சங்கடம் தீர சதுரகிரி

ஆடி அமாவாசை என்பது பித்ரு பூஜைக்கான விசேஷமான நாள். அந்த சமயத்தில் இராமேஸ்வரம் போன்ற பல்வேறு தலங்களிலும் விசேஷமான வழிபாடுகள் நடக்கும். ஆனால், பல லட்சக்கணக்கான பக்தர்கள் அந்த நாளில் தரிசிக்கின்ற தமிழக திருத்தலம் சதுரகிரி.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சதுரகிரி மலை, இயற்கை வனப்பும், தெய்வீக அம்சங்களும் நிறைந்த இடம். ஆடி அமாவாசையன்று மட்டுமே பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இம்மலையில் திரள்வார்கள் என்றால் இதன் மகத்துவம் புரியும். அந்நாளே ‘சதுரகிரி சுந்தரமகாலிங்கம் பெருந்திருவிழா.’
சதுரகிரி தல வரலாறு: சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவர் பச்சைமால். இவரது தொழில் பசுக்களை வளர்ப்பது, பால் கறப்பது. இவரது மனைவி சடைமங்கை, கறந்த பாலை தினமும் தமது மாமனார் வீட்டுக்குச் சென்று கொடுத்து வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்றபோது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் இது வழக்கமாயிற்று.
பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகனிடம் தெரிவித்தார். தனது மனைவி துறவி ஒருவருக்கு தினமும் பால் தருவதை அறிந்த பச்சைமால் ஆத்திரத்தில் மனைவியை அடித்தார். அதையறிந்த துறவி, அவளை ‘சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். தனது தவறை உணர்ந்த பச்சைமால் மனம் வருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்குப் பால் தானப் பணியில் ஈடுபட்டார்.
அப்போது சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினார் பச்சைமால். சித்தர் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன், இத்தலத்தில் அவருக்கும் பச்சைமாலுக்கும் காட்சியளித்தார். ஒருநாள் சிவன் துறவி வேடத்தில், சிவபூஜைக்குப் பால் கொடுக்கும் காராம்பசுவின் மடியில் வாய்வைத்து பால் குடித்துக் கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தார். அப்போது, சிவன், சுய உருவில் காட்சியளிக்க, பச்சைமால் கதறி அழுதார்.
சிவபெருமான் அவரைத் தேற்றி, நீ தேவலோகத்தைச் ேர்ந் தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். சிற்றின்ப ஆசை காரணமாக சாபம் பெற்ற நீ பூலோகத்தில் மனிதனாகப் பிறந்தாய். உன்னை மீட்டுச் செல்லவே வந்தேன்" என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி ‘மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார்.
சதுரகிரிமலையின் அடிவாரப் பகுதி, தாணிப்பாறை. இந்த தாணிப் பாறையிலிருந்து சுமார் எட்டு கி.மீ. பயணித்து சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கத்தை தரிசிக்க நடந்துதான் செல்ல வேண்டும்.
மலையடிவாரத்தில் விநாயகரை வணங்கி தரிசிக்கிறோம். வழியில் ராஜயோகக் காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள். இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப் பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது சிரமமாக இருக்கும். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தைத் தரிசிக்கலாம். அடுத்து காராம் பசுத்தடம். இந்த இடத்தில்தான் சிவன் துறவி வேடத்தில் காராம் பசுவின் மடியில் பால் அருந்தியதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளன.
தொடர்ந்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். அதாவது, ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு. அவரது மனைவி ஆண்டாள், பெருமாள் பக்தை. இருவரும், தாம் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடைகாண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்ய, இருவரும் காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
சற்று தூரத்தில் ‘சின்ன பசுக்கிடை’ என்ற பகுதி வருகிறது. வீடு கட்ட விருப்பமுள்ள பக்தர்கள் இந்த இடத்தில் கற்களை வைத்துவிட்டுச் செல்கிறார்கள். இதனைக் கடந்தால் நாவல் ஊற்று. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாகச் சொல்லப்படுவதால், சர்க்கரை நோய் கொண்ட பக்தர்கள் திரளாக வருகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில் ஆகியவற்றைக் கடந்தால் பிலாவடி கருப்பு கோயில் வரும்.
வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் இல்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அப்போது முனிவர் ஒருவர், சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்" என்றார்.
வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களைத் தங்கமாக்கி அவரிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்கப் பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்தக் கிணற்றுக்குக் காவலாக கருப்ப சுவாமியை நியமித்தார். இவரது சன்னிதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை ‘பிலாவடி கருப்பர்’ என அழைத்தனர். பிலாவடி கருப்பரை தரிசித்த பின்னர் சுந்தரமகாலிங்கம் கோயிலை அடையலாம்.
கைலாயத்தில் சிவ - பார்வதி திருமணம் நடந்த போது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரலிங்கம் ஆகும். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் ‘சுந்தரமூர்த்தி லிங்கம்’ என்றழைக்கப்படுகிறது. திருக்கோயிலின் நுழைவுப் பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. சுந்தரமூர்த்தி லிங்கத்தை வணங்கியபின் நாம் சுந்தரமகாலிங்கத்தை சன்னிதியில் வழிபடலாம். அங்கு சுயம்பு மூர்த்தியான சிவபெருமான் இடப்புறம் சற்றே சாய்ந்தவாறு இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அருளை வழங்குவது ‘சுந்தரமகாலிங்கம்’, பொருளை வழங்குவது ‘சுந்தரமூர்த்தி லிங்கம்’ என்று கூறுவர்.
சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானின் சரிபாதியாக இருக்க அன்னை பார்வதி, சதுரகிரி மலையில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தினமும் சந்தன அபிஷேகம் செய்ய, அதில் மகிழ்ந்த சிவன், பார்வதியை தன்னுடன் இணைத்து ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆனார். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.
சிறுவயதில் வாய் பேச இயலாத நிலையில் இருந்தேன். இங்கிருந்த பழங்குடி மக்களான பளியர்களே என்னை வளர்த்தார்கள். அது முதல் மகாலிங்கத்தின் அருளைப் பெற்று இங்கேயே வாழ்ந்து வருகிறேன். மனக்கட்டுப்பாட்டோடு இம்மலைக்கு வருபவர்களை மகாலிங்கம் ஒருபோதும் கைவிடுவதில்லை. அதுமட்டுமில்லாமல், சித்தர்கள் வாழும் மலை இது" என்கிறார் சாது சங்குசாமி.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம், பதினாறு கிரிகள் சமமாக, சதுரமாக அமைந்த காரணத்தால் ‘சதுரகிரி’ என்ற பெயர் ஏற்பட்டது என்பர். இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு, பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அப்போது மட்டுமே மலை மீது சில இடங்களில் மோர், தண்ணீர் மற்றும் பலகாரங்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. பிற நாட்களில் எதுவும் கிடைக்காது. ஆகையால், அப்போது மலைக்குச் செல்வோர் தேவையான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை கையோடு எடுத்துச் செல்வது நல்லது. மலைக்கு மேலே மடங்கள் உள்ளன. அங்கு அன்னதானம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒருமுறை சதுரகிரி மலையேறுங்கள். அதன் உயரத்துக்கு உங்கள் வாழ்க்கையும் உயரும்.
செல்லும் வழி
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி, கிருஷ்ணன் கோயில் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து வத்திராயிருப்பு செல்ல வேண்டும். (மதுரையிலிருந்தும் வத்திராயிருப்புக்கு நேரடியாகவும் பேருந்து வசதி உள்ளது) வத்திராயிருப்பிலிருந்து தாணிப்பாறைக்கு சிற்றூந்து அல்லது ஆட்டோவில் செல்லலாம்.
தரிசன நேரம்: காலை 6 முதல் 12 மணி வரை, மாலை 4 முதல் 9 மணி வரை. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.

Comments