நவராத்திரி என்றாலே, புரட்டாசி மாதத்தில் கொண்டாடும் சாரதா நவராத்திரிதான் நம் நினைவுக்கு வரும். இதுபோன்றே விசேஷமானது வசந்த நவராத்திரி. அம்பாள் உபாசகர்களுக்கு விசேஷமான காலங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக மாதங்கி உபாசகர்களுக்கு மிகச் சிறப்பான காலம். இந்த நவராத்திரியை சிறப்பாகக் கொண்டாடும் கோயில்களில் வாரங்கல் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று.
இக்கோயில் இரண்டாம் புலிகேசியால் முதலில் கட்டப்பட்டது; பின்னர் முஸ்லிம் மன்னர்கள் அலாவுதீன் கில்ஜி மற்றும் பாமினி சுல்தான்களின் ஆட்சியில் கவனிப்பாரின்றி சிதிலமடைந்து போய்விட்டது என்று இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
ஆனால், அதையடுத்து, நடந்தவை வியப்பு. கி.பி. 1940-ல் கர்நாடகாவை சேர்ந்த கணேஷ் ராவ் என்னும் தேவி உபாசகர் இந்த இடத்துக்கு வந்தார். சிதிலமடைந்த இந்தக் கோயிலை எப்படியாவது புனருத்தாரணம் செய்ய வேண்டும் என்று தோன்றியது அவருக்கு. இங்கு ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு, நன்கொடையாளர்களிடம் பொருளுதவி பெற்று இக்கோயிலைப் புதுப்பித்துள்ளார். (ஆலயத்தைப் புனரமைத்த கணேஷ்ராவ் என்கிற கணபதி சாஸ்திரிகள் இக்கோயில் தர்மகர்த்தாவாக தனது 113 வயதுவரை இருந்து கடந்த நவம்பர் 2011 அன்றுதான் காலமானார்.) 1950ல் கோயில் பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அதற்கு முன்புவரை இங்கு மிருகபலி வழக்கில் இருந்திருக்கிறது. கும்பாபிஷேகத்துக்குப் பிறகு அது தடைசெய்யப்பட்டு ஆறு கால பூஜைகள் நடந்து வருகின்றன.
இங்குள்ள காளி மேற்கு நோக்கியவளாக, சாந்தம் ததும்பும் திருமுக மண்டலத்துடன், எட்டு திருக்கரங்களிலும் ஆயுதம் ஏந்தியவளாகக் காட்சி தருகிறாள். காளியின் உக்ரத்தைக் குறைக்க, அம்ருத பீஜாட்சரத்தை எழுதியும், கண்களின் அமைப்பில் மாற்றம் செய்தும் சாந்தரூபியாக மாற்றி வழிபட ஆரம்பித்துள்ளனர்.
இக்கோயிலின் விசேஷ வைபவமாகத் திகழ்வது வசந்த நவராத்திரி. இந்த நாட்களில், தினமும் வெவ்வேறு கோலங்களில் ஸ்ரீகாளியை அலங்கரித்து திருவுலாவும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நவராத்திரி வைபவத்தின்போது, ரிஷபம், சிம்மம், சூரிய பிரபை, ரதம், முத்துப்பல்லக்கு என வெவ்வேறு வாகனங்களில் வலம் வருகிறாள் ஸ்ரீகாளி. அது மட்டுமல்ல; சரஸ்வதி, சர்வமங்களா, வைஷ்ணவி, ராஜலக்ஷ்மி என வெவ்வேறு அலங்காரங்களும் அம்பிகைக்குச் செய்யப்படுகின்றன. தவிர, கந்தோத்சவம், தீர்த்தோத்சவம், புஷ்பயாகம் ஆகியவையும் சிறப்புற நடைபெறுகின்றன.
இக்கோயில் வாரங்கல் மற்றும் சுற்று வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தக் கோயிலுக்கு அருகில் உள்ள குன்றுகளில் சில விசேஷ ஆன்மிக சக்திகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அருகில் உள்ள ஏரியில் பக்தர்கள் உற்சாகமாக படகு சவாரி செய்கிறார்கள். அதனால், சுற்றுலாவுக்குரிய அழகான இடமாகவும் அமைந்திருக்கிறது இத்திருக்கோயில்.
காளி என்று சொன்னால், பொதுவாக அவள் தோற்றத்தை எண்ணி அச்சம்தான் வரும். மாறாக, அவளை ஆனந்தமாய், ஆரவாரமாய் ஆராதிக்கின்ற இந்தக் கோலாகலம் காண வேண்டிய ஒன்று. வாரங்கல் போக முடியாவிட்டாலும், வசந்த நவராத்திரி காலத்தில் வீட்டிலேயே பூஜித்து வசந்தத்தை வரவேற்கலாமே!
இக்கோயில் இரண்டாம் புலிகேசியால் முதலில் கட்டப்பட்டது; பின்னர் முஸ்லிம் மன்னர்கள் அலாவுதீன் கில்ஜி மற்றும் பாமினி சுல்தான்களின் ஆட்சியில் கவனிப்பாரின்றி சிதிலமடைந்து போய்விட்டது என்று இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
காளி என்று சொன்னால், பொதுவாக அவள் தோற்றத்தை எண்ணி அச்சம்தான் வரும். மாறாக, அவளை ஆனந்தமாய், ஆரவாரமாய் ஆராதிக்கின்ற இந்தக் கோலாகலம் காண வேண்டிய ஒன்று. வாரங்கல் போக முடியாவிட்டாலும், வசந்த நவராத்திரி காலத்தில் வீட்டிலேயே பூஜித்து வசந்தத்தை வரவேற்கலாமே!
Comments
Post a Comment