பாடிய பிரும்மம்

‘‘பெயரில்லாதது, உருவமில்லாதது என்றெல்லாம் சொல்லப்படுகிற பிரும்மத்தை கானம் செய்தவர் சதாசிவ பிரம்மேந்திரர். பிரும்மத்தையும் பாட முடியும் எனக் காண்பித்தவர் அவர்தான்’’ என்றார் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிய தமது சொற்பொழிவில் விசாகா ஹரி.
நம்ப எல்லாருக்குமே ஒவ்வொரு மஹானைப் பிடிக்கும். அதுபோல, சிருங்கேரி மடத்தின் ஆசாரிய மகா புருஷரான சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகளுக்கு சதாசிவ பிரம்மேந்திரர் என்றால் மிகவும் பிடிக்குமாம். எப்படியாவது சதாசிவ பிரம்மேந்திரரை பார்க்க வேண்டும் என்பதே அவரது ஆசையாம். எப்படிப் பார்க்க முடியும்? அவரது காலம் வேறு; இவரது காலம் வேறு என்று நமக்குத் தோன்றலாம். மனசில் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால் மஹான்களையோ அல்லது தெய்வத்தையோகூட நம்மால் நிச்சயம் பார்க்க முடியும்.
தியாகராஜர் ராம நாமத்தை ஜபித்து ஜபித்து எப்பொழுதோ வாழ்ந்த ராமரை தரிசித்தார். புரந்தர தாசரும் அப்படித்தான் விட்டலனை பார்த்தார். அதேபோன்று ஒரு மகானிடத்தில் ப்ரேமை, பக்தி என்பது இருந்தால் அந்த மகானைப் பார்க்க முடியும். புரந்தரதாசர் மேல அப்படி ஒரு அபிமானம் விஜய விட்டல தாசருக்கு. இவர் தாம் வாழ்ந்த காலத்துக்கு முன்பு சுமார் 200, 300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த புரந்தர தாசரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருப்பாராம்.
ஒரு நாள் நதிக்கரையில் அவர் உட்கார்ந்திருந்த பொழுது, எப்பொழுதோ வாழ்ந்து, மறைந்த புரந்தரதாசர், விஜய விட்டல தாசரின் முன் தோன்றி, ‘நாக்கை நீட்டு’ என்று சொன்னதும், ஒண்ணும் புரியவில்லையாம் விஜய விட்டல தாசருக்கு. ‘இது கனவா, நனவா?’ என்று எண்ணியபடியே விட்டல தாசர் நாக்கை நீட்ட, அதில் ‘விட்டல’ என்று எழுதி விட்டுச் சென்றாராம் புரந்தரதாசர். இதை ‘குரு புரந்தர’ என்ற கீர்த்தனையில் விஜய விட்டல தாசரே எழுதியிருக்கிறார். ‘நாரதரின் அம்சமாக இருக்கக்கூடிய புரந்தரதாசர், ‘என் நாவில் வந்து விட்டலா என்று எழுதிய பிறகுதான் எனக்கு கீர்த்தனங்களே எழுத வந்தது’ என்று தம் கீர்த்தனை வழியாகச் சொல்லியிருக்கிறார் விட்டலதாசர்.
அப்படித்தான், சதாசிவ பிரம்மேந்திரரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நரசிம்ம பாரதி ஸ்வாமிகளுக்கும் ஏற்பட்டு, அவர் கரூருக்கு பக்கத்தில் உள்ள நெரூருக்கு வருகிறார். அங்கே சதாசிவ பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்துக்குச் சென்று மூன்று நாட்கள் சாப்பிடாமல், தூங்காமல் தியானத்திலேயே இருந்தாராம். மூன்றாவது நாள் கண் விழித்துப் பார்த்த பொழுது, சதாசிவ பிரம்மேந்திரர் கண் எதிரே தோன்றினாராம்.
அப்போது உதித்ததுதான் நரசிம்மபாரதி ஸ்வாமிகள் அருளிய ‘சதாசிவேந்திர ஸ்தவம்’. இந்த ஸ்லோகத்தில் இவரைப் பற்றி முழுவதுமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
சதாசிவ பிரம்மேந்திரர் மகாஞானி. அனைத்தையும் கடந்தவர். பிரம்மத்தை உணர்ந்து பாடிய அவர், ‘உலகம் முழுவதும் விளையாடும் அந்த ராமர், அந்த க்ருஷ்ணர் என் ஹ்ருதயத்திலும் விளை யாடுகிறார்’ என்று ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார்.
இவருடைய கீர்த்தனைகள் எல்லாமே மிகமிக மென்மையாக இருக்கும். எல்லா கீர்த்தனைக்குள்ளும் ஒரு inbuilt philosophy இருக்கும். ‘கேலதி மம ஹ்ரு தயே ராமா’ என்கிற கீர்த்தனையில், ராவணனின் பத்து தலைகளை ‘தச இந்திரியங்கள்’ என்கிறார். ஹனுமார் தாண்டியது வெறும் கடல் அல்ல, அஞ்ஞான சாகரம் என்கிறார். ராவணன், கும்பகர்ணன் என்கிற இரண்டு அசுரர்கள், ராஜஸ, தாமஸ குணங்கள். ஆக, அஞ்ஞான சாகரத்தைத் தாண்டி விருப்பு, வெறுப்பை அடக்கிக் கொண்டால், அங்கே சீதை கிடைப்பாள், நமக்கு சாந்தி கிடைக்கும். அயோத்திக்கு போய் சாம்ராஜ்யம் நடத்தலாம். நம் ஹ்ருதயம்தான் அயோத்தி.
சத்தியமாகவும், ஆனந்தமாகவும் ராமர் இங்கே இருக்கிறார் என்று அழகான பொருள் பொதிந்திருக்கும். இப்படித்தான் சதாசிவ பிரம்மேந்திரர் அருளிய எல்லாக் கீர்த்தனைகளிலும் பக்தி ரசம் சொட்டும் அர்த்தங்கள் உள்ளே பொதிந்து பொதிந்து இருக்கும்.
சுமார் 400 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் சதாசிவ பிரம்மேந்திரர். புதுக்கோட்டைக்கு பக்கத்தில் வாழ்ந்த மீனாட்சி சுந்தரேசர், பார்வதி அம்மாள் தம்பதிக்கு பிறந்த குழந்தை சிவராமக்ருஷ்ணன். பிச்சை குப்பன் என்கிற surname கொண்டு வளர்ந்தது. அக்குழந்தைதான் சதாசிவ பிரம்மேந்திரர். அறிவாளியா, கற்பூர புத்தியோடும் வளர்ந்தது அக்குழந்தை. படிக்கும் பொழுதே நல்ல சங்கீத ஞானமும் அவருக்கு உண்டு. திருவெண்காட்டில் அதிஷ்டானம் கொண்டுள்ள ஸ்ரீபரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தீட்சை பெற்று அவ தூத ஞானியானவர் இவர்.
‘ஸர்வம் பிரம்மமயம் ரேரே’ என்று பிரம்மத்தைக் குறித்துப் பாடிய இவர், ‘முகுந்தேதி’ ‘பிபரே ராமரஸம்’, ‘மானஸ சஞ்சரரே’ உள்ளிட்ட பாடல்களில் அவதாரங்களான ராமனையும் கிருஷ்ணனையும் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார். ஏன்? மனுஷ மனசுக்கு ஒரு பிடிமானம் தேவை என்பதற்காக. என்ன காரணம்?
எதுவுமே ஸ்திரம் இல்லை. நம் உடம்பே ஒரு துக்கம். ஒரு தலை முடி நரைத்து விட்டாலே அப்படி ஒரு துக்கம், ஒரு வியாதி வந்து விட்டால் துக்கம், மிருகங்களால் வரக்கூடிய துக்கம், இயற்கையால் துக்கம், ‘தாபத்ரய சா’ ‘ஸ்திரகா’... இப்படி நம் மனத்தில் எல்லாமே கயிறு கட்டப்பட்டிருக்கு. materialism என்கிற கயிறு கட்டியிருக்கு. ‘க்ருஷ்ணா’ என்று சொல்வதை விட்டு விட்டு எங்கெங்கோ செல்கிறதே மனம். கட்டப்பட்டிருக்கும் இந்தக் கயிற்றை அவிழ்த்து விட வேண்டும் என்று பாடியிருக்கிறார். இப்படி அவர் எழுதிய ஒவ்வொரு பாடலிலும் ஆழமான கருத்துக்கள் பொதிந்து இருக்கும்.
நினைத்த மாத்திரத்திலேயே காட்சி தரக்கூடிய மஹானான சதாசிவ பிரம்மேந்திரரை நினைப்பதும், அவர் கருத்துகளை நம்மில் நிறைத்துக் கொள்வதும் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்.

Comments