வள்ளலாரும் வாரியாரும்

வடலூர் திருப்பணி நடந்து வரும்போது ஒரு மாதம் ஆட்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணமின்றி நான் அணிந் திருந்த அணிகலன்களை அடகு வைத்து 3500 ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தேன். ‘கடவுள் நம்மை அணிகலனை அடகு வைக்குமாறு செய்து விட்டாரே!’ என்று எண்ணி உள்ளம் உலைந்தேன். ஒரு நாள் வடலூரில் வழிபாடு செய்து கொண்டிருந்தேன். அங்கு ஒரு தம்பதி வந்து வழிபாட்டில் கலந்து கொண்டார்கள். அருகிலிருந்தவர்கள், ‘இவர் தெம்மூர் ராஜமாணிக்கம் பிள்ளை. தனமும் மனமும் படைத்தவர்.’ என்று கூறினார்கள். நான் அவர்களைப் பார்த்து, ‘தெம்மூரில் ஒரு விரிவுரைக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஞானசபைத் திருப்பணிக்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள்!’ என்று கூறினேன். அவர்கள் அன்புடன் அதற்கு இசைந்தார்கள். அதுபடியே ஒரு நாள் தெம்மூருக்கு விரிவுரை செய்யப் போயிருந் தேன். அன்று பெருமழை கொட்டிற்று. எங்கும் வெள்ளக் காடாக ஆயிற்று. நிகழ்ச்சி நன்றாக நடைபெறுவதற்கு மழை தடை செய்கிறதே! என்று எண்ணி நான் வருந்தினேன். இரவு 8 மணிக்கு மழை நின்றது. வைக்கோற் புல்லைப் பரப்பி அதன் மீது தென்னங் கீற்றுகளையிட்டு ஜனங்கள் இருந்து கேட்க வசதி செய்தார்கள்.
அன்று இரவு வள்ளலாரைப் பற்றி விரிவுரை செய்தேன். விரிவுரை முடிந்தது. பிள்ளை அவர்கள் 500 தருவார்கள். ஆயிரமாவது கேட்க வேண்டும் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். பிள்ளை யவர்களும் அவர் மனைவியாரும் ஒரு பெரிய வெள்ளித் தட்டில் 25 சாத்துக்குடி, ஆரஞ்சுப் பழங் கள், ஏழெட்டு வாழைப்பழச் சீப்புகள், நிறைய வெற்றிலை- பாக்கு வைத்துக் கொண்டு வந்தார்கள்.
இதைப் பார்த்தவுடன் நான் சிறிது அஞ்சினேன். சில சங்கங்களில் பெரிய பூமாலையாகச் சூட்டி, நிறைய பழங்களைத் தட்டில் வைத்துத் தருவார்கள். பழத்துக்கு அடியில் ரயில் செலவுக்காக 25 ரூபாய் மட்டுமே இருக்கும். செட்டி நாட்டில் இரண்டு வாழைப்பழம், ஒரு சாத்துக்குடி, ஆரஞ்சு, நான்கு வெற்றிலை, பாக்கு மட்டுமே இருக்கும். ரூபாய் 1000 வைத்திருப்பார்கள். இப்போது அவர்கள் நிறையப் பழங்களை வைத்துக் கொண்டு வந்திருக்கிறார்களே! பணம் குறைத்துத் தருவார்கள் என்று எண்ணினேன்.
தெம்மூர் ராஜமாணிக்கம் பிள் ளையும், அவர் மனைவியாரும் பழங்களுக்கு மேல் 100 ரூபாய் நோட்டுகளைக் கற்றையாக வைத்திருந்தார்கள். அதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். ரசீது போடும் பொருட்டு பணத்தை எண் ணிப் பார்த்தேன். நூறு ரூபாய் நோட்டுக்கள் 35 இருந்தன. நான் நகைகளை அடகு வைத்துக் கடன் வாங் கியிருந்த தொகை 3500. தெம்மூர் பிள்ளை நன்கொடை கொடுத்ததும் 3500. அதே தொகையை அன்பர் வழங்கியிருக்கிறார். மூவா யிரமாகவோ நாலாயிரமாகவோ கொடுக்காமல் மூவாயிரத்தைந்நூறே கொடுக்குமாறு செய்த திருவருளின் திறத்தை நினைந்து வியந்தேன்’’ என்று சொல்லி இருக்கிறார் வாரியார் ஸ்வாமிகள்.
வள்ளலாரும் வாரியார் ஸ்வாமிகளும் தமிழ் நாட்டுக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். அவர்களை உணர்ந்து செயல்பட்டால் வாழ்வில் உயர்வு பெறலாம்.

Comments