மனத்துக்கினியான்

பட்டாபிஷேகத்தின்போது ஸ்ரீராமரின் தலையில் பொன் மகுடம் வைக்கப்பட்டதும், மூவுலகங்களிலும் வாழும் ஒவ்வொருவரும் தங்களின் தலையிலேயே அந்த மகுடம் வைக்கப்பட்டதைப்போல் எண்ணி மகிழ்ந்தார்களாம். என்ன காரணம்? ராமன் அனைத்து உயிர்களையும் தம் உயிர் போல பாவித்திருந்தான் என்பதை உணர்த்தும் சூட்சுமம் இது. மாற்றிச் சொன்னால், ராமன் அனைவரின் மனத்துக்கும் இனியவனாய் இருந்தான். எப்படி?
ராமன் என்ற சொல்லுக்கு ‘ரமிக்கச் செய்பவன்’ என்று பொருள். ரமித்தல் என்றால், இன்புறச் செய்தல். ஸ்ரீராமனின் தோற்றம், பார்வை, பேச்சு, செயல், எண்ணம், நடத்தை, வீரம், ஆற்றல், ஒழுக்கம்... என்று எதைப் பார்த்தாலும், அவை அனைத்தும் மற்றவர்க்கு இன்பத்தையே கொடுக்கின்றன.
வனவாசத்துக்குப் புறப்பட்ட ராமனிடம், நானும் உன்னுடன் வருகிறேன்" என்கிறாள் அன்னை கோசலை. அம்மா, கணவருக்குத் தொண்டு புரியும் கடமையிலிருந்து நீங்கள் தவறக்கூடாது" என்று சாஸ்திர நெறியை நினைவூட்டுகின்றான்
‘ராமனுக்குப் பட்டமில்லை’ என அறிந்து சீறிய இலக்குவனிடம்,என் சொல்லைக் கேட்பதால் உனக்குத் துன்பம் வருமென நினைக்கிறாயா" எனக்கேட்டு, சாந்தப்படுத்துகிறான். குமுறிக் கொந்தளித்த பரதனிடம், என்னால் வணங்கப்படத் தக்கவர்கள், உன்னால் வெறுக்கத்தக்கவர்கள் என்று நினைக்கிறாயா?" என்று கேட்டு, கைகேயி மீதான பரதனின் சினத்தை ஆற்றுவித்தான்.
அருகில் இருப்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டு தடுமாறினால், அவர்களை அன்பு, பொறுமை, அறிவு, சாஸ்திர நெறி, கனிவு... இவற்றைக் கொண்டு நெறிப்படுத்த வேண்டும். கோபித்து வெறுக்கக் கூடாது. அதைத்தான் ராமன் செய்தான். இது மனத்துக்கு இனியதல்லவா?
விஸ்வாமித்திரருடன் ஜனகரின் அரண்மனைக்குச் செல்கையில், எதேச்சையாக அண்ணலும் சீதா பிராட்டியும் பார்த்துக் கொள்கின்றனர். அக்கணமே, ‘இவனே தம் மணாளன்’ என அவளின் மனத்துள் பதிகிறான் ராமன். சிவதனுசை எடுத்து நாணேற்று" என வார்த்தையாகச் சொல்லாமல், விஸ்வாமித்திரர் தம்மை நோக்கிய மறுகணமே, அவர் பார்வையின் பொருளுணர்ந்து சிவதனுசை முறிக்கிறான் ராமன்.
சீதையை கரம் பற்றியவுடன், இந்த இப்பிறவிக்கிரு மாதரை சிந்தையாலும் தொடேன்" என வரம் தந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தர்மம் என உலகிற்கு உணர்த்தி, சீதாராமனாகவே வாழ்ந்து காட்டினான்.
தம்பியர் மேல் மாறாய் அன்பு கொண்டு, சகோதர இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாயிருந்து நம் மனத்திலும், உயிரிலும் நிறைகிறான்.
மிதிலையை நாடிச் செல்லும்போது, அவன் பாதம்பட்ட கல், அகலிகையாகி அடிபணிந்தது; மைதிலியை தேடிச் செல்லும்போது, அரக்கன் விராதன், பெருமானின் பாதம்பட்டு தேவ உரு பெற்றான். ராம பாணம் மூவுலகையும் ரட்சித்தது என்றால், ராமபாதம் அண்டியோரை எல்லாம் ஆட்கொண்டு அருளியது.
எதிர்த்து நின்ற ராவணன்கூட, இறுதியில் ‘இவனோதான் அவ்வேத முதற்காரணன்’ என உணர்ந்து போற்றும் அளவுக்கு அவனது மனத்திலும் ராமன் நிற்கிறான். ராவணன் மனைவி மண்டோதரி, நீங்கள் எதிர்க்கப்போவது சாமான்ய மானிடன் அன்று, சாட்சாத் அந்த பரந்தாமன்"எனக் கூறியதிலிருந்து, அவள் மனத்துக்குள்ளும் ராமன் இறைவனாக - இனியவனாயிருக்கிறான்.
இப்படி அனைவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்த ராமனை, ‘மனத்துக்கினியான்’ என்றே பாடுகிறாள் ஆண்டாள் நாச்சியார்.
மனத்துக்கு இனியவனான அந்த ராமனை, சென்னை மடிப்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஒப்பிலியப்பன் - பட்டாபிஷேக ராமர் திருக்கோயிலில் தரிசிக்கிறோம். இக்கோயிலில் சீதாதேவி இடப்புறம் அமர்ந்திருக்க, அருகே லட்சுமணன், பரதன், சத்ருக்னன், விபீஷனன், சுக்ரீவன், அனுமன் ஆகியோர் சகிதமா அருள்புரிகிறார் ஸ்ரீராமர்.
வேடன் குகன், குரக்கின சுக்ரீவன், அசுரகுல வீடணன் எனும் இவர்களை ‘தம்பி’ எனத்தான் சொன்னது வார்த்தைக்கு அல்ல; நிஜம்தான் என்று அவர்களையும் தம்முடன் கொண்டு, இங்கே நிரூபணம் காட்டுகிறான் பெருமான்.
‘ஒரு சொல்; ஒரு இல்; ஒரு வில்’ என்பதுதான் ராமனுக்குரிய தனிச்சிறப்பு. அது மிகைப்படுத்தப்படாத மெய் என்பதை, தரிசிக்கும்போது நம்மால் உணர முடிகிறது.
இங்கு பூமாதேவி, மார்க்கண்டேய மகரிஷி சகித ஸ்ரீஒப்பிலியப்பன், சுதர்சனாழ்வார், ஆசார்ய பெருமக்கள் எனப் பல சன்னிதிகள். மாதந்தோறும் சித்திரை நட்சத்திரத்தன்று சுதர்சன ஹோமம், திருவோண நாளில் ஸ்ரீஒப்பிலியப்பனுக்கு திருமஞ்சனம், புனர்பூச நாளில் ஸ்ரீராமருக்கு திருமஞ்சனம் என விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. ஸ்ரீராமரின் அவதார தினமான ஸ்ரீராமநவமி வைபவம் இவ்வாலயத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவிருக்கிறது.
காருண்யமே வடிவான காகுத்தனை - மனத்துக் கினியான் என்று நாச்சியார் சொன்னதன் அர்த்த ஆழத்தை, இந்த சன்னிதியில் நிற்கும்போது உணர்கிறது மனம். இப்படி உணரும்போதுதான் நாம் அவன் மனத்துக்கு இனியவர்களாகிறோம் என்பதும் புரிகிறது.
செல்லும் வழி: சென்னை வேளச்சேரியிலிருந்து மடிப்பாக்கம் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ.. பேருந்து வசதி உள்ளது.
தொடர்புக்கு: 94442 01474/94444 89108

Comments