அவதார மகிமை

தாய் - தந்தை சொற் கேட்டவன் ஸ்ரீராமன்’ என்று அனைவரும் சொல்வர். ஆனால், கவிஞர் பார்வையில் பரசுராமர்தான் அன்னை, தந்தையைத் தெய்வமாகக் கொண்டவர்! ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. கற்பின் செல்வி. ஈர மண்ணில் குடம் பிடித்து, ஆற்றுநீர் முகந்து முனிவரின் பூஜைக்குத் தருவாள். (ஷீர்டி சாயிபாபா பச்சை மண் குடத்தில் நீர் முகந்து வெண்டித் தோட்டத்துச் செடிகளுக்கு ஊற்றுவாராம். அவர் குடத்தை கீழே வைத்ததும்தான் அவை உடையுமாம்! வாமன் தாத்யா தினசரி, சுடப்படாத 2 பச்சை மண் குடங்களை தருவாராம்.)
ரேணுகாதேவி ஒருநாள் நீரில் குடத்தை அமுக்கி நீர் முகக்கக் குனிந்தபோது, வானில் பறந்த கந்தர்வனின் பிம்பம் நீரில் தெரிய, ‘யாரோ அழகன் பறக்கிறானே!’ என நினைத்தாள். உடனே குடம் கரைந்தது. மண் பிசைந்த மங்கை கை பிசைந்து, கணவன் முன் தலை குனிந்து நின்றாள். அடுத்த ஆடவனை, அழகாயிருக்கிறானே என்று நினைத்தாலே கற்பு போய்விட்டது என்ற காலம் அது. ஜமதக்னிக்குக் கோபம் வந்தது. கற்பு தொலைந்த நீ, என் கண் எதிரே நிற்காதே! யாரடா! என் மகனே! இவளைக் கொன்றுவிடு!" என்றார். முதல் மூன்று பிள்ளைகளும், ‘தாயைக் கொல்வதா, பாவத்தைச் சுமப்பதா’ என மறுத்து ஓடிவிட்டனர். நான்காவது மகன் பரசுராமன் ‘தந்தை சொல் வேதம்’ எனத் தாயை வெட்டினான். தலை தனியே விழுந்தது. அற்புதம்! என் மகனே! உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்றார் ஜமதக்னி. மகன், அப்பா எனக்கு என் தாய் உயிருடன் வேண்டும்" என்றான் சட்டென்று. சிரித்தவாறு அந்தத் தலையைப் பொருத்தினார் . தாய் ரேணுகாதேவி புதுப்பிறவி எடுத்தாள். மாரியம்மன், ரேணுகாதேவி அம்மன் ஆலயங்களில் தலை மட்டும் முன்னால் காட்சியளிப்பதைக் கண்டிருப்பீர்கள். அது ரேணுகாதேவியின் உடல் அற்ற தலை! தந்தை ஆணையையும் ஏற்று நடந்து, தாயையும் உயிர்ப்பித்த மகன் பரசுராமன். ஆகவே, ‘தாய் தந்தை சொல்லே உயர்வேதம் என்று சாற்றியதும் ஓர் அவதாரம் - பரசுராம அவதாரம்’ என்று கவியரசர் பாடியது சரிதானே!
‘ஒக மாட, ஒக பாண, ஒக பத்னி வ்கு துடே மனஸா’ என்று சத்குரு தியாகராஜர் பாடினார். ‘ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்’ என்பது ராமாவதாரப் பெருமை! சொன்ன வாக்கு மீறாத சத்திய சந்தன். ஒரே பாணம் எதிரிகளை மாய்க்குமாறு விடும் வீரன். சீதையைத் தவிர மற்றொரு பெண்ணை மனத்தாலும் தீண்டேன் என்ற ஏகபத்தினி விரதன் ஸ்ரீராமன்.
‘அவன்தான் நாரணன் அவதாரம்
அருள்சேர் ஜானகி அவன் தாரம்’
‘இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்ற செவ்வரம் தந்த தலைவன் ராமனையன்றி வேறு யார்?
‘உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட மாட்டேன்’
சிந்தையால், உள்ளத்தால் என்பதுதான் மிக முக்கியமான வார்த்தைகள். உடலால் தொடாமலிருப்பது சூழ்நிலையால், பயத்தால். ஆனால் ஒழுக்கக் கோட்பாடு, ‘மனத்துக்கண் மாசிலன்’ ஆவது அல்லவா? ஆகவே, ஆணின் கற்புக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஸ்ரீராமனை,
‘ஒருவனுக்கு உலகில் ஒருதாரம் என்னும்
உயர்வினைக் காட்டிய அவதாரம் - ராம அவதாரம்’
எனப் போற்றிப் பாடினார்!
‘ரகு குல திலகன், இட்சுவாகு குல திலகன், சூரிய குலதிலகன்’ என்றெல்லாம் ராமனைப் புகழ்வர். ஆனால், யாதவ குலம் எனும் யது குலத்துக்கு பலராமர், கிருஷ்ணர் ஆகிய இரு திலகங்கள்! ராமன் தம்பி லக்குவன். பயிலும் காலம் பத்தொடு நாலும், அயில்வன இன்றித் துயிலை மறந்து, வெயில் மழை என்று பாராது அண்ணனுக்கு அருந்தொண்டாற்றினான் இலக்குவன். மனைவி ஊர்மிளை என்ற ஒருத்தியை மறந்து வந்தான்! ‘ஊர்மிளா கா விரஹ் கான்’ என ஹிந்தியில் மைதிலிசரண்குப்த எனும் கவிஞரின் கவிதை உண்டு! அப்படிப்பட்ட இலக்குவன் பிரம்மாத்திரத்தில் கட்டுண்டு உணர்வற்று விழுந்து கிடக்கிறான். அவனைப் பார்த்து ஸ்ரீராமன் கதறினான்:
‘தம்பீ! உன் அன்னை சுமித்திரை, ராமன் திரும்பி வந்தால் வா. இல்லையேல் முன்னதாக நீ இறந்து விடு என்றாளே! பின் பிறந்த நீ முன் இறந்தாயா? அறம் என்ற ஒன்று இருந்தால், அடுத்த பிறவியில் நான் உனக்குத் தம்பியாகப் பிறப்பேன்!’ என்றழுதான். அதன்படியே பலராமன் ஆதிசேடன் அவதாரம்.
ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அண்ணன். இலக்குவனும் ஆதிசேடன் அவதாரம். தம்பி, அண்ணனாக வந்தான். கிருஷ்ணன் தொண்டு செய்தானா? இல்லையே!
‘ரகு குலம் கண்டது
ஒரு ராமன் இங்கு
யதுகுலம் கண்டது பல ராமன் - பலராமன்!
பூமிதனிலே உழவோர் புகழும் கலப்பை தன்னைப் புயம்தனில் தாங்கி நின்றவன் பலராமன்!
அரசன், கொலையில் கொடியாரை ஒறுத்தால்தான் அறப்பயிரைக் காத்து, நல்லவர்களை வாழ வைக்க முடியும். தனி மனிதன் வாழ்க்கை முறை வேறு; அரசனின் வழி முறைகள் வேறு. யாரை எங்கே சேர்க்க வேண்டுமோ, யாரை எப்படிப் பிரிக்க வேண்டுமோ, அதை அதை ஏற்றபடி செய்பவனே சிறந்த தலைவன். கண்ணன் வெறும் பால கோபாலனா, கோவிந்தனா? இல்லை, அவன் ராஜகோபாலன். அரசு செலுத்த வந்த யதுகுல திலகன், துவாரகைக்கு அதிபதி. அவன் அடி சேர்ந்த துணைவர்கள், பாண்டவர்கள், நல்லவர்கள்; அவர்களைக் காக்கவும், தீயவரான துரியோதனக் கூட்டத்தை அழிக்கவும் அவன் வழிவகை செய்தான். அரச தந்திரங்கள் செய்து அறம் வெல்லச் செய்தான். ஆவணி ரோகிணி அஷ்டமியில் கண்ணன் அவதாரம்.
‘அரசுமுறைப்படி நெறிகாக்க நீ
அடைந்தது இன்னொரு அவதாரம் கண்ணன் -அவதாரம்’
கலி முற்றும்போது குதிரை வீரனாக வந்து அதர் மத்தை முற்றுமாக அழிப்பான் பரந்தாமன். அதுதான் கல்கி அவதாரம் என்கிறார்கள். பஞ்ச பாதகம், வஞ்சகம், சூது எல்லாம் முற்றிய நிலையில்,
‘பரித்ராணாய சாதூனாம்
விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாப னார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே!’
என்று கூறிய கீதாசார்யன் அவதரித்து,
அறம்தனை நிறுத்தத்தான் போகிறான்.
‘விதி நடந்ததென, மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக
நெறி யிழந்தவரும் நிலை
மறந்தவரும்
உணரும் வண்ணம்
தெளிவாக,
இன்னல் ஒழித்துப் புவி காக்க நீ
எடுக்க வேண்டும் ஒரு
அவதாரம் - கல்கி அவதாரம்

திருமால் பெருமைக்கு நிகரேது
- உந்தன்
திருவடி நிழலுக்கு
இணையேது
பெருமானே! உந்தன்
திருநாமம்
பத்துப் பெயர்களில் விளங்கும் அவதாரம்’
என்று பாடுவோம்; பணிவோம்; பரந்தாமனின் அருள் பெறுவோம்.

Comments