வேதபுரீஸ்வரர்

குழையார் காதீர் கொடு மழு வாட்படை

உழை ஆள்வீர் திருவோத்தூர்

பிழையா வண்ணங்கள் பாடி நின்றாடுவார்

அழையாமே அருள் நல்குமே

(திருஞானசம்பந்தர் தேவாரம், திருமுறை 1; பதிகம் 54; பண்: பழந்தக்க ராகம்)

காதொன்றில் குழை அணிந்தவரும், மழுவான வாள் படையைக் கரமொன்றில் ஏந்தியவரும், பிழையில்லாமல் பாடி ஆடுகின்றோர் அழைக்காமலே அருள்பாலிப்பவருமான சிவபெருமான் திருவோத்தூரில் வீற்றிருக்கிறார் என்னும் பொருளுடன் காழிப் பிள்ளையான திருஞானசம்பந்தர் திருவா மலர்ந்தருளிய பாடல் இது.

பாடி நின்றாடுவார் அழைக்காமல் அருள்பவர் என்பது இப்பாட்டின் நயம். துன்பத்தில் தவிக்கும் மனிதன் அத்துன்பத்தைப் போக்கியருள வேண்டும் என்னும் பிரார்த்தனையுடன் இறைவனை அழைப்பது இயல்பு. துன்பத்தைத் துடைத்து இன்பத்தை அருள வேண்டும் என்பதே உலகாயதப் பிரார்த்தனைகளின் குறிக்கோளாக அமைகிறது. மனிதனின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து, துயரங்களைப் போக்கும் கருணை வள்ளலான சிவபெருமான், எவ்வித நோக்கமுமின்றிப் பாடி ஆடுவோரின் முன் தாமே வலியச் சென்று மனமுவந்து அருள்பாலிக்கிறார் என்றுரைக்கிறார் சம்பந்தப் பெருமான். தந்தையைக் காணாமல் தவித்த குழந்தைக்கு, தாமே வலிய வந்து அம்மையை ஞானப்பால் புகட்டச் சொன்ன பரமனாரின் கருணை, சம்பந்தரின் கண்முன் மிளிர்ந்தது போலும்! கேட்காமலேயே கொடுக்கும் பரமனாரிடம் வேண்டுவது அவசியமற்றது என்னும் நுண்பொருளோடு விளங்கும் இப்பாடல், வேதபுரீஸ்வரராக சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருவோத்தூரில் பாடப்பெற்றது.

இன்றைய வழக்கில் செய்யாறு என்று வழங்கப்பெறும் இத்தலத்துக்கு திருவோத்தூர் என்பது இலக்கியப் பெயர். ஓதப்பெறுவதனால், வேதத்துக்கு ஓத்து என்று பெயர். ஒருசமயம், வேதங்களை ஓதிக் கொண்டிருந்த மாமுனிவர்களுக்கு அவை மறந்து விடுகின்றன. வேதப்பொருளும் புரியாமல் போகிறது. தவித்துப்போன அவர்கள், தங்களை மன்னித்து வேதநிதியை மீண்டும் வழங்குமாறு இறைவனாரிடம் வேண்டுகிறார்கள். வேண்டுதலுக்கு இரங்கிய சிவபெருமான், அனைவருக்கும் குருவாக அமர்ந்து வேதம் ஓதுவித்துப் பொருள் உரைக்கிறார். வேதம் ஓதுவித்ததால் ஓத்தூர்; ‘இமையோர்கட்கும் மெய்த்தவத்தவர்க்கும் ஓதுவித்தோம் ஆதலினால் மேவு திருவோத்தூர்’ என்று இறைவனாரே இத்தலத்தின் பெயரைச் சொன்னதாகக் காஞ்சிபுராணத் தகவல். அதன்பின்னர், வேதங்கள் ஒரு வேண்டுகோளை வைத்தன. வேத ஒலிகளைச் சிவனார் தம்முடைய டமருகத்தில் ஏந்திக்கொள்ள வேண்டும் என்று அவை யாசிக்க, அதன்படி அவ்வொலிகளை டமருவில் அடக்கி, அதனை ஒலித்துக்கொண்டே வீர நடனமும் ஆடினார் ஆடவல்லார்.

காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள இத்தலத்தில், வேதத்தை ஓதியவரும் வேதத்துக்கு முதல்வனுமாகிய சிவனாருக்கு வேதபுரீஸ்வரர், வேதநாதர் போன்ற திருநாமங்கள். பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி என்பவை இறைவியாரின் திருநாமங்கள். சேயாற்றின் கரையில் உள்ள தலம் என்பதால், செய்யாறு என்னும் பெயர். சேயாறு என்னும் பெயரே மிக அற்புதமானது. சேயோனான முருகப்பெருமானின் வேலாயுதம் பூமியில் ஊன்றப்பெற்று உருவான ஆறு என்பதால் சேயாறு; பாலாற்றிலிருந்து பிரிந்து பாயும் ஆறு என்பதால், பாலாற்றின் குழந்தை (சே) என்னும் பொருளிலிலும் இது சேயாறு. திருவத்திபுரம், திருவத்தூர் போன்ற பெயர்களாலும் இத்திருத்தலம் அழைக்கப்பெறுகிறது.

பனையைத் தலமரமாகக் கொண்டுள்ள இத்தலத்தில் திருஞானசம்பந்தர் பதிகம் பாட, ஆண் பனைக்குப் பெண் பனையின் தன்மைகள் வந்தன என்பது வரலாறு. சேயாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கரையில் அமைந்த கோயிலின் சுவர்கள் பாழ்பட்டன. இதைக் கண்ட சிவனடியார் ஒருவர், தம்முடைய உழைப்பினால் ஆற்றின் கரையை உயர்த்தினார்; வருங்காலங்களில் வெள்ளநீரால் கரை கரைந்து போகாமலிருக்க, பனங்கொட்டைகளை நட்டு பனைமரங்களை வளர்க்கலானார். காலப் போக்கில் பனைமரங்கள் உயர்ந்தோங்கி வளர்ந்தன. ஆனால் அனைத்து மரங்களும் ஆண் பனைகளாக இருந்த காரணத்தால், நுங்கு போன்ற எந்தப் பயனும் கிட்டவில்லை. இதைக் கண்ட சிலர், சிவனாரின் அருளை இழிவாகப் பேசினர். வருத்தமடைந்த அடியார், ஓத்தூர் வந்தடைந்த சம்பந்தரிடம் இதுபற்றிக் கூறினார். இறைவனின் அருளை நினைந்து பதிகம் பாடிய ஞானசம்பந்தர், நிறைவாக குறும்பை ஆண் பனை ஈன் குலை ஓத்தூர்" என்று பாட, ஆண் பனைகளில் குலைகள் கொழிக்கத் தொடங்கின. அடியாரின் சொல்லை மெய்ப்பிக்க இறைவனார் திருவிளையாடல் நிகழ்த்திய அற்புதத் தலம்!

பஞ்ச பூதத் தலங்களை நினைவூட்டும் வகையில், ஐந்து சிவலிங்கத் திருமேனிகள் - திருச்சிற்றம்பலவன், திருக்காளத்தியார், திருஆனைக்காவுளார், திருவண்ணாமலையார், திருவேகம்பன் - வடக்குப் பிராகாரத்தில், தனித்தனி சன்னிதிகளில் அமைந்துள்ளன. மூலவர் மீது சூரிய ஒளி விழுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு. கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சிவனார், அம்பாள், விநாயகர், முருகன், நவகிரகங்கள், தலமரம் என்று அனைத்தையும் ஒருசேர தரிசிக்கலாம். இங்குள்ள நந்தி, இறைவனாரை நோக்காமல் எதிர்திசை நோக்கி நிற்கிறார்.

விசுவாவசு என்ற மன்னனிடம் தோல்வியுற்ற தொண்டைமான், போரில் தான் வெற்றியடைய வேண்டும் என்று வேதபுரீஸ்வரரை வழிபட்டான். அவனுக்கு அருள்பாலிக்கத் திருவுள்ளம் கொண்ட பரமனார், நந்தியை அவனுடைய சேனைக்குத் தலைமை வகிக்கப் பணித்தார். இறைவனாரின் பணியை நிறைவேற்றும் விதத்திலும், போருக்குத் தாம் ஆயத்தமாகவிருக்கும் நிலையைக் காட்டும் விதத்திலும் ஆலயத்தின் வாயிலை நோக்கி நிற்கிறார் நந்திகேஸ்வரர். நந்திகேஸ்வரரை சேனைத் தலைவர் ஆக்கிய சிவபெருமான், தம்முடைய சிவகணங்களைக் குதிரைகளாகவும் யானைகளாகவும் மாற்றி, தொண்டைமானுடன் அனுப்பினார். போரில் வென்ற தொண்டைமான், விசுவாவசுவை வென்று தனது அரசை மீண்டும் பெற்றான்.

இத்தலத்திலிருக்கும் நாகலிங்கம் மிகவும் பிரசித்தி பெற்றது. தோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை" என்றே பாடுகிறார் ஞானசம்பந்தப் பெருமான்.

சைவத்தை ஒடுக்கித் தங்களின் சமயத்தை வேரூன்றச் செய்யும் முயற்சியில் புறச்சமயத்தார் ஈடுபட்டிருந்த காலம். கோயிலில் எழுந்தருளிய சம்பந்தருக்குத் தீங்கிழைக்கும் விதத்தில் புறச்சமயத்தார் சிலர், ஆபிசார வேள்வி செய்து கொடிய நாகத்தைச் சம்பந்தர் மீது ஏவினர். சைவம் தழைத்தோங்கச் செய்வதற்காகவே படைக்கப்பெற்ற குழந்தைக்குத் துன்பம் நேர்வதைப் பரமனார் சகிப்பாரா? பாம்பாட்டியைப் போன்று வேடம் தரித்து ஓத்தூரை வந்தடைந்தார். புறச்சமயத்தார் ஏவிய நாகத்தைப் பிடித்தெடுத்து மறைந்தார். இதனால் இத்தலத்தில் பதினொரு தலையுள்ள நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்றது. மதுரையில் நடைபெற்றது போன்றே இங்கும் அனல் வாதம், புனல் வாதம் நடைபெற்றதாகத் தெரிகிறது. புனல் வாதத்தின்போது, புறச் சமயத்தாரின் ஏடுகள் சேயாற்றில் அடித்துப் போக, சம்பந்தரின் ஏடுகள் கரையேறிய இடம், ‘சேயாற்றில் வென்றான்’ என்னும் பெயரோடு சிறு கிராமமாக நிலைத்திருக்கிறது.

அம்பிகையின் திருவுருவமும் கருத்தைக் கவர்கிறது. பிற தலங்களைக் காட்டிலும், இத்தலத்தில் சின்னஞ்சிறுமியாக அம்பாள் காட்சி தருகிறாள். தட்சன் மகளாகத் தோன்றி, அவனுடைய யாகத்தில் அவமானப்பட்டு நெருப்பில் வீழ்ந்து, பின்னர் ஹிமவான் மகளாக மறுபிறவி எடுத்தாளல்லவா! இறைவனாரை அடைவதற்காக மலைமகள் தவம் செய்தாள். அப்போது, கணவன் சொன்ன சொல்லைத் தட்டி விட்டு தட்சன் யாகத்துக்குச் சென்ற பாவம் தீர, திருவோத்தூரில் தவம் செய்யப் பணித்தார் பரமனார். அதன்படி பேதைப் பெண்ணாக, இளம் சிறுமியாக இங்கு தவம் செய்தாள். தவம் செய்த இளமுலை நாயகியை இறைவனார் மணந்து கொண்டார்.

‘நர்த்தன கணபதி’ என்னும் திருநாமத்துடன் நடனமாடிக் கொண்டிருக்கும் விநாயகர் கொள்ளை அழகு. வேதத்தைத் தம்முடைய டமருகத்தில் அடக்கிய பரமனார் வீர நடனமாடினார் என்பது இத்தலத்தின் வரலாறு. அவருடைய திருமகனான விநாயகரும் நடனத் தோற்றத்தோடு காட்சியளிப்பது சிறப்பு. ‘வென்றாடு திருத்தாதை கைத்துடி கொட்ட, நின்றாடு மழகளிறு’ என்றே இவ்விநாயகர் போற்றப் பெறுகிறார். நாவுக்கரசர், திருத்தாண்டகத்தில் இத்தலப் பெயரைக் குறிக்கிறார். இங்கிருக்கும் முருகப்பெருமானை அருணகிரிநாதர் பாடிப் பரவியுள்ளார்.

பற்பல திருவிளையாடல்கள் நிகழ்ந்த இத்திருத்தலம், உள்ளத்தில் பக்தியும் அன்பும் கொண்ட பக்தனின் தேவைகளை இறைவனார் தாமே வலிய வந்து பூர்த்தி செய்வார் என்பதற்கு அழியாச் சான்றாக விளங்குகிறது.

Comments