பிரார்த்தனையின் காரணமாக திருமணம், காதுகுத்துதல் போன்ற நிகழ்வுகளை ஆலயங்களில் வைத்து நடத்தலாமா? இதுபோன்ற கோலாகலங்கள் ஆலய வழிபாட்டுக்கான அடிப்படை நோக்கத்தை சிதைத்துவிடும் என்கிறார் நண்பர் ஒருவர்.
அதுமட்டுமல்ல, இறை பிரசாதத்துக்குக் கட்டணம், சிறப்பு தரிசன கட்டணம், பிரார்த்தனையின் பொருட்டு உத்ஸவம்... இப்படியெல்லாம் பல்வேறு வகைகளில், இறைவனின் உறைவிடமான திருக்கோயில்கள் வியாபாரமயமாகி வருகின்றன என்பது எனது கருத்தும்கூட.
தங்களின் மேலான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
பண்பட்ட மனமே பண்பான வாழ்க்கைக்கு அடித்தளம். தடங்கலின்றி வாழ்க்கையில் முன்னேறவும், பிறர் உதவியை எதிர்பார்க்காமல் வாழ்வில் முழுமை பெறவும் மனத்தெளிவு ஒத்துழைக்கும். இப்படியான மனத்தெளிவு பெறுவதற்கு, சிறு வயதில் கற்கும் கல்வி உதவும்.
சமுதாயத்தில் மற்றவருடன் இணைந்துதான் வாழ வேண்டும். அந்த இணைப்பில் கசப்புகள் இன்றி வாழ, மனத்தெளிவு அவசியம். எல்லா உயிரினங்களிலும் கனிவும் பரிவும் காட்டவேண்டும். பொறாமை இல்லாமல் இருத்தல், பொறுமை, உடல் - உள்ள சுத்தம், பொருட்களில் பற்று இன்மை, புலனடக்கம், இல்லாதவரின் இல்லாமையை ஒழித்தல் ஆகியன எல்லாம் ஆன்ம குணங்கள் ஆகும் என்கிறது ஸனாதனம். இவை, நம் மனத்தில் குடிகொண்டால், மனம் தெளிவுறும். பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவரின் மனத்திலும் இவை இடம்பிடிக்க வேண்டும். இப்படியான நோக்கத்தில், ஆன்மிக அறிவைப் புகட்ட ஆலயங்கள் தோன்றின.
ஆலய வழிபாடுகள் பாமரர்கள் மனத்தில் நல்ல எண்ணத்தை வளர்த்து, சுயமுயற்சியில் முன்னேற வழிவகுத்தது. இதைக் கண்ணுற்ற அன்றைய அரசர்கள், தாமாகவே முன்வந்து ஆலயங் களை நிறுவி ஊக்கம் அளித்தார்கள். ஆலயங்கள் அனைத்தும் தன்னிச்சையான பொதுத்தொண்டு நிறுவனம் போன்று, மக்கள் மனத்தை பண்பாட்டுடன் இணைத்து, மனிதனை நல்ல மனிதனாக மாற்றி தெய்விகத்தன்மையை அடையவைத்தன.
மன்னர்கள் காலம் சரி. இப்போது நடப்பது மக்கள் அரசு. அவர்களுக்கான வைபவங்களை, ஆலயங்களில் நடத்துவதில் என்ன பிழை இருக்கிறது?
இன்றையச் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. மக்கள் மதச்சார்பின்மையை விரும்புகிறார்கள். புது சிந்தனை யாளர்களோ, கோயிலில் உறைந்திருக்கும் இறையுருவத்தையும் ஆன்மிகத்தையும் வேறுபடுத்திப் பார்க்கிறார்கள். ஆன்மா வேறு; கடவுள் வேறு. கடவுள் மதம். ஆன்மாவோ மதச்சார்பு அற்றது. ஸ்பிரிச்சுவல் வேறு, கடவுள் கோட்பாடு வேறு. கடவுள் கோட்பாடுகளை விலக்கி, ஸ்பிரிச்சுவலில் முன்னேறலாம் எனச் சொல்பவர்களும் உண்டு. மாறுவேடத்தில் நாத்திகவாதம் வளருகிறது!
கோயிலின் குறிக்கோள் என்னவென்றால், ஆஸ்திக எண்ணத்தைப் பரப்பி, அதன் மூலம் சுலபமாக ஆன்ம குணத்தை மனத்தில் குடியிருத்த வைப்பதுதான். கடவுள் நம்பிக்கையின் அடித்தளத்தில் 'ஸ்பிரிச்சுவல்’ அமைந்தால், அது உயிரோட்டத்துடன் விளங்கும். இல்லையெனில், ரீஃபில் இல்லாத பேனாவாக வெறும் தோற்றத்துடன் மட்டுமே திகழும்.
எனில், இன்றைய ஆலய நடைமுறைகளில் கடவுள் நம்பிக்கை அற்றுப்போய்விட்டது என்கிறீர்களா?
மதச்சார்பின்மையை நிறைவு செய்ய கோயில்கள் பலவும் வியாபார நோக்கில் செயல்பட ஆரம்பித்துவிட்டன என்கிறேன்.
இறைவனின் பிரசாதம், விலை பொருளாக மாறிவிட்டது. உத்ஸவங்கள் கேளிக்கையாகவும், கொண்டாட்டமாகவும் மாறிவிட்டன. திருமணம், காதுகுத்துக் கல்யாணம், பூணூல் கல்யாணம், அன்னப்ராசனம் (சோறு ஊட்டுதல்), அறுபதாம் கல்யாணம், அன்னதானம், முன்னோர் ஆராதனை, அக்ஷராப்பியாஸம், வாசிக்க வைத்தல்... இப்படி, தனிமனிதனின் மதச் சடங்குகள் அத்தனையும் திபுதிபுவென உட்புகுந்து, சடங்குகளை நிறைவேற்றும் தலமாக, ஆலயங்களின் முகத்தை மாற்றி அமைத்திருக்கின்றன.
கோயிலுக்கு வருவாயை ஈட்டித் தரும் எண்ணத்தில், மதச்சார்பற்ற அரசாங்கம் மதச்சடங்குகளை ஏற்று, அதன் வாயிலாக, வியாபார ஸ்தாபனமாக மாறிய கோயில்களை செழிப்பாக வைத்துக் கொள்ள முனைகிறது. தர்சனார்த்திகளிடம் இருந்து பணம் பெற்று கடவுளைத் தரிசிக்கவைக் கிறது. தற்போது, கோயில் இறை உருவங்கள் அருங்காட்சியகப் பொருளாக மாற்றப்பட்டு, அவற்றைப் பராமரிக்கும் பணி செம்மையாக செயல்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற விஷயங்கள் குறிப்பிட்ட வருவாயை ஈட்டித் தரும். அது, கோயிலின் பராமரிப்புக்கு உதவும் அல்லவா?
வாஸ்தவம்தான். அதேநேரம் அதிகப்படியான கோலாகலங்கள் பக்தனின் மனத்தை திசைதிருப்பும் அபாயம் உண்டு.
கோயிலில் இறையுருவத்தைக் கண்டு, அதை மனத்தில் இருத்தி வழிபட்டு, நல்ல குணங்களை குடியிருத்த முனைகிறான் பக்தன். ஆனால், அங்கு நடைபெறும் கோலாகலமான சடங்குகளின் இரைச்சலில் வழிபட முடியாமல் தவிக்கிறான். ஆக, கோயிலின் குறிக்கோள் நிறைவேறவில்லை. சிந்தனை வளம் பெறாத மக்களை, சிந்தனை வளம் பெற்றவர்களாக மாற்றும் தகுதி கோயில் வழிபாட்டுக்கு உண்டு. தவறான வழியில் திரும்பாமல் நேர்வழியில் மனித மனத்தை செல்லவைப்பது கோயில்கள். அவற்றின் பங்கு சமுதாயத்துக்கு வேண்டும். அதை அழிக்காமல் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாள்கூட விடுமுறை இல்லாமல் பூஜை புனஸ்காரங்களுடன் விளங்கும் கோயில்கள், பக்தர்களின் வரவை ஏற்று, ஆசான் போல் நல்ல எண்ணங்களை அவன் மனத்தில் பதிய வைக்கின்றன.
ஆகையால், வியாபார நோக்கு அகற்றப்பட்டு, பக்தர்கள் வழிபடும் விதமாக கோயில்கள் அமைதியைப் பராமரிக்க வேண்டும். அப்போது தான் முன்னோரின் எண்ணம் பாதுகாக்கப்படும். உடல் மட்டும் சுகாதாரமாக இருந்தால் போதாது; உள்ளமும் சுகாதாரமாக இருக்க வேண்டும். அதற்கு, ஆலய வழிபாடு அவசியம். ஏழை- எளிய மக்கள் இறை வழிபாட்டுக்கு கோயில்களையே நம்பியிருக்கிறார்கள். மதச்சடங்குகளின் இரைச்சலில், அவர்களது வழிபாட்டுக்கு குந்தகம் விளைவிப்பது ஏற்கத்தக்கதல்ல.
தங்களது சிந்தனை இந்தக் காலத்துக்குப் பொருத்தமற்றது. எண்ணில் அடங்காத கோயில்கள் அனைத்தும் நாட்டுக்குச் சொந்தம். நாட்டை ஆளுபவர்களது கட்டுப்பாட்டில் இருந்தால்தான் பாரபட்சம் இல்லாமல் பராமரிக்க இயலும். அதைப் பராமரிக்கப் பணம் வேண்டும். பொதுமக்களின் பணம் கோயிலில் சேர்ந்து விடுகிறது. கோயில் நாட்டின் சொத்து; அதன் வருவாய் பொதுமக்களின் சொத்து. அந்த வருவாயை வைத்து பொதுமக்களின் விருப்பத்தை ஈடேற்ற முடிகிறது.
ஆனாலும், அதற்கும் ஒரு வரம்பு வேண்டும் அல்லவா? இதர வசதி வாய்ப்புகளுக்காக அடிப்படை நோக்கத்தைத் தொலைத்துவிடக் கூடாது அல்லவா?!
நோக்கம் சிதைய வாய்ப்பு இல்லை!
கோயில் வளாகங்கள் வெறிச்சோடிக் கிடந்தால் பராமரிப்பு செலவு கூடுதலாகிவிடும். அந்த இடங்களை பொதுமக்களின் விருப் பத்துக்குப் பயன்படுத்தும்போது, அதன் மூலம் ஈட்டப்படும் வருவாய், கோயில் பராமரிப்புச் செலவை ஈடுகட்டி நிம்மதியளிக்கிறது. 1, 2, 3, 4, 5 என்ற எண்ணிக்கையில் பிராகாரங்கள் நிறைந்த கோயில்களின் பராமரிப்புச் செலவை ஈடுகட்டவும், பொதுமக்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் கோயில்களில் மதச்சடங்குகளுக்கு இடமளிப்பது தகும். பண்டைய நாளில் அரசு அந்தச் செலவுகளை ஏற்றுக்கொண்டது. தற்போது மக்கள் அரசு மக்களிடம் இருந்து வருவாய் பெற்று பராமரிக்கிறது.
விஞ்ஞான முறையில் கோயில்களைப் புதுப்பித்து, வெளிநாட்டவரையும் ஈர்த்து வருவாயைப் பெருக்கி, மக்களுக்கு அதிக சேவையை அளித்து மகிழ்கிறது. மக்களுக்கு உணவு, தங்கும் வசதி, நீராடவும் இளைப்பாறவும் தகுந்த இடங்கள், சிற்றுண்டிகள், இறைவனின் பிரசாதத்தை எளிதில் பெறும் நடைமுறைகள், மக்கள் மனத்தின் எண்ணத்தை உடனே நிறைவேற்றும் இறை கல்யாண உத்ஸவங்கள், சிறப்பு ஸேவைகள், அவசர சேவைகளுக்கு வழிவகுத்தல், அங்கு வரும் பக்தர்களுக்கு உடல் ஆரோக்கியத்தைப் பேண மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், ஓய்வு அறைகள், அவசரமாகப் பொருளைப் பெற உரிய கடைகள்... இப்படி, பொது சேவையைப் பெருக்குவதற்கு அங்கு வரும் தர்சனார்த்திகளிடம் இருந்து கிடைக்கும் வருவாய் தேவைப்படுவதால் அது தவறாகாது.
ஆனாலும், ஆண்டவன் சந்நிதானத்தில் ஆரவாரங்கள் இடையூறு அல்லவா?
மனம் இருந்தால் எந்த இரைச்சலிலும் பக்தனால் வழிபட முடியும். தட்டிலும் உண்டியலிலும் விழும் காசுகள் அத்தனையும் இறைவனை வைத்து வந்தது. அது, பொதுமக்களின் பணம். அதை பெருக்க வியாபார நோக்கு தேவை. அது எந்த வகையிலும் தவறாகாது. வியாபார நோக்கு இல்லாததாக ஓர் ஊசி குத்தும் இடம் கூட இன்று உலகில் இல்லை. மண்ணையும், கல்லையும், காற்றையும், நெருப்பையும், நீரையும் வியாபாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறோம். இயற்கையின் வளம் பொதுச்சொத்தானாலும் அதை வியாபாரப் பொருளாக மாற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
ஆக, கணக்கிலடங்காத கோயில்களை காலத்துக்கு ஏற்ப புதுப்பித்து, மக்கள் எளிதாக வழிபட வழிவகுத்து, மக்கள் சேவையைத் திறம்பட வளர்க்க, வேறு எவரிடமும் கையேந்தாமல், மக்கள் நலப்பணிகளின் மூலம் மக்களிடமிருந்து வருவாயைப் பெருக்கி, அவற்றை வளர்ந்தோங்கச் செய்யும் விஷயத்தை பாராட்டாமல், குறையைச் சுட்டிக்காட்டுவது, குறுகிய மனத்தின் வெளிப்பாடு.
உடல் பூராவும் தேன் வழிகிறது. ஆனால், ஈயானது அதை ஏற்க மறுத்து, கால் விரலுக்கிடையில் இருக்கும் புண்ணின் சீழைப் பருக முனைகிறது என்றொரு சுபாஷிதம் உண்டு. அப்படியிருக்கிறது உங்கள் கருத்து. எங்கும் எதிர்வாதம் உருவாகவே செய்யும். அதை அலட்சியப்படுத்தினால் மட்டுமே முன்னேறலாம்.
சொல் வளம் பலபேரை ஈர்க்கும். அதற்காக அதுவே உண்மையாகிவிடாது. வியாபார நோக்கு என்பது ஆலயத்துக்கு வரும் பக்தர்களை, மனமாற்றத்தை ஏற்கச் செய்யும். இறைவனை வணங்க வந்தவன், அங்கு நடக்கும் சடங்குகளைக் கண்ணுற்று மனத்தைத் தளரவிடுவான். அவனது விருப்பம் ஈடேறாது.
வழிபாடு என்பது மனம் சார்ந்த விஷயம்; உடல் சார்ந்தது அல்ல. மனத்தை திசை திருப்பும் சடங்குகள், பக்தனை வியாபாரியாக்கிவிடும். கடவுளிடம் பேரம் பேச வைக்கும். நான் இதை உனக்கு அளிக்கிறேன்; அதற்கு பதிலாக நீ எனக்கு அளவில்லா செல்வத்தையும், நீண்ட ஆயுளையும், துயர் தொடாத மகிழ்ச்சியையும் அளிக்க வேண்டும் என்பான். மனத்தில் இருந்து பக்தி கழன்றுவிடும். வியாபார நோக்கு இடம்பிடித்துவிடும். அவன் விருப்பம் தடைப்பட்டுவிடும்.
பக்தர்களுக்கான வசதியைப் பெருக்கு வதற்கான நடைமுறைகளை வியாபார நோக்கு என்று எப்படி கருதமுடியும்?
வியாபாரத்துக்கு ஊக்கமளிக்கும் எண்ணம் மேலோங்கியிருக்கிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது!
இந்த ஆலயத்தில் வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், இங்கு வழிபட்டால் மழலைச் செல்வம் பெருகும், இங்கு வழிபட்டால் வெளிநாடு செல்லலாம், பணம் ஈட்டலாம், வேலைவாய்ப்பு அதிகரிக்கும், கல்வியில் முன்னேற்றம் கிட்டும், திருமணமாகும், வீடு- வாசல், வாகனங்கள் பெருகும், பங்குச் சந்தையில் வெல்லலாம், தேர்தலில் வெற்றி, காதலில் வெற்றி... இப்படி இறைவழிபாட்டின் பலன்களை பத்திரிகைகளும் பரிந்துரைத்து, வியாபார நோக்கை வலுப்படுத்துகின்றன.
ஆலயங்களை வியாபார நிறுவனமாக்கி, பக்தனையும் வியாபாரியாக்கும் முயற்சிதான் வெற்றி பெறுகிறது. ஆலயத்தின் குறிக்கோள் மறைந்துவிட்டது. முடி காணிக்கை முழு வியாபாரத்தில் இறங்கி, நிறுத்தமுடியாத வியாபாரமாக மாறிவிட்டது. எதிலும் வியாபாரம், எங்கும் வியாபாரம். இந்தப்போக்கு கோயிலுக்கு உகந்ததல்ல.
ஆனாலும், வேறு தீர்வுகள் தென்பட வில்லையே?!
ஏன் இல்லை? வேறு வழியில் பணத்தை ஈட்டி கோயிலை பக்தர்களின் மன வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதே அழகு.
பாரதத்தின் பெருமைக்குக் காரணம், மனித சிந்தனையின் எல்லையான ஆன்மிக வளர்ச்சியின் செழிப்பு. உலகத்தைப் பார்த்து நாமும் சூடுபோட்டுக் கொள்ள வேண்டியதில்லை. அரும்பெரும் ஆன்மிகப் பொக்கிஷத்தை சிதைப்பது முன்னேற்றமல்ல. நாம் அதை இழந்தால், உலகமே அதன் இழப்பால் தவிக்கும்.
இத்தனை கோலாகலத்திலும் உலகம் ஆன்மிகத்துக்காக ஏங்குகிறது. வெளிநாட்டில் இடம் பெயர்ந்த கோயில்கள் வியாபார நோக்கில் இயங்கவில்லை அமைதியைப் பாதுகாக்கும் ஆலயங்களாகத் திகழ்கின்றன. நம்மூரில் இருக்கும் அத்தனை இறையுருவங்களும், மதச்சடங்குகளும் வெளிநாட்டில் குடியேறி, நல்லமுறையில் மக்கள் தொண்டாற்றுகின்றன. உடல் அளவில் வளர்ந்தோங்கியவர்கள், உள்ள அளவிலும் வளர்ந்தோங்கியுள்ளனர். அங்கெல்லாம் மாற்றான் அரசும் முகம் சுளிக்காமல் ஆன்மிக வளர, மனம் பண்பட வழி வகுத்திருக்கிறது.
ஆன்மிகத்தில் வியாபாரம் கூடாது என்ற தெளிவு வெளிநாட்டவரிலும் தென்படுகிறது. பொக்கிஷத்தின் உயர்வை அறியாத மனம் வெட்கப்படாது. பறிபோன பிறகு, தெளிவு பெறும்போது துயரத்தில் ஆழ்ந்துவிடும். வியாபார நோக்கில் இயங்காத எத்தனையோ விஷயங்கள் உண்டு. கல்விக்குச் செலவிடும் பணம் வியாபார நோக்கில் இருக்காது. இதுவும் கல்விதான். ஆன்மிகக் கல்வி. வழிபாடு அதன் செயல்முறை விளக்கம். ஆன்மிக வாடை அற்ற சமுதாயம் அதை வியாபார நோக்கில் பார்ப்பது தவறில்லை. நாட்டில் அத்தனை வளமும் வளர்க்கப்பட வேண்டும். அதில் ஆன்மிகமும் அடங்கும். எண்ணிக்கையில் குறைந்தவர்களானாலும், அதையும் வளர்ப்பது அரசின் கடமையாகும்.
தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...
மனத்தின் பங்கு இல்லாமல் உடல் இயங்காது. ஆன்மிகம் கலக்காமல் வாழ்க்கை இனிக்காது. வேதம், சாஸ்திரம் போன்றவற்றைப் படித்து ஆன்மிகத்தை எட்டுவது என்பது எல்லோருக்கும் இயலாது. பாமரர்களுக்கு எளிய நடைமுறையில், வழிபாடுவாயிலாக ஆன்மிக அறிவைப் புகட்டுகின்றன ஆலயங்கள். உலகில் பிறந்த மனிதர்கள், எந்த மதத்தைத் தழுவினாலும் ஒரு தலைவனை வழிபடுவதைக் கடமையாக ஏற்கிறார்கள். விஞ்ஞானத்தின் எல்லையை எட்டிய தேசங்களும் தெய்வ வழிபாட்டை முறையாக ஏற்கின்றன.
இப்படியிருக்க, நாம் மட்டும் ஆன்மிகத்தைத் துறந்து வாழலாம் என்று நினைப்பது தவறாகும். மனம் வளரப் பயன்படும் கோயில்களை உகந்த முறையில் பராமரிக்க வேண்டும். மன வளர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணம் நமது பிறப்புரிமை. அது கிடைத்தே ஆக வேண்டும். அதை மறுக்க எந்த சட்டமும் துணியக் கூடாது.
Comments
Post a Comment