நோய் தீர்க்கும் தன்வந்திரி!

 


மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானை பிரதான மூர்த்தியாகக் கொண்டுள்ள கோயில், திருச்சூர் மாவட்டம் நிலுவையில் உள்ளது. இக்கோயில் வடக்கஞ்சேரி - குன்னம்குளம் சாலையில் அமைந்துள்ளது. தன்வந்திரி பகவான் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது ஜோதி வடிவாக கையில் அமிர்தகலசத்தை ஏந்தியபடி தோன்றியவர். இவர் ஆயுர்வேதத்தின் பிதாவாகப் போற்றப்படுகிறார்.
நோய்வாய்பட்டிருப்பவர்களுக்கு இக்கோயிலில் ‘முக்குடி’ என்னும் மருந்து வழங்குகிறார்கள். 28 மூலிகைகள் கலந்து செய்யப்பட்ட மருந்தை தன்வந்திரிபகவான் கையில் உள்ள தங்கக் குடத்தில் வைத்துப் பூஜித்து பக்தர்களுக்குத் தருகிறார்கள். முன்பதிவின் பெயரிலேயே கிடைக்கும். இதனைப் பருகுவதால் பக்தர்களுக்கு நோய்கள் குணமடைகின்றன. குழந்தை பாக்கியம் கிடைக்க கதகளி வழிபாடு செய்கிறார்கள். இக்கோயிலுக்கும் குருவாயூரப்பன் கோயிலுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. த்வாபர யுகத்தில் ஸ்ரீவாசுதேவர் தன்வந்திரி கோயிலை வழிபட்டார். இதே த்வாபர யுகத்தில் ஸ்ரீநந்தகோபர் குருவாயூர் கோயிலை வழிபட்டார் என்கிறது வரலாறு.


மீனாட்சிக்கு மஞ்சள் நீராட்டு!
எங்கள் ஊரான சத்திய மங்கலத்திலும் ஒரு மீனாட்சி அம்மன் கோலோச்சி வருகிறாள். எங்கள் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றும் மீனாட்சி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி திருவாதிரையின் போது திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதனையொட்டி பாலிகை தெளித்தல், மாப்பிள்ளை அழைப்பு, சீர் கொண்டு வருதல், தெய்விக முறையில் திருக்கல்யாணம், திருவீதி உலா ஆகியவை வெகு சிறப்பாக நடைபெறும்.
திருமணத்திற்கு அடுத்த நாள் எங்கள் ஊரில் நிகழ்த்தப்படும் தோழிப் பெண்கள் திருவீதி உலாவில் அனைத்து மங்கையர்களும் பங்கு கொண்டு குதூகலத்தோடு அன்ன வாகனத்தில் பவனிவரும் அம்மனைப் பின் தொடர்வார்கள். அப்போது பல வீடுகளின் முன்பு அம்மன் தங்கி அவர்களது ‘கட்டளை’களின் பிரசாதங்களை ஏற்று அனைவருக்கும் விநியோகித்து மகிழும் காட்சியைக் காணலாம்.
ஒருவாரம் நடைபெறும் இந்த உற்சவம் மஞ்சள் நீராட்டு மற்றும் அருகில் உள்ள பவானி ஆற்றில் பாலிகை கரைத்தலோடு நிறைவடையும். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி வெள்ளிக் கிழமைகளிலும் தை வெள்ளிக் கிழமைகளிலும் ஆடிப்பூரம் நாளிலும் நவராத்திரியின் ஒன்பது நாள்களிலும் பல்வேறு அலங்காரங்களோடு பக்தர்களுக்குக் காட்சி அளிக்கும் அன்னை மீனாட்சியின் கருணை கணக்கிட முடியாதது.


கடல் அளவு கருணையாள்!
நாகர்கோயில் நகரில் பார்வதிபுரம் என்னும் பகுதி ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது. அரசர்கள் ஆண்ட காலத்தில் கழுமரம் ஏற்றுதல்" என்ற மரணதண்டனை வழக்கத்தில் இருந்தது. கழுமரம் ஏற்றும் இடமாக இருந்ததால் அப்பகுதிக்குக் கழுவந்திட்டை" என்று பெயர் வழங்கப்பட்டது. அம்மரண தண்டனைக்குச் சாட்சியாக ஓர் அம்மன் கோயில் அந்த இடத்தில் இருந்தது. ‘நடுகாட்டு இசக்கி’ என்று அழைக்கப்பட்டாள்.
மன்னர் ஆட்சி மறைந்து மக்களாட்சி வந்த போது கழுமரம் அகற்றப்பட்டது. அம்மனையும் யாரும் வணங்குவதில்லை. சமூக விரோதிகளின் கூடாரமாக அப்பகுதி மாறியது. ‘அந்த அம்மனுக்கு பூஜை செய்த அர்ச்சகர் குடும்பத்திலுள்ள ஒரு அரசு அதிகாரியின் கனவில் அம்மன் தோன்றி என் கோயிலை புதுப்பித்து பூஜை செய், எல்லா நலனும் பெறுவாய்" என்று கூறியிருக்கிறாள். அவருடைய அயரா முயற்சியில் அச்சிறிய கோயில் புதுப்பிக்கப்பட்டு பூஜை ஆரம்பமானது. பக்தர்கள் கூட்டம் கோயிலை நிறைக்க, அவர்களது வேண்டுகோள்கள் நிறைவேற்றப்பட்டதால் கோயிலை மேலும், மேலும் விரிவுபடுத்தி பெரியதோர் கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது. அம்மன் சர்வ அலங்கார அன்னையாக விளங்கி எல்லா மக்களுக்கும் அருளுகிறாள். கடலளவு கருணையாள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறாள்.

Comments