பருவதமலை

எத்தனையோ மலைமேல் ஏறி, அங்கே குடியிருக்கும் ஆலயங்களைப் பார்த்துள்ளேன். ஆனால், ‘தென்கயிலாயம்’ என்று சொல்லப்படும் இந்தப் பருவத மலைக்குச் சென்றபொழுதுதான் இறைவன் மிகப் பெரியவன் என்பதை உணர முடிந்தது.
காரணம், மலைப்பயணம் ஆரம்பித்ததில் இருந்தே செங்குத்தாகவே செல்கின்றது. மரங்கள் இருந்தாலும் பாறைகளின் எண்ணிக்கையே அதிகம். தற்பொழுது 2623 படிகள் கட்டியுள்ளனர்.
மலைப் பயணம் தொடரும் பாதையில் முதலில் ஒளி வீசுகின்ற கண்களோடு பச்சையம்மன் தனி ஆலயத்தில் அருள்பாலிக்கின்றாள். அங்கிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவு நடந்து சென்றால் ‘வீரபத்திரர் ஆலயம்’. அங்கிருந்தே மலையின் (பருவத மலை) பயணம் ஆரம்பம். இந்தப் பகுதியில் மட்டுமே தண்ணீர் வசதி உள்ளது. மலையில் எங்கும் தண்ணீர் வசதியில்லாததால் தண்ணீரை நாம்தான் இறைவனுக்கும் சேர்த்து எடுத்துச் செல்ல வேண்டும்.
தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரம். உடலை அச்சுறுத்தி, உள்ளத்தை திருத்தும் உயர்வான மலையாக பருவதமலை இருப்பதை உணர்ந்தேன். மனிதர்களாகிய நாம் தரையில் இருக்கும் வரைதான் பணக்காரன், ஏழை, ரௌடி, கெட்டவன் என்று சொல்லித் திரியலாம்.
உயரே செல்லச் செல்ல மனிதர்களாகிய நாம் சிறிய எறும்பு போல் சாதாரணமானவர்கள்தாம் என்பதை இந்தப் பயணம் நன்கு உணர்த்தியது.
இந்த மலை மொத்தம் ஏழு சடைப் பிரிவுகளைக் கொண்டது. மூவாயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடப்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இது, எப்போதும் மூலிகைக் காற்றை வீசி தீராத நோய்களைத் தீர்க்கிறது.
இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார்கள். இத்தலத்திலுள்ள சிவபெருமான் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி மலர்களின் நறுமணத்தை நுகரலாம். இத்தல அம்மனின் அழகு, வேறெங்கும் காண முடியாத பேரழகு. மலை உச்சியில் ராட்சத திரிசூலம் ஒன்று உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.
குறைந்தது ஏழு கி.மீ. மலைப்பாதை பயணம். மலையின் உச்சிக்குச் செல்ல, மலையைச் சுற்றியுள்ள ஒரு பகுதியில் இரும்பு ஏணிகளை மலையிலேயே ஓட்டை போட்டு பொறுத்தியுள்ளனர். குறுகலான ஏணி, பக்கவாட்டில் தடுப்பாக சிறிய கம்பிகள்தான். கீழே பார்த்தால் தலை சுற்றுகின்ற அளவுக்கு அதள பாதாளம்.
மனமோ பயப்படுகின்றது. உடலோ நடுங்கித்தான் போகின்றது. அதுபோல கடப்பாறை கம்பிகள் வைத்தும் ஒரு பாதை; அதுவும் கடினமான பாதைதான்!
‘இறைவா! நீ இருக்கின்றாய் எங்களுக்கு ஏணியாக, எல்லோரையும் பாதுகாப்பாக ஏற்றிடும் நல்ல தோணியாக’ என உச்சிக்குச் சென்ற பிறகு நம் மனம் புது உணர்வு பெற்றுச் சொல்ல வைக்கிறது.
அகத்தியரின் சீடர்களில் ஒருவரான போகர் சித்தர் சிவபெருமானைக் காண விரும்பினார். அதற்கான இடத்தினை சிவபெருமானிடமே கேட்க, சிவபெருமான் விரும்பிச் சொன்ன அமைதியான இடமே இந்தப் ‘பருவத மலை’ என்கிறது தலபுராணம். அதற்குச் சான்றாக அம்மை அப்பன் சன்னிதி. அருகே வலப்பக்கத்தில் போகரும், அகத்திய மாமுனிவரும் அருள்பாலிக்கின்றனர்.
ஆலயத்தின் உள்ளே முதலில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான். அதன் பிறகு தனிச் சன்னிதியில் மல்லிகார்ஜுனராக சிவபெருமானும், அருகிலேயே தனிச் சன்னிதியில் அன்னை பிரம்மராம்பிகையும் அருள்பாலிக்கின்றனர். எதிரில் நந்தி சிறிய வடிவமாக உள்ளார். சுயம்பு லிங்கமாக இறைவன் இருக்கிறார்.
வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்தப் பருவத மலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம். பருவத மலையில் ஒரு நாள் தீபம் ஏற்றி அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும்.
சகல நோய் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பௌர்ணமி தினத்தில் வலம் வந்தால் கயிலாயத்தையே வலம் வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல், இங்கும் மூன்று கழுகுகள் இந்த மலையைச் சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பௌர்ணமி பூஜை சிறப்பாக நடக்கும் இத்தலத்துக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இம்மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய் மற்றும் பூஜைப் பொருட்கள் எடுத்து வருவது முக்கியம். வாழ்வில் ஒரு முறையேனும் இம்மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம்.
செல்லும் வழி: சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பருவத மலைக்குச் செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது. திருவண்ணாமலையிலிருந்தும் இந்தக் கோயிலுக்குச் செல்லலாம்.

Comments