சந்திரசேகரம்!

எழும்பி நிற்கும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், ஜீயரின் விடாமுயற்சி மற்றும் அவர் பெருமையையும் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமல்ல; பெரியவருக்கும் நன்றி கூறிக் கொண்டிருக்கிறது.
பெரியவர் எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்டு அவற்றை சமமாக பாவித்த உணர்வுகளுக்கு சாட்சியாக இந்தத் தொடரில் பல சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்ததை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதில் நாய் ஒன்றுக்கு பெரியவர் காட்டிய கருணையை யாரும் மறந்திருக்க முடியாது. ஒருநாள் மதிய நேரம் பூஜைகள் முடிந்து மடத்தில் அனைவரும் போஜனமும் புரிகின்றனர். இறுதியாக, பெரியவருக்கும் அவருக்கான போஜனமாக கைப்பிடி நேந்திரமாவும், அவலும் தயாராகிறது. பெரியவரும் சாப்பிட முனைகிறார். அப்போது நாய் ஒன்றின் பலமான குரைப்புச் சப்தம். எதனால் என்று கேட்கிறார். மடத்து போஜனம் முடிந்து இலைகளை போடும் இடத்தில், அதில் உள்ள மிச்சம் மீதிக்காக நாய் ஒன்று வந்து படுத்துகிறது" என்கிறார் உதவியாளர். உடனேயே தன் இலையில் இருந்ததை அப்படியே இலையோடு தள்ளி, இதை எடுத்துப்போய் அந்த நாய்க்குக் கொடு" என்கிறார் பெரியவர். உதவியாளர் புரிந்து கொள்கிறார். மறுநாள் அதேநேரம் நாய் குரைக்கவில்லை. பெரியவர் உதவியாளரைப் பார்த்த நொடி உதவியாளர் சொல்கிறார், நாய்க்கு முதல்ல போஜனமாயிடுத்து. அப்புறம்தான் எல்லாருக்குமானது" என்கிறார். அதிக வார்த்தைப் பிரயோகங்கள் இன்றி, இப்படி எல்லா தருணங்களிலும் கருணையோடு நடந்து கொண்டவர் பெரியவர்.
இந்த மண்ணில் மகான்கள் எல்லோருமே தங்கள் வழிமுறைகளில் மாற்றங்களோடு இருந்தாலும் உயிர்களின் மேலான கருணை எனும்போது ஒன்றாகவே இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை? அந்த வழிமுறை மாற்றங்கள்கூட மக்கள் நலன் கருதித்தானே உருவாக்கப்பட்டன.
கல்வி பயில்பவர்களை மாணவர்கள் என்கிறோம். இறுதியாக அவர்கள் பெற வேண்டியது ஒரு பட்டம். அதைப் பெற ஒருவர் கணித பாடத்தைத் தேர்வு செய்கிறார். ஒருவர் ஆங்கிலத்தை தேர்வு செய்கிறார், ஒருவருக்கு வரலாறு... எல்லோரும் ஒரே பாடத்தைப் படிப்பதும், ஒரே பாதையில் நடப்பதும் எப்படி வளர்ச்சிக்குத் தடையோ அப்படித்தான் ஆன்மிகப் பாதைகளும். பாடம் வரையில் விருப்பம் அடிப்படையாக அமைகிறது. ஆன்மிகம் வரையில் பிறப்பே மதம், இனம், குலம் வழியாக அந்த அடிப்படையை அமைத்துத் தந்து விடுகிறது. நாம் நம் முன்னோர்கள் நடந்த பாதையில் கேள்விகளுக்கு இடமின்றி நடந்தாலே போதும். கடைத்தேறி விடுவோம். நம்மைக் கடைத்தேற்றத்தான் ஞானாசிரியனாக, வழிகாட்டியாக, குருவாக, எல்லாமுமாக பெரியவர் போலவும், அழகிய சிங்கர் போலவும் மகான்கள் இருக்கிறார்கள்.
இந்தத் தொடரை எழுதி வரும் இந்த நாட்களில், ஒருநாள் இரவு கனவில் மகாபெரியவரின் திவ்ய தரிசனம் எனக்கு வாய்த்தது. பெரும்கூட்டம் முண்டித்தள்ள பெரியவர் வந்தபடி இருக்கிறார். கட்டுக்கடங்காத அந்தக் கூட்டத்தில் அவரது காவி மேலாடையும், மூக்குக் கண்ணாடியும் கீழே விழுந்துவிட, பதறிப்போய் அந்தக் காவி மேலாடையை எடுத்து என் தோள் மேல் போட்டுக்கொண்டு, கண்ணாடியை என் முகத்துக்கு முன் நிறுத்திப் பார்க்கிறேன். ஒரு பக்க கண்ணாடி உடைந்து சிதறல் கோடுகள் தெரிய, ஒரு பக்க கண்ணாடி நன்றாக இருக்கிறது. அவருடைய பட்டையான ஃபிரேம் போட்ட அதே கண்ணாடி! இந்த நிலையில் கனவும் கலைந்தது. கனவு கலைந்த நிலையில் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவனாக அந்த தரிசன நெகிழ்வில் கிடந்தேன்.
மறுநாள், அலுவலகப் பணியாக எனது நிர்வாக இயக்குநரைச் சந்திக்கச் சென்றபோது, அவரது உதவியாளர் திரு. ரகு, பெரியவரை ஓவியமாக வரைந்து தன் டேபிள் மேல் வைத்திருந்ததைப் பார்த்தவுடன் இரவு கண்ட கனவு நினைவுக்கு வரவும், அவரிடம் கனவைச் சொன்னேன். உடனேயே அந்த ஓவியத்தைத் தூக்கி எனக்குத் தந்துவிட்ட திரு. ரகு, என்னிடம் இன்னொரு காப்பி உள்ளது" என்றார்.
கனவில் வந்த பெரியவர் ஓவியமாக கையில் வந்தது எனக்குப் பெரிய உற்சாகத்தைத் தந்தது. அடுத்து என் மகள் திருமணம் தொடர்பாக ஜாதக பரிவர்த்தனை நிமித்தம் ஜோதிடர் நரசிம்மனை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். முதல் காரியமாக பெரியவர் படங்கள் சிலவற்றைத் தந்தவர், பெரியவர் படம் போட்ட ஒரு வெள்ளி நாணயத்தையும் தந்தார்.
‘என்ன இது... பெரியவரின் ஓவியம், படம், நாணயம் என்று வரிசையாக வந்தபடி இருக்கிறதே’ என்று அவரிடமும் என் கனவைக் கூறினேன். சிலிர்த்துப்போன அவர் அப்போதுதான் சொன்னார், நேத்துதான் பெரியவாளோட ஜன்ம நட்சத்திரம். அவரைப் பத்தி எழுதறேள் இல்லையா, அதான் அவரோட வஸ்திரம், பொன்னாடையா உங்களுக்குக் கிடைச்சிருக்கு. கண்ணாடில இடது பக்கம் உடைஞ்சு, வலதுபக்கம் நல்லபடியா இருந்ததை வலது சார்புதான் சாஸ்வதம்னு அவர் சொல்ற மாதிரி நான் எடுத்துக்கறேன்" என்று மொழி பெயர்த்தார்.
அவரது ஜன்ம நட்சத்திர நாளில் கனவில் அவருடைய தரிசனம் பெற்றதை, அதிலும் அவர் அமரத்துவம் அடைந்து இருபது வருடங்களுக்குப் பிறகு எனக்குக் கிட்டிய அந்த தரிசனம் பெரும்பாக்யம். அது உற்சாகம், நம்பிக்கை என்று சகலத்தையும் எனக்களித்தது. இப்போது இதை எழுதும்போதும் அந்தச் சிலிர்ப்பு எனக்குள் பரவுகிறது.
ஒட்டுமொத்தமாய் இந்த நிறைவுப் பகுதியில் பெரியவர் குறித்து ஒரு தீர்க்க சிந்தனையை மேற்கொண்டு யோசித்துப் பார்க்கிறேன்.
இறை சன்னிதியில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தொடர்ந்து தீபங்களும் காட்டப்படும். பஞ்சதீபம், குட தீபம், அப்புறம் 108 திரி போட்டு கோபுர தீபம் என்று காட்டி முடித்து, உச்சமாய் கற்பூர தீபம் பெரும் மணியோசைக்கு நடுவில் காட்டப்படும். அப்படி ஒரு கற்பூர தீபம் காட்டப்படும்போது தரிசனம் புரிவோர் அவ்வளவு பேரிடமும் ஒரு பரவசமும் மனக்குவிப்பும் ஏற்படுமல்லவா?
அப்படி ஒரு கற்பூர தீபம் போன்ற மனக்குவிப்போடு, பெரியவரை தரிசனம் செய்தவனாய் கடந்த வாரங்களை அசை போடுகிறேன். அவர் எதற்காக வாழ்ந்தாரோ, எதன் பொருட்டு இறைவன் அவரை அனுப்பினானோ, அது எனக்கு கொஞ்சமாவது புரிந்ததா? அவரை என் பேனா வழியாக சரியாக பதிவு செய்தேனா, இல்லை அதில் ஏதாவது அறியாயப் பிழை செய்து விட்டேனா? என்றெல்லாம் என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.
அவர் தன்னை ஒரு அத்வைதி என்று அடையாளத்துக்காகச் சொன்னாலும், எல்லோராலும் அவரை நேசிக்க முடிந்ததை வைத்துப் பார்த்தால் அவர் அந்த அடையாளத்துக்கு அப்பாற்பட்டவராகி விட்டது தெரிகிறது. அவர் எல்லா மதத் தத்துவங்களையும் தெரிந்து வைத்திருந்ததையும், பிற மதத்தவரும் அவரை பெரிதும் மதித்து போற்றியதையும் நினைத்தால், ஒரு பொதுவான தன்மை அவருக்கு ஏற்பட்டு விட்டது தெரிகிறது.
தானறிந்ததை, தன் முன்னோர் சொன்னதை மட்டும் சொல்லி, ஒரு பள்ளி ஆசிரியர் குறிப்பிட்ட பாடத்தை தன் பாணியில் நடத்துவதுபோல அல்லாது, அனைவர்க்கும் பொதுவான, இலகுவான ஒரு ஆன்மிகவாதியாகவும் கருத்து உடையவராகவும்தான் அவரைக் கருத முடிகிறது.
‘பிடி அரிசியாவது தர்மம் செய், ஒரு காயத்ரியாவது சொல், வேதங்களைக் கொண்டாடு, எளிமையாக இரு, பெரியவர்களைப் பேணு’ என்று, ஆத்திச்சூடி போல அவர் வலியுறுத்திய கருத்துக்கள் எல்லாம் இப்போது என்னுள் அணிவகுக்கின்றன.
ஆன்மா அழிவதில்லை என்பது நம்முடைய கருத்து. அதிலும் யோகியர் ஆன்மா இருகூறாகப் பிரிந்து, ஒன்று பரத்துவமும் இன்னொன்று ஜீவ சமாதியில் அனுக்ரகமும் புரிந்தபடியே இருப்பதாக ஆன்மிக வல்லுனர்கள் கூறுவது ஒரு பேருண்மை என்பதற்கு, என் கனவில் சமீபத்தில் அவர் வந்ததே சாட்சியாகும்.
கனவை எண்ணங்களின் கசிவு என்பார்கள். அதை அசலான வாழ்வின் அம்சமாய் கருதத் தேவையில்லை என்றும் கூறுவர். ஆனால் அவர் ஜன்ம தினத்தன்று என்னுள் விரிந்த கனவாகிய அந்த நனவை, எண்ணக் கசிவாகக் கருத முடியவில்லை. அவர் அழிவற்று அருளாட்சியை தொடர்ந்து நடத்தியபடியே இருக்கிறார் என்பதே உண்மை என உறுதியாக நம்புகிறேன்.
விவேகானந்தர் சொன்ன கருத்து நினைவுக்கு வருகிறது: ‘இந்த உலகம் என்பது ஒரு வீடானால் அதில் என் பாரததேசம் ஒரு பூஜை அறையைப் போன்றது’ என்னும் அவர் கருத்தே, இங்கே மட்டும் ஏன் இத்தனை கோயில்கள்... புனித நதிகள்... புனித கே்ஷத்ரங்கள் என்கிற கேள்விகளுக்கு விடையாகத் திகழ்கிறது.
வேற்றுமையிலும் ஒற்றுமை, சகிப்புத் தன்மை, நெடிய வரலாறு என்று எது இல்லை நம்மிடத்தில்...? இவற்றை எல்லாம் தம் வாழ்நாளில் கொஞ்சம் கொஞ்சமாய் உணர்த்தி, நம்மை நெறிப்படுத்திய பெரும் ஞானியர்களில் ஒரு மகாஞானியாகத் திகழ்ந்த பெரியவர் குறித்து, 48 வாரங்கள் சிந்திக்கக் கிடைத்தது பெரும் பாக்யம். இன்னமும் சிந்திக்கக் கொட்டிக்கிடக்கின்றன அவரது கருத்துக்கள். ஆயினும் ஒரு இடைவெளிக்குப் பிறகு புதிய சிந்தனைகளுடன் வந்திட காலம் இடம் தரட்டும். குருமகானாகிய அவரது கருணை மிகுந்த பேரருள் எனக்கு மட்டுமன்றி, அனைவர்க்கும் துணையாக விளங்கட்டும்.

Comments