'பலமே வாழ்வு... பயமற்றவனே இளைஞன்!'

உலகில் சுவாமி விவேகானந்தர் மிகவும் வெறுத்தது ஒன்று உண்டு என்றால், அது 'பயம்'தான்! ''பலமே வாழ்வு; பலவீனமே மரணம்'' என்று உரைத்த சுவாமி விவேகானந்தர், இதுகுறித்து ஒரு கதையும் சொல்லியிருக்கிறார்.

காட்டில் கலைமான் ஒன்று வசித்தது. ஒருநாள் அதன் குட்டி, ''உங்களது பெரிய கொம்பு மிக அழகாக இருக்கிறதே!'' என வியப்புடன் கேட்டது.

''ஆமாம்... இந்தப் பெரிய கொம்பு இருப்பதால்தான் சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்களும் என்னைக் கண்டு பயந்து ஓடுகின்றன'' என்றது கலைமான். அப்போது, திடீரென சிங்கத்தின் கர்ஜனை வெகு தொலைவில் கேட்டது. கலவரம் அடைந்த கலைமான், ஓடி மறைந்தது! குட்டி மான், தந்தையைக் காணாமல் நின்றது. சற்று நேரம் கழித்து கலைமான் வந்தது. ஆனால் அதன் பயம் நீங்கவில்லை!

''பெரிய மிருகங்களையும் கொம்பை வைத்து பயமுறுத்துவேன் என்றீர்களே... இப்போது எங்கே போனீர்கள்?'' எனக் கேட்டது குட்டி மான்.

இதற்கு, ''ஹும்.. என்னமோ தெரியவில்லை... நான் தைரியசாலிதான். ஆனால், சிங்கத்தின் குரலைக் கேட்டதும் பயந்து ஓடிவிடுகிறேன்'' என்றதாம் கலைமான்!

வீறாப்பாகப் பேசும் நம்மில் பலரது நிலைமையும் இப்படித்தான். சிக்கலான நேரங்களில் நமது இயல்பே பயப்படுவதுதான். இதற்கு சரியான மருந்து... 'பயமில்லை... பயமில்லை என்று எப்போதும் முழங்கு; 'பயம் கொள்ளாதே' என எல்லாரிடமும் சொல். பயமே மரணம், பயமே பாவம், பயமே நரகம்' என அறிவுறுத்தினார் விவேகானந்தர். 'மனிதன், ஓர் உண்மையில் இருந்து மற்றொரு உண்மைக்குப் போகிறான்' என்றார் சுவாமிஜி. ஆனால், 'மனிதன் ஒரு பயத்திலிருந்து மற்றொரு பயத்துக்கு போகிறான்' என்பதே இன்றைய நிலைமை!

இளங்கன்று பயம் அறியாது என்பர். இன்றோ, பிஞ்சு உள்ளங்களிலும் பயத்தை விதைத்து விட்டோம்.

படிக்கும்போது தேர்வு பயம்; பின்னர் தேர்வுகளில் தேறுவோமா என்ற பயம்; தேறியதும், உயர் கல்விக்கு இடம் கிடைக்குமா..? கிடைத்ததும், முடிப்போமா..? முடித்ததும், வேலை கிடைக்குமா..? வேலை கிடைத்ததும், சம்பளம், பதவி உயர்வு கிடைக்குமா..? பின்னர் நல்ல துணை அமையுமா..? அமைந்ததும், குழந்தை பிறக்குமா..? பிறந்ததும், எல்கேஜி அட்மிஷன் கிடைக்குமா..? கிடைத்ததும், வாரிசு நல்லபடி வளருமா..? இப்படி பயத்தில் தொடங்கி, பயத்திலேயே உழன்று, பயத்திலேயே தொடரும்படி வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். உண்மையான பயத்தைவிட, கற்பனை பயத்திலேயே நாட்களை அதிகம் கழிக்கின்றனர்!

சுவாமிஜி பற்றி சிந்திக்கும் போது, அவரது அச்சமற்ற தன்மை நமக்கும் கிடைக்கும். அவருக்கு மட்டும் அச்சம் வரவே இல்லையா என கேட்கலாம். வந்தது. அந்த அச்சத்தை எப்படி அவர் வென்றார்?

சுவாமிஜி 'லிம்டி'யில் ஓர் ஆஸ்ரமத்தில் தங்கினார். அந்த ஆஸ்ரமத்தில், விதிகளுக்கு மாறாக போகம் தலைவிரித்தாடியது. சுவாமிஜி ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி. அப்படிப்பட்டவரின் பிரம்மச்சரியத்தால் உண்டான சக்தியைப் பெறும் பொருட்டு, அவர்கள் ஒரு சடங்கு செய்ய எண்ணி, சுவாமிஜியை ஓர் அறையில் அடைத்து பூட்டினர். சுவாமிஜிக்கு முதலில் பயம் உண்டானது. பின்னர், லிம்டியின் இளவரசருக்கு தனது சூழ்நிலையை விவரித்து கடிதம் எழுதி, ஓர் இளைஞன் மூலம் கொடுத்தனுப்பினார். இளவரசர், சுவாமிஜியை காப்பாற்றி, ஆஸ்ரமத்தின் மீது தக்க நடவடிக்கை எடுத்தார்.

சுவாமிஜி, ஆன்மிகத்தில் மேலும் முன்னேற வேண்டும் என்ற ஏக்கத்துடன் இறைத் தேடலை தொடர்ந்த காலம்... வனத்தில் தியானம் செய்தார். இருள் சூழ்ந்த நிலை... அவரின் எதிரே இரண்டு காந்தக் கண்கள்! ஆ! அது புலியின் கொள்ளிக் கண்கள் அல்லவா?! ஆன்மப் பசியுடன் அமர்ந்திருந்தவரின் முன்பு வயிற்றுப் பசியுடன் ஒரு புலி! சுவாமிஜியோ சஞ்சலம் அடையவில்லை. புலியும் அமைதியாக இருந்தது; அச்சமற்ற நிலையில் இருந்த சுவாமிஜியை ஒன்றும் செய்யாமல், தன் வழியே சென்றது புலி!

சிகாகோ சர்வ சமய மாநாட்டில் பேச அழைத்த போது, ஒருவித தயக்கத்துடன், ''பிறகு பேசுகிறேன்'' என்று பலமுறை கூறினார். முடிவில் மேடைக்கு சென்றார். அப்போது சரஸ்வதி தேவியை பிரார்த்தித்தார். அவள் அருளும் கிட்டியது. அவரின் உரை, உலகத்தையே நம் நாட்டை திரும்பி பார்க்க வைத்தது.

- இந்த சம்பவங்கள்... சுவாமிஜியே சற்று பயந்தார் என்பதைக் காட்டினாலும், அவர் அந்த பயத்தை எப்படி தனது அறிவுக்கூர்மையாலும், இறைவனிடம் பிரார்த்தித்ததன் மூலமும் வென்றார் என்பதை உணர்த்துகின்றன.

பயத்தை எப்படி வெல்வது? பயம் யாருக்கு வரும்? தன்னம்பிக்கை குறைவாக உள்ளவர்க்கே பயம் வரும்.

'இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்கிறார்கள். ஆனால் நான் கூறுகிறேன்... முதலில் உன்னிடமே நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே உள்ளன' என்றார் சுவாமிஜி. இளைஞன் என்பதற்கு சுவாமிஜி சொல்லும் இலக்கணம் என்ன தெரியுமா? 'பயமற்றவனே இளைஞன்!'

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும், இன்றும் இளைஞர்களின் ஆதர்ஷ புருஷராக விளங்கும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை 'தேசிய இளைஞர் தினம்' என்று கொண்டாடுவதில்தான் எவ்வளவு பொருத்தம்!

Comments