அருள்மிகு வாடாகலைநாயகி சமேத திருவெண்காடர் திருக்கோயில், பாப்பான்குளம்
படைப்புக் கடவுளான பிரம்மாவின் மானச புத்திரர்களான சனகாதி முனிவர்கள், ஞானம் பெறுவதற்காக குருவை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபட்டிருப்பதாலும், அவர்களை விலக்கி வேறு குருவை தேடிச் சென்றார்கள். இதனை உணர்ந்த சிவபெருமான் தானும் சக்தியுடன் இருப்பதைக் கண்டால், பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்களே என்று கருதி, 16 வயதுச் சிறுவனாக, வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார்.
பிரம்ம குமாரர்களின் ஞானத்தேடல் குறித்த கேள்விகளுக்கு தட்சிணா மூர்த்தியாக இருந்து, பேசாமல் பேசி பதில் அளித்தார் சிவபெருமான். எனினும், ஞானத் தேடல் பற்றிய கேள்விகள் அவர்களுக்குள் அதிகரித்த வண்ணமே இருந்தன. பின்னர், சின்முத்திரையை அவர்களுக்குக் காண்பித்து அருளினார் தட்சிணாமூர்த்தி. பிரம்ம குமாரர்களுக்கு அமைதியும் ஆனந்தமும் உண்டாயிற்று. அவர்கள் ஞானம் பெற்றனர்.
தட்சிணாமூர்த்தியின் திருவுருவத்தில் குண்டலினி சக்தியைக் குறிக்கும் நாகம் பெரும்பாலும் வரையப்பெற்றிருக்கும். ஆனால், இப்போது நாம் தரிசிக்கப் போகும் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தியின் காலடியில் நாகம் தனியாகச் செதுக்கப்பட்டுள்ளது. இப்படி, நாகம் தட்சிணாமூர்த்தியின் காலடியில் சிற்பமாக இருப்பது அரிதான ஒன்று!
இங்குள்ள சிவலிங்கம் சந்திரகாந்தக் கல்லால் ஆனது. இங்குள்ள அம்பிகையின் திருவுருவம் 32 லட்சணங்களும் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயகலைகள் 64-க்கும் தாயாக விளங்குகிறாள் அன்னை.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, பாப்பான்குளத் தில் அமைந்துள்ள அருள்மிகு வாடாகலைநாயகி சமேத திருவெண் காடர் திருக்கோயிலில்தான் நாம் மேலே குறிப்பிட்ட சிறப்புகள் காணப் பெறுகின்றன. பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. பகைவர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றப் போருக்குச் செல்லும் முன்னர், இங்கு வந்து திருவெண்காடரை வணங்கிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் பாண்டியர்கள்.
ஆதித்யவர்மன் என்ற பாண்டிய மன்னனுக்கு நீண்டகாலமாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்து, இங்கு வந்து வழிபட்ட பின்னர் குழந்தைப்பேறு கிடைக்கப்பெற்றதால், இந்த ஆலயத்தை இன்னும் பெரிதாக விரிவுபடுத்தி, சதுர்வேதி என்ற சிற்பியைக் கொண்டு இங்குள்ள சிலைகளை நிர்மாணித்ததாகவும், அந்தச் சிற்பிக்கு ஓர் ஊரையே தானமாக அளித்ததாகவும், அந்த ஊர் அவர் பெயரிலேயே சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டதாகவும் இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
முன்னொரு காலத்தில், பிரம்மலோகத்தில் துர்வாசர் வேதம் ஓதிக்கொண்டிருந்தார். அவர் உச்சரிப்பில் ஓர் இடத்தில் ஸ்வரம் பிசகியது. அதைக் கண்டு சரஸ்வதி தேவி சிரித்துவிட்டாள். இதனால் கோபம் கொண்ட துர்வாசர், 'சரஸ்வதி தேவி பூமியில் பிறந்து, 64 தேவ வருடங்கள் இருந்து, 64 கலைகளையும் கற்றுக் கொள்ளக்கடவது’ என்று சாபம் கொடுத்தார். சாபத்தின்படி, பிரம்மனும் சரஸ்வதியும் ராமநதி ஓடும் இந்த இடத்துக்கு வந்தார்கள். 64 கலைகளுக்கும் தாயான வாடாகலை நாயகியை சரஸ்வதி தேவி பூஜித்து, 64 கலைகளையும் கற்று, தனது சாபம் நீங்கப்பெற்று பிரம்மலோகம் சென்றதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
ராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதையைத் தேடிக்கொண்டு ராமர் வந்தபோது, இங்குள்ள ஆற்றில் சந்தியாவந்தனம் செய்தாராம். ராமர் அமர்ந்த அந்தப் பாறை 'சக்கரப் பாறை’ என்ற பெயரில் இன்றளவும் பூஜிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட புண்ணிய நதியான ராம நதியும், கடனா நதியும் சங்கமிக்கும் இடம் பாப்பான்குளம்.
இங்குள்ள கோயிலில் ஸ்வாமி, அம்பாள் மட்டுமின்றி, விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் கல்யாணமுருகன், தட்சிணாமூர்த்தி, சனீஸ்வர பகவான், பைரவர், சண்டிகேஸ்வரர், சப்த கன்னியர்கள், சொக்கநாதர்- மீனாட்சி, காசி விஸ்வநாதர் ஆகியோருக்கும் இங்கே தனித் தனியாகச் சந்நிதிகள் முன்பு இருந்தனவாம். இங்குள்ள லிங்கம் சந்திரகாந்தக் கல்லால் ஆனது. குளிர்ச்சியைத் தருவதுடன், நோய் தீர்க்கும் சக்தியும் கொண்ட இந்தச் சந்திரகாந்த லிங்கம் சுயம்புவாக உருவானது. அர்த்தமண்டபத்தில் இருந்து பார்க்கும்போது சிறியதாகத் தோன்றும் ஸ்வாமியின் லிங்கத்திருமேனி, கொடிமரத்தின் அருகே நின்று பார்க்கும்போது பெரியதாகத் தெரிவதுபோன்று, கோயிலை அமைத்திருப்பது கட்டடக்கலையின் சிறப்பம்சம்!
புதன் பகவான் வணங்கி பேறு பெற்ற தலம் இது. உத்தரபுரி என்று திருவெண்காட்டையும், மத்தியபுரி என்று மதுரையையும், தட்சிணபுரி என்று பாப்பான்குளத்தையும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இத் திருக்கோயிலில் தொடர்ந்து ஐந்து புதன்கிழமைகள் வந்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், எல்லா வித நன்மைகளும் கிடைக்கும்; ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும் அபிஷேக தீர்த்தத்தைப் பருகினால் எல்லா நோய் களும் தீரும் என்பது நம்பிக்கை.
புராணச் சிறப்பும் புராதனச் சிறப்பும் மிக்க இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 60 ஆண்டுகள் ஆகப்போகின்றன. பராமரிப்பு இன்றியும், கோயில் மண்டபங்கள், கோயில் விமானங்கள் முற்றிலுமாகச் சிதிலமடைந்தும், ஒரு வேளை பூஜைகூட நடைபெறாமலும் பல ஆண்டுகளாகப் பரிதாப நிலை யில் காணப்பட்ட இந்தக் கோயிலில், தற்போது ஊர் மக்கள் சிலரின் முயற்சியால் திருப்பணிக் குழு அமைக்கப்பட்டு, ஆரம்பக்கட்ட திருப்பணிகள் நடந்துவருகின்றன. திருப்பணிக் கமிட்டியில் உள்ள பெரும்பாலோர் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
''உள்ளூரில் கோயில் இருந்தும், எங்கள் ஊர் மக்கள் சாமி கும்பிட வெளியூர்தான் போகவேண்டியுள் ளது. அதனால் எங்கள் ஊர் கோயிலை மீண்டும் புதிதாகக் கட்டி, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று மூன்று வருடங்களுக்கு முன் 'திருநாவுக்கரசர் திருப்பணி அறக்கட்டளை’ என்ற பெயரில் திருப்பணிக் கமிட்டி தொடங்கி, இன்று வரை கும்பாபிஷேகத்துக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். பல வருடங்களுக்கு முன்பு இங்கே தேர்த் திருவிழாகூட நடந்திருக்கிறது. இப்போது கடந்த மூன்று வருடங்க ளாக, கோயிலில் தொடர்ந்து பூஜை கள் செய்து வருகிறோம். இந்தக் கோயிலில் ஒரு சித்தரின் உருவமும் இருக்கிறது. அங்கு எப்போதும் ஒரு விளக்கு எரிந்துகொண்டிருக்கும். கோ சம்ரட்சணம் சிறப்பு வாய்ந்தது என்பதால், கோயிலில் ஒரு பசுவை யும் தற்போது வளர்த்து வருகிறோம்'' என்று சொல்லும் ராமகிருஷ்ணனுக்கு வயது 24.
திருவெண்காடருக்கு மீண்டும் கும்பாபிஷேகம் செய்து, திருவிழாவில் தேர் வடம் பிடிக்கவேண்டும் என்பதே இவ்வூர் மக்களின் ஏகோபித்த ஆசையாகவும் லட்சியமாகவும் இருக்கிறது. பொழுதை வெட்டி அரட்டையில் கழிக்காமல், ஆலயத் திருப்பணியில் தங்களை உற்சாகமாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் இளை ஞர்களைக் காண்பதற்கே உற்சாகமாக இருக்கிறது. இவர்களின் முயற்சிக்குத் தோள் கொடுத்து, இந்தக் கோயிலின் திருப்பணிக்கு நம்மால் ஆன உதவி களைச் செய்ய வேண்டியது நமது கடமையல்லவா?
Comments
Post a Comment