பரவாசுதேவன்

வீரமபதத்தில் பரவாசுதேவனாக எழுந்தருளியிருக்கும் பகவானை, மூலவராக நாம் தரிசிப்பது தர்மபுரியில் உள்ள கோட்டை பெருமாள் கோயிலில்.
ஆதிசேஷனது ஏழு தலைகளும் குடையாக இருக்க, நீண்ட உடல் மூன்று சுற்றுகளாக அமைந்து சர்பாசனமாகத் திகழ, இந்த உயர்ந்த ஆசனத்தில் பரவாசுதேவ பெருமாள் அமர்ந்திருக்க, அவரது மடியில் வரமகாலட்சுமி தாயார் அமர்ந்திருக்கிறார்.
தாயாரின் பாதம் தாமரை மலர்மேல் பதிந்துள்ளது. பெருமாளின் பாதத்தை கருடாழ்வார் தாங்குகிறார். அருகே வணங்கிய படி ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். ரத்னசிம்மாசனத்தில் எழுந்தருளி பரிபாலனம் செய்கிறார் பகவான். இவை அனைத்தும், ஒரே கல்லில் உருவானவை என்பது தான் தனிச்சிறப்பு.
‘தோள் கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலமன்ன தாள் கண்டார் தாளே கண்டார்’ என்ற கம்பனின் வாக்குக் கிணங்க பரவாசுதேவ பெருமாள் கம்பீரமும், அழகும் ஒருங்கிணைந்து காட்சியளிக்கிறார். வரங்களை வாரி வழங்கும் வரமகாலட்சுமி கனிவான பார்வையால் நம் மனத்தைக் கரைக்கிறாள்.
விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 44 இடங்களில் பகவான் பரவாசுதேவரின் சிறப்பு விவரித்துக் கூறப்பட்டுள்ளது. கர்நாடக இசைமேதை புரந்தரதாசர், ‘ஜகதோத் தாரண’ என்ற புகழ் பெற்ற தமது கீர்த்தனையில், ‘பரம புருஷன, பரவாசுதேவன’ என சிறப்பித்துப் பாடியுள்ளார்.
தீர்த்தம்: சனத்குமார நதி, தல விருட்சம்: மூலிகை மரமான ஆஷா மரம், சிவனுக்குரிய வில்வ மரம், மாரியம்மனுக்குரிய வேப்ப மரம். மூன்று விருட்சங்களும் ஒருங்கே உள்ளது இத்தலத்தின் சிறப்பு.
சித்ரா பௌர்ணமி, வைகாசி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, கருடபஞ்சமி, வரலட்சுமி விரதம், பிரதி திருவோணம், காலையில் சிறப்பு திருமஞ்சனம், ச்ரவண தீபம் ஏற்றுதல் மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இக்கோயிலில் ஆண்டாள், விஷ்ணு துர்க்கை, ஆஞ்சநேயர் ஆகியோரும் தரிசனம் அளிக்கின்றனர்.
பெருமாளை தரிசிக்கும்போது, ‘சீரிய சிங்காசனத்தில் அமர்ந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்’ என்று ஆண்டாள் பாடியதுதான் நினைவுக்கு வருகிறது. நம்முடைய பிரார்த்தனையும் அப்படியே அமையட்டும்.
செல்லும் வழி: தர்மபுரி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ..
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை.
தொடர்புக்கு: 99409 27237


தீர்த்தகிரீஸ்வரர்
இராவணனை சம்ஹாரம் செய்துவிட்டு அயோத்தி நோக்கிச் செல்லும்போது சிவபூஜை செய்ய விரும்பினார் ஸ்ரீராமர். பூஜைக்குக் காசியிலிருந்து கங்கா தீர்த்தமும் பூவும் எடுத்து வர அனுமனை அனுப்பினார். அவர் வரத் தாமதமாகிவிட, ராமர் அம்பைப் பிரயோகித்தார். அங்கிருந்த மலைப் பாறையிலிருந்து தீர்த்தம் பீறிட்டது. அதை வைத்து ராமபிரான் சிவ பூஜை செய்தார் என்கிறது தலபுராணம். இந்தத் தலம் தீர்த்தமலை.
இங்கு ‘தீர்த்தகிரீசுவரர்’ எனும் பெயரில் ஈசனும், வடிவாம்பிகையாக தேவியும் அருள்பாலிக்கின்றனர். ஈசன் சுயம்பு மூர்த்தி. அன்னை வடிவாம்பிகை இங்குள்ள கௌரி தீர்த்தம் கொண்டு ஈசனை வழிபட்டு அவரின் இடப்பாகம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டியும், இங்குள்ள புற்றில் கயிறு கட்டியும் வழிபடுகின்றனர். திருமணம் தடைபடுவோர் தல விருட்சமான பவளமல்லி மரத்தில் கயிறு கட்டி தடை நீங்கப்பெறுகின்றனர். நாகதோஷ நிவர்த்தி தலமாகவும் இது விளங்குகிறது. இங்கு வீசும் மூலிகைக் காற்று பக்தர்களின் நோய்களை நீக்குவதாகக் கூறுகிறார்கள்.
முடி எடுத்தல், காது குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களைச் செய்கிறார்கள். தேன், நல்லெண்ணெய், வாசனை திரவியப் பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, அரிசி மாவு, பழவகை கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள். தவிர சொர்ணாபிஷேகமும் செய்கிறார்கள்.
‘தவசாகிரி’ எனும் புராணப் பெயர் கொண்ட இத் தலத்தில் ராம தீர்த்தம் உட்பட குமார, அகத்திய, கௌரி, அக்னி என பல பெயர்களுடன் தீர்த்தங்களும் உள்ளன. தவிர, மலையைச் சுற்றிலும் வாயு தீர்த்தம், வருண தீர்த்தம், இந்திர தீர்த்தம், அனுமந்த தீர்த்தம் எம தீர்த்தம், மலையின் உச்சியில் வசிஷ்ட தீர்த்தமும் ஈசனை சுற்றி உள்ளதால் இத்தலம் ‘தீர்த்த மலை’ என அழைக்கப்படுகிறது.
சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், பிரதோஷ நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் இக்கோயிலில் நிரம்பி வழிகிறது. ராமன் வழிபட்ட பெருமானை, நாமும் வழிபட்டு நலம் பெறுவோம்.
செல்லும் வழி: தர்மபுரி மாவட்டம் அரூரிலிருந்து 16 கி.மீ.. பஸ் வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 6 - 11 மணி மாலை 4- 8 மணி
தொடர்புக்கு: 04346 - 283599

Comments