சகல தோஷங்களையும் நீக்கும் சோழவந்தான் ஸ்ரீபிரளயநாதர்!

மதுரையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது சோழவந்தான். இங்கே, வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது ஸ்ரீபிரளயநாதர் கோயில்!

சிறிய ஆலயம்தான் என்றாலும் புராதன மானது. பாண்டிய மன்னன் ஒருவன், காசி க்ஷேத்திரத்தில் இருந்து சிவலிங்கம் எடுத்து வந்து, இங்கே பிரதிஷ்டை செய்து அனு தினமும் வழிபட்டு வந்ததாகச் சொல்கிறது தல புராணம். ஒரு முறை வைகை ஆற்றில் கடும் வெள்ளம்! கரையைக் கடந்து, ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் மொத்த ஊரும் மூழ்கியது. மக்கள் தவித்தனர்; உயிருக்கு பயந்து சிவாலயத்துக்கு ஓடோடி வந்தனர். 'பிரளயகாலம் போல், வெள்ளம் சூழ்ந்துள்ளது. நீங்கள்தான் இந்த ஊரைக் காப்பாத்தணும்' என்று இறைவனிடம் வேண்டினர். பக்தர்களுக்கு ஆபத்து என்றால் ஆண்டவன் பொறுப்பாரா? அவரின் திருவருளால், ஊருக்குள் புகுந்த வெள்ள நீர் மொத்தமும் வடிந்தது. தேசம் செழிக்கவும் விவசாயம் தழைக்கவும் ஏதுவாக... சாந்தமாக வைகையில் நீர் நிரம்பி ஓடியது! பிரளயத்தில் இருந்து காத்தருளியதால் இங்கே குடிகொண்டிருக்கும் ஈஸ்வரனுக்கு, 'ஸ்ரீபிரளயநாதர்' எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர். அம்பாளின் திரு நாமம்- ஸ்ரீபிரளயநாயகி; நின்ற திருக்கோலத்தில் கருணை நாயகியாக அருள்புரிகிறாள்.

பிரளயநாதரை வணங்கி வழிபட்டால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, விசாகம் மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான தோஷ பரிகாரத் தலம் என்பது விசேஷம். அருள்மிகு பிரளயநாதரையும் ஸ்ரீசனீஸ்வரரையும் வழிபட்டு பிரார்த்தித்தால், விசாக நட்சத்திரக்காரர்களின் தோஷங்கள் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்!

ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகியோரும் தனித் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

ஸ்ரீதுர்கையை, செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியன நிவர்த்தியாகும். சர்ப்ப தோஷமும் நீங்கும் என்கின்றனர். ஸ்ரீபைரவரும் விசேஷமானவர். பில்லி, சூனியம், வாழ்க்கையில் கவலை, தள்ளிப் போகும் வழக்கு ஆகிய பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்கள், ஒன்பது அல்லது 11 ஞாயிற்றுக் கிழமைகள் இங்கே வந்து, தேங்காய் மற்றும் பழங்கள் வைத்து, ஸ்ரீபைரவரை பிரார்த்திக்க... விரைவில் பலன் கிடைக்குமாம்!

இந்த ஆலயத்தில் போகர் மகரிஷி தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். குரு மற்றும் சித்தர் முதலானோரின் சாபத்துக்கு ஆளானவர்கள், மகரிஷி போகரை வணங்கி வழிபட்டால் சாப விமோசனம் பெறுவர் என்பது ஐதீகம்; இவருக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகின்றன.

Comments