அயோத்யாபட்டினம்

சேலத்திலிருந்து சென்னை செல்லும் பிரதான சாலையில், சுமார் எட்டு கி.மீ. தூரத்தில், அயோத்யா பட்டினத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீகோதண்டபாணி ராமர் கோயில்.
ஐந்து நிலை கோபுரத்தின் நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால், எதிரே மூலவர் சன்னிதி. ஆச்சர்யமாக, இங்கு ராமனுக்கு எதிரே கருடாழ்வார் சன்னிதி! அதை ஒட்டிய வெளிமண்டபம், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட, ஒரே கல்லால் ஆன இருபத்தெட்டு தூண்கள் தாங்க அமைந்துள்ளது.
தூண்களில் யானை, குதிரை, சிங்கம், யாளி இவற்றின் மீது ஆரோகணித்து, கையில் ஆயுதத்துடன் அசுரர்களை அழிக்கும் தேவர்கள், நரசிம்மரின் ஹிரண்ய வதம், த்ரிவிக்ரம அவதாரம், சப்தஸ்வர ஒலி உண்டாக்கும் தூண்கள் என ஏராளமான சிற்பங்கள் கண்களைக் கவரும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளன.
துவார பாலகர்களைக் கடந்து சென்றால் உள் மண்டபம், அர்த்த மண்டபங்களைக் காணலாம். அடுத்து கருவறையில் ராமர், பட்டாபிஷேகக் கோலத்தில் அபய வரத ஹஸ்தராக, அழகிய மாலைகள் அணிந்து சீதையுடன் அருள்பாலிக்கிறார். சீதா தேவி, ராமரின் இடப்புறம் அமர்ந்திருப்பது சிறப்பு.
சீதையின் இடது பக்கம் லட்சுமணரும், ராமரின் வலது பக்கம் பரத, சத்ருக்னர், அனுமன் ஆகியோரும் உள்ளனர். எதிரே ராமரை நோக்கியபடி, விபீஷணனும் சுக்ரீவனும் காட்சி அளிக்கின்றனர். கோதண்டபாணி ராமர் என்றழைக்கப்பட்டாலும், பட்டாபிஷேக ராமராகவே ராமர் இங்கு அருள்பாலிக்கிறார்.
யுத்தத்தில் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டுக்கொண்டு ராமர் அயோத்திக்குத் திரும்பும்போது, வழியில் ஓர் இரவு இங்கு தங்கினார் என்றும், மறுநாள் காலை எழுந்து புறப்படுமுன், விபீஷணனுக்கு அயோத்தியில் நடக்க உள்ள தன் பட்டாபிஷேகத்தை முன்னதாகவே தரிசனம் தந்து அருளினார் எனவும் ஸ்தல புராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே இத்தலம், அயோத்யா பட்டினம் என்ற பெயர் பெற்றது.
பின்னாட்களில் இக்கோயில் மண்ணில் புதைந்து விட்டதாகவும், திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டபோது இக்கோயிலைத் தோண்டி எடுத்து கலை நயத்துடன் கட்டினார் என்றும் வரலாறு கூறுகிறது. இதற்குச் சான்றாக, திருமலை நாயக்கர் தன் தேவியுடன் கைகூப்பியபடி இத்தலத்தில் நின்று கொண்டிருக்கும் சிலை வடிவம் காணப்படுகிறது. வெளிமண்டப மேற்கூரையில் காலத்தால் அழியாத அழகிய வண்ணச் சித்திரங்கள் மனதைக் கவரும் வண்ணம் உள்ளன.
கோயிலின் வெளிச்சுற்றுப் பிராகாரத்தில், ஆஞ்சநேயர், விநாயகர், ஆழ்வார்கள், ஆண்டாள் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. அலைபாயும் மனமுடையவர் இக்கோயிலுக்குச் சென்றுவர, மனம் அமைதி அடைவது நிச்சயம்.

சீதா குண்டம்


தன்னுடைய தூய்மையை நிரூபிக்க தீயில் புகுந்து வெளிப்பட்டாள் சீதாபிராட்டி என்று விவரிக்கும் ராமாயணம். அந்த சீதையின் சிறப்பை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது ஒரு நீர்நிலை. அது சீதா குண்டம் (Sita Kund). பீகார் மாநிலம் முங்கர் (Mungar)என்ற இடத்திலிருந்து நான்கு மைல் தூரத்தில் உள்ளது இந்த சீதாகுண்டம்.
மூன்று புறமும் கங்கையும், நான்காவது புறம் கரக்புர் மலைகளும் (Kharagpur Hills) சூழ்ந்த இயற்கையின் வசீகரமான பகுதி முங்கர். இது ராமாயண காலத்து சீதையை நினைவுபடுத்துவது மட்டுமல்ல; மகாபாரத காலத்தில் வாழ்ந்த கர்ணன் அரசு புரிந்த அங்கதேசப் பகுதி. பிறகு முகலாயர் ஆட்சிக் காலத்தில் நவாப்மிர்காசிமின் அரசாட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி... என்று நீண்ட வரலாறு இப்பகுதிக்கு உண்டு. கங்கை இங்கு வடக்கு நோக்கிப் பாய்வதால், இதன் கரையில் பெருந்திரளாக பித்ரு பூஜை செய்கிறார்கள் பக்தர்கள். என்றாலும், பெரும் திரளான சுற்றுலாப் பயணிகளையும், பக்தர்களையும் இன்று ஈர்ப்பது சீதா குண்டம்தான். அப்படியென்ன சிறப்பு இதற்கு?
ராவணனிடமிருந்து சிறை மீட்கப்பட்ட பிறகு, எரியும் தழலில் புகுந்து தன்னுடைய தூய்மையை உலகுக்கு உணர்த்தினாள் சீதை. தீக்குளித்த பின்பு, தன் உடலின் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள அருகில் உள்ள குளத்தில் குளித்தெழுந்தாள். அதுவே ‘சீதாகுண்டம்’ என்றழைக்கப்படுகிறது. சீதையின் உடல் வெப்பத்தை வாங்கிக் கொண்டதால் இப்போதும் அது வெந்நீர் குண்டமாகவே இருக்கிறது. பாறைகளுக்கு நடுவே குளத்துக்குள்ளிலிருந்து நீர்க் குமிழ்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. இதற்குச் சற்று அருகிலேயே ராமர் குண்டம், லக்ஷ்மண குண்டம், பரத குண்டம், சத்ருக்னன் குண்டம் ஆகியவை அமைந்துள்ளன. இவை அனைத்தும் குளிர்ந்த நீராகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ராமருக்கு உணவு சமைக்க வசதியில்லாமல் சீதை சிரமப்பட்டபோது, பூமித்தாயே அங்கே சீதைக்காக வெந்நீர் ஊற்று ஏற்படுத்தியதாகவும், அதுவே சீதா குண்டம் எனவும் மற்றொரு சுவாரஸ்யமான கருத்து நிலவுகிறது. சீதாகுண்டத்தின் அருகிலேயே ராமர், சீதை, அனுமார் ஆகியோருக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது. சீதை இங்கே ஒரு லிங்கத்தை அமைத்து சிவனை வழிபட்டதால் இங்குள்ள சிவனுக்கு ‘சீதேஸ்வர்’ என்று பெயர். ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். இங்கு நவராத்திரி மற்றும் சிரவண நாட்கள் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
செல்லும் வழி: பீகார் மாநிலம் முங்கர் மாவட்டம் முங்கரில் இருந்து நான்கு மைல். டாக்ஸி வசதி உண்டு. அருகிலுள்ள ரயில் நிலையம் ஜமால்பூர், விமான நிலையம் பாட்னா.

Comments