கீதையின் பாதையில்...

அர்ஜுனன் பகவானிடம் முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்கிறான். பல சமயங்களில் நமக்கும் எழக்கூடிய கேள்விதான் அது.

‘உண்மையில் தவறான நோக்கம் இல்லாவிட்டாலும், எதனால் தூண்டப்பட்டு மனிதன் தவறு செய்கிறான்?’ என்பதே அந்தக் கேள்வி. தவறுகளுக்குக் காரணம் - நம் கவனக்குறைவு, சந்தர்ப்ப சூழ்நிலைகள் எனப் பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பிரச்னைக்கு உண்மையான காரணத்தைக் கண்டறியும் வரை, பல்வேறு வடிவங்களில் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

தவறு என்பது பெரிய கொலைக் குற்றமாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. சின்னச் சின்ன விதிமீறல்களும் தவறுதான். நமக்கு நாமே விதித்துக் கொண்ட விதிமுறைகளிலிருந்து நழுவுவதும் தவறுதான்.

சர்க்கரை நோயாளி ஒருவர் அறவே இனிப்புப் பண்டங்களை விட்டுவிட வேண்டும் என்று நினைக்கிறார். அதிகமாக இனிப்புப் பதார்த்தங்களை உண்டால் என்ன நிகழும் என்பதும் அவருக்கு மிக நன்றாகத் தெரியும். தன் உடல்நலத்தின் மீது அக்கறையுள்ள, அறிவுள்ள ஒருவர் ஒருகணம் எல்லை மீறிவிடுகிறார். அளவுக்கு அதிகமாக இனிப்புகளை உண்டுவிட்டு, குற்ற உணர்ச்சியில் வீழ்கிறார் அல்லது என்றாவது ஒருநாள் சாப்பிட்டால் ஒன்றுமில்லை என்று மனதைத் தேற்றிக் கொள்கிறார்.

தன்வயமின்றியே எதனாலோ இழுக்கப்பட்டதுபோல மனிதன் தவறிழைப்பதற்குரிய காரணத்தை பகவான் மிக அழகாக, அக்கு வேறு ஆணிவேராக எடுத்துக் கூறுகிறார்.

‘ரஜோ குணத்திலிருந்து உதித்த இந்த விருப்பு வெறுப்புதான் காரணம். ஒருபோதும் நிறைவை அடையாததும், பாபம் செய்யத் தூண்டுவதுமான இந்த விருப்பு வெறுப்பை எதிரி என்று தெரிந்துகொள்’ என்கிறார் பகவான்.

வியாதி என்னவென்று தெரியாமல் சிகிச்சை மேற்கொள்ள முடியாது. எதிரி யாரென்றே தெரியாமல் தாக்குதலைத் துவங்க முடியாது. நமக்கு எதிரிகள் பெரும்பாலும் புறத்தில் இல்லை; அகத்தில்தான் இருக்கிறார்கள். அக எதிரிகளை வெற்றிகொள்வதே ஆன்மிகத்தில் வெற்றியாகக் கருதப்படுகிறது.

புராணங்களில், விருப்பு வெறுப்பே அசுரர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

ராமாயணத்தில் ராவணன், கும்பகர்ணன், கர-தூஷணன், கந்தபுராணத்தில் சூரபத்மன், தாரகாசுரன், மகாபாரதத்தில் சிசுபாலன், கம்சன், துரியோதனன், துச்சாதனன், தேவீ பாகவதத்தில் சும்பன் - நிசும்பன், மகிஷாசுரன் - ரக்தபீஜன், சண்டன்-முண்டன் போன்றவர்கள் விருப்பு வெறுப்பின் அடையாளங்களே!

ஆனால், இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவர். ‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்பார் திருவள்ளுவர்.

விருப்பு அல்லது ஆசை, வெறுப்பு அல்லது கோபம் - இந்த இரண்டும்தான் மனிதனை ஆட்டிப் படைக்கிறது. நாம் பகுத்தறிவு என்ற செல்வத்தை வைத்துக்கொண்டு, நிம்மதி என்ற குறிக்கோளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். விருப்பு வெறுப்பாகிய வழிப்பறித் திருடர்கள் நம் அறிவுச் செல்வத்தை அபகரித்து, நம் வாழ்க்கையை வீணடித்துவிடுவார்கள்.

தன் சுய விருப்பு வெறுப்புகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பதால், மனிதன் அறியாமையில் மூழ்கி பிறவிச்சூழலில் சிக்கித் தவிக்க நேரும்.

‘வேண்டா விருப்பும் வெறுப்பும் - அந்த

வில்லங்கத்தாலே விளையும் ஜனனம்’ என்று பாடுகிறார் தாயுமானவர்.

நெருப்பைப் புகை மூடியிருப்பது போலவும், கண்ணாடியை அழுக்கு மறைத்திருப்பது போலவும், கருவை கருப்பை மூடியிருப்பது போலவும், ஆசை, அறிவை மறைத்திருக்கிறது என்கிறார் பகவான்.

விருப்பும் வெறுப்பும் நம் மனம், புத்தி, பொறிகள் அனைத்திலும் அமர்ந்திருக்கின்றன.

நம் பொறிகள், புலன்களோடு தொடர்பு கொள்கின்றன. கண் நிறத்தைப் பார்க்கிறது. பிடித்த நிறம், பிடிக்காத நிறம் இருக்கிறது. காது ஒலியைக் கேட்கிறது. பிடித்த ஓசை, பிடிக்காத ஓசை இருக்கிறது. மூக்கு மணத்தை நுகர்கிறது. பிடித்த மணம், பிடிக்காத மணம் இருக்கிறது. நாக்கு சுவைக்கிறது. பிடித்த சுவை, பிடிக்காத சுவை இருக்கிறது. தோல் தொட்டு உணர்கிறது. தொட்டு உணர்வதில் பிடித்தது, பிடிக்காதது இருக்கிறது.

உடலுக்கு நலம் பயக்கும் உணவைக் காட்டிலும், நாக்குக்கு விருப்பமான உணவைத்தான் பெரும்பாலான மக்கள் நாடுகின்றனர்.

இப்படி எல்லா விஷயங்களிலும் பிடித்தது, பிடிக்காதது என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நம் விருப்பு வெறுப்புகளை கையாளக் கற்றுக் கொள்வது, வாழ்க்கை முழுவதும் மேற்கொள்ள வேண்டிய பயிற்சியாக இருக்கிறது.

திருவள்ளுவர், காமம், வெகுளி, மயக்கம் இவை மூன்றன் நாமம்கெடக் கெடும் நோய் என்றார். பிடித்ததை அனுபவிப்பதில் என்ன தவறு என்ற கேள்வி எழலாம்.

நமக்குப் பிடித்தவை அனைத்தும் நல்லவையாக இருந்துவிட்டால் பரவாயில்லை. நமக்குப் பிடித்தவை - பெரும்பாலும் அறத்துக்குப் புறம்பானவை, ஒழுக்கத்துக்கு மாறானவை, ஆரோக்கியமற்றவையாக இருக்கின்றன. நல்லவை எல்லாம் நமக்குப் பிடிப்பதில்லை. பிடித்தவை எல்லாம் நமக்கு நல்லதாக இருப்பதில்லை.

‘மோகம் என்ற கடலைக் கடந்து, விருப்பு வெறுப்பு எனும் அரக்கர்களைக் கொன்று, அமைதி என்னும் சீதையை அடைந்து, தன்னில் தான் இன்புற்றவனாக ஆத்மாராமன் ஒளிர்கிறான்’ என்பார் ஆதிசங்கரர்.

விருப்பு வெறுப்புகள் அளவோடு நம் கட்டுப்பாட்டில் இருக்கும்போது பிரச்னையில்லை. அவை நம் கடமைகளில், நாம் செய்ய வேண்டியவற்றில் குறுக்கிடும்போது தான் தவறுகள் அநாயாசமாக நிகழ்ந்து விடுகின்றன. அறிவிழந்தவன் தனது விருப்பமானதை நாடுகிறான்; அறிவாளி நலத்தை நாடுகிறான்.

எனவே அற நூல்கள், பெரியோர்கள் கூறியுள்ள வழியில், எது சரி எது தவறு என்பதை அறிந்து, தவறானவற்றிலிருந்து விலகி சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Comments