ஆனந்தம் பரமானந்தம்

எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் மனத்தை ஆள, சுவாசப் பயிற்சி ஒன்றே வழி என எண்ண வேண்டாம். இது, மிகச் சிறந்த வழி! 'ஏன்... பக்தியின் மூலம்கூட மனதை ஒழுங்கு படுத்தலாமே...' என்பார்கள் சிலர். இதுவும் சரிதான்!

ஓயாமல் துதிக்கையை ஆட்டுகிற யானையிடம் உலக்கை ஒன்றைக் கொடுத்து விடுவார் பாகன். வேறு வழியின்றி, உலக்கையைப் பிடித்துக் கொண்டு, துதிக்கையை ஆட்ட முடியாமல் பரிதாபமாக நிற்கும் யானை! நம்முடைய மனமும்கூட இதே போல்தான்! மனம் எனும் யானைக்கு ராமர், கிருஷ்ணர், முருகர் என ஏதேனும் ஒரு நாம ஜபத்தை எடுத்துக் கொடுப்பார்கள் குருமார்கள். நாம ஜபத்தின் மூலம், மனத்தின் அட்டகாசத்தில் இருந்து விடுபட்ட மகான்களும் உண்டு. ஆனால், கோடிக்கணக்கான மனிதர்கள், கோடிக்கணக்கான நாமங்களை ஜபித்தும் மனத்தின் சேட்டைகளை சிறிதும் ஜெயிக்க முடியாமல் சங்கடத்தில் உள்ளதையும் பார்க்கலாம்! சில அசடுகள் பலகோடி நாமா ஜபித்து விட்டோம் என்ற அகங்காரத்தில் அவஸ்தைப் படுவதையும்கூட பார்க்கலாம். பாவம் இவர்கள்... மனத்தின் சூழ்ச்சிக்குப் பலியானவர்கள்; தங்களை மிகப்பெரிய பக்தராகக் கருதி ஏமாந்து போகிறவர்கள்!

ஒரு கடவுளின் திருநாமத்தை நொடிக்கு நூறு தரம் சொல்லுவார் நண்பர் ஒருவர். ஆயிரத்தெட்டு தடவை சொல்லாமல் காபிகூட சாப்பிட மாட்டார். ஆனால் கோபம், காமம், பேராசை முதலானவற்றை அவர் விட்டதே இல்லை; துளியும் மாறவே இல்லை. பத்து வருடங்கள் ஓடிவிட்டன.இவரை மாற்ற நினைத்தார் துறவி ஒருவர். ஒரு நாள்... இவர் பூஜை செய்யும் நேரமாகப் பார்த்து, இவரின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு, நண்பரின் பெயரைச் சொல்லி சத்தமாகக் கூப்பிட்டார். பூஜையே செய்ய முடியாதபடி தொடர்ந்து இவரை அழைத்துக் கொண்டே இருந்தார் துறவி. நாம ஜபம் செய்யும்போது எரிச்சல்படக் கூடாதே... என கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கியவர், ஜபமாலையை உருட்டியபடி இன்னும் அழுத்தமாக நாமத்தை ஜபித்தபடி இருந்தார். ஆனால் துறவியோ விடுவதாக இல்லை. ஒரு விநாடிகூட இடைவெளியே விடாமல், தொடர்ந்து நண்பரின் பெயரை உரக்கக் கூவிக் கொண்டே இருந்தார்.

அவ்வளவுதான்... விறுவிறுவென எழுந்து வாச லுக்கு வந்து, ''ஏன் இப்படி கூச்சல் போடுகிறீர்கள்? நான் நாமஜபம் செய்ய வேண்டாமா' என்று ஆவேசமாகக் கேட்டார். ''நான் உன்னுடைய பெயரை எவ்வளவு நேரம் கூப்பிட்டிருப்பேன்?'' என்று பதில் கேள்வி கேட்டார் துறவி. நம்மவர் எரிச்சலுடன், ''பத்து நிமிஷம்'' என்றார். மெள்ள புன்னகைத்த துறவி, ''உன்னோட பேரை பத்து நிமிஷம் உச்சரிச்சதுக்கே இவ்ளோ கோபப்படுறியே... பத்து வருஷமா கடவுளைக் கூப்பிடுறியே... அப்படின்னா அவருக்கு எவ்ளோ எரிச்சல் இருக்கும்?'' என்று சொல்லிவிட்டு அமைதியாக நகர்ந்தார். முகத்தில் அறைந்தது போல் உணர்ந்தார் நண்பர்!

நம்மில் பலரும் இப்படித்தான்; பக்தி உள்ளவர்கள் போல பாசாங்கு செய்கின்றனர். மனதின் ஆட்ட பாட்டங்களை துளியும் விடமுடிவது இல்லை.

சுவையான சம்பவம் ஒன்று

ஏக்நாதர்- பரம பாகவதர்; உத்தமபக்தர். ஒருமுறை இவர், க்ஷேத்திரங்கள் பலவற்றுக்கு ஒரு வருட காலம் யாத்திரை செல்வது என புறப்பட்டார். இவருடன் பெரிய பாகவத கோஷ்டியே கிளம்பியது. இதில் வேடிக்கை... தொழில் முறை திருடன் ஒருவனும் யாத்திரை வருவதாகச் சொன்னான். உடனே ஏக்நாத், ''திருடிப் பழகியவன் நீ. எனவே யாத்திரையில் சங்கடத்தை ஏற்படுத்துவாய். தயவுசெய்து எங்களைப் போகவிடு'' என்றார்.

ஆனாலும் அவன் விடுவதாக இல்லை. இறுதியாக, 'யாத்திரை முடியும் ஒரு வருட காலம் வரை திருட மாட்டேன்' என்று பாண்டுரங்கன் மீது சத்தியம் செய்தான். வேறு வழியின்றி, அவனை அழைத்துச் சென்றார் ஏக்நாதர்.

முதல் ஒரு மாதம்... எந்தச் சிக்கலும் இல்லை. அடுத்து இவரது பொருட்கள் திருடு போயின. ஆனால், உடனே கிடைத்தும் விட்டன; வேறொருவரது உடைமையுடன் கலந்திருந்தது! முதலில் 'பையைக் காணலியே...' என்று பாகவதர் கூச்சல் போட, சிறிது நேரத்திலேயே 'இதோ... இங்கேயே இருக்கே...' என்று உடன் வந்தவர்கள் கொடுத்தார்கள். ஏக்நாதருக்கு நிம்மதி போனது!

ஒருநாள் இரவு... தூங்குவது போல் கண்களை மூடி, கவனித்தார் ஏக்நாதர். அப்போது 'தொழில் முறை திருடன்', தூக்கம் வராமல் உலாவினான். பிறகு, ஒருவரது மூட்டையில் இருந்து பொருட்களை எடுத்து வேறொருவரது மூட்டைக்குள் மாற்றி வைத்துவிட்டு தூங்கச் சென்றான்! அவனை கையும் களவுமாகப் பிடித்தார் ஏக்நாதர்!

''திருட மாட்டேன்னு சத்தியம் பண்ணினது வாஸ்தவம்தான். ஆனா பல வருஷப் பழக்கம், பாடாப் படுத்துதே! தூக்கமே வரமாட்டேங்குது; யாருகிட்டேருந்தாவது எதையாவது எடுத்துடுறேன்; அப்புறம் சத்தியம் நினைவுக்கு வந்ததும் இன்னொருத் தரோட பையில வைச்சிடுறேன். இதுக்கு அப்புறம்தான் என் மனசு சமாதானமாவுது!'' என்றான்!

பல விஷயங்களில் பிறர் நம்மை வசியம் செய்யாவிட்டாலும்கூட, நாமே சுயவசியம் (self hypnosis) செய்து கொள்கிறோம். மனத்தின் சுயவசியத்திடம் இருந்து தப்பித்து வெளி வருவது அத்தனை சுலபம் அல்ல! மது மட்டுமின்றி, இதுபோன்ற போதையிலும் சிக்கி அடிமையாகி விடுகின்றனர் பலரும்! பலியிடப்படும் ஆடுகளை, மந்திரவாதிதான் வசியம் செய்து பலியிடுவார். ஆனால், வாழ்க்கையில் 'நானே மந்திரவாதி; நானே ஆடு' என நம்மை நாமே வசியப்படுத்திக் கொள்ளும் விஷயங்களில் நம்மையே பலியாக்கிக் கொள்கிறோம்.

மனத்தின் சுயவசியம் என்பது- போதை போல, தூக்க மயக்கம் போல! இதிலிருந்து விழிப்பதற்கு மனம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. பட்டினத் தார், அருணகிரிநாதர், துளசிதாஸர் போன்ற ஒரு சில ஞானிகள்தான் இந்த போதை மயக்கத்திலிருந்து பக்தியின் மூலம் விழித்துக் கொண்டவர்கள்.

பக்தர், சித்தர், புத்தர் எல்லோருடைய நோக்கமும் மனத்திலிருந்து விடுபடுவதுதான்! ஆனால், இதற்கு அவரவரும் தேர்வு செய்த வழிமுறைகள் வேறு. மனதை அடக்கும் சிரமத்தை அறிந்த பக்தர், தனக்குப் பிடித்த கடவுள், அவரை வழிபடுவதற்கான முறை, பஜனை, பிரசாதம், அலங்காரம், யாக யக்ஞம், நாம ஜபம் என மனதை கடவுள் வசம் திருப்பிவிட்டு, அதன் சேட்டைகளில் இருந்து விடுபட முயற்சி செய்கிறார்.

சித்தர், மனதுக்கு உரமூட்டும் பிரா ணனை தன் வசப்படுத்தி, சுவாசத்தை நிர்வகிப்பதன் மூலம் மனதை கட்டுக்குக் கொண்டு வந்து மனோஜயம் மூலம் ஸித்திகளைப் பெறுகிறார்.

ஆனால் புத்தரோ... மனதைக் கடந்து போகிறார். தூக்கத்தில் இருந்து விழிப்பது போல், கனவில் இருந்து நனவில் பிரவேசிப்பது போல் மனதில் இருந்து புத்திக்கு தனது இருப்பை மாற்றிக் கொள்கிறார்; புத்தியில் இருந்து செயல்படுகிறார். மனதை அனாதை யாக்கி விட்டு, புத்திபூர்வமாக மட்டுமே வாழ்வது புத்தர்களின் வழி! புத்தர் என்றதும் கௌதம புத்தரை மட்டுமே கருதக் கூடாது; விழிப்பு அடைந்த ஞானிகள் யாவரும் புத்தர்கள்தாம்!

குழந்தையின் அழுகையை நிறுத்த, தாலாட்டு பாடி தூங்க வைக்கலாம்.; சிரிப்பு காட்டி புன்னகைக்கவைக்கலாம்; அதட்டி உருட்டி வாய்மூட வைக்கலாம். இப்படி பல வழிகள் உள்ளதுபோல், பாடாய்ப்படுத்தும் மனத் திலிருந்து விடுபட பக்தர், சித்தர், புத்தர் ஒவ்வொருவரும் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்!

உளவியல் துறையின் தந்தை சிக்மண்ட் ஃப்ராய்டு, ''மனிதனை எப் போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது கஷ்டம். வேண்டுமானால் அவனை குறைந்தபட்ச துக்கம் உடையவனாக ஆக்கலாம்'' என்கிறார். இதுகூட தவறு என்றே தோன்றுகிறது.

துக்கத்துக்கு காரணம், மனம். மனத்தைக் கடந்தால் துக்கம் இல்லை. துக்கம் இல்லாத நிலையே ஆனந்தம்!

Comments