பள்ளத்தாக்கில் பௌத்த மடாலயம்

உலகத்திலேயே மிக உயரத்தில் அமைந்துள்ளது ‘கே’ புத்த விஹாரம். இது இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசம், லாகுல் மற்றும் ஸ்பிதி மாகாணங்களில், கடல் மட்டத்திலிருந்து 13,682 அடி உயரத்தில் ஸ்பிதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
இது ‘அடிசா’ என்ற புகழ் பெற்ற ஆசானின் சிஷ்யரான ‘பிராம்ஸ்டன்’ என்பவரால் கி.பி.1008 - 1064ல் ஸ்தாபிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்தியாவுக்கும் திபெத்துக்கும் பாலமாக அமைந்துள்ள இந்த பௌத்த மடாலயம், இரண்டு பக்கங்களிலும் உயர்ந்த மலைச்சிகரங்களுக்கு இடையில் அமைந்த சமவெளிப் பிரதேசமாகும். இங்குள்ள புத்த விஹாரம் சுமார் 200 - 250 புத்த பிட்சுகளுக்கு பயிற்சிக்கூடமாகும்.
இந்த விஹாரத்துக்குச் செல்லும் வழி ஒரு சிரமமான மலைப்பாதையாகும். வாகனங்கள் இதில் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு கி.மீ. தூரம் மலையில் நடந்தால் இந்த புத்த விஹாரத்தை அடையலாம். இங்குள்ள புத்த பிட்சுகள் நல்ல ஆங்கிலத்தில் உரையாடுகிறார்கள்.
சிறந்த கோடை வாசஸ்தலமாகக் கருதப்படும் இந்த புத்த விஹாரம், தன்னுடைய வரலாற்றில் அநேக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுள்ளது. 14ம் நூற்றாண்டில் இங்கு படையெடுத்த ‘சாக்யா’ என்னும் இனத்தவர், மங்கோலியர்கள் உதவியுடன் இந்த மடத்தையும் அதன் அருகில் இருந்த ‘ரங்கிர்க்’ என்னும் கிராமத்தையும் அழித்துவிட்டனர். 17ம் நூற்றாண்டில் மறுபடியும் இந்த விஹாரம் தாக்கப்பட்டுள்ளது.
இப்படி வெளிநாட்டினரின் படையெடுப்பாலும் பூகம்பத்தினாலும் பலமுறை தாக்கப்பட்டாலும் தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் மாநில பொதுப்பணித்துறையின் மூலமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விஹாரத்தின் சுவர், 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்த பிட்சுகளின் வாழ்க்கை முறையைக் காட்டும் பல ஓவியங்களைக் கொண்டுள்ளது. இங்கு பழங்காலத் திரைச்சீலை ஓவியங்களும், ஓலைச் சுவடிகளும், புத்தகங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த விஹாரம் மூன்று அடுக்காக அமைந்துள்ளது. முதல் அடுக்கு, பூமிக்குக் கீழே முக்கியப் பொருட்களைப் பாதுகாக்கும் அறையாக உள்ளது. இதில் ஒரு அறை மிகவும் நேர்த்தியான வண்ண ஓவியங்களைக் கொண்டுள்ளது.
தரையில் உள்ள அடுக்கு எல்லோரும் கூடும் இடமாகும். இங்கு புத்த பிட்சுகளுக்குப் பல தனித்தனி அறைகள் உள்ளன.
இது திபெத்திய மத குருவான தலாய் லாமாவின் அபிமான புத்த விஹாரம். இங்குள்ள ஓவியங்களையும், புத்தகங்களையும் பார்ப்பதற்கென்றே அதிக சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இங்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. மனச்சாந்தியும் அமைதியும் தரக்கூடிய இடமாக இது திகழ்வதால் வெளிநாட்டுப் பயணிகளையும், உள்ளூர்வாசிகளையும் அதிக அளவில் கவருகின்றது. இங்கு வருபவர்களுக்கு காலையும் மாலையும் தேநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜூலை மற்றும் செப்டெம்பர் மாதங்களில் சந்தைகளும் திருவிழாவும் நடைபெறுகின்றன.

Comments