நீரின்றி அமையாது உலகு

ஒரு நாட்டின் வளத்துக்கு ஆதாரமாக அமைவது நீர்வளம்தான். ‘நீர் இன்றி அமையாது உலகு’ என்று நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தினார் திருவள்ளுவர் பெருமான். சிவபிரானின் சிரசிலிருந்து கங்கை பொங்குவதும், நீரில் பள்ளிகொண்ட நாராயணனும் நீரின் முக்கியத்துவத்துக்கு மூல ஆதாரங்கள்.
அப்பு தலமான திருஆனைக்காவில் இறைவன் நீர் வடிவமாகக் காட்சி அளிப்பதால் அப்பர் பெருமான் ‘செழுநீர்த்திரள்’ என்று இறைவனைப் போற்றுகிறார். கும்பகோணத்தில் மகாமகக் குளம் அருகே காசிவிசுவநாதர் கோயிலில் கங்கை, யமுனை, நர்மதை, சரசுவதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நவ (ஒன்பது) நதிக்கன்னியர்க்கு சிற்பத் திருமேனியாக வழிபாடுகள் நடைபெறுகின்றன.
நாயன்மார்களில் ஒருவரான தண்டியடிகள் - பிறவியிலேயே கண் பார்வை அற்றவராக இருந்த போதிலும், கரையில் கயிற்றைக் கட்டி அதனைப் பிடித்துக்கொண்டே சென்று குளத்தைத் தூர் எடுத்து தூய்மைப்படுத்தியதால் இறைவன் அருளைப் பெற்றதாகப் பெரியபுராணம் புகழ்ந்து பேசுகிறது.
பண்டைக் காலத்தில் மன்னர்கள் புதிய ஊர்களை அமைக்கும்பொழுது மக்களுக்கும், வேளாண்மைக்கும் உதவியாக வாய்க்கால்கள், ஏரி ஆகியவற்றை அமைத்தார்கள். இவை அந்தந்த அரசர்கள் பெயரால் அழைக்கப்பட்டன.
செங்கற்பட்டு அருகிலுள்ள உத்திரமேரூரில் உள்ள ஏரி நந்திவர்மனின் சிறப்புப் பெயரான ‘வைர மேகன்’ என்ற பெயரில் ‘வைரமேக தடாகம்’ என அழைக்கப்பட்டது. முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்தபொழுது ஊரின் மேற்கே ‘சோழகங்கம்’ என்ற ஏரியை ஏற்படுத்தினான். ‘நீர்மயமான வெற்றித்தூண்’ என்று திருவாலங்காடு செப்பேடுகள் இதைப் புகழ்ந்து கூறுகின்றன. ‘சோழகங்கம்’ என்ற பெயரைக் கேட்கும் பொழுதே அவ்வேரியின் பரந்த பெரிய ஏரியின் அளவு நம் கண்முன் தோன்றும் (தற்பொழுது இந்த ஏரி ‘பொன்னேரி’ என அழைக்கப்படுகிறது.) இப்பகுதி மக்களுக்கு நீர்வளம் இவ்வேரியிலிருந்தே கிடைத்தது.
கங்கை கொண்ட சோழபுரம் ஊருக்கு அருகில் உள்ள, வீரநாராயணன் என்ற சிறப்பு பெயர் பெற்ற, பராந்தக சோழன் காலத்தில் அமைக்கப்பட்ட வீர நாராயணன் ஏரி (சென்னைக்கு குடிநீர் வழங்குகிற வீராணம் ஏரி) சோழகங்கம் என்னும் பொன்னேரிக்கு வடிகாலாக விளங்கியது எனக் கூறப்படுகிறது. அதிகமான நீர்வரத்தும், போதுமான நீர் தேக்கி வைக்கக் கூடியதுமான சோழகங்கம் ஏரியை உரிய முறையில் தூர் எடுத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும் பராமரித்தால் இப்பகுதி மக்களின் நீர் தேவைக்கு ஆதாரமாக விளங்கும் என்பது சொல்லாமலே புரிகிறதல்லவா?
ஏரிகளை அமைத்தது மட்டுமின்றி; அதற்கு ஆற்றிலிருந்து தண்ணீர் வர வாய்க்கால்களும் அமைக்கப்பட்டன. இதற்கு ‘ஆற்றுக்கால்’ என்பது பெயர். அதேபோன்று ஏரியிலிருந்து நீர் வெளியே செல்லும்பொழுது முறைப்படுத்தவும், மடை, மதகு, தூம்பு, குமிழி, கலிங்கு போன்ற அமைப்புகள் இருந்தன. இவற்றைப் பராமரிக்க ‘கலிங்குவாரியம்’ என்ற அமைப்பு இருந்ததை திருப்பாற்கடல் - காவேரிப்பாக்கம் கல்வெட்டுகளின் வழியே அறிகிறோம்.
ஏரிகளை பராமரிக்க ‘ஏரி வாரியம்’ என்ற அமைப்பு இருந்தது. அவர்கள் ஏரியில் மண் மேடிட்டதை அவ்வப்போது அகற்றி ஆழப்படுத்தினர். இதனை ‘குழி குத்துதல்’ எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
ஏரி மற்றும் குளம் போன்றவற்றைப் பராமரிக்க தானமாக அளிக்கப்பட்ட நிலம் ‘ஏரிப்பட்டி’, ‘குளப்பட்டி’, ‘குளப்புறம்’ என அழைக்கப்பட்டன. ஏரியில் பிடிக்கப்படும் மீன்களால் வரும் வருவாயும் ஏரி பராமரிப்புக்குப் பயன்பட்டது. இதனை ‘பாசிப்பாட்டம்’ என்பர். ‘ஏரி ஆயம்’ என்ற வரியால் வரும் வருவாயும் ஏரி பராமரிப்புக்குப் பயன்பட்டது.
ஏரிகளின் கரைகளையும் பண்டை நாளில் உயர்த்தி பராமரித்தனர். சமயபுரம் அருகே தேவிமங்கலம் அக்கரைப்பட்டி என்ற ஊரில் உள்ள ஏரியின் கரை வெள்ளத்தினால் உடைந்துவிட்டது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் ஏரிக்கரை உடைப்பினை சரி செய்தும், கரையை உயர்த்தியும் ‘அஞ்சாத பெருமாள் ஏரிக்கரை’ எனப் பெயரிட்டுள்ளதை அக்குளத்தின் அருகே உள்ள பாறையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டினால் அறிய முடிகிறது.
திருச்சி அருகே வடசேரி என்ற ஊரில் உள்ள குளக்கரையில் நடப்பட்டுள்ள ராஜராஜ சோழன் கல்வெட்டில் வீர சோழ பேரரையன் என்பவனால் இக்குளம் அமைக்கப்பட்டது. ‘இக்குளம் அழிச்சான் பாவம் கொள்வான்’ என்று இறுதியில் எச்சரிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1000 அடிவரை தோண்டியும் நீர் இல்லை" என்றார் சமீபத்தில் கோவையில் இருந்து வந்திருந்த ஒருவர். விளை நிலங்களையும், நீர் தேக்கப் பகுதிகளையும் குடியிருப்பின் அவசியத்துக்காக, தூர்த்துக் கொண்டே வருவது இதற்கு ஒரு காரணம். அது மட்டுமல்ல; அந்த நீர்த்தேக்கப் பகுதிகளுக்கு நீர் வரும் வழிகளையும் அடைத்து விடுகிறோம். உதாரணத்துக்கு புதுக்கோட்டையைச் சொல்லலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் நதிப்போக்கில் அமையாத, ஏரிகள் நிறைந்த மாவட்டமாகத் திகழ்கிறது. எனவே, ஏரி, குளம், குமிழிகள், தூம்பு போன்றவற்றைப் பராமரிப்பது குறித்த செய்திகள் அதிக அளவில் இங்குள்ள கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. நீர் நிலைத்து நிற்கும் இடங்கள் ‘நீர் நிலைகள்’ என அழைக்கப்பட்டன. இவை குளம், ஏரி, ஊருணி, ஏந்தல், கண்மாய் போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டன.
புதுக்கோட்டையின் அமைப்பில், குளம் ஒன்று நிரம்பினால் அதன் உபரி நீர் அடுத்த குளத்துக்குச் செல்வதும், அனைத்துக் குளங்களும் நிரம்பினால் ஊர் எல்லையில் இருந்து மற்றொரு குளத்துக்குச் சென்று சேர்வதுமான திட்டமிட்ட அமைப்பு. அந்த நிலையை இன்று பார்க்கவே முடியாது. பல இடங்களில் நீர் வழிகள் அடைபட்டுவிட்டன. சில குளங்கள் காணாமலும் போய்விட்டன.
அது மட்டுமல்ல; இங்கு, குளத்திலிருந்து நீர் பாய்ச்சுவதற்கு நீர்ப்பங்கீட்டு முறை இருந்ததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. நிலத்தின் பரப்புக்கு ஏற்ப நீர் பாயும் கால அளவு இருந்து வந்ததையும் அறிகிறோம். இதனால் நீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்பட்டது. மேலும் குளங்களும், ஏரிகளும் தூர் எடுக்கப்பட்டு பாசன வசதிக்கு தகுதியுடையதாகச் செய்யப்பட்டன. ‘ஒரு மா நிலத்திற்கு ஒரு நாழி நெல்’ என, ஊர் சபைக்கு ஏரி பராமரிப்புக்காக அளிக்கப்பட்டதை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் ஊர் மக்களே ஏரி - குளங்களை வெட்டி பராமரித்துக் கொண்டதையும் அறிய முடிகிறது.அவற்றுக்கு நீர் வரும் நீர்க்கால்களையும் கவனமாகப் பராமரித்தனர்.
ஆனால், அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் மேம்பட்டு விளங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் நம் காலத்தில், இந்தப் பொது விஷயத்தில் அப்படி நடந்து கொண்டிருக்கிறோமா என்பதுதான் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி!

Comments