மத்வ தரிசனம்

உடுப்பியிலிருந்து 15 கி.மீ. தொலைவில், அழகிய குன்றின் அடி வாரத்தில் உள்ள பாஜக கே்ஷத்திரம்தான் ஸ்ரீமத்வாச்சாரியார் அவதரித்த திருத்தலம். இங்கு ஸ்ரீமத்வர் அவதரித்த இல்லத்தைத் தரிசித்துவிட்டு அதன் பொறுப்பாளரான மாதவ உபாத்தியாய என்ற பெரியவரைப் பார்ப்பதென்று முடிவானது. நாகங்களுக்கு அவர் தரும் மூலிகைச் சிகிச்சை பிரபலமானது.

பாற்கடலில் பாம்புப் படுக்கையில் துயில் கொள்கிறார் பரந்தாமன். பரமசிவன் கழுத்திலோ பாம் பாரணம். பரம்பரையாக பரமனின் சொத்தை, பாம்புகளே பாதுகாத்து வருவதாக ஐதீகம். பாம்பு வளையங்கள் அரணமைத்த வடிவில்தான் நமது ஆலயங்கள் பெரும்பாலும் உள்ளன.

திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோயிலில் கிடைத்தது போல் பல்லாயிரம் கோடி பெறுமானமுள்ள தங்கமும் வைரமும் உடுப்பி கிருஷ்ண மடத்திலும் இருப்பதாகவும், அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு ஸ்ரீமத்வரால் பாம்புகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கர்நாடகத்தில் பரவலாக நம்பப்படுகிறது.

பாம்புகள்தான் வயல்வெளிகளில் எலிகளைக் கட்டுப்படுத்துகின்றன. வேளாண் பூமியான தெற்கு கர்நாடகாவில், பாம்புகள் உடல் நலிவுறும்போதோ அல்லது அடிபடும்போதோ அவற்றுக்கு மருத்துவம் பார்க்க, பல வழிமுறைகளை ஸ்ரீமத்வர் உருவாக்கி வைத்துவிட்டுப் போயுள்ளார். அதை வலியுறுத்தும் கற்சிற்பம் ஒன்றையும் பார்த்தோம்.

அதாவது, பாம்புக்கடிக்குச் சில இடங்களில் வைத்தியம். இங்கோ பாம்புக்கே வைத்தியம்!

மத்வர் இல்லப்பொறுப்பை நிர்வகிக்கும் 80 வயதுப் பெரியவர் மாதவ உபாத்யாய, உடல் நலிவுற்ற - காயம்பட்ட பாம்புகளுக்கு மூலிகைச் சிகிச்சை மற்றும் உணவு அளிக்கப்படுவதை நம்மிடம் நேரடியாக விளக்கினார். அங்குள்ள வலைப்பெட்டிகளில் பெரிய நாகங்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தன.

ஸ்ரீமத்வரின் வரலாறு, சித்திரங்களாக அந்த இல்லத்தில் காட்சி அளிக்கின்றன. அவற்றின்படி - கி.பி 1238ஆம் ஆண்டு, விளம்பி என்ற பெயருடைய வருடத்தில், விஜயதசமியன்று 32 லட்சணங்களும் கூடிய ஒர் ஆண் குழந்தை, வேதவதி - மத்யகேஹ பட்டர் என்னும் தம்பதிக்குப் பிறக்கிறது. அதற்கு வாசுதேவன் என்று பெயரிட்டு வளர்க்கின்றனர். ஒருநாள் மத்யகேஹ பட்டர் வாங்கியிருந்த கடனை, திரும்பக் கேட்டு வருகிறான் ஒருவன். அந்த சமயத்தில் அவர் ஊரில் இல்லை. கடன்காரனோ தொல்லை செய்கிறான். அப்போது குழந்தை வாசுதேவன் வேகமாகச் சமையலறைக்குச் சென்று அங்கிருந்த சில புளியங்கொட்டைகளை அள்ளிக்கொண்டு வந்து, ‘இதோ வாங்கிக் கொள்’ என்று அளிக்கிறான். அவை எல்லாம் தங்கக் காசுகளாக மின்னுகின்றன. ஏழு வயதில் குழந்தைக்கு உபநயனம் செவித்து குருகுலத்துக்கு அனுப்புகின்றனர்.

ஆனால் வாசுதேவன் நீச்சல், ஓட்டம் போன்றவற்றில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறான். மனவருத்தமடைகின்றனர் பெற்றோர். வாசுதேவனது கைரேகைகளைப் பார்த்த ஒரு பெரியவர் திகைப்படைகிறார். அன்னை வேதவதியிடம், ‘அம்மா! உங்கள் திருக்குமரன் ஓர் அவதார புருஷன். பாண்டவர்களில் பீமனாகவும் ராமாயண காலத்தில் வாயு குமாரனாகவும் இருந்தவர். இப்பிறவியில் சிறந்த ஞானியாக பாரதம் முழுவதும் ஒளிவீசுவார்’ என்கிறார் அவர்.

அதன்படியே தம் 16 வயதில் இல்லத்தைத் துறந்து காஷாயம் தரித்து, உடுப்பி வந்து அச்சுதப்பிரக்ஞர் (அச்சுதப்ரேக்ஷ) என்னும் மகானை குருவாக ஏற்கிறார். அனந்தேஸ்வரர் கோயிலில் சன்யாச தீட்சை அளிக்கப்பட்டு பூரணபிரக்ஞர் என்ற தீட்சா நாமம் பெறுகிறார்.

தனது 23ஆம் வயதில் கீதைக்கு பாஷ்யம் எழுதி, அதனை வேதவியாசரிடம் சமர்ப்பணம் செய்வதற்காக பத்ரிநாத் செல்கிறார். பின்னர் ப்ரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் செய்கிறார். கன்னடம், சமஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சி பெறுகிறார். தச பிரகரணங்கள், உபநிஷத விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனு வியாக்கியானம் முதலிய 37 நூல்களை எழுதியிருக்கிறார்.

இறைவனிடம் அழியாத அன்பு கொள்வதும், எல்லாரிடமும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டுவதும், தனக்குரிய கடமைகளைப் பணிவுடன் செய்வதும், பக்தி உள்ளத்துடன் வாழ்வதும், நல்ல பணிகள் செய்ய வாழ்க்கையை அர்ப்பணிப்பதுமே மனிதப் பிறவியின் தத்துவம் என்பதே அவரின் கொள்கை. அவர் அளித்த ப்ரம்மஞான தத்துவமே ‘த்வைதம்‘. (இறைவன் வேறு; மனிதன் வேறு).

‘மத்வர்’ - அதாவது, ‘யாராலும் வெல்ல முடியாதவர்’ என்று சிஷ்யர்கள் அவரை அழைக்கத் தொடங்கினர். இத்தத்துவங்களைப் பின்பற்றியவர்களை மாத்வர் என்று கூறும் வழக்கம் ஏற்பட்டது. இன்றும் மாத்வர்களுக்கு ஹரியும் வாயுவும் முதன்மை. ஏனெனில், மாத்வர் ஹரிபக்தியில் சிறந்தவர்; அதே சமயத்தில் அவரே வாயுகுமாரனும் என்பதால்!

ஒருநாள் - தனது நித்ய அனுஷ்டானங்களைச் செய்வதற்காக வட பந்தேஸ்வரர் கடற்கரையைச் சென்றடைந்த மத்வாச்சாரியார் புயலில் ஒரு கப்பல் தடுமாறுவதைப் பார்த்தார். அதைக் காப்பாற்ற, கடவுளை வேண்டி தனது மேல் துண்டை எடுத்து கப்பல் இருக்கும் திசை நோக்கி வீசினார்.

புயல் சட்டென ஓய்ந்து அடங்கியது. கப்பல் கரைக்கு வந்து ஒதுங்கியது. கப்பலோட்டி மத்வாச்சாரியாரின் காலில் வீழ்ந்து வணங்கினான். அன்பளிப்பாக கப்பலிலுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுமாறு வேண்டினான் அவன்.

ஆனால், மத்வர் கேட்டது கப்பலைச் சமநிலையில் வைக்கப் பயன்படும் ஒரு பாறையை. கப்பலோட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. அதனுள் விலை மதிக்கவியலாத பரம்பொருள் இருப்பது அவனுக்குத் தெரியாது. அது என்ன? (காண்க: பெட்டிச் செய்தி)

கோபிப் பாறையில் ஒளிந்திருந்த மாயக்கண்ணன், மத்வர் மனக் கண்ணில் தெரிந்தான். கப்பலோட்டியிடம் அதை மட்டும் கேட்டுப் பெற்றுக் கொண்டார். அந்த நேரம் அவர் பக்திப் பரவசத்தில் பாடிய பாடல்கள் ‘த்வாதஸ ஸ்தோத்திரம்’ என்று வழங்கப்படுகிறது. இன்றும் உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் அவை பாடப்பெறுகின்றன.

அந்தப் பாறையை திருக்குளத்தில் நீராட்டியபோது, ஸ்ரீகிருஷ்ணரின் சாளக்கிராம சிலை வெளிப்பட்டது. அத்திருக்குளம் மத்வசரோவர் என்று பிரசித்தி அடைந்தது. மத்வர் அச்சிலையை உடுப்பியில் கிழக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார். வலது கையில் மத்தும் இடதுகையில் கோலும் ஏந்திக்கொண்டு, பார்ப்போரை பரவசம் அடையச் செய்கிறான், அந்தப் பொல்லாத பாலகிருஷ்ணன்.

மத்வர் நடமாடிய இல்லத்தில் நடந்து கொண்டே அவரது வரலாறைக் கேட்கும் பெரும்பேறு பெற்றோம்.

நமது நண்பர், டாக்டர் ஷர்மா மேலும் விளக்கினார்:

‘மத்வாச்சாரியார் எட்டு மடங்களை ஸ்தாபனம் செய்தார். பக்தி மார்க்கத்தைப் பரப்பவும், ஸ்ரீகிருஷ்ணருக்கு பூஜை செய்யவும் உடுப்பியிலுள்ள எட்டு கிராமங்களிலிருந்து எட்டு துறவிகளை நியமனம் செய்தார். கிருஷ்ணபூர, சீரூர் காணியூர், சோடே, பாலிமர், அடாமர், பெஜாவர், புதிகே ஆகியவையே அஷ்ட மடங்கள் என அழைக்கப்படுகின்றன.

ஒவ்வொருவரும் ஸ்ரீகிருஷ்ணரை ஒன்றரை மாதத்துக்கு ஒருவர் என்ற கணக்கில் பூஜை செய்வது எனத் திட்டம் வகுத்துக் கொண்டு பூஜை செய்து வந்தனர். இங்ஙனம் அவர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்ட முறைக்கு ‘பார்யாயம்‘ எனப் பெயர். ஸ்ரீவாதிராஜ ஸ்வாமிகளின் காலத்துக்குப் பிறகு, அது இரண்டாண்டுகளாக மாறியது.

ஸ்ரீகிருஷ்ணன் சன்னிதியில் மத்வாச் சாரியாரால் ஏற்றப்பட்ட ஒரு நெய் தீபம் (பிரதிஷ்டை தினம்) இன்றும் அணையாமல் பாதுகாக்கப்படுகிறது.

மத்வர் மற்ற சன்யாசிகள் போல இறுதிக்காலத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்யவில்லை. 79 வயது வரை வாழ்ந்தார் அவர். 1317ஆம் வருஷம் உடுப்பி அனந்தேஸ்வரர் கோயிலில் தனது சிஷ்யர்களுக்குப் பாடம் நடத்தும்போது, திடீரென அவர் மீது புஷ்பங்கள் விழுந்தன. அவரை மூடி ஒரு பூக்குன்று உருவானது. அவற்றை அகற்றிப் பார்த்தால் மத்வரைக் காணவில்லை. அவர் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் வேதவியாசர் அருகில் அமர்ந்து பாடம் கேட்பதாக நம்பிக்கை.

மத்வர் வாழ்ந்த வீடு, கல்வி கற்ற இடம், விளை யாடிய இடம், நீராடிய குளம் ஆகிய எல்லாவற்றையும் பாஜக கே்ஷத்திரத்தில் பார்த்து நெகிழ்ந்தோம். பிறகு உடுப்பி திரும்பும்போது வானத்துச் சூரியன் ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தான்.

ஸ்ரீகிருஷ்ணன் கோயில் அந்த ஒளியில் தங்கமாய்த் தகதகத்துக் கொண்டிருந்தது.

சந்தனப் பாறையிலிருந்து மத்வருக்குத் தன்னைக் காட்டிக் கொண்டதும் கண்ணனே! கனகதாசனுக்காக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கித் திரும்பியதும் அவனே!

அவன் காணச் செய்தால் காணாதவர் யார்? அவன் காட்டாவிட்டால் காணவல்லவர் யார்?

துவாபர யுகம், துவாரகை

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ச

சாணூர மர்த்தனம்

தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்

குரும்.

ஒருத்தி (தேவகி) மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி (யசோதை) மகனா வளர்ந்தவர் கிருஷ்ணர்.

மகன் மாயக் கண்ணனின் பிள்ளைச் சேட்டைகளை, தான் பார்த்து ரசித்து அனுபவிக்கவில்லை எனும் வருத்தம் தாய் தேவகிக்கு.

கம்ச வதத்துக்குப் பின் ஒருமுறை கிருஷ்ணரிடம் அவர் இதைத் தெரிவித்தார். கிருஷ்ணரும் தனது பாலபருவத்து லீலைகளை மீண்டும் தாக்கு நடத்திக் காட்டினார். தேவகியோடு ருக்மிணியும் இதைக் கண்டு களித்தாள். கணவனிடம் அவள் அதை ஒரு விக்கிரகமாக வடித்துத் தருமாறு கேட்டாள். அதாவது - கண்ணனிடமே கண்ணனை வேண்டினாள் அந்தக் காரிகை.

தேவலோக சிற்பி விஸ்வகர்மா வடிவமைத்துக் கொடுத்த - கையில் கோல் மற்றும் தயிர் மத்துடன் கூடிய பாலகிருஷ்ணன் விக்கிரகத்தை ருக்மிணிதேவி தினமும் பூஜித்து வந்தாள் கிருஷ்ண சங்கல்பத்தால் பழைய துவாரகை (தற்சமயம் குஜராத்திலுள்ள துவாரகா) நீரில் மூழ்கியபோது, ருக்மிணி பூஜை செய்து வந்த விக்கிரகமும் மூழ்கிப் போய்விட்டது . கோபி என்று சொல்லப்படும் ஒருவித களிமண்ணால் அது முழுவதும் மூடப்பட்டு, காலப்போக்கில் பாறைபோல இறுகி சமுத்திரக் கரையில் ஒதுங்கியது. கோபி சந்தனம் என்றும் அதை அழைக்கிறார்கள்.

பல நூற்றாண்டுகள் கழித்து கப்பலோட்டி ஒருவனுக்கு இந்தப் பாறை கண்ணில் பட்டது. தனது கப்பலில் பாரத்தை சமநிலையில் வைக்க அதை அவன் உபயோகப்படுத்தி வந்தான். அவனது மரக்கலமே மத்வரால் மீட்கப்பட்டது.

கனகதாசர் ஜயந்தி

கனகதாசரின் பெரும்பாலான பாடல்கள் தம்புராவை மீட்டிப் பாடும் வகையில், எளிய சொற்களிலேயே அமைந்துள்ளன. பல பாடல்கள் தத்துவார்த்தமானவை.

உடுப்பியில் கோயிலுக்கு வெளியே சிறு நினைவு மண்டபத்துடன் அவருடைய திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நவம்பர் 24ம்தேதியன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, ‘கனகதாஸ ஜயந்தி’ என்று கொண்டாடுகிறார்கள். கனகதாசரின் பிறந்தநாள் மட்டுமல்ல; பசவண்ணா எனும் கன்னடப் புலவரின் பிறந்தநாளுக்கும் கர்நாடகத்தில் மாநில அரசு விடுமுறை அளிக்கிறது.

அடித்தட்டு மக்களின் சமய, ஆன்மீகக் குரலாக எழுந்த இருபெரும் சைவ, வைணவப் பெரியார்களின் பிறந்த நாட்களை அரசு விடுமுறையாக அறிவித்ததோடு, அவர்களின் மனிதநேய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகளைப் பரப்பும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் நடத்த மாநில அரசு ஆதரவு தருகிறது.

செல்லும் வழி: சென்னையிலிருந்து மங்களூர் செல்ல பல ரயில்கள் உள்ளன. மங்களூருவிலிருந்து உடுப்பி 60 கி.மீ. தொலைவு. மங்களூருவிலிருந்து கோவா செல்லும் ரயில்களிலும் உடுப்பி செல்லலாம்.உடுப்பிக்குச் செல்ல கர்நாடக மாநிலம் முழுவதிலிருந்தும் நிறைய பேருந்துகள் இருக்கிறது.

திறக்கும் நேரம்: காலை 4-இரவு 9.30 மணி.

தங்குமிடம்: புதிகே மதத்தால் நிர்வகிக்கப்படும் கீதாமந்திர் கோயில் வளாகத்தில் உள்ளது. அறை வாடகை ரூ. 250.

தொ.பே: 0820 2522222.

Comments