உறக்கத்தை நேசிக்காதீர்கள்

மா தங்களில் நான் மார்கழி’ என்றான் கண்ணன். மார்கழி அழகான மாதம். மாதங்களில் அவள் மார்கழி என்று பாடினார் கண்ணதாசன். அது அவரது அழகான ரசனை.
மழை முடிந்து, பனி படர்ந்து, தாவரம் தாய்வரம் எய்தித் தளதளத்து நிற்கும் சுகமான மாதம். அளவான வெயில், அளவான குளிர் என்று சுகமாக இருக்கும் காலம் மார்கழி. வியர்க்காது; விதவிதமாக உடை உடுத்து வலம் வரலாம்.
பூலோகக் கயிலாயமான சிதம்பரத்தில் திருவாதிரைப் பெருவிழா. பூலோக வைகுந்தமான ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி. பூமியே சொர்க்கமாகும் புனித மாதம் மார்கழி! முந்நூற்று அறுபத்தைந்து நாளை பூமியின் ஒரு சுற்று என்று கணக்கிடுகிறோம். அதையே ஒரு நாளாகக் கொண்டால், வருட நாளின் விடியல் வேளை மார்கழி. புராணங்கள் இதையே தேவர்களின் ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று கவிதை பாடின.
இளம் வயதில் அதிகாலையில் - சூரிய உதயத்துக்கு முன்னரே எழுந்து ஆற்றிலும் குளத்திலும் நீராடி இறை வழிபாடு செய்தனர் நம் முன்னோர். நீர் மேல் படிந்திருந்த ஓஸோன் (பிராண) வாயுப் படலத்தை இரண்டு நுரையீரல் பைகளிலும் நன்றாக நிரப்பிக் கொண்டு, வருடம் முழுவதும் இளமையாக வாழும் வழிமுறை கண்டனர்.
‘சூரியன் யாரைப் படுக்கையில் பார்க்கிறானோ, அவர்களைப் படுக்கையிலேயே விட்டு விடுகிறான்!’ என்பது அரிய பொன்மொழி. என்ன பொருள்? காலையில் கண் விழிக்காதவர்கள் நிரந்தர நோயாளிகள்! காலை நேரத்தில் கடவுளையே துயில் எழுப்பத் திருப்பள்ளி எழுச்சி பாடிய, ஞானத் தமிழ் நடையாடிய மண் நமது மண்.
என்ன பொருள்? ஒவ்வொரு மனிதனுள்ளும் இறைத் தன்மை தூங்குகிறது. அதை எழுப்பும் ஆன்மிக முயற்சியே இறை வழிபாடு. அதை உணர்த்தவே திருப்பள்ளி எழுச்சி. ஆண்டாள் கண்ணனை எப்படி எழுப்புகிறாள் பாருங்கள்:
குத்து விளக்கெரியக் கோட்டுக் கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மீதேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
என்ன உரிமை... என்ன நெருக்கம்! கடவுளையே எழுப்பும் கவிதைத் தமிழ். பயிலப் பயில நம்முள் உறங்கும் ஞானத் தலைவன் கண் விழிக்க மாட்டானா? கண்டிப்பாகக் கண் விழிப்பான்!
உறக்கத்தை அதிகம் நேசிக்கும் நண்பர்களுக்கு ஒரு வார்த்தை... உறங்குவதில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருந்தால், நீங்கள் பிறந்திருக்கவே வேண்டாம். உறங்குவதற்கும் சாவதற்கும் அதிக வித்தியாசம் கிடையாது. உறக்கம் ஒரு தற்காலிகச் சாவு. தமிழ்மறை படித்ததுண்டா? உறங்குவது போலும் சாக்காடு.. உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. விழிக்கச் சொல்லும் விவரமான மாதம் மார்கழி. விழிக்க வைக்கும் விவரங்கள் அடங்கிய வித்தியாசமான மாதம் மார்கழி.
உலகம் உறங்கும் நேரத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான் என்கிறது கீதை. எனவே, உறக்கம் கலைந்து மனம் வெளிச்சத்தை விரும்பும் மகத்தான மாதம் மார்கழி. உறக்கம் என்பது உடலின் செயல் மட்டுமல்ல. அறியாமை உறக்கம்தான். சோம்பல் உறக்கம்தான். பொறுப்பு உணர்ச்சி அற்ற சமூகம் நிகழ்த்துவதும் கூட்டு உறக்கம்தான்.
‘‘வாழத் தெரியாதவர்கள் வாழும் நாட்டில் ஆளத் தெரியாதவர்கள் ஆட்சிக்கு வருவார்கள்’’ என்று அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி மக்களின் உறக்கத்தைக் கலைக்கிறார்.
‘‘தன்னை நேசிக்கிறவனை நேசிப்பது ஒரு பெரிய காரியமா? அது நாய் கூடச் செய்யும். தன்னைப் பகைத்தவனையும் நேசிக்க வேண்டும். அது மனிதனால் மட்டுமே முடியும். ஒரு நாயால் அது முடியாது!’’ என்று மனத்தின் அறியாமை உறக்கத்தைக் கலைக்கிறார், யாழ்ப்பாணம் சாது அப்பாத்துரை என்கிற ஞானி. ரொட்டி போட்டவனிடம் நாய் வால் ஆட்டுவது போல, அன்பு காட்டியவனிடம் அன்பு காட்டுவது என்ன பெரிய விஷயம்? அன்பு காட்டாத வஞ்சகனிடமும் அன்பு காட்டுவது அல்லவா மானிட மகத்துவம்.
‘‘இறைவன் பொழியும் ஆற்றல் அமுதம் ஒன்றே ஒன்றுதான். உடல் வழி வெளிப்பட்டால் அது காமம். மனம் வழி புலப்பட்டால் அது அன்பு. மனத்தையும் கடந்தால் அது அருள். ஆன்மநிலையில் அது ஆனந்தம்!’’ என்று ஆன்ம ஆனந்தத்தைப் புலப்படுத்தி, காமம் என்ற சிற்றின்பத்தைப் பேரின்பமாக்கக் கண் திறக்கிறார் ஓஷோ. கடவுளை நான் கும்பிடுகிறேன் என்பது பக்தி யோகம். கடவுளின் காரியங்களையே நான் செய்கிறேன் என்று அறிந்து கொள்வது கர்ம யோகம். ‘அட..! கடவுளே எனக்குள்தான் இருக்கிறார்!’ என்று புரிந்து கொள்வது ராஜ யோகம். ‘அடடா... கடவுள்தான் நானாக இருக்கிறார்!’ என்று உணர்ந்து கொள்வது ஞான யோகம். இந்த விடியலை உணராமல் உறங்கலாமா?
தூங்காதே தம்பி தூங்காதே... கண்ணைத் திற! மனது சோம்பல் முறித்து விழித்தெழட்டும். தூக்கத்திலிருந்தும் துக்கத்திலிருந்தும் ஆன்மா விழிக்கட்டும். ஞானம் பிறக்கட்டும்.

Comments