கோல் பஹாடி அம்மன்

கொல்கத்தாவில் காளி எப்படி புகழ் பெற்றவளோ, அதேபோன்று ஜெம்ஷெட்பூரில் புகழ் பெற்றவள் ‘பஹாடி மா’ எனப் பக்திப் பரவசமுடன் அழைக்கப்படும் ‘கோல் பஹாடி அம்மன்.’
டாடா நகர் ரயில் சந்திப்புக்கு அருகில் பர்சுடி என்னுமிடத்தில் வட்டப்பாறைக் குன்றின் மீது எழுந்தருளியிருக்கிறாள் அன்னை. ( கோல் - வட்டம், பஹாடி - குன்று ) நகரின் காவல் தெய்வமாகக் கொண்டாடப்படுவதுடன், இங்குள்ள வியாபாரிகளுக்குக் கண்கண்ட தெய்வமாகவும் விளங்குகிறாள், வரப்பிரசாதியான இந்த மகேஸ்வரி.
குன்றின் அடிவாரத்தில் பூஜை சாமான்களை வாங்கிக்கொண்டு படியேறலாம். இதிலும் ஒரு மாறுபட்ட வழக்கம் பழக்கத்தில் இருக்கிறது. வெற்றிலை, பாக்கு, பழம், பூ முதலிய அர்ச்சனைப் பொருட்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையிலேயே அம்மனுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. ‘ஒன்று கொடுங்கள், இரட் டிப்புப் பலனை அளிக்கிறேன்’ என்கிறாள் போலும் அன்னை! சுமார் 220 படிக்கட்டுகளைக் கடந்து அன்னையின் சன்னிதானத்தை அடைய வேண்டும். மரங்கள் அடர்ந்த குன்றாதலால், காற்று இதமாக வீச, சிரமமின்றி படியேற முடிகிறது.
மேலே ஏறுகையில், முதலில் சீதளா மாதாவை (மாரியம்மன்) தரிசிக்கிறோம். பின் சற்று மேலே, ஜகன்னாத் பிரபு, தன் அண்ணன் பலராமன், சகோதரி சுபத்ராவுடன் அருள்பாலிக்கிறார். அடுத்து, பஞ்சமுக ஆஞ்சநேயர் தமது கால்களுக்குக் கீழே மயில் ராவணனின் எலும்புக்கூட்டை இருத்தியவாறு காட்சியளிக்கிறார். பின்பு, நாம் அன்னையின் தர்பாரை அடைகிறோம். ஒருபுறம், பக்தர்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தும் விதமாக, குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, காது குத்தும் சம்பவங்கள் நடந்தேறுவதைக் காண முடிகிறது.
வட திசை நோக்கியவாறு வட்டப்பாறைக் குன்று அம்மன், வட்டக் கல்லிலேயே தரிசனம் தருகிறாள். ஆம், ’பிண்டி’ ரூபத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள்! பின்னாளில் அதற்கு அம்மன் முகம் சாத்தப்பட்டதாகத் தற்போதைய பரம்பரை அறங்காவலர் ஐந்தாவது தலைமுறையைச் சார்ந்த ஜகத்திவாரி தெரிவிக்கிறார். பக்தர்கள் தாங்களே அம்மனுக்கு வழிபாடு நடத்தலாம். அந்தச் சிறிய கருவறையில் பக்தர்கள் சிறு சிறு குழுக்களாக வந்து பூச்சொரிந்து, கருகமணி மாலை, வளையல்கள், செந்தூரம் முதலியவற்றை அம்மன் முன் வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். அனுமன், சிவன், காளி, லக்ஷ்மி, கந்தனுக்குத் தனி சன்னதிகள் உள்ளன.
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் நவராத்திரி நாட்களில் கூட்டம் அலைமோதும் இக்கோயில் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
இப்பிரதேசம் ஜாகீர்தார்களின் ஆளுகையில் இருந்தபோது, மக்களை வெப்பு நோய் பயங்கரமாகத் தாக்கியது. தொடர்ந்து ஊரில் அம்மை நோயும் பரவி வாட்டி எடுத்தது. அவ்வூர் பெருந்தனக்காரரின் மனைவி சாந்தி தேவி, ஆழ்ந்த தேவி உபாசகி.
தினமும் இடையர்கள் ஊர்ப் பசுக்களை மேய்ச்சலுக்கு இக்குன்றின் மீது அழைத்துச் செல்வது வழக்கம். பசுக்களின் பால் சுரப்பு தினமும் குறைவதைக் கண்ட உரிமையாளர்கள் புகார் செய்ய, அதன் காரணத்தை அறியுமாறு இடையர்களைப் பணித்தார் தலைவர். அச்சமயத்தில்தான் அந்த அதிசய நிகழ்வை அவர்கள் காண நேர்ந்தது. மேய்ச்சலுக்குப் பின் பசுக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடி பால் சொரிவதைக் கண்டு, அதைத் தலைவரிடம் சொன்னார்கள். அன்றிரவு, சாந்தி தேவியின் கனவில் தோன்றிய அம்மன், ‘பசுக்கள் பால் சொரிந்த இடத்தில் தாம் உறைந்திருப்பதாகவும், தம்மை வெளிக் கொணர்ந்து வழிபட நல்லதே நடக்கும்’ என்று சூசகமாகச் சொல்லி மறைந்தாள்.
அதன்படி தேவி உபாசகியின் வழிகாட்டுதலின் பேரில் அக்குறிப்பிட்ட இடத்தை ஆராய, பிண்டி ரூபத்தில் பராசக்தி கண்டெடுக்கப்பட்டாள். அவளைக் குளிர்வித்து, சிறு கீற்றுக் கொட்டகையில் ஸ்தாபனம் செய்து முறைப்படி வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சில நாட்களிலேயே ஊரில் பரவியிருந்த வெப்பு நோயின் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. தேவியின் மகிமை பிற இடங்களுக்கும் பரவியது.
1935-ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் ‘பஹாடி மா’வுக்குத் தற்போது உள்ள கோயில் வளாகம் நிர்மாணிக்கப்பட்டது என கோயிலில் இருக்கும் ஓர் அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது. அம்மனுக்கு முகம் செய்து அணிவிக்கப்பட்டதும் பின்னாளில்தான்.
கொல்கத்தாவுக்குப் போவோரும், வருவோரும் டாடா நகர் ரயில் நிலையத்துக்கு அருகில் வரும் போது ‘பஹாடி மா! எங்களைக் காத்தருள்வாய் தாயே!’ என்று தொழுவதைக் காணலாம். டாடா நகர் செல்ல நேர்ந்தால் ‘பஹாடி மா’ வைத் தரிசிக்கத் தவறாதீர்கள்.

Comments