திருச்சூர் திருவிழா

ஆலயங்களின் சிறப்பும், அழகும் அங்கு நடக்கும் திருவிழாக்களின்போதுதான், பெருமளவில் வெளிப்படுகின்றன. பெருந்திரளான மக்கள் கூட்டம் திரண்டு வந்து தரிசிக்கும் அழகும், நம்பிக்கையும், பக்தியும் ஆலய விழாக்களுக்கே உண்டான சிறப்பம்சம். அந்த வகையில், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அன்னமானந்த மகாதேவர் ஆலயத்தில் நடைபெறும் திருவிழா குறிப்பிடத்தக்கது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகிழும் இந்தத் திருவிழா பத்து நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறுகிறது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் கல்லூர் தெக்குமூரி கிராமத்தில் உள்ளது அன்னமானந்த மகாதேவர் கோயில். வெளி உலகுக்கு அதிகம் அறியப்படவில்லையானாலும், இந்தக் கோயிலின் அமைப்பு, அதில் அமைந்துள்ள சித்திரவேலைப்பாடுகளுக்காகவே அவசியம் சென்று பார்க்க வேண்டிய ஒன்று.
இக்கோயிலில் அருள்பாலிக்கும் சிவன், அர்ஜுன னுக்கு பாசுபதாஸ்திரம் வழங்கிய களிப்பில் கிராத மூர்த்தியாக உள்ளதாகக் கருதப்படுகிறார்.
இங்கு ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கும் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. கிழக்கில் மகாகாளி சன்னிதியும், வடகிழக்கில் நாகராஜன், துர்க்கை ஆகியவர்களுக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. துர்க்கை சிம்ம வாஹனத்தில் காட்சியளிக்கிறாள். நரசிம்மரும் கிருஷ்ணரும் தனித்தனிச் சன்னிதிகளில் காட்சி தருகின்றனர். அனைத்து சன்னிதிகளின் மரக் கதவுகளிலும், தடுப்புகளிலும் செதுக்கப்பட்டுள்ள சித்திர வேலைப்பாடுகள் மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளன. இங்குள்ள பலிபீடம் சற்று தாழ்ந்தும், லிங்கத் திருமேனி அமைந்துள்ள ஆவுடையார் சதுரமாகவும் அமைந்துள்ளது.
கேரள கடற்கரையில் அமைந்துள்ள 32 கிராம மகாகே்ஷத்ர கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கு 5 கால பூஜையும் 3 பிண்டபலியும் நாள்தோறும் நடைபெறுகின்றன. இதற்காகவே அந்தக்காலத்தில் 64,000 மரக்கால் நெல் இந்தக் கோயில் பூஜைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் செய்யப்படும் நைவேத்யம் 10 மரக்கால் (ஒரு மரக்கால் என்பது இரண்டு பெரிய படி) என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனங்கள் இக்கோயிலில் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. அதேபோல் 3 விஷ்ணு சன்னிதிகளிலும் அஷ்டமி, ரோகிணி ஆகிய தினங்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. என்றாலும் வருடாந்திர விழாவான ‘கும்பம்’ விசேஷமானது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின்போது மூர்த்திகள் யானையின் மீது பவனி வருகிறார்கள்.
இது மட்டுமல்ல; மறைந்து கொண்டிருக்கும் கலைகளுக்கும் உயிரூட்டிக் கொண்டிருக்கிறது இக்கோயில். உதாரணமாக, சாக்கியர் கூத்து வகையைச் சொல்லலாம். இந்தக் கலைகளின் சுவடுகளை மீளப்பிடித்து வைத்திருக்கிறது இந்தக் கோயில் என்பதும், இதற்குரிய தனிச் சிறப்பாகச் சொல்லலாம். இவை இந்த ஆலயத்தின் கூத்தம்பலத்தில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments