பிறவிப்பயன் தொடரும்

ஒரு பிராணிக்கு உணவளித்து அதன் பசியைத் தணியுங்கள்; என் பசி தீர்ந்து விடும்!’’’
_ ஷீர்டி சாயிபாபா
அ டியார்களின் துன்பங்களைத் தாங்களாகவே உணர்ந்து அவற்றை விலக்கும் ஆற்றல் படைத்தவர்கள் மகான்கள். பக்தர்களுக்கு வேண்டிய உதவிகளை பிறர் அறியாமலேயே செய்வது அவர்களது வழக்கம்.
தங்களது அருட் செயல்களையும், அபூர்வ லீலைகளையும் அவர்கள் யாரிடமும் வெளிப்படுத்துவதில்லை. அதற்கு அவசியமும் கிடையாது. ஆனால், பாபா இந்த விஷயத்தில் வித்தியாசமானவர்.
அடியவர்களை அவர் அளவு கடந்து நேசித்ததால் பல முறை அந்த அன்பு அவரது மனக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்து விடுவது உண்டு.
இனிமையான காலைப் பொழுதில் தன் தரிசனத்துக்காக ஏங்கிக் காத்திருக்கும் பக்தர்களைக் கண்டவுடன் அவர் மனம் கனிவும் கருணையும் கொண்டு உருகிப் போய்விடும். கால் கடுக்க நின்று கொண்டிருக்கும் அவர்கள் மீது தாயெனப் பாசத் தைப் பொழிவார். அந்தப் பாசப் பெருக்கில் சாதாரணமாக யாரிடமும் சொல்லாத அரிய விஷயங்களை தாராளமாகப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்.
அவதார புருஷராம் பாபாவின் அரிய லீலைகளை அறிந்து கொள்வது, அதுவும் அவரது திருவாயால் சொல்லக் கேட்டு அறிந்து கொள்ளும் பேறு பெறுவது அந்த அன்பர்களின் அதிர்ஷ்டம் மட்டுமல்ல; பொறுமையுடன் தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்ததற்குக் கிடைக்கும் ஒப்பற்ற உயர்ந்த பரிசுமாகும்.
முதல் நாள் இரவில், யோக சரீரத்துடன் தான் சென்று வந்த இடங்களைப் பற்றியெல்லாம் ஒரு குழந்தைக்குக் கதை சொல்லும் தாயின் உற்சாகத்துடன் பாபா அவர்களிடம் விவரிப்பார். சென்ற இடங்களிலெல்லாம் தாம் செய்தவற்றைப் பற்றியும் எடுத்துக் கூறுவார்.
கண்கள் விரிய, செவிகள் இனிக்க, உள்ளம் குளிர அதைக் கேட்கும் அன்பர்கள் பக்திப் பரவசத்தில் தங்களை மறந்து விடுவர். அதன் பிறகு பாபா காலை சுமார் 7:30 மணி அளவில் தனது முதல் சுற்றுப் பிச்சைக்குப் புறப்படுவார். இனிய தின்பண்டங்களையும், விதவிதமான உணவு வகைகளையும் தன் காலடியில் பக்தர்கள் குவித்த போதிலும் அவற்றை அவர் வினியோகம் செய்து விடுவார். பிச்சை எடுத்து உண்பதையே தனது வழக்க மாகக் கொண்டிருந்தார்.
பிச்சை எடுப்பதில் பாபா எவ்வித வரைமுறையையும் வைத்துக் கொள்ளவில்லை. சில நாட்கள் சில சுற்று களே பிச்சையெடுப்பார். வேறு சில நாட்களில் பிச்சை எடுப்பதைப் பகல் பன்னிரண்டு மணி வரை நீட்டிப்பதும் உண்டு. தூய யோகியான பாபா ஒரு போதும் ருசியைப் பொருட்படுத்தியதே இல்லை. பாபாவுக்குச் சிறிதளவு உணவே தேவைப்படும். எனவே, தனக்குத் தேவைப்படும் உணவை அவர் சில வீடுகளில் பிச்சையெடுத்துப் பெற்று வந்தார். கிடைப்பவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து அனைவருடனும் அதைப் பங்கு போட்டுக் கொள்வார்.
மற்றவர்களுக்கு உணவளித்து அவர்கள் அதை வயிறார உண்பதைக் காண்பதில் பாபா ஒரு நிறைவை எய்தி வந்தார். தானங்களில் சிறந்தது அன்னதானமே என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் பாபா அவ்வப்போது தாமே, தமது கைகளால் உணவு சமைத்து அதை அனைவருக்கும் அளிப்பது வழக்கம். பாபா மற்றவர்களுக்கென உணவு சமைக்கும் காட்சி சிலிர்ப்பூட்டும் ஒரு காட்சியாகும்.
அனைவருக்கும் உணவளிக்க வேண்டுமென்று பாபா தீர்மானித்தால், தொடக்கத்திலிருந்து முடிவு வரை அவர் யாரையும் எதிர்பார்க்க மாட்டார். எவரையும் ‘இந்த வேலை செய், அந்த வேலை செய்’ என்று ஏவித் தொல்லைப்படுத்தவும் மாட்டார். கடைவீதிக்குச் சென்று சோளம், மாவு மற்றும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, சோம்பு ஆகிய பல சரக்கு வகைகள் எல்லாவற்றையும் அவரே பணம் கொடுத்து வாங்குவார். கோதுமையை அரைக்க வேண்டுமென்றால் அதையும் தாமே அரைத்துக் கொள்வார். பின்னர் மசூதிக்கு முன்னாலுள்ள திறந்த வெளியில் ஒரு பெரும் அடுப்பை ஏற்பாடு செய்து, விறகு வைத்து நெருப்பைப் பற்ற வைத்து அடுப்பின் மீது ஹண்டி என்னும் ஒரு பாத்திரத்தை ஏற்றுவார். ஹண்டி என்னும் வடமொழிச் சொல்லுக்கு சட்டி என்று பொருள். அந்தப் பாத்திரத்தில் சரியான அளவு தண்ணீரை ஊற்றுவார்.
பாபா சமைப்பதற்கு இரண்டு விதமான ஹண்டிகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார். ஒன்று சிறியது. ஐம்பது பேருக்கான உணவைச் சமைக்கக் கூடியது. மற்றொன்று நூறு பேருக்கான உணவைச் சமைக்கக் கூடிய அளவுக்குப் பெரியது. சில நேரம் அவர் சர்க்கரைப் பொங்கலைச் சமைப்பார். மற்றும் சில நேரம் புலவு சமைப்பார். இன்னும் சில நேரம் வரண் என்று அழைக்கப்படும் பருப்பு சூப் தயாரிப்பதும் உண்டு.
அவர் சூப் தயாரிக்கும்போது, கோதுமை மாவை உருண்டைகளாகவோ அல்லது தட்டையான ரொட்டிகளாகவோ செய்து அவற்றைக் கொதித்துக் கொண்டிருக்கும் சூப்பில் மிதக்க விடுவார். வாசனைப் பொருட்களை அம்மியில் வைத்து இடித்து, அதன் தூளை ஹண்டியில் போட்டு ஷீர்டிக் காற்றையே நறுமணமயமாக மாற்றி விடுவார். உணவைச் சுவையாகச் சமைக்க அவர் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டார்.
இந்த உணவு வகைகள் போதாதென்று ஜவ்வரிசி மாவைத் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து அதைத் தயிருடன் கலந்து அம்பீல் என்னும் உன்ன தமான உணவையும் தயாரிப்பார். மற்ற உணவு வகைகளுடன் இந்த அம்பீலையும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வினியோகிப்பார்.
உணவு ஒழுங்காக வெந்து கொண்டிருக்கிறதா என்பதைப் பார்க்க பாபா தனது கஃப்னியின் கைகளைச் சுருட்டி விட்டுக் கொண்டு தன் வெறும் கையைக் கொதிக்கும் பாத்திரத்தில் துளியும் பயமின்றி விட்டு, கொதிக்கும் கலவையை நன்றாக மேலும் கீழும் கலக்கி விடுவார். ஒருபோதும் அவரது கைகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்பட்டதில்லை. சமையல் முடிந்ததும் பாபா உணவுப் பாத்திரங்களை மசூதிக்குக் கொண்டு சென்று அவற்றை ஆண்டவனுக்கு நைவேத்தியமாகப் படைத்துப் புனிதப் படுத்துவார்.
பின்னர் எல்லா ஏழை எளியவர்களுக்கும், திக்கற்றவர்களுக்கும் அவர்களின் வயிறும் உள்ளமும் நிறையும் வண்ணம் தம் கைகளாலேயே பரிமாறுவார். பாபா தாமே சமைத்துப் பரிமாறிய உணவை உட்கொண்டவர்கள் ஆசீர்வதிக் கப்பட்டவர்கள். அதிர்ஷ்டசாலிகள். காலை உணவு முடிந்ததும் லெண்டித் தோட்டத்துக்குச் செல்வார் பாபா. பக்தர் ஒருவர் பாபாவுக்குக் குடை பிடித்துச் செல்ல, மற்றவர்கள் அவரைப் பின் தொடர்ந்து ஊர்வலமாகச் செல்லும் உற்சாகக் காட்சி காண்போரைக் களிப்பில் ஆழ்த்திவிடும்.
இந்தத் தோட்டத்துக்குச் செல்லும்போது மட்டுமே பாபா காலணிகள் அணிவது வழக்கம். ஊர்வலம் தோட்டத்தை அடைந்ததும் மற்றவர்கள் வெளியே நின்று விடுவர். பாபா மட்டுமே உள்ளே சென்று ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் அங்கே தங்கியிருப்பார்.
காலை பத்து அல்லது பத்தரை மணியளவில் பாபா துவாரகாமாயீயிக்குத் திரும்பி விடுவார். அவரது வருகையை எதிர்பார்த்து பக்தியோடு அன்பர்களும், ஆவலோடு பலதரப்பட்ட கலைஞர்களும் காத்துக் கொண்டிருப்பர். நடனக்கலை வல்லுநர்கள் நாட்டியமாடுவர். பாடகர்கள் தங்கள் இசைத் திறமையை இனிமையுடன் வெளிப்படுத்துவர். அங்கு கூடியுள்ளோர் உற்சாகக் குரல் எழுப்பியும், கைதட்டியும் கலைஞர்களைப் பாராட்டி மகிழ்வர்.
பாபா தமது ஆசனத்தில் அமர்ந்தவாறு அவற்றை யெல்லாம் புன்முறுவலோடு ரசிப்பார். கலைஞர்களை ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிசாகப் பணமும் அளிப்பார். பின்னர் தன்னைக் காண வந்திருக்கும் உள்ளூர்வாசிகளுடனும், வெளியூர் பக்தர்களுடனும் மனம் விட்டுப் பேசுவார். பகல் 12 வரை இது நடைபெறும். 12 மணிக்குப் பக்தர்கள் பாபாவுக்கு மத்தியான ஆரத்தி நிகழ்ச்சியை நடத்துவர். ஆரத்தி முடிந்தவுடன் அனைவருக்கும் உதியை அளித்து ஆசீர்வதிப்பார் பாபா. பிறகு பக்தர்கள் பகல் உணவுக்குக் கலைந்து செல்வர்.
இதன் பின்னர் பேட் பாபா, ஷாமா, தாத்யா பாடீல், புட்டி போன்ற நெருக்கமான பக்தர்களுடன் மதிய உணவு உட்கொள்வார் பாபா. அப்போது அவர்கள் உணவருந்துவது வெளியில் தெரியாத வண் ணம் ஒரு திரை போடப்படும்.
திரை போடப்பட்டிருப்பதைக் காணும் பக்தர்கள் யாரும் அதை விலக்கிக் கொண்டு மசூதிக்குள் செல்லத் துணிய மாட்டார்கள். தங்கள் மீது அருள் மழையை இடையறாது பொழியும் பாபா உண்ணும் நேரத்திலாவது எந்த இடையூறும் இன்றி உண்ணட்டும் என்று அவர்கள் மனதார எண்ணியதே அதற்குக் காரணம். பகல் உணவுக்குப் பின்னர் பக்தர்கள் விடுதிகளுக்குச் சென்று ஓய்வெடுப்பது வழக்கம். அந்த நேரத்தில் பாபா தனியாகவே இருப்பார். அப் போது அவர் தியானத்தில் ஈடுபட்டு இருந்தார் என்ப தும், மர்மமான மந்திரச் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. மதிய ஓய்வுக்குப் பிறகு பிற்பகல் 2:30 மணி அளவில் பக்தர்கள் மசூதியில் கூடுவர்.
முற்பகலில் வந்ததைப் போலவே கலை வித்தகர்கள் பலர் தங்கள் திறமையைக் காட்டி பாபாவின் திருக் கரத்தால் பரிசாகப் பணம் பெறுவர். பிறகு பாபா சிறிது நேரம் காலாற நடப்பது வழக்கம். வெளிச் சுவரில் சாய்ந்து கொண்டு வருவோர், போவோரிடம் பேசுவதும் உண்டு. சில நேரம் அவர் மறை பொருளில் பேசியதால் அவர்களால் அவர் சொல்லும் எதையும் புரிந்து கொள்ள முடியாமலே போகும். சில நேரம் அவர் லெண்டித் தோட்டத்துக்கு மீண்டும் உலாவச் செல்வதும் உண்டு. எங்கு சென்றாலும் பக்தர்கள் செய்யும் அந்தி வேளை ஆரத்தி நேரத்தில் சரியாக மசூதிக்குத் திரும்பி விடுவார்.
ஆரத்தியைத் தொடர்ந்து அற்புதமான உள்ளர்த்தங்கள் கொண்ட சிறு சிறு கதைகளையும் விசித்திரமான நிகழ்ச்சிகளையும் கூறுவார். அடுத்ததாக பாபா தானம் செய்ய ஆரம்பிப்பார். அன்று முழுவதும் பலரிடம் தட்சிணையாகப் பெற்ற பணம் அனைத்தையும் கூடியிருக்கும் கூட்டத்தினருக்குக் கொடுத்து விடுவார். அதன் பிறகு பிரசாதமாக உதியை வினியோகம் செய்வார்.
அனைவரும் சென்ற பிறகு பாபா மசூதியில் தன்னுடன் இரவில் தங்கி உரையாடி, உறங்க தாத்யா கோட்டே பாடீல், மகல் சாபதி ஆகிய இருவரை மட்டும் அனுமதிப்பார்.
அவர்கள் மூவரும் படுத்துறங்கிய முறை மிகவும் விநோதமானது. மூவரின் தலைகள் கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளை நோக்கி இருக்கும். அவர்களின் கால்கள் ஒன்றையன்று தொட்டுக் கொண்டிருக்கும்.
நள்ளிரவு வரை தூங்காமல் அவர்கள் பல விஷயங்களைக் குறித்துப் பேசிக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பர். பேசிக் கொண்டிருக்கும்போது தாத்யாவும், மகல் சாபதியும் தூங்க முற்பட்டால் பாபா அவர்களை உலுக்கியும், தட்டியும், உதைத்தும் எழுப்பி விடுவார்.
இப்படி அன்பர்கள் இருவருடன் உறங்கிய பாபா எல்லா நாட்களிலும் மசூதியான துவாரகாமாயீயில் தூங்கவில்லை. ஒரு நாள் துவாரகாமாயீயிலும் ஒரு நாள் வேறொரு இடத்திலும் உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாபா உறங்கிய அந்தப் புனித இடம் எது? அந்த இடத்தை பாபா தேர்ந் தெடுத்தது எப்படி?
நோய் நீக்கிய தாயுள்ளம்
பா பு சாஹேப் புட்டி என்பவர் பாபாவின் பரம பக்தர். அவர் பாபாவை தரிசிக்க நாள்தோறும் துவாரகாமாயீயிக்குச் செல்வார். பாபாவும் அவர் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார்.
ஒரு முறை வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய இரண்டும் சேர்ந்து புட்டியைப் பாடாகப் படுத்தின. புட்டி ஏகப்பட்ட மருந்து மாத்திரைகளைக் கைவசம் வைத்திருந்தார்.தன்னிடமிருந்த சக்தி மிக்க மருந்து களால் நோயை எளிதில் குணப் படுத்தி விடலாம் என்று நினைத்த புட்டிக்கு பாபாவின் அருளை நாட வேண்டும் என்று தோன்றவில்லை.
ஏகப்பட்ட மருந்து, மாத்திரைகளை உட்கொண்டும் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை. உடலில் உள்ள நீரின் அளவு மிகவும் குறைந்து போனதால், புட்டி சோர்வும் தளர்ச்சியும் அடைந்து எழுந்திருக்க முடியாத அளவுக்குப் பலவீனம் அடைந்தார். மசூதிக்குக்கூடச் செல்ல முடியாமல் தரையில் படுத்திருந்தார்.
தாயைப் பிள்ளை மறந்தாலும், பிள்ளையின் நலனையே நாடும் தாய் போன்று அன்பரின் நலனையே நாடும் பாபா ஓர் ஆளை அனுப்பி புட்டியை அழைத்து வரச் செய்தார். தன் முன் அவரை அமர்த்தினார்.
தன் ஆட்காட்டி விரலை ஆட்டி, ‘கவனமாகக் கேள். இனிமேல் நீ வெளியேறக் கூடாது’ என்று கட்டளை போல் அழுத்தம் திருத்தமாக ஆணையிட்டார். பாபா இட்ட ஆணை புட்டிக்கல்ல. அவரது வாந்திக்கும் வயிற்றுப் போக்குக்குமே என்று சிறிது நேரத்திலேயே தெரிந்து விட்டது. ஆம்! பாபாவின் சக்தி மிக்க சொற்கள் மந்திரம் போல் வேலை செய்தன. புட்டியை வருத்திய வாந்தியும், வாட்டியெடுத்த வயிற்றுப் போக்கும் உடனடியாக நின்று போயின.
தானாகவே அன்பரின் வேதனையை உணர்ந்து குணப்படுத்திய பாபாவின் தாயுள்ளத்தைக் கண் ணெதிரில் கண்டு அங்கிருந்த அனைவரும் உருகிப் போயினர்.
ஷீர்டி புனிதத் தல தரிசனம்கோலம்பா
கோ லம்பா என்பது ஒரு மண் பாண்டம். பாபா பிச்சை எடுத்த உணவை இந்தப் பாண்டத்தில் வைத்துத் தானும் உண்டு, நாய்கள், பூனைகள், பசுக்கள் போன்ற ஜீவராசிகளுக்கும் அன்புடன் உண்ணக் கொடுப்பார்.
இந்த கோலம்பாவைப் பார்க்கும்போதே பாபா இதைக் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பது போலவும், அவரைச் சுற்றி விலங்கினங்கள் ஆவலுடன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது போலவும் ஒரு காட்சி நமது அகக் கண்களில் விரியும். உணவு விஷயத்தில் பாபா மூன்று முக்கியமான விஷயங்களைக் கடைப் பிடித்து வந்தார்.
 யார் வீட்டிலும் எப்போதும் உணவு உட்கொள்ள மாட்டார்.
 தனக்காக மட்டுமே என்று அவர் எப்போதும் சமைத்துக் கொள்ள மாட்டார்.
 அடுத்த வேளைக்கு என்று எதையும் மிச்சம் வைக்க மாட்டார்.

Comments