யந்திர வடிவ சனீஸ்வரர்!

ஐந்தரை அடி உயரமும், இரண்டரையடி அகலமும் கொண்ட நீள் சதுர கருங்கல்! அதில் மேல் பாகத்தில் வலதுபுறம் சூரியனும் இடதுபுறம் சந்திரனும், நடுவே சனீஸ்வரரின் வாகனமான காகமும் பொறிக்கப்பட்டு, அதன் கீழே ஷட்கோணமும், ஷட்கோணத்தின் மீது சிவன், ஆஞ்சநேயர் மற்றும் சனீஸ்வரர் பீஜாக்ஷர மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

அதற்கும் கீழே லக்ஷ்மி கடாக்ஷ வசிய யந்திரமும், பஞ்சபூத ஆகர்ஷண யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது.

- ஏரிக்குப்பம் என்ற இடத்தில், நாம் தரிசிக்கும் சனீஸ்வர மூர்த்தியின் கோலம் இது.

அது 1535ஆம் ஆண்டு! அப்போது இப்பகுதியை ஆட்சி செய்து வந்த நாயக்க மன்னரின் படைத்தளபதியாக விளங்கிய வையாபுரி என்பவர், இவ்வழியாக குதிரையில் சென்று கொண்டிருந்தார். காரணம் ஏதுமின்றி, திடீரென ஓடும் குதிரையிலிருந்து கீழே விழுந்த வையாபுரிக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது! குதிரையும் நிலைதடுமாறி விழுந்ததால், அதற்கும் பலத்த அடி! ஊர் மக்கள் ஓடி வந்து உதவி செய்தனர்!

அச்சமயம் ஒரு பெண்ணின் வாயிலாக இறைவன் வெளிப்பட்டு, சனீஸ்வர பகவானுக்கு கோயில் ஒன்றை இங்கே எழுப்புமாறும், சிறப்பு வழிபாடுகள் செய்யச் சொல்லி, மேலும் அதனால், வையாபுரியின் உடல்நலம் தேறும் என்றது. அதன்படியே உடல் தேறிய வையாபுரி, பெரியோர்களின் ஆலோசனைப்படி அமைந்ததுதான் இந்தச் சிலாரூபம்! நான்கு கால பூஜைகள் விசேஷமாக நடைபெற்று வந்தன.

கால வெள்ளத்தில் கோயில் சிதைவுற்றது. யந்திர சிலை முட்புதர்களால் மூடப்பட்டது. சமீபத்தில் தொல்பொருள் துறையினரால் அகழ்வாராய்ச்சி செய்யும் போது கிடைக்கபெற்றது இந்த யந்திர சிலை. அதைத் தொடர்ந்து அதற்கு சிமென்ட் கொட்டகை அமைத்து வழிபாடு செய்தனர்! தற்போது அற்புதமாக ஆலயம் எழுப்பி, நித்திய பூஜைகளும், சனிக்கிழமைகளில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக, ஆராதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன!

திருமண பிராப்தி, குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, லக்ஷ்மி கடாக்ஷம், சனீஸ்வர ப்ரீதி மற்றும் சகல தோஷ நிவர்த்திக்காகவும், இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து பலன் பெறுகின்றனர்.

எள் முடிச்சிட்ட தீபம், நல்லெண்ணெய் தீபம் ஆகியவற்றை ஏற்றி ஒன்பது வாரங்கள் வழிபாடு செய்ய, வேண்டிய வரங்கள் கைகூடுகின்றன என்பது பலர் அனுபவம்.

*
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ளது ஏரிகுப்பம். ஆரணி மற்றும் போளூரிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன! ஆரணி-படவேடு பேருந்து சாலையில் நடுகுப்பத்துக்கு அடுத்ததாக ஏரிகுப்பம் கூட்ரோட்டிலிருந்து ஒரு கி.மீ. ஆரணியில் தங்கி இத்தல தரிசனம் செய்யலாம்.

தரிசன நேரம்:

காலை: 7 மணி முதல் 1 மணி வரை

மாலை: 4 மணி முதல் 7 மணி வரை

Comments