இல்லறம் செழிக்க...

பச்சை நிற தேகத்தில் இறக்கைகளைக் கொண்ட வசீகரமான இளைஞன்; மீன் இலச்சினைக் கொடி படபடக்க, தென்றல் காற்றைத் தேராகவும், குளிர் நிலவை வெண்கொற்றக் குடையாகவும், ஆர்ப்பரிக்கும் அலைகடலைத் துந்துபியாகக் கொண்டவன்; கருமை நிற தேனீக்கள் அடையாக ஒன்றையொன்றுத் தொற்றிக் கொண்டு கரும்பு வில்லின் நாண் போல் காட்சியளிக்க, இரத்த சிவப்பு, நீலம், தங்க நிற அசோகா மலர்கள், வெண்மை, நீல நிறத் தாமரைப் பூக்கள், வெண்ணிற மல்லிகை மற்றும் மாம்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்புகளை நாணில் பொருத்தி, உயிரினங்களின் மீது எது, காதல் வலையில் சிக்கி, ஆனந்தப்பட வைத்து, தானும் மகிழ்பவன்- மன்மதன்!
மாரன், அனங்கன், காதல் வேட்கையைத் தூண்டுவதால் ராகவிருந்தன், மனதை அலைகழிப்பதால் மன்மதன், மலர்க் கணைகளை உடையவன் ஆதலால் புஷ்பவான், செங்கரும்பு வில் ஏந்தி இருப்பதால் இக்ஷுதனுர்தாரா என வெவ்வேறு நாமங்களால் அறியப்படுகிறான் வசந்தன்.
மன்மதன், ரதி இருவருக்கும் தொடர்புடையதும், அங்குக் காமன் பண்டிகை, (வசந்தத் திருவிழா) வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவதுமான ஓர் ஆலயம் நம் தமிழ்நாட்டில் உள்ளது. அது காமரசவல்லி!
தலபுராணத் தகவல்: தேவர்கள், முனிவர்கள் மற்ற அனைவரையும் துன்புறுத்தியும், கொடுமைக்கு உள்ளாக்கியும் வந்தான் தாரகாசுரன். அந்த அசுரனின் முடிவு ஈஸ்வரனின் புத்திரன் மூலம் நடந்தேறும் என்று அறிந்தனர் அனைவரும். நிஷ்டையிலிருக்கும் ஈஸ்வரனின் மனத்தைக் கலைப்பதற்கு மன்மதனை நாடினர். தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வந்தான் மாரன். மோன நிலை கலைக்கப்பட்டதால் கோபமுற்ற ஈசன், தம் நெற்றிக் கண்ணால் மாரனை எரித்துச் சாம்பலாக்கி விட்டார்.
இதைக் கேள்வியுற்ற ரதி மனமுடைந்தாள். தன் பதியை மீண்டும் உயிர்ப்பித்துத் தருமாறு வேண்டி பூலோகம் வந்து சிவனாரை எண்ணித் தவமிருந்தாள். அதையேற்று பரமசிவன் ரதிக்கு வரமளித்த ஊர் ரதிவரபுரம். காமனின் தேவி என்பதால் காமரதிவல்லி என்றாகி, காலப்போக்கில் அதுவே மருவி காமரசவல்லி ஆகிவிட்டது.
இக்கோயிலில் உறையும் ஈசன், சௌந்தரேஸ்வரர், திருநல்லூர் ஸ்ரீகோயில் மகாதேவர், திருநல்லூர் பரமேஸ்வர மகாதேவர் என்ற நாமங்களால் வணங்கப்படுகிறார்.
1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயம், பிற்காலச் சோழ மன்னன் சுந்தரசோழன் எனும் ராஜகேசரிவர்மனால் நிர்மாணிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, ஹொசாளர்கள் செய்த திருப்பணிகளை விவரிக்கின்றன. இக்கோயில் தொடர்பான இன்னொரு புராணச் செய்தியும் கூறப்படுகிறது.
அர்ஜுனனின் பேரனும், அபிமன்யுவின் புத்திரனுமான மகாராஜா பரீட்சித், முனிபுத்திரனின் சாபத்தால் பாம்பு கடித்து மாண்டு போனான். அதற்குப் பழிவாங்க அவன் மகன் ஜனமெஜெயன் சர்ப்ப யாகம் செய்தான். அதில் சர்ப்பங்கள் ஏராளமாக பலியாயின. மிஞ்சியிருக்கும் தம் சந்ததியினர் மரித்துப் போகாமலிருக்க, நாகர்களின் தலைவன் கார்க்கோடகன் இங்கு வந்து தவமியற்றினான். மனமகிழ்ந்த ஈசன் அவன் குலத்தை அழிவிலிருந்து காப்பதாக வாக்களித்தார்.
இதை உறுதிபடுத்தும் விதமாக, ஈஸ்வரனின் கருவறை நுழைவாயில் அருகே கார்க்கோடகன் சிவபெருமானைத் தொழும் காட்சி சிலை வடிவில் காணப்படுகிறது. ஆகையால், மூலவர் ‘ஸ்ரீகார்க்கோடீச்வரர்’ எனவும் அழைக்கப்படுகிறார். இச்சம்பவம் நடந்தேறியது கடக ராசி/ கடக லக்னம் அமையப்பெற்ற நாள். அதனால் கடக ராசி, கடக லக்னக்காரர்களுக்கு உரிய நட்சத்திரக் கோயில் இது. சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட, நல்வழி பிறக்கும் என்பது ஐதீகம். கோயிலின் முன்புறம் உள்ளது சுக்கிரன் ஏரி என்ற சுந்தரத் தீர்த்தம். இதில் நீராடித்தான் ரதி தவமிருந்தாளாம்.
கிழக்கு திசைப் பார்த்து ஈசனும், தெற்கு நோக்கிய படி அம்பாளும் அருள்புரிகின்றனர். சோழ, பாண்டிய, ஹொசாளகாலத்துக் கலை நயம்மிக்கச் சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. பெரிய விநாயகர், நந்தி தேவர், வள்ளி-தெய்வானை சமேத சுப்ர மணியர், துர்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், நாகர் ஆகியோர் தனிச் சன்னிதிகளில் காட்சி தருகின்றனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மன் ஆகியோர் காட்சி தருகின்றனர். இங்கிருக்கும் கால சம்ஹார மூர்த்தியின் முகத்தில் கோபாக்னி கொழுந்துவிட்டு எரியும் காட்சி வியப்பில் ஆழ்த்துகிறது. நடராஜ சபைக்கு அருகில் அமைந்துள்ள பைரவர், விரித்த தீப்பிழம்பு போன்று தோற்றமளிக்கும் ஜடாமுடியும் நாய் வாகனமும் இன்றி காணப்படுகிறார்.
இங்குக் காமன் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கோயில் வளாகத்தில் இரு பாதியாக வெட்டிய ஆமணக்குச் செடியை நட்டு வைக்க, அது சரியாக எட்டு நாட்களுக்குள் ஈசனின் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு மறுபடியும் துளிர் விட்டு ‘உயிர்’ பெறுமாம் - அதாவது மன்மதன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்தது போல்! (பொதுவாக வெட்டப்பட்ட ஆமணக்குச் செடி வாடித்தான் போகுமாம்) ஆதலால், பிரிந்த தம்பதிகள், சண்டை - சச்சரவுக்கு உள்ளானவர்கள், இல்லறம் செழிக்க விரும்புவோர், மாங்கல்ய பாக்கியம், குழந்தைப் பேறு வேண்டி வரும் பெண்கள் என அனைவரும் இங்கு வந்து பரிகாரம் தேடுகிறார்கள்.
ஓம் காம தேவாய வித்மஹே
புஷ்ப பாணாய தீமஹி
தன்னோ அனங்க ப்ரசோதயாத்
இந்த காயத்ரி மந்திரத்தைத் தினமும் (குறிப்பாக வசந்த காலம் முழுவதும்) மாலை பிரதோஷ வேளையில் 108 முறை சொல்லி வர இல்லறம் செழித்தோங்கும்.
செல்லும் வழி: அரியலூர் - தஞ்சை நெடுஞ்சாலையில் திருமானூரிலிருந்து சுமார் 20கி.மீ. (ஏலக்குறிச்சியிலிருந்து சுமார் 6 கி.மீ. ) பஸ் வசதி குறைவு. திருவையாற்றிலிருந்து தினமும் டவுன் பஸ் சேவை உள்ளது.

Comments