அழைத்துக் காப்பவர்

மகாராஷ்டிர மாநிலம் ‘நாசிக்’ மாவட்டம் வணி கிராமத்தைச் சார்ந்தவர் காகாஜி வைத்யா. அவ்வூர்க் கோயிலின் பெண் தெய்வமான சப்தஷ்ருங்கி தேவி உபாசகர் அவர். வாழ்க்கையில் பல்வேறு துயரங்களால் மன அமைதியின்றி வாழ்ந்து வந்தார்!

ஒரு நாள் தேவியின் கோயிலுக்குச் சென்ற காகாஜி வைத்யா, தம்மைத் துன்பங்களில் இருந்தும் கவலைகளில் இருந்தும் மீட்குமாறும், நிம்மதியுடன் வாழவைக்குமாறும் மனமுருகி பிரார்த்தனை செய்தார்.

அன்று இரவில் காகாஜி வைத்யாவின் கனவில் ஸ்ரீசப்த ஷ்ருங்கி தேவி தோன்றி, ‘உன்னுடைய துன்பங்கள் தீர வேண்டுமானால் நீ பாபாவிடம் போ. அவருடைய அருளால் மட்டும் உன் துன்பங்கள் தீரும். உன் மனம் அமைதி அடையும்’ என்று கூறி, மறைந்து போனாள்.

பாபா யார்? அவரது இருப்பிடம் எங்கேயுள்ளது எனப் புரியாமல் காகாஜி வைத்யா தவித்துப் போனார். இந்த பாபா யாராக இருக்கக்கூடும் என்று எண்ணத் தொடங்கினார்.

சிறிது குழப்பத்துக்குப் பிறகு, ‘இந்த பாபா, நாசிக்கில் உள்ள ஸ்ரீத்ரயம்பகேஷ்வராகத்தான் இருக்கும்’ என்று முடிவிற்கு வந்தார். உடனே நாசிக் சென்றார். அங்கு பத்து நாட்கள் தங்கி, தினமும் அதிகாலையில் குளித்து ‘ஸ்ரீருத்ரம்’ ஓதி, அபிஷேகம் முதலியவை செய்தார். இருந்தும் வைத்யாவின் மனம் முன்போலவே கவலையில் இருந்தது. மீண்டும் தன் கிராமத்துக்குத் திரும்பினார்.

அன்றிரவு - ஸ்ரீசப்த சிருங்கி தேவி அவரது கனவில் தோன்றி, நான் பாபா என்று கூறியது, ஷீர்டியைச் சேர்ந்த ஸ்ரீ சமர்த்த சாயியை. உன்னை யார் த்ரயம்பகேஷ்வரத்துக்குப் போகச் சொன்னது? ஷீரடி சென்று பாபாவைத் தரிசித்து வா! உன் கஷ்டங்கள் அப்போதுதான் தீரும்" என்று கூறி மறைந்துவிட்டாள்.

எப்போது ஷீர்டிக்குப் போவது? எப்படி சமர்த்த சாயி பாபாவைப் பார்ப்பது என்பதே காகாஜியின் தற்போதையை கேள்வியாக இருந்தது.

ஷீர்டியில் - ஸ்ரீபாபாவின் அடியவரான ஷாமாவின் குடும்பத்தில் சங்கடங்கள். அவர், வருமானமற்ற நிலையில் வாழ்ந்து வந்தார். இந்த சமயத்தில் ஷீர்டிக்குப் புகழ்பெற்ற சோதிடர் வந்து தங்கி இருந்தார். ஷாமாவின் தம்பி பாபாஜி, ‘தன் குடும்ப சங்கடங்களுக்குப் பரிகாரம் ஏதாவது செய்ய வேண்டுமா?’ என்பது குறித்து கேட்கலாம் என்று கருதி, சோதிடரைக் காணச் சென்றார்.

உங்கள் தாயாரின் வேண்டுதல்களை உங்கள் அண்ணன் நிறைவேற்றுவேன் என்று அவளின் மரணப்படுக்கையில் வாக்களித்தார். இன்னமும் அது நிறைவேற்றப்படாததால், அவர் பெண் தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகிவிட்டார். அதனால்தான் உங்கள் குடும்பத்தில் கஷ்டங்கள் தொடர்கின்றன. பிரார்த்தனையை உடனே நிறைவேற்றுங்கள்" என்று கூறினார் ஜோதிடர்.

பாபாஜி இது குறித்து தனது அண்ணனிடம் கூறவும், அப்போதுதான் ஷாமாவுக்கு நினைவு வந்தது. ஷாமாவின் தாயார் அவளது ஸ்தனங்களில் ஒருவிதமான தோல் வியாதியால் பீடிக்கப்பட்டு அவதியுற்றாள். தனது தெய்வமான தேவி சப்த ஷ்ருங்கியிடம் தனது தோல்வியாதியைக் குணப்படுத்து மாறும், குணமடைந்தால் வெள்ளியிலான ஸ்தனங்கள் உருவினை தேவியின் உண்டியலில் போட்டு விடுவதாகவும் வேண்டிக்கொண்டள். சில நாட்களுக்குள் வியாதி குணமாகிவிட்டது. ஆனால், வேண்டுதலை அவள் நிறைவேற்றவில்லை.

அவள் மரணம் நெருங்கிற்று. மரணப்படுக்கையில் மகன் ஷாமாவை அழைத்து அவள் வேண்டுதலைக் கூறி, ‘என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நீ அவற்றை அவசியம் நிறைவேற்ற வேண்டும்’ என்று கூறி ஷாமாவிடம் சத்தியம் வாங்கினாள். ஷாமாவும் வாக்களித்தார்.

தாயார் மறைந்து சில நாட்களுக்குப் பின் ஷாமா இந்த வேண்டுதலை நிறைவேற்ற மறந்துபோனார்? தம்பி பாபாஜி இதை ஷாமாவிடம் நினைவுறுத்தவே, ஷாமாவுக்குத் தன் தவறும், தாயாருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லையே என்ற ஒருவித பய உணர்வும் பிறந்தன.

பொற்கொல்லரை அழைத்து ஒரு ஜோடி வெள்ளி ஸ்தனங்களைத் தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பொற்கொல்லன் செய்து தந்த வெள்ளி ஸ்தனங்களை எடுத்துக்கொண்டு பாபாவின் முன் வைத்தார். அவற்றை ஏற்று தம் குடும்பத்தைக் காப்பாற்றும்படி வேண்டிக் கொண்டார்.

பாபா முறுவலித்தபடி, உனது தாயார் வேண்டியது சப்தஷ்ருங்கியிடம். நீயும் அவ்வாறே செய்! வணிக்கு உடனே போ" என ஆணையிட்டார்.

ஷாமா வணி கிராமத்துக்குப் புறப்பட்டார். அங்கு அவர் கோயில் பூசாரியைத் தேடிக்கொண்டு காகாஜி வைத்யாவின் வீட்டுக்கு வந்தார். காகாஜி ஷாமாவைப் பார்த்து, நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார். ஷாமா தான் ஷீர்டியில் இருந்து வந்ததாகவும், வேண்டுதலை நிறைவேற்ற சப்தஷ்ருங்கி கோயிலுக்கு அழைத்துச் செல்லுமாறும் கேட்டுக் கொண்டார்.

ஷாமா ஷீர்டியிலிருந்து வந்துள்ளார் என்று அறிந்தவுடன், ஆனந்தமுடன் ஷாமாவைக் கட்டி அணைத்துக் கொண்டார் காகாஜி. ஷீர்டி எங்கே? பாபாவை எப்படித் தரிசிப்பது என்று தவித்த தன்னை ஷீர்டிக்கு அழைத்து வரவே, ஸ்ரீபாபா ஷாமாவை தேவி சப்தஷ்ருங்கி கோயிலுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று எண்ணி பரவசமானார் காகாஜி. பின் அவர்கள் ஸ்ரீ சாயியின் லீலைகளைப் பற்றியே பேசினர். தன் கனவில் வந்த தேவி சப்தஷ்ருங்கி, ‘பாபாவை சந்தி, உன் துன்பங்கள் நீங்கும்’ என்று கூறியதை, காகாஜி ஷாமாவிடம் கண்கலங்கக் கூறினார்.

ஷாமாவைக் கோயிலுக்கு அழைத்துச்சென்று பிரார்த்தனையை நிறைவேற்றச் செய்தார் காகாஜி. பின்னர் இருவரும் ஷீர்டிக்குப் புறப்பட்டனர்.

துவாரகா மயி (மசூதி)யில் ஷாமாவுடன் சென்று ஸ்ரீ பாபாவைத் தரிசித்து அவர் பாதங்களை நமஸ்கரித்த காகாஜியைப் பார்த்து பாபா கேட்டார்:

உனக்கு இங்கு வர இத்தனை நாளாயிற்றா?" என்று.

தேவி கூறியபடியே பாபாவின் ஆசியைப் பெற்றார் காகாஜி. துன்பங்கள் விலகியது போல் ஒரு உணர்வைப் பெற்றார்.

உன் துன்பங்கள், சங்கடங்கள் விலகிவிட்டன.

சிறப்புடன் வாழப் போகிறாய்" என்று பாபா ஆசீர்வதித்தார். காகாஜி ஷீர்டியில் சில நாட்கள் தங்கி, தினமும் பாபாவைத் தரிசித்து வந்தார். பின் பாபாவிடம் உத்தரவு பெற்றுக்கொண்டார், ஊர் திரும்ப! பாபா மீண்டும் காகாஜியை ஆசீர்வதித்து உதியையும் தந்து விடை கொடுத்தார்!

கும்பாபிஷேகம்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காவேரிப்பாக்கத்துக்கு அருகில் உள்ள துரை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஎதிராஜ சம்பத்குமாரர் - ஸ்ரீ அழகியான் சன்னிதி.

இக்கோயிலின் கும்பாபிஷேகம் 9.2.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9 - 10.30க்குள் நடைபெற இருக்கிறது.

சென்னையிலிருந்து வேலூர் செல்லும் பேருந்துகள் காவேரிப்பாக்கத்தில் நின்று செல்லும்.

மேலும் விவரங்களுக்கு 91766 67955.



Comments