பௌமன்

வண்ணங்களில் அழுத்தமானது சிவப்பு. ஓவியர்கள் மிக அதிகம் பயன்படுத்தும் நிறம் என்றும் இதற்குச் சிறப்புண்டு. கோவைப்பழம், செம்பருத்தி, கிளியின் மூக்கு, ரத்தம் என்று சிவப்பின் சீரை அடுக்கலாம். புரட்சிக்கான அடையாளமும் இதுதான். எச்சரிக்கையைக் குறிப்பதும், கலவரத்தை உணர்த்துவதும்கூட இதுதான். சிக்னல்களில்கூட சிவப்பு விளக்குதான் நிறுத்தம். அழுத்தமான இந்த சிவப்பு வண்ணத்துக்கு உரியவர் செவ்வாய்.
வசிஷ்டர் வழி வந்த பரத்வாஜர் என்ற முனிவருக்கும் தேவ மங்கை ஒருத்திக்கும் மகனாகப் பிறந்தவர் ‘அங்காரகன்’. இவர் விநாயகர் அருளால் நவக்கிரகங்களில் ‘செவ்வாய்’ எனப் பெயர் பெற்றார் எனவும் கூறுவர். மச்ச புராணத்தில் செவ்வாய் பற்றிய ஒரு கதை உண்டு.
தம்மை மதிக்காமல், தட்சன் செய்த வேள்வியை அழிக்க வீரபத்திரரை ஏவினார் சிவபிரான் என்பது பலரும் அறிந்த புராணம். வீரபத்திரர் வரும்போது சுக்ராச்சாரியார் அவரைப் பணிந்து வணங்கி தமக்கு உயிர்ப்பிச்சை கேட்க, வீரபத்திரரும் அவரை மட்டும் விட்டுவிட்டு மற்ற எல்லோரையும் அழித்துவிட்டார். அதைக் கண்ட தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். பிறகு சிவபெருமானும், தேவர்களும் ஒன்றுகூடி வீரபத்திரரை சாந்தப்படுத்தினார்கள். சாந்தம் அடைந்த அவர், தேவர்களின் விருப்பை ஏற்று செவ்வாய் பகவானாக இயங்கத் தொடங்கினார் என்கிறது மச்ச புராணம்.
செவ்வாயின் அதிதேவதை சுப்ரமண்யர், பிரத்யதி தேவதை கே்ஷத்ரபாலகர் என்கிற பைரவர். இவரது வேறு பெயர்கள் செவ்வாய், அங்காரகன், குஜன், பூமி புத்திரன் என்பதால் பௌமன். ஜோதிடப்படி மேஷம், விருச்சிகம் ராசிகளுக்கு அதிபதி. நட்சத்திரங்கள்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம். சனி, புதன், சுக்ரன் பகைவர்கள். தனுசு, மீனம், கடகம், சிம்மம் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் மிகுந்த சுபக்கிரகமாகி பல நன்மைகளை வாரி வழங்குவார்.
ஜோதிடத்தில்...
சிவப்பு வண்ணமும், ரஜோ குணமும் பொருந்தியவர். சுறுசுறுப்பும் செயலாற்றலும் கொண்டவர். லக்னாதிபதி செவ்வாயாக அமைந்து (மேஷம் - விருச்சிகம்) ஜாதகத்தில் செவ்வாய் வலிமை பெற்று இருந்தால், அந்த ஜாதகரை வீரமிக்கவராக, சுறுசுறுப்புடன் செயலாற்றக்கூடியவராக, எந்தச் சூழ்நிலையையும், பிரச்னையையும் எதிர்கொள்ளக்கூடிய மனோதிடம், தைரியம் உள்ளவராக விளங்கச் செய்வார்.
மிதமிஞ்சிய ஆர்வம், கொள்கையில் விடாப்பற்று, ஆவேசம் முதலியவையும் இவரது காரகத்துவம். செவ்வாய், (கேதுவுடன் இணைந்தும், கேது வீற்றிருக்கும் அதிபதியுடன் சேர்ந்தும்) மனத்தை குறிக்கும் வீட்டின் மீது தனது செல்வாக்கைச் செலுத்தினால், அதாவது லக்னம், நான்கு, அவ்வீட்டு அதிபதிகள் மற்றும் சந்திரன் (பார்வை, சேர்க்கை) உண்டாகும் இவ்வமைப்பு வன்முறை எண்ணங்களை உருவாக்க வல்லது. மேற்சொன்ன அமைப்பு நான்கு மற்றும் பதினொன்று ஆகிய வீடுகளுக்கும், அதன் அதிபதிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும்போது அந்த ஜாதகர் கொலைக்காரனாக மாறவும் கூடும்.
அடிபடுதல், உடலில் வெட்டு, குத்து, காயம் ஆகியவற்றுக்கும் செவ்வாயே காரணம். செவ்வாய் சகோதரகாரகன். இவர் மூன்றில் பலமற்ற நிலையில் இருந்து, மூன்றாம் அதிபதியும் பாதிக்கப்பட்டிருந்தால், சுபக்கிரகம் சம்பந்தம் (சேர்க்கை - பார்வை) இல்லாமலிருந்தால் அந்த ஜாதகருக்கு இளைய சகோதரர் இருக்க மாட்டார்.
செவ்வாய்க்கு எட்டாம் பாவ சம்பந்தம் ஏற்பட்டு, எட்டாம் அதிபதியும், செவ்வாயும் ராகுவினால் பாதிக்கப்பட்டு இருந்தால் ஹெர்னியா, விரைவாதம், விதைப்பை கோளாறு போன்ற நோய்கள் தோன்றும்.
ரிஷபம் லக்னமாகி, சுக்ரனும், புதனும் இணைந்திருந்து, செவ்வாய் அவர்களைப் பார்க்க, மனைவியை திருமணமான சில (வருடங்கள்) காலத்துக்குள் இழக்க வேண்டி வரும். ஏனெனில் ரிஷப லக்னத்துக்கு புதன் இரண்டாம் வீட்டு அதிபதி. அது, ஏழாம் வீட்டுக்கு எட்டாம் வீடு - அதாவது வாழ்க்கைத் துணைவியின் (வாழ்நாள்) ஆயுள் ஸ்தானம். சுக்ரன் களத்திரகாரகன். எனவே, இருவரும் செவ்வாயால் பாதிக்கப்படும்போது, இளம் வயதிலேயே மனைவியை இழக்கும் நிலை உருவாகிறது. துப்பாக்கிக் குண்டு தாக்கி இறப்பவர்களுக்கும் செவ்வாயின் நிலையே காரணம். செவ்வாய் அதிகாரத்தில் அசாதாரணமான வேகத்தில் - சூரியனுக்கு முன்போ, பின்போ இருக்கும் நிலையானது விரைந்து துளைக்கக்கூடிய துப்பாக்கிக் குண்டுத் தாக்குதலைக் குறிக்கிறது.
செவ்வாய் ராணுவத்தைக் குறிப்பவர். ஜன்ம லக்னம், லக்னாதிபதி, சந்திர லக்னம் அதனதிபதி ஆகியோருக்குச் செவ்வாயின் (சேர்க்கை - பார்வை) பல முண்டாயின், காவல்துறை, ராணுவத்தில் உயர் பதவி வாய்க்கும்.
மன இயல்பை குறிப்பிடும் லக்னம், நான்காம் பாவம், அதனதிபதிகள் மற்றும் சந்திரன் ஆகியோர் செவ்வாயால் பாதிக்கப்பட்டிருந்தால், அடிக்கடி கோபப்படக்கூடியவர். கடகம் - சிம்ம லக்னத்துக்கு, செவ்வாய் - கேந்திர கோணதிபதியாவதால், அவரின் சுப பலம் செல்வம், செல்வாக்கு, அதிகாரம், புகழ் ஆகியவற்றை நல்கும்.
செவ்வாய் 1,4,7,8,12 ஆகிய இடங்களில் தோஷத்தை உண்டாக்குவார் என்றும், அதற்கு விதிவிலக்குகளும் பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. செவ்வாய் பூமிகாரகன், நிலத்தைக் குறிப்பவர். 4,7,8 ஆகிய வீடுகளைப் பார்க்கும் சிறப்புப் பார்வை இவருக்கு உண்டு.
தாமிரம், ரத்தம், சந்தனம், சுதந்திர உணர்வு, சேனாதிபதி, மண்பாண்டம், உளி, கோடரி, ஆணையிடும் அதிகாரம், எவருக்கும் பயப்படாத ஆண்மை ஆகியன இவரது காரகத்துவத்தில் அடங்கும். இவரது ரத்தினம் செம்பவழம். ரத்தச் சிவப்பு இவரது வண்ணம்.
அங்காரக காயத்ரீ (பௌம காயத்ரீ):
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி,
தந்நோ பௌம: ப்ரசோதயாத்
சித்தர் அருளியது
சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை வீரபத்திர மூர்த்திக்கு சிவப்பு நிற மலர்மாலை சூட்டி, சர்க்கரை பொங்கல் நிவேதிக்க வேண்டும். பொங்கலில் அதிகமாக நெய், இனிப்பு, முந்திரி, திராட்சை சேர்த்து, இரண்டு நெய் தீபம் ஏற்றி, வெற்றிலை, பாக்கு, ஒரு எலுமிச்சம் பழம், 1 ரூபாய் காணிக்கை வைத்து வீரபத்திரர் பெயருக்கும் ஜன்ம நட்சத்திரம், ராசி, பெயர் கூறி பரிகாரம் செய்பவரின் பெயருக்கும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். வீரபத்திரருக்கு நீல நிற (அதில் மஞ்சள் நிற பார்டர் இருந்தால் மிக நன்று) வஸ்திரத்தை அணிவிக்கவும். இவ்வாறு செய்தால் செவ்வாயின் அருளைப் பெறலாம். மேலும் பூமி சம்பந்தமான, பிரச்னைகளும் தீரும். வீடு, மனைகள் விற்கவும், வாங்கவும் அனுகூலம் உண்டாகும். கடன் பிரச்னைகளும் தீரும்.
பழனி முருகனும் செவ்வாய்க்கு சிறந்த பரிகாரமூர்த்தி. இயன்றபொழுதெல்லாம் பழனி முருகனுக்கு பால் அபிஷேகம், விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் பலனுண்டு.
வைத்தீஸ்வரன் கோயிலில் சிவன், முத்துக்குமார சுவாமி, தனிச் சன்னிதியில் உள்ள செவ்வாய் மற்றும் வீரபத்திரருக்கு அபிஷேகம், ஆராதனை, பொங்கல் வைத்து, இறைவனின் பெயருக்கும், பரிகாரம் செய்பவரின் பெயருக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷ நிவர்த்தி உண்டாகும்.
மேற்படி கோயிலுக்குச் செல்லும்போது பரிகாரம் செய்பவர் சிவப்பு, ஆரஞ்சு அல்லது வெண்மை நிற ஆடை அணிந்து சென்று வழிபட்டால் மிக நல்லது.

Comments