திருமேனியழகர்

அழகர் என்றதும், மதுரை அருகேயுள்ள அழகர் கோயிலும் கள்ளழகரும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான ஈசனும் ‘அழகர்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அந்தத் தலம் மகேந்திரப்பள்ளி.
கௌதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது தகாத ஆசை கொண்ட இந்திரன், உடம்பெல்லாம் கண்ணாகும்படி சாபம் பெற்றான். அந்த சாபம் நீங்க இந்திரன் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இங்குதான் ஈசன் ‘திருமேனியழகர்’ என்ற அழகிய திருநாமத்துடன் விசேஷமாக அருள்புரிகிறார். அன்னை உமையும் வடிவாம்பிகையாக அருள்கிறாள். இத்தலம் சம்பந்தர் பாடல்பெற்ற சிறப்புடையது.
தல விருட்சம் கண்ட மரம், தாழை. சூரியன், சந்திரன் மற்றும் பிரம்மா ஆகியோர் பூஜித்த இத்தலத்தில், பங்குனி மாதத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. சிவன் சன்னிதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி அருள்கிறார். பிராகார வலத்தில், மனைவியுடன் சண்டிகேஸ்வரர் இருப்பது இத்தலத்தின் விசேஷ அம்சம்.
தனிச் சன்னிதியில் இருக்கும் விநாயகருக்கு இருபுறத்திலும் ராகு, கேதுக்கள் உள்ளனர். விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரும் அருள்புரிகின்றனர். தனியே நவக்கிரக சன்னிதி இல்லை. முன்வினைப் பயனால் சிரமப்படும் பக்தர்களும், ஜாதகத்தில் சூரிய, சந்திர தசை நடப்பவர்களும் இங்கு வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி ஈசனிடம் வேண்டினால், அவர்களின் தலையெழுத்து மாறி வாழ்க்கை வளம்பெறும் என்பது நம்பிக்கை. தவிர, முகப் பொலிவு பெறவேண்டி சுவாமிக்கு வெண்ணிற வஸ்திரமும், அம்பாளுக்கு மஞ்சள் நிற வஸ்திரமும் அணிவித்து வழிபடுகிறார்கள்.
மகா சிவராத்திரி, மார்கழித் திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை போன்ற விழாக்களும் இங்கு வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
தரிசன நேரம்: காலை 9 - 12; மாலை 6 - 7.30.
தொடர்புக்கு: 04364 292 309
செல்லும் வழி: சிதம்பரம் கொள்ளிடத்திலிருந்து கோயிலடிப்பாளையம் சமீபத்தில் உள்ளது இத்தலம்.

முடிகொண்டான்


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில், திருக்கண்ணபுரம் மற்றும் சிறுபுலியூர் திவ்ய தேசங்களுக்கு இடையே அமைந்துள்ளது முடிகொண்டான் என்ற கிராமம். இங்குள்ள ராமர் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையும் பெருமையும் வாய்ந்தது.
பொதுவாக, ராமர் கோயில் தெற்கு திசை நோக்கித்தான் அமைந்திருக்கும். ஆனால், இங்கு மூலவரான கோதண்டராமர், சீதா மற்றும் லட்சுமணனுடன் கிழக்கு முகமாகவும், ரங்கநாதர் தனி சன்னிதியில் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். கோயிலுக்கு எதிரில் அனுமனுக்கு தனிச் சன்னிதியும், அதன் பின்னால் தீர்த்தக் குளமும் உள்ளது.
ராவண வதம் முடித்து திரும்புகையில், தாம் ஏற்கெனவே வாக்களித்தபடி பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் ராமர் விருந்துண்ணத் தயாராகிறார். அப்போது ஸ்ரீரங்கநாதரை பூஜை செய்த பின்பே விருந்துண்பது வழக்கம் என்று ராமர் தெரிவிக்க, முனிவர் தன் தவ சக்தியால் ஸ்ரீரங்கநாதரை பிரதிஷ்டை செய்தார். ராமரும் அவரை வழிபட்டுவிட்டு விருந்து உண்டதாகத் தல வரலாறு.
எனவே, இக்கோயிலில் முதலில் ரங்கநாதருக்கு பூஜை நடந்தபின்புதான் கோதண்டராமருக்கு பூஜை செய்யப்படுகிறது. பட்டாபிஷேகத்துக்கு முன்பே பரத்வாஜ முனிவருக்கு முடி(மகுடம்)யுடன் காட்சி தந்ததால், ‘முடி கொண்டான் ராமர்’ என இவர் அழைக்கப்படுகிறார்.
தம் வருகையை பரதனுக்கு தெரிவிக்கும் பொருட்டு அயோத்திக்கு அனுப்பப்பட்ட அனுமன் திரும்ப தாமதமானதால் ராமர் விருந்துண்டார். அதை அறிந்த அனுமன் ஆசிரமத்துக்குள் வராமல் கோபித்துக் கொண்டு வெளியிலேயே அமர்ந்து கொண்டாராம். அதனால்தான் அனுமன் இல்லாது ராமர் எழுந்தருளியிருக்கும் மூலஸ்தானம் இங்குள்ளது. ஆனால், உற்சவமூர்த்தியான ஸ்ரீகோதண்டராமர் சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சகிதம் கம்பீரமாய் காட்சி அளிக்கிறார்.
மகாமண்டபத்தில் ஆழ்வார்கள், ஆசாரியர்கள், நாகராஜர், கணேசர் ஆகியோர் உள்ளனர். இங்கு தென்திசை நோக்கியபடி சேஷ சயனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பாதங்களை வருட நாபிக் கமலத்தில் பிரம்மாவுடன் காட்சியளிக்கிறார் ரங்கநாதர். அவருடைய திருவடிகளின் அருகில் ஸ்ரீபரத்வாஜ முனிவர் கை கூப்பிய வண்ணம் காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்புரிகிறார்.
திருக்குளக்கரையில் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேய மூர்த்தியை ‘ஜெயமாருதி’ என்று அழைக்கின்றனர்.
தஞ்சையை ஆண்டுவந்த முடிகொண்ட சோழ மன்னரால் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே இந்தத் தலம் ‘முடி கொண்டான்’ என்ற பெயருடன் திகழ்கிறது. பிரும்மாண்ட புராணத்தில் இத்தலம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
செல்லும் வழி: மயிலாடுதுறை - திருவாரூர் வழியில் 14 கி.மீ.. பஸ் வசதி உண்டு.

Comments