‘‘அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும்,
பாவங்கள் நீங்கப் பெற்றவர்களுக்கும்
சாயியை வழிபடும் பேறு கிட்டுகிறது.”
பாவங்கள் நீங்கப் பெற்றவர்களுக்கும்
சாயியை வழிபடும் பேறு கிட்டுகிறது.”
- ஷீர்டி சாயிபாபா
ந ல்ல சுவையுடைய இனிய கனிகளை நாள்தோறும் உண்டு, அதனால் நன்மைகள் பல அடைந்து வந்தான் ஒருவன்.
திடீரென்று அவனுக்கு விபரீத எண்ணம் ஒன்று தோன்றியது. ‘பழத்தை மட்டும்தான் சாப்பிட வேண்டுமா? காயை ஏன் உண்ணக் கூடாது?’ என்பதே அது!
காயைக் கடித்த போதுதான் அதன் கசப்பை அறிந்து கொள்ள முடிந்தது.
தான- தருமங்கள் செய்து இன்பமும் மகிழ்ச்சியும் பெற்றவன், ‘எதற்காக நாம் கொடுக்க வேண்டும்?’ என்ற எதிர்மறைக் கேள்வியால் உந்தப்பட்டு, உதவி வேண்டி வருவோரிடம், ‘இல்லை’ என்று மறுத்தால், காயை உண்டவனின் கசப்பான அனுபவமே அவனுக்கும் கிட்டும்.
ஷீர்டியின் வணிகப் பெருமக்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது.
மனம் உவந்து, விளக்கேற்ற பாபாவுக்கு எண்ணெய் வழங்கியபோது அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஒளி பரவியது.
மன மாறாட்டத்தால் எண்ணெய் தர மறுத்த செயல், மனப் போராட்டத்தில் முடிந்தது.
உள்ளுக்குள் ஏற்பட்ட உறுத்தலும் உளைச்சலும் அவர்களைப் பாடாகப் படுத்தின. மசூதிக்குத் திரண்டு வந்த அவர்கள், பாபாவின் ஒவ்வோர் அசைவையும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
விளக்கெரிக்க எண்ணெய் கொஞ்சம் கூட இல்லை. திரிகளும் காய்ந்திருந்தன. இதைப் பற்றியெல்லாம் பாபா சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தகர டப்பாவின் உள்ளே, சில துளிகள் எண்ணெய் மட்டுமே ஒட்டிக் கொண்டிருந்தது. பாபா அதில் தண்ணீரை விட்டுக் கலந்து குடித்தார்.
பிறகு அதில் மறுபடியும் தண்ணீரை ஊற்றி அதைக் கொண்டு அனைத்து விளக்குகளையும் நிரப்பினார். திரிகளைக் கொளுத்தினார்.
விளக்குகள் உயிர் பெற்றன. வெளிச்சத்தை வீசின. இரவு முழுவதும் எரிந்து ஒளியையும், பாபாவின் பெருமையையும் ஒருசேரப் பரப்பின.
பார்த்துக் கொண்டிருந்த வணிகர்கள் பதறினர். வியப்பும் அச்சமும் கொண்டனர். வருத்தமும் வேதனையும் அடைந்தனர்.
மகானிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடினர்.
கருணையே உருவான பாபா அவர்களை மன்னித்தார். இனிமேல் உண்மை உள்ளவர்களாக, உள்ளம் உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத் தினார்.
பாபா சாதாரணமானவர் அல்ல. சர்வ சக்தி படைத்த மகான் என்பதை இந்த ஒரு நிகழ்ச்சி அனைவருக்கும் உணர்த்தியது.
மக்கள் அவரை நாடி வரத் தொடங்கினர். அருள் வேண்டி வந்தவர்களுக்கு எல்லாம் பாபாவின் பிரசாதமாக ‘உதி’ எனப்படும் திருநீறு வழங்கப்பட்டது.
‘உதி’ என்பது நெருப்புக் குண்டமான ‘துனி’யில் உதித்த சாம்பலே ஆகும். அது பாபாவின் அளவற்ற அருளாற்றலின் அடையாளமாக விளங்கியது. தற்போதும் விளங்கிக் கொண்டிருக்கிறது.
அடியவர்களின் அல்லல்களையும், அன்பர்களின் நோய்களையும் அடியோடு நீக்கும் அற்புத சக்தி கொண்டது ‘உதி’. உதியைப் பிரசாதமாக அளிப்பதன் மூலம் பாபா இந்த உலகத்தின் நிலையற்ற தன்மையை எடுத்துக் கூறுகிறார்.
நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. எல்லாவற்றையும் அனுபவித்து முடித்த பிறகு உடலானது ஓய்ந்து, சாய்ந்து, மாய்ந்து போகும். பின்னர் எரிக்கப்பட்டுச் சாம்பலாகிப் போகும்.
உற்றார், பெற்றோர், மற்றோர் ஆகிய அனைவரும் நம்முடையவர் அன்று. தனியாக வந்த நாம், தனியாகவே போக வேண்டி இருக்கும்.
எனவே, வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொண்டு மெய்ப்பொருளை, பிரம்மத்தை அறிய முயற்சிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் உணர்த்துவதே ‘உதி’ ஆகும். சாயிபாபாவின் உதி, உடல் பிணிகளையும் மன நோய்களையும் ஒழித்திடும் ஒப்புயர்வற்ற உன்னத மருந்து.
பாபா, உதியை அன்பர் களின் நெற்றியில் இட்டுத் தன் கையை அவர்கள் தலை மீது வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம்.
உற்சாகமான மனநிலையில் இருக்கும்போது அவர் உதியைப் பற்றிய பாடலை இனிய குரலெடுத்துப் பாடுவதும் உண்டு.
நாசிக் நகரைச் சேர்ந்த நாராயண் மோதிராம் ஜனி என்ற அடியவரின் நண்பர் ஒருவரைத் தேள் கொட்டிவிட்டது.
தேள் கொட்டிய இடத்தில் உதியைத் தடவினால் குணம் ஏற்படும் என்பதால் நாராயண், உதியைத் தேடினார். சோதனையாக, உதி வைத்திருந்த இடம் நினைவுக்கு வரவில்லை. ஆனாலும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை.
பாபா படத்தின் முன்னால் நின்று, அவரது திருப்பெயரை உருக்கத்துடன் உச்சரித்து, உதவி புரியுமாறு வேண்டினார். அப்போது அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது.
அங்கிருந்த ஊதுபத்தியின் சாம்பலைச் சற்றுத் திரட்டி எடுத்தார். அதையே பாபாவின் உதியாக நினைத்துக் கொண்டு உறுதியான நம்பிக்கையுடன் தேள் கொட்டிய இடத்தில் தடவினார். நம்பிக்கை வீண் போகவில்லை.
தடவிய விரலை எடுத்த உடனேயே வலி பறந்து போய்விட்டது.
உதியோடு நெருங்கிய தொடர்புடையது பாபா அடியவர்களிடம் கேட்கும் தட்சிணையாகும்.
தட்சிணையாக வரும் பணத்தின் பெரும் பகுதியை அவர் தர்ம காரியங்களுக்குப் பயன்படுத்தினார். மீதி இருக்கும் பணத்தைக் கொண்டு துனியில் எரிப்பதற்காக விறகு வாங்கினார். அந்த நெருப்பில் உருவான சாம்பலே உதியாகும்.
அன்பர்களின் தட்சிணைப் பணம் உதியாக உரு மாறி உன்னதத் தன்மை பெற்று, அவர்களுக்கு மட்டுமின்றி உலகத்தார் அனைவருக்கும் உயரிய அருட்பிரசாதமாக அமைவது பெரும் பேறாகும்.
பற்றற்றவரான பாபா பக்தர்களிடமும், அடியவர்களிடமும் தட்சிணை கேட்டார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
அவர் பணத்தை ஏன் லட்சியம் செய்ய வேண்டும்? எதற்காக தட்சிணை கேட்க வேண்டும்?
தகுந்த காரணங்கள் இல்லாமல், ஞானிகள் ஒருபோதும் எந்தக் காரியமும் செய்ய மாட்டார்கள். மனிதர்கள் தர்மம் செய்ய வேண்டும் என்றும், ஈகையில் ஈடுபட வேண்டும் என்றும் இறை நூல்கள் வலியுறுத்துகின்றன.
நம்பிக்கையுடனும், பெருந்தன்மையுடனும், தாராள மனத்துடனும், பணிவுடனும், பய பக்தியுடனும், இரக்கத்துடனும் கொடுக்க வேண்டும் என்று ஈகையின் இலக்கணத்தை மறை நூல்கள் இயம்புகின்றன.
இதன்படியே அடியவர்களுக்கு தான- தர்மத்தைப் பற்றிப் புரிய வைக்கவும், பணத்தின் மீது உள்ள பற்றுக் குறைவதற்கும், அவர்கள் மனம் தூய்மை அடைவதற்கும் பாபா தட்சிணையைக் கட்டாயமாகக் கேட்டுப் பெற்றார்.
பாபா, தான் பெற்ற தட்சிணையைப் பல மடங்காகத் திருப்பிக் கொடுப்பது என்ற ஒரு விசித்திரமான நியதியைக் கொண்டிருந்தார்.
ஒரு குறிப்பிட்ட நாளில் கிடைத்த தட்சிணை ரூபாய் 25 என்றால், அன்று அவர் விநியோகம் செய்தது ரூபாய் 300க்கு மேல் இருக்கும். நாள்தோறும் பாபாவிடம் தானம் பெற மசூதிக்கு இரவு 8 மணியளவில் ஒரு பெரிய கூட்டமே வருவது வழக்கம். வந்தவர் அனைவருக்கும் அவரவர்களின் தேவைக்கேற்ப பாபா மிகச் சரியான தொகையை எப்படி அளித்தார் என்பது, யாராலும் புரிந்து கொள்ள முடியாத அதிசயமாகும்.
பல சந்தர்ப்பங்களில் அவர் மறைபொருளாகவும், குறியீடாகவும் தட்சிணை கேட்பதுண்டு.
பேராசிரியர் ஜி.ஜி.நரகே என்பவர் பல மாதங்கள் பாபாவுடன் தங்கியிருந்து அவரது அன்புக்கு உரியவராக ஆனார்.
ஒரு முறை பாபாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென்று சற்றும் எதிர்பாராத விதத்தில் பாபா அவரிடம் பதினைந்து ரூபாய் தட்சிணை கேட்டார்.
திடுக்கிட்டுப் போனார் நரகே. காரணம், அவரிடம் அப்போது ஒரு பைசாகூட இல்லை. அவரிடம் பணம் எதுவும் இல்லை என்பது பாபாவுக்கு நன்றாகவே தெரியும்.
இருந்தும், பாபா அவரிடம் தட்சிணை கேட்டது ஏன்?
மழையை நிறுத்திய மாயம்!
ப ஞ்சபூதங்களும் பாபாவின் ஆணைக்குக் கட்டுப் பட்டன. எனினும், அவர் தனது அபூர்வ சக்தியை மக்களின் துயர் துடைக்கவே பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முறை ஷீர்டியில் பலத்த புயல் காற்று வீசியது. வானம் முழுவதும் கருமேகக் கூட்டங்கள் படையெடுத்து வந்ததைப் போன்று காட்சியளித்தது. வாள்வீச்சு போல மின்னல் பளீர் பளீர் என்று வெட்டியது.
பேய் மழை பெய்ததால் கிராமம் முழுவதும் வெள்ளக் காடாக மாறியது. இயற்கையின் கோரத் தாண்டவம் பெரும் அச்சத்தை விளைவித்தது.
ஷீர்டியில் உள்ளோர் அனைவரும் மசூதியில் தஞ்சம் புகுந்தனர். பாபாவின் பாதார விந்தங்களைப் பணிந்தனர். தங்களை இயற்கையின் சீற்றத்தில் இருந்து காத்தருளுமாறு வேண்டித் தொழுதனர்.
பறவைகளும் மிருகங்களும்கூட பாதுகாப்பு வேண்டி மசூதிக்கு வரத் தொடங்கின.
பக்தர்களின் துயரம் பாபாவின் உள்ளத்தை உருக்கி யது. அவர்களை அழிவில் இருந்து காத்து அருள் புரிய முடிவு செய்தார். உடனே மசூதியில் இருந்து வெளியே வந்து, ‘‘நிறுத்து... உன் சீற்றத்தை உடனே நிறுத்து!’’ என்று இடி முழக்கம் செய்தார்.
அவ்வளவுதான்! அடுத்த கணமே அவரது ஆணைக் குக் கட்டுப்பட்டன இயற்கையின் சக்திகள். மழை குறைந்தது. புயலும் ஓய்ந்தது. மேகங்கள் கலைந்தன. விண்ணில் வெண்ணிலவு உதயமாயிற்று.
பாபாவின் உன்னத லீலையையும் அவரது அருள் உள்ளத்தையும் வாழ்த்தியவாறு மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்குத் திரும்பினர்.
அச்சம் நீங்கிய பறவைகளும் விலங்குகளும் அந்த இடத்தை விட்டு அகன்றன.
|
ஷீர்டி புனிதத் தல தரிசனம் பாபா உபயோகித்த அடுப்பு!
பா பா உபயோகித்த அடுப்பு, துவாரகாமாயீயின் கூடத்தில் உள்ளது. பாபா, தானே சந்தைக்குச் சென்று தனக்கு பக்தர்களால் கொடுக்கப்பட்ட தட்சிணையில், உணவு சமைப்பதற்குத் தேவையான பண்டங்களை வாங்கி வருவார்.
யாருடைய உதவியையும் நாடாமல் தானே சுவை யாகச் சமைத்து ஏழைகளுக்கு உணவு அளிப்பார். தனக்கு உண்ண நான்கைந்து வீடுகளில் பிச்சை எடுப்பார்.
பக்தர்கள் அனைவரும் பாபா உபயோகித்த இந்த அடுப்பை துவாரகாமாயீயில் அவசியம் தரிசிக்க வேண் டும். பாபாவின் கருணையால் இந்த அடுப்பை தரிசிப்பவர்களின் வீட்டில் உணவுக் குப் பஞ்சம் இருக் காது.
(பாபா ஏன் பிச்சை எடுத் தார்? அவர் பிச்சை எடுத்ததன் மூலம் மக்களுக்கு உணர்த்திய செய்தி என்ன என்பன போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு எழக் கூடும். இவற்றுக்கான விளக் கங்கள் பாபாவின் வரலாற்றில் பின்னால் இடம் பெற இருக்கின்றன.)
|
Comments
Post a Comment