மந்திர மகிமை!

சந்தையிலிருந்து கன்றுக்குட்டி ஒன்றை வாங்கி வந்தான் விவசாயி. அதன் கழுத்துப் பட்டையில் மணிகளிடையே உயர்ந்த ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அதை சாதாரணக் கற்கள் என விவசாயி நினைத்தான். இதைக் கவனித்த ஒரு ரத்தின வியாபாரி கன்றுக்குட்டியை அதிக விலைக்குக் கேட்டான்.

விவசாயியும் விற்றுவிட்டான். ரத்தின வியாபாரி ரத்தினங்களை எடுத்து விற்று அதிக லாபம் பார்த்தான். கன்றுக்குட்டியை திரும்ப விவசாயிடமே இனாமாகக் கொடுத்தான்.

விவசாயிக்கு ரொம்ப சந்தோஷம்! கன்றுக்குட்டியை வாங்கி விற்றதில் லாபம் கிடைத்தது. கூடவே, கன்றுக் குட்டியும் கிடைத்துவிட்டது. ரத்தின வியாபாரிக்கும் அதிர்ஷ்டம் போல ரத்தினம் கிடைத்தது.

இக்கதையின் உள்ளர்த்தம் என்ன!

விவசாயி அடைந்த லாபம் - மந்திரங்களை பொருள் புரியாமலே சொல்வது போன்றதாகும். ரத்தின வியாபாரி பெற்ற அதிர்ஷ்டம், மந்திரத்தைப் பொருள் அறிந்து சொல்வது போன்றதாகும். ஆக, பொருள் புரியாமல் மந்திரங்கள் சொன்னாலும் லாபம் உண்டு.

‘ஞான வாசிஷ்டம்’ கூறும் கதை இது.

தேவையற்றதை நீக்கு

குரு ஒருவர் தன் மூன்று சீடர்களையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றார். ஒரே மாதிரியான மூன்று பாறைகளைக் காட்டி அவற்றை ஏதாவது ஒரு வகையில் இல்லாமல் செய்யும்படி கேட்டுக் கொண்டார். முதல் சீடன் உடனே ஒரு மண்வெட்டியை எடுத்து பக்கத்தில் ஒரு பெரும் பள்ளம் வெட்டி, அதனுள் அந்தப் பாறையைத் தள்ளி அதன்மேல் மண்ணைப் போட்டு மூடினான்.

இரண்டாம் சீடன் ஒரு சுத்தியலை எடுத்து, பாறையைத் தூள் தூளாக நொறுக்கினான். மூன்றாவது சீடன் ஓர் உளியை எடுத்து, பாறையில் ஓர் அழகான சிற்பம் வடித்தான்.

ஆக மூன்று பேரும் அந்தப் பாறையை இல்லாமல் செய்துவிட்டனர். முதல் சீடன் செய்தது மறைத்தல். இரண்டாமவன் செய்தது அழித்தல். மூன்றாம் சீடன் செய்தது ஆக்கல்.

ஆக, மூன்றாம் சீடனின் செய்கையே சிறந்தது எனப் பாராட்டிய குருநாதர், மேலும் ஓர் உபதேசமும் அதில் அடங்கி இருப்பதாகக் கூறினார். அதாவது, அவன் அந்தச் சிற்பத்தை உருவாக்கும்பொழுது புதிதாக சிற்பத்தை எங்கிருந்தோ உருவாக்கவில்லை. அந்தப் பாறையிலிருந்து தேவையற்ற பகுதியை நீக்கினான். அவ்வளவுதான்! அதேபோல் நம்மிடம் இருக்கும் தேவையற்ற குணங்களை நீக்கிவிட்டோமானால், நம்மில் ஒரு சிறந்த மனிதனைக் காணலாம்.


நிறைவு காணுங்கள்...


பூலோகத்தில் வசித்த கிருஷ்ணதேவன் என்ற அரசனைப் பற்றி தேவலோகத்தில் ஒருநாள் விவாதம் வந்தது.

அந்த அரசன் மிகவும் உயர்ந்தவன். குணசீலன். தேவர்களான நமக்குள் கூட பூசல் உருவாகிறது. ஆனால் அவனோ, பிறரிடம் உள்ள நல்லவற்றை மட்டுமே பார்க்கிறான்" என்று புகழாரம் சூட்டினான் தேவேந்திரன்.

ஒரு பூலோகவாசியை தேவேந்திரன் புகழ்ந்தது அங்கிருந்த ஒரு தேவனுக்குப் பிடிக்கவில்லை. உண்மையிலேயே கிருஷ்ணதேவன் நல்லவன்தானா என சோதிக்க பூலோகம் வந்தான்.

தேரில் அடிபட்டு இறந்துபோன நாயின் வடிவமெடுத்து, அழுகிய உடலுடனும் கோரமான பற்கள் வெளியே தெரியும்படியும் அரசன் வரும் வழியில் படுத்திருந்தான். கிருஷ்ணதேவன் அவ்வழியே வந்தான்.

அட! இந்த நாயின் பற்கள் எவ்வளவு வெண்மையாக, வரிசையாக இருக்கின்றன? இது வாழ்ந்த காலத்தில் இன்னும் அழகாக இருந்திருக்குமே!" எனப் புகழ்ந்தான். நாயின் சிதைந்த தோற்றம், அதிலிருந்து வீசிய துர்நாற்றம் பற்றி அவன் பேசவே இல்லை. படுத்திருந்த நாய், சுய ரூபத்தில் எழுந்தது. தன் முன் ஒரு தேவன் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட கிருஷ்ண தேவன், தாங்கள் யார்? இறந்த நாயின் வடிவத்தில் ஏன் கிடந்தீர்கள்?" என்றான்.

கிருஷ்ணதேவா! நிஜத்தில் நீ மிகவும் நல்லவன். மற்றவர்களின் குறைகளை விட, அவர்களிடம் உள்ள நிறைகளை யார் காண்கிறார்களோ, அவர்களே இந்த உலகில் பொறாமையற்றும் கவலையற்றும் நிறைவான வாழ்வு நடத்துகிறார்கள். உன்னைப் போன்றவர்கள் பூலோகத்தில் பெருகட்டும்!" என்று ஆசிர்வதித்து மறைந்தான் அந்த தேவன்.

பிரகலாதன்?

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருநாள் நாத்திகன் ஒருவன் வந்தான்.

அன்று ஒரு இரண்யனை வதம் செய்ய கடவுள் நரசிம்மாவதாரம் செய்ததாகக் கூறுகிறீர்கள். இப்போது இரணியன் போன்று பலர் தீய குணம் உடையவர்களாக உள்ளனரே! ஏன் இப்போது, கடவுள் எந்த அவதாரமும் எடுக்கவில்லை?" என்று கேட்டான். அதற்கு பரமஹம்சர் அமைதியாகச் சொன்னார்: அன்று ஒரு பிரகலாதன் இருந்தான். இன்று ஒரு பிரகலாதன் கூட இல்லையே!"



Comments