் பயணித்தும் கஞ்சனூரை அடையலாம். ஆடுதுறையில் இருந்து மினி பஸ், ஆட்டோ வசதி உண்டு.
ஆலயத்தைத் தொடர்பு கொள்ள:
வி.ஏ.பி. பாஸ்கரன், அறங்காவலர் குழுத் தலைவர்,
அருள்மிகு வரதராஜ பெருமாள் ஆலயம் (கோதண்டராமசாமி ஆலயம்), கஞ்சனூர் போஸ்ட், திருவிடைமருதூர் தாலுகா, மொபைல் போன்: 94431 76051, 94427 78965.
சுந்தரம் பட்டாச்சார்யார், 7/204 புவனேஸ்வரி நகர்,
புளியம்பேட்டை, அம்மாசத்திரம் போஸ்ட், திருவிடைமருதூர் தாலுகா, வீடு: 0435-241 3310. மொபைல் போன்: 93823 41239 |
Comments
Post a Comment