சந்நிதானம்... ஷீர்டி

‘‘எனக்கு எட்டு விதமான அல்லது பதினாறு விதமான உபசாரங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. தூய்மையான பரிபூர்ண
பக்தி உள்ள இடத்தில் நான் இருப்பேன்.’’

- ஷீர்டி சாயிபாபா
சோ தனை என்பது, தரத்தை உறுதி செய்வதற்கான ஒரு துல்லியமான வழி. ஆண்டவனின் சோதனைகள், அடியார்களுக்கு துன்பங்களைத் தாங்கும் பக்குவத்தை அளித்து அவர்களைப் புடம் போட்ட பொன்னாகப் பொலியச் செய்கின்றன.
பக்தி, பொறுமை, பரிபூரண நம்பிக்கை போன்றவற்றின் துணை கொண்டு, சோதனைகளை எதிர்கொள்ளும் அடியவர்களுக்கு இறுதியில் அவற்றின் உள் அர்த்தங்களை உணர்ந்து உய்யும் வாய்ப்புக் கிடைப்பது உறுதி.
பாபா, பேராசிரியர் நரகேயிடம் பதினைந்து ரூபாய் தட்சிணை கேட்டதும் அத்தகைய ஒரு சோதனையே!
பாபா கேட்பதைத் ‘தர முடியவில்லையே!’ என்ற வருத்தமும், ‘இல்லை’ என்று சொல்ல வேண்டிய இக்கட்டான நிலை குறித்த குற்ற உணர்வும் நரகேக்கு ஏற்பட்டன. உண்மையான பக்தனின் உள்ளம் படும் பாட்டை அறியாதவரா பாபா?
நரகேயின் முகவாட்டத்தைக் கண்ட அவர், “உன்னிடம் பணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். எனக்கு அது தேவையும் இல்லை. ‘பணம்’ என்று நான் குறிப்பிட்டது விலை மதிப்பில்லாத பண்பு நலத்தையே. நீ ‘யோக வாசிஷ்டம்’ படித்துக் கொண்டிருக்கிறாய் அல்லவா? அந்த உயர்ந்த நீதி நூலின் நெறிகளை உணர்ந்து உன் உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டால், அதுவே உன் மனத்தில் வாசம் செய்யும் எனக்குத் தரும் தட்சிணையாகும். இதையேதான் நான் கேட்டேன்!” என்று, தான் தட்சிணை கேட்டதன் உட்பொருளை உரைத்தார் பாபா.
அளவில்லா ஆனந்தம் அடைந்த நரகே அவ்வாறே செய்ய உறுதி பூண்டார்.
மதிப்பே பெறாத சாதாரண உலோகக் காசுகளை பாபா விரும்பி தட்சிணையாகக் கேட்டுப் பெற்றார் என்று நாம் நம்பினால், அது நமது அறியாமையைக் காட்டுகிறது என்பதைத் தவிர வேறென்ன கூற முடியும்?
பாபா, வெறும் காசுகளை தட்சிணையாகக் கேட்டுப் பெறவில்லை என்பதை நிரூபிக்க இதோ இன்னொரு நிகழ்ச்சி.
ஒரு முறை பாபா, தர்கட் என்ற திருமணமான பக்தையிடம் ஆறு ரூபாய் தட்சிணை கேட்டார். அவளிடம் பணம் இல்லாததால் மிகவும் மன வேதனை அடைந்தாள். கடவுளே தன்னிடம் காசு கேட்டும் கொடுக்க இயலாத பாவியாக இருக்கிறேனே என்று அவள் இதயம் துடிதுடித்தது. கண்களில் நீர் பெருக தன் இதயத் தவிப்பை அருகில் இருந்த தன் கணவரிடம் நா தழுதழுக்கக் கூறினாள்.
தர்கட்டின் கணவர், பாபாவை நன்கு அறிந்தவர். அவரது எண்ணங்களையும் வழிமுறைகளையும் சரியாகப் புரிந்து கொண்டவர். எனவே, அவர் தன் மனைவியிடம், “அடி பைத்தியமே! இதற்கா இவ்வளவு வேதனைப் படுகிறாய்? பாபா என்ன, தன்னிடம் இல்லாத காசையா உன்னிடம் கேட்டு விட்டார்? நீ கொடுத்துத்தான் அவர் பை நிரம்பும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம்? இந்த உலகமே பாபாவுடையது என்று இன்னுமா உனக்குத் தெரியவில்லை? அவர் உன்னிடம் கேவலம் பணம், காசுகளையா தட்சிணையாகக் கேட்கிறார் என்று நினைக்கிறாய்? அவர் உன்னிடம் கேட்ட ஆறு ரூபாய் என்பது உன் மனதில் இருக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறு வேண்டாத குணங்களைத்தான். பாபாவிடம் அவற்றைச் சமர்ப்பித்து விடு. அது போதும். உன் தொல்லை எல்லாம் நீங்கி நிம்மதி பெறலாம்!’’ என்று எடுத்துச் சொன்னார்.
தனது கருத்தை அறிந்து தர்கட்டின் கணவர் அளித்த இந்த விளக்கத்தால் திருப்தி அடைந்த பாபா, அதை அங்கீகரித்து அந்தத் தம்பதிக்கு ஆசியும் புரிந்தார்.
அன்பர்களிடமும் அடியவர்களிடமும் சாயிபாபா தட்சிணை கேட்டுப் பெற்றதற்கு ஒரு சுவையான, தெளிவான, பொருள் பொதிந்த பின்னணி உண்டு.
அதை அறிந்து கொள்வதற்கு பாபாவின் குருவைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
தட்சிணை கேட்கும் வழக்கத்தை பாபாவுக்கு அறிமுகப்படுத்தியவர் அவரே.
‘பாபாவுக்கு ஒரு குருவா?’ என்று வியப்பு ஏற்படலாம்.
‘பாபாவின் குரு யார்? அவர் தன் குருவை எப்போது, எங்கே சந்தித்தார்? பாபாவுக்கும் அவர் குருவுக்கும் இடையேயான தொடர்பு எப்படிப்பட்டது?’ இவை போன்ற தவிர்க்க முடியாத கேள்விகள் எல்லாம் நம் நெஞ்சில் எழலாம்.
பாபாவுக்கும் அவர் குருவுக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி அறிந்து கொண்டால் நம் நெஞ்சம் நெகிழும். நம்மையறியாமல் கண்களில் நீர் சுரக்கும். மனிதநேயம் என்னும் வார்த்தைக்கான உண்மைப் பொருள் விளங்கும். மற்ற மனிதர்களிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும். இதயம் உள்ள அனைவரது வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் உண்டாகும்.
தன் குருவைப் பற்றி பாபாவே நெகிழ்வுடன் கூறியிருக்கிறார்.
அந்த அற்புதமான வரலாறு இதோ இங்கே...
பாபாவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எப்போதும் இணைந்தே இருப்பது வழக்கம். ஒரு முறை பாபாவும் அவர் நண்பர்கள் மூவரும் கடவுளை அடையும் வழிகள் குறித்து விவாதிக்கத் தொடங்கினர். மத நூல்களும், மறைகளும் கூறும் வழிமுறைகளை அவர்கள் அலசி ஆராய்ந்து பார்த்தனர்.
பாபாவின் நண்பர்கள் மூவருக்கும் தங்களது படிப்பறிவு குறித்தும், பகுத்தறிவு குறித்தும் ஏகப்பட்ட பெருமை இருந்தது. எனவே, கல்வியாலும் அறிவாலும் மட்டுமே ஆண்டவனை அடைய முடியும் என்று அவர்கள் வாதிட்டார்கள்.
ஆனால், பாபாவோ இறைவனை அடைய படிப்பறிவு மட்டும் போதாது என்று பகர்ந்தார். குருவருள் இருந்தால்தான், திருவருள் பெற முடியும் என்பது பாபாவின் தீர்க்கமான கருத்து.
கடமைகளைக் கச்சிதமாக நிறைவேற்றிவிட்டு, குருவின் பாதங்களில் உடல், பொருள், ஆவி ஆகியவற்றைப் பணிவுடன் அர்ப்பணிக்க வேண்டும் என பாபா கூறினார். எங்கும் நிறைந்துள்ள இறைவன், குருவின் வடிவில் வந்து ஆட்கொண்டு அருள்வான் என்றும், அப்படிப்பட்ட குருவிடம் அசைக்க முடியாத, ஆழமான நம்பிக்கை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
நண்பர்கள் நால்வரும் இவ்வாறு பேசிக் கொண்டே அடர்ந்த காடு ஒன்றில் கடவுளை எங்காவது காண முடிகிறதா என்று தேடிச் சென்றனர்.
அப்போது... விறகுவெட்டி போன்ற எளிய தோற்றம் கொண்ட ஒருவன், அவர்கள் எதிரே வந்தான்.
கடும் வெயிலில், கானகத்தில் அவர்கள் அலைவதைக் கண்ட அவன், அவர்கள் போகும் இடம் குறித்து வினவினான். அவர்களோ, அறிமுகம் இல்லாத முற்றிலும் புதியவன் ஒருவனிடம் தங்களது நோக்கத்தை வெளியிட விரும்பவில்லை.
அவர்களது தயக்கம் அவனுக்குப் புரிந்தது. இருந்தாலும், தகுந்த வழிகாட்டியின் துணையின்றி காட்டுக்குள் சென்றால் அவர்கள் வழிதவறிப் போகக் கூடும் என்று எச்சரித்தான்.
அவன் செய்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத அவர்கள், பதில் எதுவும் கூறாமல் இருந்தனர்.
அவர்களது மனநிலையை உணர்ந்து கொண்ட அந்த எளிமையான ஆள், “உங்களுடைய ரகசியமான நோக்கத்தை என்னிடம் கூறாவிட்டாலும் பரவாயில்லை. தயவுசெய்து களைப்பு நீங்கச் சற்று உட்கார்ந்து கொள்ளுங்கள். உண்ண உணவும், பருக நீரும் தருகிறேன். அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள்!” என்று அன்பொழுகக் கூறினான்.
அவர்களோ, அவனை அலட்சியம் செய்ததுடன், ‘சாப்பிட்டுச் செல்லுங்கள்’ என்ற அவனது வேண்டுகோளையும் புறக்கணித்து விட்டுக் காட்டுக்குள் சென்றனர்.
வெகுதூரம் சென்ற பிறகுதான் அவர்களுக்கு வழி தவறி விட்டோம் என்பது புரிந்தது. பசி வயிற்றைப் பாடாய்ப் படுத்தியது. தாகத்தால் தொண்டை வறண்டது. நாக்கு உலர்ந்தது. நால்வரும் தவியாய்த் தவித்தனர்.
அங்கும் இங்கும் அலைந்து திரிந்து விட்டு இறுதியில் எப்படியோ புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்தனர்.
மீண்டும் அதே தொழிலாளி எதிரே வந்தான். “ச்..ச்..ச்.. வழி தவறிப் போய் விட்டீர்களா? நான் சொன்னபடியே ஆகிவிட்டது, பார்த்தீர்களா? உங்களது சொந்தத் திறமையை மட்டும் நம்பினீர்கள். ஆனால், அது சரியான வழியைக் காட்டவில்லை. இந்தக் காட்டைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. அதனால்தான் என்னுடைய அனுபவம் காரணமாக உங்களுக்கு வழி காட்டுவதாகச் சொன்னேன்... போகட்டும், பரவாயில்லை. நான் சொல்வதை இப்போதாவது கேளுங்கள்” என்று பரிவுடன் கூறியபடியே அந்தத் தொழிலாளி அவர்கள் அருகில் அமர்ந்தான்.
“இளம் வயனராக இருக்கிறீர் கள். அதனால் தான் நெருப்பு சுடும் என்று யாராவது சொன்னால் உங்க ளுக்குப் புரிய மாட்டேன் என்கிறது. வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் சரியான வழியைக் காட்டுவதற்கு ஒரு வழிகாட்டி நிச்சயம் தேவை. அது மட்டுமல்ல, பசியோடு ஈடுபட்டால் எந்த நோக்கமும் வெற்றி பெறாது. உங்களது வழியில் ஏற்படும் எந்த விதமான சந்திப்பும் கடவுளின் விருப்பத்தின் விளைவே என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். யாரா வது உங்களுக்கு உணவு கொடுத்தால் அது உங்களது நன்மைக்காகத்தான். அதை மறுப்பது சரியல்ல!” என்று விளக்கமாகவும் கூறினான்.
அவன் அவர்களுக்கு உணவு அளித்து உப சரித்தான். அந்தப் பணியாள் கல்வியறிவு ஏதும் இல்லாதவனாகவும், தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவனாகவும் தோற்றம் தந்தாலும் அவனது பண்பும் பாசமும் பாபாவைக் கவர்ந்தன.
அவன் அளிப்பதை ஏற்றுக் கொண்டு, பசியையும் தாகத் தையும் தணித்துக் கொள்வதே அறிவுடைமை என்று பாபாவின் உள்ளுணர்வு உணர்த்தியது. மேலும், அவனது உண்மையான அன்பு அவர் உள்ளத்தை உருக்கியது.
வயிற்றுப் பசி நீங்க, அவன் அளித்த உணவை மிக்க மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் பாபா ஏற்றுக் கொண்டார். ஆனால், அதுவே அவரது ஆன் மிகப் பசி அகல வழி அமைத்துத் தந்தது.
அடுத்து நடந்த அந்த நிகழ்ச்சி அதை உறுதி செய்தது.
அந்த நிகழ்ச்சி..?
வழக்கு விசாரணையும் வயிற்று வலியும்

பா வ் ஸாகேப் துமால் என்பவர் ஒரு வழக்கறிஞர். தனது தொழிலில் அக்கறையும் ஆர்வமும் கொண்டவர். அதைவிட அதிகமாக பாபா மீது மரியாதையும் பக்தியும் கொண்டிருந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஷீர்டி சென்று பாபாவை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு முறை அவர் ஒரு வழக்கு விசாரணைக்காக ‘நிபாட்’ என்னும் ஊருக்குச் செல்ல நேர்ந்தது. வழியில் ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசனம் செய்து விட்டு பின்னர் நிபாட்டுக்குச் செல்ல எண்ணினார்.
அதன்படி பாபாவை தரிசித்து அவரது அருளாசியைப் பெற்றார். பின்னர் நிபாட்டுக்குச் செல்லக் கிளம்பியபோது பாபா அவரைத் தடுத்து நிறுத்தினார்.
ஷீர்டியிலேயே மேலும் சில நாட்கள் தங்கிவிட்டுச் செல்லுமாறு பணித்தார்.
‘நிபாட்’ செல்லும் முன் வழக்கு முடிந்துவிடுமே என்று துமால் கவலை கொண்டாலும் பாபாவின் ஆணையை மீற முடியாமல் ஷீர்டியிலேயே சில தினங்கள் தங்கி விட்டார்.
பாபா சொல்வது எதுவாக இருந்தாலும் அது சரியாகவே இருக்கும் என்பதில் அவருக்குப் பெரும் நம்பிக்கை இருந்தது. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை!
நிபாட்டில் உள்ள நீதிபதிக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டது. அதனால் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
பாபாவின் சொற்படித் தங்கிவிட்டுப் பின்பு துமால், நிபாட் சென்று சேர்ந்த பிறகுதான் வழக்கு விசாரணை தொடர ஆரம்பித்தது. வழக்கில் துமால் வெற்றி பெற்றார்.
பாபா கூறியபடி நடந்து கொண்டதால், இடர் ஏதுமின்றி எளிதில் வெற்றி பெற முடிந்தது என்பதை உணர்ந்த துமால், பாபாவை மனமுருகிப் பிரார்த்தனை செய்து நன்றி கூறினார்.

ஷீர்டி புனிதத் தல தரிசனம்
நோய் தீர்க்கும் தூண்!
 

து வாரகாமாயீயில் பாபா உபயோகித்த அடுப்புக்கு அருகில் மரத்தூண் ஒன்று உள்ளது. பாபா இதன் மேல் சாய்ந்து கொண்டுதான் உணவு சமைப்பார். பாபா இந்தத் தூணைச் சுற்றி வலம் வருவதும் வழக்கம்.
உடல் வலியால் அவதிப்படுபவர்கள் இந்தத் தூணின் மீது சாய்ந்து கொண்டால் உடல் வலி நீங்கப் பெறுவார்கள்.
ஆனால், இந்தத் தூணை எக்காலத்துக்கும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருப்பதால், தற்சமயம் இந்தத் தூணின் மீது சாய்ந்து கொள்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை.
ஆனால்தான் என்ன? இந்தத் தூணை தரிசித்தாலே உடல் உபாதைகள் நீங்கிவிடும்.
ஷீர்டி செல்பவர்கள் அவசியம் தரிசித்து வணங்க வேண்டியவற்றுள் இந்தத் தூணும் ஒன்று!

Comments