பால்தாரா பஞ்ச தாரா!

அடர்ந்த மரங்கள் சூழ்ந்த வனம். நடுவே ஓர் அழகிய பள்ளத்தாக்கு. இதமான தூய காற்றுடன் அமைதி நிலவும் அந்த இடத்திற்க ஒரு பெருமை இருக்கிறது.
அது, ஆதி சங்கரர் தவம் செய்ய தேர்வு செய்த புண்ணிய பூமி!
ஸ்ரீசைலம் மலைப்பகுதியில் அமைந்துள்ள இங்குதான் நீண்ட காலமாக ஆதிசங்கரர் தவம் மேற்கொண்டு யோக நித்திரையில் இருக்கிறார். இத்தலத்தில்தான் புகழ்பெற்ற சௌந்தர்யலஹரி, சிவானந்த லஹரி ஆகிய பாடல்களை இயற்றினாராம்.
இப்பாடல்களை ஆதிசங்கரர் இயற்ற ஏதுவாக அமைந்தது இங்கு நிலவும் இயற்கைச் சூழலும் அமைதியும்தான். அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படம் குகையும் அருகிலேயே இருக்கிறது.
பள்ளத்தாக்கில் இறங்கிச் செல்ல தற்போது கற்படிகள் உள்ளன. படியின் முடிவில் இடப்புறம் சிறிய நீரோடை அதன் அருகில் ஆறு நீர் ஊற்றுகள்.
முதலாவது ஊற்று சிவன் பாதத்தில் இருந்து, பிற ஐந்தும் சிவனின் பஞ்ச முகங்களான ஈசானம், வாமதேவம், தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம் ஆகியவற்றிலிருந்தும் உற்பத்தியாகின்றனவாம். இவற்றை பால்தாரை, பஞ்சதாரை என அழைக்கின்றனர். பஞ்ச தாரை என்ற ஐந்து ஊற்றுகளும் தற்போது ஒன்றாகக் கலந்து ஒரே ஊற்றாகப் பாய்கிறது.
பால்தாரை நீரின் சுவையும், பஞ்சதாரை நீரின் சுவையும் வித்தியாசப்படுகிறது. இந்நீர் மூலிகைகளுடன் கலந்து வருவதால் மருத்துவக் குணம் கொண்டதாகவும் விளங்குகிறது. எக்காலத்திலும் வற்றாத இந்த ஊற்று நீர், சிறிது தொலைவில் உள்ள போகவதி எனும் பெயர் கொண்ட பாதாள கங்கையில் கலப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆதிசங்கரர் அமர்ந்து பால்களை இயற்றிய இடத்தில் உளள சன்னதியில் அவர் பாதங்கள், சிவலிங்கம் மற்றும் அம்பாள் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன.
மகான்கள் தவமிருந்த மாசற்ற இடத்திற்குச் சென்று வழிபடுவதுடன், தியானத்தில் ஈடுபட்டு நாமும் மன அமைதி பெற்று வரலாமே!

எங்கே இருக்கு: ஆந்திர மாநிலத்தில், ஸ்ரீசைலத்திற்கு 3 கி.மீ. முன்பாக ஆதிசங்கரர் தவமிருந்த இந்த இடம் உள்ளது. பஸ், ஆட்டோ மூலமாக இத்தலத்தை அடையலாம்.

தரிசன நேரம்: காலை 7 மணி முதல் இரவு 6 மணி வரை.




கரிகால் சோழனுக்கு துணையிருந்த பிள்ளையார்!

பதிவு செய்த நாள்
16 ஜன
2014
00:00 சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று திரும்பி வரும்போது, ஓர் ஊரில் இறைவன் அவருக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்தத் தலம், திருப்பனையூர்.
இந்தச் சம்பவம் பெரிய புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது
"அரவச் சடை மேல் மதி மத்தம்
விரவிப் பொலிகின் றவனுராம்
நிரவிப் பல தொண்டர்கள் நாளும்
பரவிப் பொலியும் பனையூரே'
என்று இத்தலத்தைப் போற்றிப் பாடுகின்றார் திருஞானசம்பந்தர். சுந்தரரும் இத்தலத்திற்கு வந்து ஈசன் மேல் தேவாரம் பாடியுள்ளார். அப்பர் வைப்புத் தலமான வைத்துப் பாடியுள்ளார். ஆயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம்.
ஓர் ஆண் பனை மரமும், ஒரு பெண் பனைமரமும் இந்த ஆலயத்துக்குள் ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. ஒரு பனைமரம் வயது முதிர்ந்து சாயும் காலத்தில் அதன் அடக்குருத்திலிருந்து புதிய பனை தோன்ற வளர்ந்து விடுகிறது. வாழையடி வாழைபோல! ஆனால் இங்குள்ள பனைமரமோ பல வருடங்களாக ஒரே உயரத்தில் இருக்கிறது என்கிறார்கள். தல விருட்சமும் அதுவே.
தொண்மையான கிராமம். கோயிலைச் சுற்றி மூன்று தெருக்களில்தான் வீடுகள். ராஜகோபுரத்திற்கு எதிரேயே பெரிய குளம். அமிர்த புஷ்கரணி. இத்தலத்திற்கு வட மொழியில் தாலவனம் எனப் பெயர். தாலம் என்றால் பனைமரம்.
பராசர முனிவர் வந்து வழிபட்ட தலம். அவரே இங்கு பெருமானை பிரதிஷ்டை செய்தார் என்பர். கோயிலின் தெற்குப் பிராகார சுவரில் பெரிய அளவில் பராசர முனிவரின் சிலா ரூபம் உள்ளது.
ஆலயத்துள் தனிச் சன்னதி கொண்டுள்ள பிள்ளையாருக்கு "கரிகால் சோழனுக்குத் துணையிருந்த பிள்ளையார்' என்று பெயர். இதென்ன வினோத பெயர் என்கிறீர்களா? விஷயம் இல்லாமலா?
கரிகாற் சோழன் கர்ப்பத்தில் இருந்த போது, அவனது தந்தை இளஞ்சேட் சென்னி இறந்தார். பகைவர்கள் அவரது குடும்பத்தையும் பூண்டோடு அழிக்க தீவிரமாயினர். இந்நிலையில் கரிகாலனும் பிறந்துவிட்டார். எதிரிகள் கண் படாமல் அவரை வளர்த்து, எதிர்காலத்தில் இழந்த அரசை மீட்டு, மீண்டும் மகுடாதிபதி ஆக்க திட்டமிட்டார், தாய் மாமன் இருப்பிடத் தலையார்.
உலகினரின் பார்வையில் படாமல் எங்கோ தனித்தீவுபோல இருந்த இந்த பனையூருக்குக் கொண்டு வந்துவிட்டார். காட்டுக்குள் ஒரு பிள்ளையார் கோயில் மறைவில் வைத்து வளர்க்கப்பட்டார் கரிகாலன். வளர்ந்தார்; தன் மக்களைப் படை திரட்டினார்; இழந்த நாட்டை மீட்டார். எல்லாம் பிள்ளையார் அருள் என்று öண்ணி நெகிழ்ந்தார். பிள்ளையாரைக் கொண்டு வந்து பெரிய கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்து, தனிச்சன்னதி அமைத்தார். பெயரும் "கரிகாற் சோழனுக்குத் துணையிருந்த பிள்ளையார்' ஆயிற்று.
ஆலத்துள் எழுந்தருளியுள்ள ஈசன் - அழகிய நாதர் (சௌந்தரேஸ்வரர்) அம்பிகை - பெரிய நாயகி (பிரஹன்நாயகி).
கிழக்குப் பார்த்த கோயில். கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைகிறோம். இரண்டு பிராகாரங்கள். முதல் பிராகாரத்தைத் தாண்டியவுடன் உள்ள வாசலில் "மாற்றுரைத்த பிள்ளையார்' அமர்ந்திருக்கிறார்.
சுந்தரர் திருப்புகலூரில் ஈசனிடம் பொன் பெற்றுக் கொண்டு இங்கு வந்தபோது, இந்தப் பிள்ளையார்தான் அந்தப் பொன்னை மாற்று குறையாத பொன் என உரசிப் பார்த்து உறுதி அளித்தாராம்.
பிள்ளையாருக்கு முதல் வணக்கம் செலுத்திவிட்டு உள்ளே நுழைகிறோம். இப்போது இரண்டாவது பிராகாரம். பலிபீடம் தாண்டி, முன் மண்டபம், அர்த்த மண்டபம், மூல ஸ்தானம்.
அழகிய நாதர் பெயருக்கேற்ப பொலிவுடன் விளங்குகிறார்.
மாட மாளிகை கோபுரத்தொடு
மண்டபம் வளரும் வளர்பொழில்
பால் வண்டறையும்
பழனத் திருப்பனையூர்.
என்று சுந்தரரால் போற்றப்பட்ட தலத்தின் நாயகனை பக்தி மேலிட வணங்கி வழிபடுகிறோம்.
இத்தலத்தைச் சுற்றிலும் பாடல் பெற்ற தலங்கள் பல. திருப்புகலூர், திருப்பயிற்றூர், திருவிற்குடி, திருவாஞ்சியம், திருக்கண்டீஸ்வரம், நன்னிலம், அம்பர் மாகாளம் ஆகிய ஏழு தலங்கள் இவ்வூரைச் சுற்றி உளள புகழ்மிக்க தேவாரத் தலங்கள்.
பிராகாரத்தைச் சுறறி தெற்கே பராசரர், தட்சிணாமூர்த்தி, மேற்கே திருமால் (வழக்கமாக லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் இங்கு திருமால் உள்ளார்) வடக்கே துர்க்கை சண்டேசுரர் என உள்ளனர்.
அம்பிகைக்கு முதல் பிராகாரத்துள் சன்னதி தெற்கு பார்த்து அருள்பாலிக்கிறார். பெரிய நாயகிக்குத்தான் என்ன குறைச்சல்? ஈசனின் அழகுக்கு ஈடான அழகம்மை.
மாணிக்கவாசகர் தமது திருவாசகத்திலும் இத்தல்தை பாடியுள்ளார் என்பது விசேஷம்.
"திருப்பனையூரில் விருப்பனாகியும்' என்று பாடுகிறார் சுந்தரர். அதாவது இங்கே விரும்பி குடி கொண்டு இருக்கிறாராம் இறைவன். கடவுளே விரும்பி வந்த அமர்ந்துள்ள இடத்தின் அழகு நம்மை மட்டும் கவராமல் இருக்குமா? ஊரின் இயற்கை அழகைப் பார்த்தால் நமக்கும் கூட இங்கேயே தங்கிவிட மாட்டோமா? என்று ஏக்கம் எழத்தான் செய்கிறது. அந்த ஆசையோடு இறைவனின் அழகான வடிவினையும் மனத்துள் பதித்துக் கொண்ட புறப்படும்போது பலகோடி புண்ணியம் செய்த பரவசம் எழுகிறது.
ஒருமுறை நீஙகளும் சென்று வாருங்கள்... உங்களுக்கே அந்த உன்னதம் புரியும்.

எங்கே இருக்கு: மயிலாடுதுரை - திருவாரூர் பஸ் மார்க்கத்தில் ஆண்டிப்பந்தல் எனும் சிற்றூரில் இறங்க வேண்டும். அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பனையூர் ஆலயத்திற்கு ஆட்டோ மூலம் சென்று திரும்பலாம்.


Comments