பதற்றம் விலக்கு!

பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ‘‘நான்கு வர்ணங்கள் என்னால் படைக்கப்பட்டன; அவற்றைப் படைத்தவன் எனினும் என்னை அழியாத தன்மையுடைய படைக்காதவன் என்றே அறிந்துகொள்’’ என்று கூறி, அறிவால் செயலைத் துறத்தல் என்பதன் உட்கருத்தை மேலும் விளக்குகிறார்...
பொதுவாக, உலகில் செயல்புரிவது என்பது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கிறது. அதற்காக, செயல்புரியாமலும் நம்மால் இருக்க முடிவதில்லை. செயல் என்பது பதற்றம், சலிப்பு, வெறுப்பு முதலிய பல்வேறு எதிர்மறை உணர்ச்சிகளை நம் உள்ளத்தில் தோற்றுவித்துவிடுகிறது. செயல் நம்மைப் பெரிதும் பாதிக்கிறது.
அலுவலகச் சூழலில் நிகழ்ந்த ஏதோ ஒரு விஷயம் வீடு திரும்பிய பின்னரும், மனத்துக்குள் தொந்தரவு செய்கிறது. வீட்டுப் பிரச்னை, அலுவலக வேலைகளுக்கிடையே உள்ளத்தில் வந்து போகிறது. இவ்வாறு செயல்களைக் குறித்த சிந்தனைகள் மனிதனை அலைக்கழித்து, உள்ளத்தைச் சோர்வடையச் செய்கின்றன. பலாப்பழத்தை நறுக்குவதற்கு முன், கைகளிலும் கத்தியிலும் எண்ணெய் தடவிக் கொள்வதைப் போல, செயல்புரியவும் வேண்டும்; ஆனால் அந்தச் செயலோடு ஒட்டிக்கொள்ளாமலும் இருக்க வேண்டும். இதன் சூட்சுமத்தை பகவான், தன்னையே உதாரணமாக வைத்துக் கூறுகிறார்: என்னைச் செயல்கள் ஒட்டுவதில்லை. எனக்குச் செயல்களின் பலனில் நாட்டமில்லை. எவனொருவன் இவ்வாறு என்னை நன்கு அறிகிறானோ அவன் செயல்களால் தளைக்கப் படுவதில்லை."
முதலில், செய்கின்ற வேலையை நாம் ரசிக்க வேண்டும், நேசித்துப் பழக வேண்டும். மனத்துக்கு விருப்பமில்லாத செயலை வெறுக்கவும் கூடாது, விருப்பமான செயலோடு ஒட்டிக் கொள்ளவும் கூடாது. ‘தன்கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்று அப்பர் பெருமான் கூறியதற்கிணங்க, செயலை மகிழ்வுடன் செய்ய வேண்டும். விரும்பியது கிடைக்கவில்லை என்றால் கிடைத்த வேலையை விரும்ப மனதைப் பழக்க வேண்டும்.
இரண்டாவதாக, நாம் நேசிக்கின்ற வேலையைக் குறித்து நிறைய கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்வின் இறுதிவரை நம் அறிவை நாம் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். எங்கும் தேங்கிவிடக் கூடாது. கற்கவில்லையென்றால் பின்னுக்குத் தள்ளப்படுவோம்.
மூன்றாவதாக, கற்றால் மட்டும் போதாது, அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நான்காவதாக, செய்கின்ற செயலில் ஒருமுகப்பாட்டுடன் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். கவனச் சிதறல் நிறைந்த தொழில்நுட்ப யுகம் இது. நொடிக்கொருமுறை, அலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்து கொண்டிருக்க, தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருவதை அறவே நிறுத்தி, செயலில் மட்டும் கவனம் செலுத்த மிகுந்த நெஞ்சுரம் தேவைப்படுகிறது.
நிறைவாக, நாம் செய்கின்ற வேலை நமக்கு மட்டும் பயன்படுவதாக இருந்தால் போதாது. அடுத்த தலைமுறைக்கும், சமூகத்துக்கும் அது பயனளிப்பதாக இருக்க வேண்டும்.
புத்தியோடு இணைந்திருக்கும் உணர்வுக்கு ‘விஜ் ஞானமயன்’ என்று பெயர். விஜ்ஞானமய புருஷன்தான் ஆன்மிகக் கடமைகளையும் செய்கிறான், உலகியல் கடமைகளையும் செய்கிறான். தைத்திரீய உபநிஷத் விஜ்ஞானமய புருஷனை பின்வருமாறு உருவகப்படுத்துகிறது. அறிவுத் தத்துவமான விஜ்ஞானமய புருஷனுக்கு, ‘செயலை நேசித்தலாகிய சிரத்தையே தலை; கற்றல் வலதுகை; நடைமுறைப்படுத்துதல் இடக்கை; ஒருமுகப்பாடு நடுப்பாகம்; விரிவுபடுத்தி வழங்குதல் கால்கள்.’ தன்னைச் செயல்கள் ஏன் ஒட்டுவதில்லை என்பதற்கு விளக்கம் கூறுகிறார் பகவான். அவர் பலனில் நாட்டம் செலுத்துபவரல்ல, செயலில் நாட்டம் செலுத்துபவர். செயல்புரிவதையே ரசிப்பதால், பலனில் கவனம் செலுத்துவதில்லை.
இவ்வாறு பகவான் கூறுவதுபோல் செயல்புரிந்தால், செயல் நம் மனதில் ஒட்டாது; துன்பத்தைக் கொடுக்காது. நாம் என்ன செயலைச் செய்தாலும், அதனை எத்தனை பேர் விமர்சனம் செய்தாலும், நம்மனதில் உள்ள உறுதி குறையவே குறையாது. தோல்வி அடைந்தாலும் மீண்டும் எழுவோம், ஒருநாளும் துவண்டுவிட மாட்டோம். நமக்கு வேண்டியவற்றை இறைவன் தருவார் என்ற தளராத நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளும் செயலாற்ற வேண்டும்.
‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதுஞ் சோராதிருத்தல் - உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான் சிந்தையே! இம்மூன்றும் செய்’ என்று பாடுகிறார் மகாகவி பாரதியார்.
நம்முடைய பிரச்னையே, நாம் செயலை விட பலனில் அதிக கவனம் செலுத்துவதுதான். பலனை நினைத்தால் சோர்வு வருவதைத் தவிர்க்க முடியாது. உண்மையான அறிவாளி, செயலே உழைப்பே இன்பம் என்பான். ‘இன்பம் விழையான் வினை விழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்’ என்றார் திருவள்ளுவர்.
இன்பத்தை விரும்பாமலும், துன்பத்தை வெறுக்காமலும் இருக்கும் சம நிலையைப் பெற வேண்டும். மேலும், துன்பத்தையே இன்பமாகக் கருதும் அருளறிவைப் பெற்றவர்களுக்கு இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இத்தனை பெரிய பிரம்மாண்டமான இந்த உலகைப் படைத்துக் காத்துக் கொண்டிருக்கும் இறைவன் மன இறுக்கத்தோடு, பதற்றத்தோடு செயல்புரிவதில்லை; விமர்சனங்களைப் பொருட்படுத்துவதில்லை.
இறைவனது படைப்பைப் புகழ்பவரும் உண்டு, இகழ்பவரும் உண்டு. அவற்றை அவர் கண்டுகொள்வதில்லை. இவ்வாறு எவன் புரிந்து கொள்கிறானோ அவனும் செயல்களால் தளைக்கப்பட மாட்டான். இப்படிப்பட்ட கடவுளை எண்ணும்போது, நமக்கும் பலனில் விருப்பம் ஏற்படாது. நம் உள்ளத்தை செயல்கள் அணுவளவும் பாதிக்காது. பலன்கள் எப்படிப் பட்டதாயினும் அதனை இறைவனின் பிரசாதமாக ஏற்கும் மனநிலையைப் பெறுவதுதான் லட்சியம்!

Comments