ங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாக ராஜரிடம் அநேகம் சீடர்கள் இருந்தனர். ஒரு முறை திருவையாற்றில் நாட்டியக் குழு ஒன்று வந்து, தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தியது. அதைப் பற்றியே ஊர் எங்கும் ஒரே பேச்சு. அவரின் சீடர்கள் நாட்டியம் பார்க்க ஆர்வம் கொண்டனர். ஆனால், குரு தியாகராஜரிடம் அதற்கு அனுமதி கேட்க பயந்தனர்.
சீடர்களில் ஒருவன் ஒரு நாள் தியாகராஜரிடம், நாட்டிய நிகழ்ச்சி நடப்பது பற்றியும், அதைக் காண தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் பயந்தவாறு கேட்டான். ஆனால், தியாகராஜர் அனுமதிக்கவில்லை! வருத்தமடைந்த சீடர்கள், ஒரு நாள் இரவு தியாகராஜருக்குத் தெரியாமல், நாட்டியத்தைக் கண்டு களித்துவிட்டு, ஏதும் அறியாதவர்களாக அடுத்த நாள் காலையில் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர்.
தியாகராஜருக்கு எப்படியோ இந்த விஷயம் தெரிந்துவிட்டது. அவர், தன் மனைவியை அழைத்து, ‘‘இன்று சீடர்கள் எவருக்கும் உணவு அளிக்காதே!’’ என்று கண்டிப்புடன் கூறினார்.
அவரின் மனைவி, ‘‘சீடர்களிடம் தாங்கள் இவ்வளவு கண்டிப்பு காட்டும் காரணம் என்னவோ?’’ என்று கேட்டார். அதற்கு தியாகராஜர், ‘‘இறை பக்தியில் இருக்கும் இன்பம் தெரியாமல் கேளிக்கை பார்க்க விரும்புகிறார்களே, அதனால்தான்!’’ என்றார். அதற்கு அவர் மனைவி, ‘‘உங்களுக்குள்ளும் பக்தியோடு கோபம் கலந்திருப்பது தெரியாமல் இன்று கோபம் அடைந்ததால்தானே இந்த விளைவு!’’ என்றார்.
ஒரு கண நேரம் நன்கு யோசித்த பின், ‘சாந்தமு லேகா சௌக்யமு லேது’ என்கிற பாட்டைப் பாடி சீடர் களை மன்னித்து, அவர்களுக்கு உணவளிக்க மனைவியிடம் கூறினார். சீடர்களிடம் தியாகராஜர் கோபப்பட்டது இதுவே முதலும் கடைசியுமாகும்.
ஆம்! சாந்தம் இருந்தால் சௌக்கியத்துக்கு குறை ஏது?
பள்ளி கொண்ட அனுமன்
ம த்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தவாடாவிலுள்ள ‘சாம்வலி’ எனும் ஊரில் பள்ளி கொண்ட அனுமன் கோயில் உள்ளது. நாக்பூரிலிருந்து சுமார் ஒன்றரை மணி நேரப் பயணம்! உயரமான மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலை தொலைவிலிருந்தும் தெளிவாக தரிசிக்கலாம். பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் கதையுடன் அரைக்கண் மூடிய கோலத்தில், கால்மேல் கால் போட்டவாறு படுத்துறங்கும் நிலையில் அனுமன் அருள் புரிகிறார். ஸ்ரீராமாவதாரம் முடிந்த பிறகு ஆஞ்சநேயர் இங்கு பெரிய மரத்தடியில் படுத்து, ஓய்வெடுத்ததாகக் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னால், இரு முறை அனுமனை நிற்க வைத்து கோயிலெழுப்ப முயற்சித்தபோது, அனுமன் நழுவி நழுவிப் படுத்துக் கொண்டுவிட்டாராம். எனவே, நிற்க வைக்கும் முயற்சியை அதோடு விட்டு விட்டனராம். மரவேரில் சுமார் ஆறடி நீளத்தில் சுயம்புவாக-உடல் முழுவதும் செந்தூர வர்ணம் பூசி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் அனுமன். முதல் சுற்றில் ஆண்கள் மட்டுமே செல்லலாம். பெண்கள் இரண்டாம் சுற்றில் மட்டுமே கால்புறமாக சென்று தரிசிக்கலாம். கோயில் நுழைவாயிலிலிருந்து உள் பக்கம் வரை, அனுமன் சாலீசா இந்தியில் எழுதப்பட்டிருக்கிறது. அருகில் பஜனைக் கூடம் உள்ளது. யாத்ரீகர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
மனநிலை சரியில்லாதவர்கள் இந்த மாருதியை வழிபட்டால் குணம் பெறலாம்!
அர்ஜுனனின் நாமங்கள்!
அ ர்ஜுனனுக்குப் பல பெயர்கள் உண்டு. தூய்மையானவன் என்பதால் ‘அர்ஜுனன்.’ பங்குனி உத்திரத்தில் பிறந்ததால் ‘பல்குணன்.’ தருமரின் மனதை புண்படுத்தியவனை கொல் வேன் என சபதம் செய்ததால் ‘ஜிஷ்ணு.’ இந்திரனிடம் வரம் பெற்றதால் ‘கிரீடி.’ வெள்ளைக் குதிரைகளை உடையவன் என்பதால் ‘சுவேதவாகனன்.’ அருவருக்கத்தக்க காரியத்தை செய்யமாட்டான் என்பதால் ‘பீபத்ஸு.’ போரில் உலகையே வெல்லும் திறமை பெற்றதால் ‘விஜயன்.’ பிருதைக்கு மகன் ஆதலால் ‘பார்த்தன்.’ இடக் கையாலும் கணைகளை விடுபவன் ஆதலால் ‘சவ்யசாசி.’ தனங்களை வென்றதால் ‘தனஞ்செயன்’. இவை தவிர, ‘கிருஷ்ணன்’ என்ற பெயரும் அர்ஜுனனுக்கு உண்டு.
Comments
Post a Comment